Serial Stories தேவ மல்லிகை பூவே

தேவ மல்லிகை பூவே -4

4

 அலங்கார தேர் போல் தாமோதரனின் இறுதி பல்லக்கு தயாரானது.பல்லக்கை சுற்றிலும் பாரிஜாதத்தின் கை வண்ணத்தில் உருவான பூத்தோரணங்கள்.வீட்டு வாசலில் தாமோதரனுக்குரிய இறுதிப்பயண சடங்குகள் நடக்க,பாரிஜாதம் இரண்டு வரிசை தள்ளியே நிறுத்தப்பட்டாள்.

அலை பாய்ந்த அவள் விழிகளை உணர்ந்த உதயன் ராஜீவை அழைத்தான்.

“அவர்கள் வீட்டில் திருமணமென்பது வரைதான் சிலருக்கு தெரிகிறது உதய்.ஆனால் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை.எதற்காக இவ்வளவு ரகசிய வேலையென்று தெரியவில்லை”

அந்த ரகசியத்தை அறிந்த உதயன்”சரி சீக்கிரம் கண்டுபிடிக்க முயற்சி செய்” என போனை வைத்தான்.

இப்போது யோசித்தால் வெண்ணிலா குமரனுக்கே திருமண இட விபரம் சொல்லியிருக்க மாட்டாளென தோன்றியது.திடீரென மனம் மாறி போய் விட்டானானால்…என்ற கவலை அவளுக்கு நிச்சயம் இருந்திருக்கும்.

கூட்டத்திற்கிடையே பாரிஜாதத்தை கண்களால் பிடித்து பார்க்க,அவளும் சரியாக அவனை ஏறிட்டாள்.உதயன் உதட்டை பிதுக்கி காண்பிக்க,அவள் முகம் கசங்கியது.இரண்டே விநாடிகள்தான்,உடனே தன்னை சமாளித்துக் கொண்டு பரவாயில்லை என்பதாக தலையசைத்து விட்டு நீர்க்குடங்கள் வைத்திருந்த இடத்திற்கு போனாள்.

ஒரு பெரியவர் குடங்களை எண்ணிக் கொண்டிருக்க,குனிந்து ஒரு குடத்தை தூக்கப் போனாள்.தாட்டியான பெண் ஒருத்தி தடுத்தாள்.”நாங்களே நிறையப் பேர் இருக்கிறோம்மா.நீ ஒதுங்கியே இரு”

“நா…நான் அ…அவர் ம…மகள்”

“இதோ இவர்கள் மூன்று பேரும் மகள் முறைதான்,அவர்கள் அக்காக்கள்,தங்கைகள்.இவர்களே போதும்மா.நீ தள்ளு”

உதயன் பின்பக்கம் போய் அங்கே கிணற்றில் இறைக்க கட்டியிருந்த பித்தளை குடத்தில் நீர் இறைத்து கயிறை கழட்டி தூக்கி வந்து பாரிஜாதத்தின் இடுப்பில் வைத்தான்.அவள் பிடித்துக் கொள்ள,லேசாக அவள் தோள் தொட்டு முன்னால் நகர்த்தினான்.




“முதல் உரிமை இவளுக்குத்தான்.மற்றவர்கள் இவளுக்கு பிறகுதான்”

“ஏய் அதை சொல்ல நீ யாரப்பா?”

“உங்கள் ஊர் பெரிய மனிதர்கள் அல்லது வீட்டு பெரியாட்களை கூப்பிடுங்கள்.அவர்களிடமே கேட்கலாம்”

“சரித்தான்…டேய் பாட்டையாவை கூப்பிடுடா..” இளசு ஒருவன் மீசை முறுக்க,”பார்க்கலாமே”உதயனும் நெஞ்சு நிமிர்த்தினான்.

“ப்ளீஸ் வேண்டாம்.அப்பாவின் கடைசி பயணம் பிரச்சனையில்லாமல் இருக்கட்டும்” உதயன் பக்கம் திரும்பி தலைகுனிந்து முணுமுணுத்தவளை அழுத்தமாக பார்த்தவன்,குடத்தை பற்றி அவள் இடுப்போடு அழுத்தினான்.

“இங்கே கவனிங்க.குமரனுக்கு தகவல் கூட கொடுக்க முடியவில்லை.நாளை காலை வரை காத்திருக்கலாம்னு சொன்னால்  சடங்கு அது இதுவென ஏதேதோ சொல்கிறீர்கள்”

“தம்பி அதெல்லாம் ஊருக்கு பொதுவான சட்டங்கள் தம்பி.இரவு ஏழு மணிக்கு மேல் சுடுகாட்டில் எந்தப் பிணத்தையும் எரிப்பதில்லை”

“நான் நாளை காலைதானே எரிக்க சொன்னேன்”

“அஹ்…படுக்கையில் கிடந்த உடம்பு நாளை வரை தாங்குமா?”

“அந்த பக்குவங்களெல்லாம்தான் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேனே?”

“அதெல்லாம் சாஸ்திரத்திற்கு எதிரானது.நாங்க ஒத்துக் கொள்ள மாட்டோம்”

வீண் வீம்பு பிடித்துக் கொண்டிருக்கும் அந்த ஊரினரை என்ன செய்வதென உதயனுக்கு தெரியவில்லை.பாரிஜாதம் வேறு போதும் விடுங்கள் என கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“உங்க வீட்டு பெரியவரை கூப்பிடுங்கள்” குரல் உயர்த்திய உதயன் தன் கையில் மென்மையான பனிக்கட்டியை உணர்ந்து குனிந்து பார்த்தான்.பாரிஜாதம் அவன் கையை பற்றியிருந்தாள்.வேண்டாமென தலையசைத்தாள்.

