gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 48 பத்ரிநாத் பத்ரகர்ணிகை

அம்மனின் சக்தி பீட வரிசையில், உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள அரவிந்தவல்லி சமேத பத்ரிநாராயணர் கோயில் பத்ர கர்ணிகை பீடமாகப் போற்றப்படுகிறது. திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

இமயமலையில் உள்ள கடுமையான குளிர் காரணமாக, இக்கோயில் ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (மே கடைசியில் இருந்து டிசம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறந்திருக்கும். பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

தல வரலாறு

முன்பொரு காலத்தில் சிவபெருமானைப் போல் பிரம்மதேவருக்கும் 5 தலைகள் இருந்தன. இதனால் சிலசமயம் பார்வதி தேவி குழப்பம் அடைந்தார். இதுகுறித்து சிவபெருமானிடம் கூறினார் பார்வதி தேவி. உடனே சிவபெருமான், பிரம்மதேவரின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார். இதைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பிரம்மதேவரின் தலை சிவபெருமானின் கையை விட்டு விழவில்லை.




இதுகுறித்து சிவபெருமான், திருமாலிடம் ஆலோசனை கேட்டார். பூலோக மங்கை ஒருவரிடம் இருந்து யாசகம் பெற்றால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிடும் என்று திருமால் கூறினார். அதன்படி சிவபெருமானும் கைலாயத்தைவிட்டு பூலோகத்துக்கு வந்தார்.

அந்த சமயத்தில் பத்ரிகாஸ்ரமத்தில் ஒருவருக்கு தாரக மந்திரத்தை திருமால் உபதேசித்துக் கொண்டிருந்தார். அருகில் திருமகளும் வீற்றிருந்தார். அப்போது சிவபெருமான் வந்து யாசகம் கேட்க, திருமகளும் சில பொருட்களை அளிக்க, சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அவர் கையில் இருந்த பிரம்ம கபாலமும் கீழே விழுந்தது. இந்த இடமே ‘பிரம்ம கபாலம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த இடத்தில் முன்னோருக்கு, கயா போல பிண்டமிட்டு, அலக்நந்தா ஆற்றில் பிண்டத்தைக் கரைத்தால் புண்ணியம் ஏற்படும் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. நமக்கு நாமே ஆத்ம பிண்டமும் இட்டுக் கொள்ளலாம்.




பத்ரிநாராயணர்

அனைத்து யுகங்களிலும், உலகைக் காக்க பெருமாள் அவதாரம் எடுக்கிறார். பிரம்மதேவர், தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் பெருமாளை மற்றொரு அவதாரம் எடுக்குமாறு வேண்டினர். அப்போது, திருமால், அசரீரி வாயிலாக, “கலியுகத்தில் அன்பு, பாசம் இல்லாத கல்நெஞ்சம் கொண்ட மக்கள், என் தரிசனம் காணாது தவிக்கும்போது, நாரத குண்டம் அலக்நந்தாவில் இருக்கும் எனது பாஷாண மூர்த்தியை அங்கிருந்து எடுத்து வந்து பத்ரிநாத்தில் பிரதிஷ்டை செய்யவும். அப்போது நான் பக்தர்களுக்கு காட்சி தருவேன்” என்றார்.

அதன்படி பிரம்மதேவர் உள்ளிட்டோர், நாரத குண்டத்தில் இருந்த மூர்த்தியை பத்ரிநாத்தில் பிரதிஷ்டை செய்தனர், அன்று முதல் பத்ரிநாத்தில் பத்ரிநாதர் வழிபாடு தொடங்கியது.




மூலவர் பத்ரிநாராயணர் கருப்பு நிற சாளக்கிராமத்தால் ஆனவர். கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் 4 கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இடது கையில் சங்கும், வலது கையில் சக்கரமும், மற்ற இரு கரங்களையும் இணைத்து யோக முத்திரை, அபயவரதம் காட்டி அருள்பாலிக்கிறார்.

வெந்நீர் தீர்த்தம்

குளிர்ந்த இடமான பத்ரிகாஸ்ரமத்தில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. அவை தப்த குண்டம், நாரத குண்டம், கூர்ம தாரா, பிரகலாத தாரா, ரிஷிகங்கர் ஆகியனவாகும். ஒவ்வொரு தீர்த்தமும் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கூர்மதாரா தீர்த்தம் அன்னதானத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. தப்த குண்டத்தில் நீராடிய பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் செல்கின்றனர். குளிர்ந்த இடமாக இருந்தாலும், இத்தீர்த்தத்தில் உள்ள நீர் வெப்பம் நிறைந்ததாக இருக்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது.




கோயில் அமைப்பும் சிறப்பும்

கிபி 9-ம் நூற்றாண்டில் பத்ரிகாஸ்ரமத்தில் மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலம் தேவப் பிரயாகையில் இருந்து 124 கிமீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. டேராடூனில் இருந்து பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். பத்ரிநாதர் கோயில் கடல் மட்டத்தில் இருந்து 10,248 அடி உயரத்தில் உள்ளது. செல்லும் பாதைகள் பெரும் வளைவுகளைக் கொண்டு அமைந்துள்ளன. மிகவும் குளிர்ந்த பகுதி என்பதால், வைகாசி மாதத்தில் இருந்து கார்த்திகை மாதம் வரை பக்தர்களுக்கு நடை திறக்கப்படும். மார்கழியில் இருந்து சித்திரை மாதம் வரை நடை சாத்தப்படும். அப்போது தேவர்கள் மட்டும் இங்கு தங்கி சுவாமி தரிசனம் செய்வதாக ஐதீகம்.

விஷால் என்று அழைக்கப்படும் பத்ரிநாராயணர், மகாலட்சுமியைத் திருமணம் புரிய, குபேரனை அழைத்து மிகவும் ஆடம்பரமான முறையில் திருமண ஏற்பாடுகளைச் செய்யப் பணித்தார். அதனால் திருமணம் கைகூடாதவர்கள், இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்தால், நன்மை நடைபெறும் என்பது நம்பிக்கை.




திருவிழாக்கள்

கிருஷ்ண ஜெயந்தி, ஜூன் மாத பத்ரி கேதார் திருவிழா (8 நாள்) சிறப்பாக கொண்டாடப்படும். பத்ரிநாதருக்கு பால், தேன், திருமஞ்சனம், மஹாபோக் என்ற நிவேதனம் செய்து பக்தர்கள், தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். 108 வைணவ திவ்ய தேசமாகவும், சக்தி பீடமாகவும் இத்தலம் விளங்குவதால், தரிசனத்துக்குத் திறக்கும் நாட்களில் எல்லாம் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

பலன்கள் திருமணத்தடை உள்ளவர்கள் பத்ரி நாதரையும், மகாலட்சுமியையும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள பிரம்ம கபாலம் என்னும் இடத்தில் முன்னோர்களுக்கு கயா போல பிண்டமிட்டு,  அலக்நந்தா என்னும் ஆற்றில் பிண்டத்தை கரைத்தால் புண்ணியம் ஏற்படும் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!