gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 49 முக்திநாத் ஸ்ரீதேவி

அம்மனின் சக்தி பீட வரிசையில் நேபாள நாட்டில் முஸ்தாங் மாவட்டத்தில் இமயமலை, முக்திநாத் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீதேவி நாச்சியார் சமேத முக்திநாதர் கோயில் பிரதான கோயிலாகப் போற்றப்படுகிறது. 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்து, பௌத்தர்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் இத்தலம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் சிறப்பிக்கப்படுகிறது.




மார்ச் முதல் ஜூன் மாதம் வரையான காலகட்டமே முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாக கூறப்படுகிறது. திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோர் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர். பெரியாழ்வார் சாளக்கிராமமுடைய நம்பியை கண்ணனாகவும், திருமங்கையாழ்வார் ராமபிரானைக் காண்கின்றனர். ராமானுஜரும் இத்தலத்தில் எழுந்தருளி வழிபாடு செய்துள்ளார்.

தல வரலாறு

முக்கிய நதிகள் அனைத்துக்கும் திருமாலுடனான பந்தம் உள்ளது. இதை அறிந்த கண்டகி (நதி), திருமால் தன்னிலும் அவதாரம் எடுக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டாள். தனது எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு அவரை நோக்கி தவம் இயற்றினாள். கண்டகியின் தவத்தில் மகிழ்ந்த திருமால், இந்த நதியில் தினம் தினம் சாளக்கிராம ரூபத்தில் அவதரித்து, கண்டகி நதிக்கு சிறப்பு சேர்ப்பதாக உறுதியளித்தார்.




பிரம்மதேவரின் வியர்வையில் இருந்து கண்டகி நதி தோன்றியதாகக் கூறப்படுகிறது. கண்டகி தவம் புரிந்தபோது, அவளுக்கு தேவர்கள் வரமளிக்க முன்வந்தனர். அப்போது அவர்களை தன் குழந்தைகளாக அவதரிக்கும்படி கண்டகி வேண்டினாள். ஆனால், இதற்கு தேவர்கள் உடன்படவில்லை. உடனே கோபம் கொண்ட கண்டகி, அவர்களை புழுவாக மாறும்படி சபித்துவிடுகிறாள். உடனே தேவர்கள், கண்டகியை ஒரு ஜடமாக மாறும்படி சபித்தனர்.

கண்டகிக்கும் தேவர்களுக்கும் இடையேயான பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று எண்ணிய பிரம்மதேவர், ருத்ரன், இந்திரன் ஆகியோர் திருமாலை அணுகி இவர்களது சாபத்தை நீக்க வேண்டும் என்று வேண்டினர். மூவருக்கும் பதிலளித்த திருமால், “இந்த சாபங்களை நீக்க முடியாது. நான் சாளக்கிராம தலத்தில் (முக்திநாத்) சக்ர தீர்த்தத்தில் வாசம் செய்கிறேன். தேவர்கள் வஜ்ரகீடம் என்ற புழுக்களாக மாறி அங்குள்ள கூழாங்கற்களை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வர வேண்டும். கண்டகி நதி வடிவமாக அவற்றின் மீது பாய்ந்து வருவாள். இதன் மூலம் கண்டகியின் விருப்பம் நிறைவேறும். தேவர்கள், தேவ அம்சமும், திருமால் அம்சமும் பொருந்திய சாளக்கிராமங்களாக மாறுவர். எம்பெருமான் திருவுள்ளப்படி சாளக்கிராமங்களை வழிபட்டவர்களும் எம்பெருமான் நித்யவாசம் செய்யும் வைகுண்டப் பதவியை அடைவர்” என்று அருளினார்.




கோவில் சிறப்பு

சாளக்கிராம கோயிலின் முன்னர் இரண்டு குளங்கள் உள்ளன. கருவறையில் சாளக்கிராம சுயம்பு திருமேனியாக முக்தி நாராயணப் பெருமாள் அருள்பாலிக்கிறார். சங்கு சக்கரம், கதை போன்ற ஆயுதங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் மற்றும் ராமானுஜருடன் பெருமாள் சேவை சாதிக்கிறார். கருவறைக்குள் சென்று பக்தர்களே சுவாமிக்கு வஸ்திரம், மலர், மாலைகள அணிவித்து பூஜை செய்யலாம்.

முக்திநாத் பயணம்: 

கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் மிகவும் கடுமையானது. முதலில் காத்ண்டு அல்லது சீதாமரி சென்று அங்கிருந்து பொக்காராவை அடைந்து அங்கிருந்து வான் வழியாக ஜாம்சம் அடைந்து பின்னர் ஜீப் மூலம் (1 மணி நேரப் பயணம்) முக்திநாத் செல்ல வேண்டும், அதன்பிறகு அரை மைல் தூரம் மலையில் ஏறி முக்திநாதரை தரிசிக்கலாம். நேபாளத்தில் ஓடும் கண்டகி நதி, 8,000 மீ உயரத்தில் உள்ள அன்னபூர்ணா தவுளகிரி மலைச்சிகரங்களில் இருந்து உற்பத்தி ஆகிறது. காத்மண்டு நகரில் இருந்து 375 கிமீ தொலைவில் கண்டகி நதிக்கரையில் முக்திநாத் அமைந்துள்ளது. இங்கிருந்து 15 மைல் தொலைவில் முக்தி நாராயணத் தலம் உள்ளது, இத்தலம் சாளக்கிராமம் என்றும் கூறப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில் உள்ள ஹரிபர்வத மலையில் சக்ர தீர்த்தம் என்ற பகுதியில் உற்பத்தி ஆகும் கண்டகி நதியின் கரையில் அமைந்துள்ள பகுதி சாளக்கிராமம் என்று அழைக்கப்படுகிறது.




What’s your Reaction?
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!