Entertainment karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-15

15

” அவன் ஒரு தெருப் பொறுக்கி .அவன் சொன்னதையைல்லாம் நம்பி விடுவீர்களா …? “

” எனக்கு அப்போது உன்னை இப்போது போல்  தெரியாது பூந்தளிர் தெரிந்திருந்தால் நம்பியிருக்க மாட்டேன் ..அவன்என் பள்ளி கால நண்பன் . திடீரென ஒருநாள் வந்து அதோ அந்த பெண்ணும் , நானும் காதலிக்கிறோம் .தஞ்சாவூரில் பதிவு திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கறோம் .பஸ்ஸில் போனால் ஊருக்குள் எல்லோருக்கும் தெரிந்துவிடும் .அதனால் நான் கார் கொடுத்து உதவ வேண்டுமென மிகவும் கெஞ்சி கேட்டான் .நான் அப்போது ரைஸ் மில்லில் இருந்தேன் .அங்கிருந்த சன்னல் வழியாக உன்னை பார்த்தேன் .கையில் ஒரு பேக்கோடு மிகுந்த டென்சனோடு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தாய் …நான் அவனுக்கு உதவ நினைத்தேன் …அன்று காருக்கு டிரைவர் அனுப்பவில்லை . நீ கவனிக்கவில்லை .உங்கள் இருவருக்காக அன்று கார் ஓட்டியது நான்தான் .உங்கள் இருவரையும் தஞ்சாவூர் பதிவு திருமண அலுவலக வாசலில் இறக்கி விட்டு விட்டு திரும்பினேன் ….”

” பிறகு …உங்கள் நண்பரையோ .. ..என்னையோ பார்க்கவே  யில்லையோ …? ”  .

” இரண்டாவது நாளே உன்னை ஊருக்குள் பார்த்தேன் .அதிர்ச்சியுடன் அவனுடன் போனில் பேசினேன் .நீ …அவனை ஏமாற்றிவிட்டதாகவும் , திருமணம் முடிந்த்தும் அவனிடம் பணம் பிடுங்க முயற்சித்ததாகவும் , அவன் மறுக்கவும் திருமணத்தையே மதிக்காமல் ஊருக்கு திரும்பி விட்டதாகவும்…சொன்னான் .உன்னை போல் அவனால் இங்கேஎல்லாவற்றையும் மறந்து  வர முடியாத்தால் அவன் படிப்பிற்கேற்ற வேலை தேடிக் கொண்டு சென்னையில் செட்டிலாகி விட்டதாக சொன்னான் ….”

” நீங்களும் நம்பி விட்டீர்கள் …? “

” பூந்தளிர் அப்போது என் நிலைமையை யோசி …எனக்கு உன்னை தெரியாது .அவனை நன்றாக தெரியும் .நான் அறிந்த வரை அவன் குணத்தில் குறை சொல்ல முடியாது . அத்தோடு …..”

” அவன் உங்கள் உயர்ந்த சாதியை சேர்ந்தவன் .ஓரளவு பணமும் வைத்திருப்பவன் .நான் கீழ்ஜாதி பெண் …பணமில்லாதவள் .பணத்திற்காக என்னமும் செய்திருப்பேன் என முடிவு செய்துவிட்டீர்கள் …” பூந்தளிரின் குரல் அழுகையால் தடுமாறியது .

குருபரன் உதட்டை கடித்தபடி அமைதியாக இருந்த்தே அவன் அப்படித்தான் நினைத்திருந்தான் என்பதை சொல்லாமல் சொல்லியது .உடல் முழுவதும் கம்பளி பூச்சு ஊறுவது போலொரு அருவெறுப்பான நிலையை அடைந்தாள் பூந்தளிர் .




” அங்கே ஒருத்தனுடன் பதிவு திருமணம் , இங்கே உங்களுடன் சாஸ்திர திருமணம் .இடையில் குமரன் மாமாவுடன் காதல் .ஆஹா …எப்படி உயர்வாக என்னை மதிப்பிட்டு வைத்திருக்கிறீர்கள் …? “

” நான் உண்மையை மறைக்க விரும்பவில்லை பூந்தளிர் .உன் மேல் காட்டிய வெறுப்பிற்கு இவைகள் தான் காரணம் …”

” தீர விசாரிக்காமல் கண்ணில் பட்டதை வைத்து ஒருவரை எடை போடுகறீர்களே .நானும்  அப்படிஉங்களை போலவே இருந்திருந்தால் இந்நேரம் இந்த குடும்ப கௌரவம் காற்றில் பறந்து கொண்டிருக்கும் தெரியுமா …? “