மென்மையும்,குளுமையும் ஒருங்கே கலந்த அந்த ஸ்பரிசத்தை மறுக்கும் தைரியம் உதயனுக்கு இல்லை.சரியென அவளுக்கு தலையசைத்தான்.பொறு என தைரியம் சொன்னான்.




“குமரனுக்கு தகவல் சொல்லி விட முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.அவன் வராவிட்டால் அப்பாவின் இறுதி சடங்குகளை பாரிஜாதம் செய்வாள்”

ஓய்…அடேய்…இந்தாடா என்பது போன்ற விதம் விதமான சத்தங்களுக்கிடையே ஒருவன் முன்னே வந்து அவனது சட்டையை இறுக்கிப் பிடித்தான்.

“என்ன தைரியம் இருந்தா பொட்டப்புள்ளையை சுடுகாட்டுக்கு கூட்டிட்டு வரச் சொல்லுவ?”

“இதில் என்னங்க இருக்கு?அவுங்களும் அவர் ரத்தம்தானே?”

“ஒரே வயித்துல பொறந்திருந்தாலும் பொட்டச்சிக்கும்,ஆம்பளைக்கும் வித்தியாசம் இல்லையா?பொங்கிப் போடுறவளுக்கு கொள்ளில பங்கு கேட்குதோ?”

உதயன் தன் சட்டையை பிடித்திருந்தவனின் கையை தன் கையை குறுக்காக வைத்து வெட்டி தள்ளினான்.”எந்த நூற்றாண்டில் வாழுறீங்க நீங்கெல்லாம்?கொஞ்சம் அறிவோடு பேசுங்க”

“ஏய் யாருக்குடா அறிவில்லைங்கிற?” ஆளாளுக்கு பாய,அந்த இடமே கசகசவென கூச்சல்களால் நிரம்பியது.பாரிஜாதம் தன் இடுப்பு குடத்தை இறக்கி வைத்து விட்டாள்.

“டேய் மொதல்ல நீ யாருன்னு சொல்லுடா?” மீண்டும் அந்த இளைஞன் அவன் சட்டையை பிடிக்க முயன்றான்.

“அசலூரு பய,யாருன்னு தெரியாதவன்,விரட்டியடிடா மாப்புள்ள” ஒரு குரல் கேட்க அவன் உதயனின் சட்டையை பிடித்திழுத்து தள்ள முயற்சிக்க…

“நான் பாரிஜாதத்தின் தாய் மாமா” என்றான் உதயன் குரல் உயர்த்தி.

சுற்றுப்புறம் அமைதியாக பாரிஜாதம் கண்களால் ஆட்சேபம் காட்டினாள்.அவளிடம் பார்வையிலேயே மன்னிப்பு கேட்டுக் கொண்டு தொடர்ந்தான் உதயன்.

“பாரிஜாதத்தின் அம்மா மிருதுளாவிற்கு நான் தம்பி முறை வேண்டும்.குமரனுக்கும்,பாரிஜாதத்திற்கும் தாய்மாமா”

“ஏய் இந்த உறவு எங்கிருந்துடா வந்தது?” நெடுநேரமாக நெஞ்சை நிமிர்த்துக் கொண்டிருந்த அவனே இப்போதும் முன்னால் நின்றிருந்தான்.




“நான் பாரிஜாதத்தின் அத்தை மகன்.அத்தான்.இதை தாண்டி எந்த மாமனோ,மச்சானோ அவளுக்கு கிடையாது” மார் தட்டிக் கொண்டவனை உதயன் கூர்ந்து பார்த்து விட்டு பாரிஜாதத்தை பார்க்க,அவள் விழி நிமிர்த்தவில்லை.

லேசாக தொண்டையை செருமிக் கொண்ட உதயன்,குனிந்து குடத்தை தூக்கி பாரிஜாதத்தின் இடுப்பில் வைத்தான்.”அப்பாவின் இறுதி சடங்குகளில் மகள் கலந்து கொள்ள மாட்டாளானால் இங்கே எதையும் நடக்க விட மாட்டேன் நான்.உங்க பாட்டையாவை கூப்பிடுங்க”

நீர்த் திரையிட்ட கண்களால் நிமிர்ந்து பார்த்தவள் பக்கம் குனிந்தான் ” உன் அண்ணனால்தான் வர முடியவில்லை.நீயும் ஒதுங்கி நின்று,உன் அப்பாவின் இறுதி பயணத்தில் கூட தனியாக அனுப்புவாயா?”

பாரிஜாதம் நீர் மின்னும் கண்களுடன் மாட்டேனென மறுக்க,”வா…நட” பாரிஜாதத்திற்கு ஆதரவாக அவள் இடுப்பு குடத்தை ஒரு கையால் பற்றி பாதி பாரம் தாங்கியபடி உடன் நடந்தான்.

“பாட்டையா என்ன சொல்றாரோ?” “சரி…விடுங்க” “இத்தோட நிறுத்திக்குவோம்” போன்ற முணுமுணுத்தல்களுடன் மற்றவர்களும் நடக்க,சாஸ்திரங்கள் ஆரம்பமானது.

குமரன் இறுதி வரை வராததால் தாமோதரனின் தம்பி கொள்ளி வைத்தார்.




What’s your Reaction?
+1
29
+1
32
+1
1
+1
0
+1
0
+1
2
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!