” என்ன சொல்ல வருகிறாய் …? “

” உங்கள் குடும்ப லட்சணத்தை சொல்ல வருகிறேன் …”

” நீ குறைத்து கூறும் அளவு எங்கள் குடும்பத்தில் என்ன இருக்கிறது …? “

” ஒன்றுமேயில்லை …? “

” ம்ப்ச் …நான் உன்னை சொன்னதற்கு பதிலாகவென எதையாவது உளறாதே பூந்தளிர் .விடு ..நாம் இத்தோடு நமது பேச்சை முடித்து கொள்வோம் …” எழப் போனவனின் கைகளை பற்றி இழுத்து அமர வைத்தாள் .

” இந்த அளவு வந்த பிறகு என்னால் எப்படி பாதியில் விட முடியும் .என்னை இவ்வளவு கேவலமாக கணித்து வைத்திருக்கறீர்களே .நீங்கள் ரொம்ப ஒழுக்கமா …? “

” பூந்தளிர் திரும்ப சொல்கிறேன் .கோபத்தில் வார்த்தைபளை சிதற விடாதே …அது நம் பிற்கால வாழ்வில் தீராத வடுவாக பதிந்துவிடும் …”

பூந்தளிர் குருபரனின் எச்சரிக்கையை பொருட்படுத்தும் நிலையில் இல்லை .ஒரு மாதிரி வெறி பிடித்தவள் போல் பேசிக் கொண்டே போனாள் .” எங்கே சொல்லுங்கள் பார்ப்போம் .உங்களுக்கும் உங்கள் அண்ணிக்குமிடையே என்ன …? “

” என்ன …என்ன சொல்ல வருகிறாய் …? “

” புரியவில்லையா .உங்களுக்கும் உங்கள்  பொன்னி அண்ணிக்குமிடையே என்ன உறவென்று கேட்டேன் .அந்த அண்ணியை பார்த்தாலே குழைகிறீர்கள் . உங்களை பார்த்தாலே அவர்கள் உருகுகிறார்கள் .உங்கள் இருவருக்குமிடையே ….” பேசிக் கொண்டிருந்த பூந்தளிரின் உடல் அதிர்ந்த்து .கண்ணுக்குள் பொறி பறக்க மூளை கலங்கியது போலொரு உணர்வு உண்டானது .மசமசத்த கண்களை தேய்த்துக் கொண்டு பார்த்த போது தரையில் கிடப்பதை உணர்ந்தாள் .ஒரே அறையில் தரையில் தள்ளியிருக்கிறான் .

சிரம்ப்பட்டு அவள் எழ முயற்சித்த போது அவளது கூந்தல் பின்னாலிருந்து கொத்தாக பற்றி தூக்கப்பட்டது .வலியில் சுளித்த முகத்தில் மீண்டும் ஒரு அறை விழுந்த்து .”எவ்வளவு திமிர் இருந்தால் இது போன்ற வார்த்தைகளை பேசுவாயடி .சீச்சி நீயெல்லாம் ஒரு பொண்ணா …? இனி என் முகத்திலேயே விழிக்காதே .நீ பிசாசுடி ….எனக்கிருக்கிற ஆத்திரத்திற்கு உன்னை ….” அவனது இரண்டு கைகளும் அவள் கழுத்தில் அழுத்தி பதிந்தன. ஆத்திரத்தில் நெரிக்க தொடங்கின .

” இ…இப்படித்தான் என்னை பேசிய போது எனக்கும் இருந்த்து ….” மூச்சுக்கு திணறியபடி சொன்னாள் .

” ஒரு தூய்மையான தாய் அன்பின் மீது இப்படி ஒரு பேச்சு பேசி விட்டாயேடி …” பொங்கிக் கொண்டிருந்த கோபத்திலும் அவன் குரல் தழுதழுத்து தடுமாறியது .

” பேசியது நானில்லை ….” அவன் கை நெகிழ்ந்த்து .

” உங்களுக்கும் , உங்கள் அண்ணிக்குமிடையே இருக்கும் அன்பு தாய் – மகன் உறவை ஒத்ததென்று நான் அப்போதே சொல்லிவிட்டேன் .அவர்கள் இருவரையும் எனக்கு தெரியும் ்அவர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களென அப்போதே சொல்லிவிட்டேன் ….”

அவள் கழுத்தை விடுவித்தவன் தளர்ந்து அமர்ந்தான் .” யார் இந்த அபாண்டம் பேசியது …? “

” அது இப்போது தேவையில்லை .அது போல் உங்கள் ஒழுக்கத்தின் மீது வந்த ஒரு பழியை என்னால் எளிதாக கடந்து வர முடிந்த்து .ஆனால் நீங்கள் என்னை …” பூந்தளிரின் குரல்அழுகையில்  தடுமாற குருபரன் அவளை ஆவேசத்துடன் இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டான் .

” முதலிலிருந்தே உன் நிலைமை  எல்லா தவறான  சூழ்நிலைகளுக்கும்  சாதகமாயிருந்தாலும் அதில் ஒன்றை கூட உன்னுடன பொருத்தி பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை தளிர் .இதனை இப்போது  உனக்கு வார்த்தைகளால் என்னால் விளக்க முடியாது “

” எனக்கு உங்கள்  விளக்கம் தேவையுமில்லை .அது போல் நானும் என் ஒழுக்கத்தை நிரூபிக்கும்  எந்த விளக்கமும் உங்களுக்கு  அளிக்க போவதுமில்லை …” உந்தி அவனை தள்ளினாள் .

” எனக்கும் விளக்கம் தேவையில்லை பூந்தளிர் .இந்த மூன்று மாதங்களில் என் உள்மனம் உன்னை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்டது .என்னை நீயும் உணர்ந்து கொண்டிருக்கிறாய் .அது போதும் எனக்கு ….”

” இந்த அலங்கார வார்த்தைகளில் மயங்கி உங்களோடு மனைவியாக வாழத் தொடங்க வேண்டுமா நான் …? “

” வேண்டாம் .என் உள்ளுணர்வுகள்  உன் கள்ளமற்ற தூய்மையை உணர்ந்து கொண்டது .அது போல் என் அன்பையும் ஒரு நாள் நீ உணர்வாய் .அது வரை …நாம் காத்திருப்போம் “

எளிதாக சொல்லிவிட்டு குருபரன் போய்விட்டான் ்அறை முழுவதும் சுற்றி சுழன்று வந்த அவன் வார்த்தை சூறாவளியில் சிக்கி பூந்தளிர்தான் சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தாள் அவளை தாழ்ந்த சாதி என்ற எண்ணத்தில் குருபரன்வெறுத்திருந்தானென்றால் கூட அவளால் தாங்க முடிந்திருக்கும் போல .ஆனால் இப்படி என்னை ஓர் ஒழுக்கங் கெட்ட பெண்ணாக அல்லவா நினைத்து வந்திருக்கிறான் …? நினைக்க …நினைக்க தீரவில்லை அவளுக்கு .

—————————

” ஏன் தாயி உங்க அப்பாவை மாதிரி நீயும் கம்பு நல்லா சுத்துறியாமே .எனக்கு ஒரு யோசனை .நம்ம பள்ளிக்கூட பசங்களுக்கு சொல்லிக்குடேன் தாயி ….” பொன்னுரங்கம் கேட்க அவள் தள்ளியிருந்த மேசையில் அமர்ந்து தந்தை சொன்ன ஏதோ ஓர் கணக்கை எழுதிக் கொண்டிருந்த குருபரனை முறைத்தாள் .அவனோ இதற்கும் …எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்ற பாவனையில் கணக்கு நோட்டுக்குள் குனிந்திருந்தான் .

எல்லாம் இவன் வேலைதான் .அன்று இருவரும் சண்டை போட்டதிலிருந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதை தவிர்த்து வந்தனர் .இவனுக்கோ …இவன் குடும்பதநுக்கோ நான் ஏன் உழைத்து கொட்டவேண்டும் ..என நினைத்தவள் ,அவர்கள் வீடு சம்பந்தமாக எந்த வேலையும் பார்க்காமல்,வீட்டு வேலைகள் கூட பார்க்காமல்  அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் .வீட்டிலுள்ளவர்களிடம் உடம்பு சரியில்லை என்ற காரணம் சொல்லி சமாளித்தாள் .குருபரனிடம் எப்படியும் ஒருநாள் என்னை வீட்டை விட்டு விரட்ட போகிறீர்கள் ..அப்படியிருக்க.நான் எதற்காக உங்கள் வீட்டிற்கென எந்த வேலையும் செய்ய வேண்டும் …என்றாள்.

அப்போது அமைதியாக போய்விட்டான் …இப்போது , பல்லை கடித்தவள் ” இ…இல்லை மாமா அது சரி வராது …” என்றாள் .

” ஏன் தாயி ..? “




” அ…அது ..நீங்கள் பள்ளிக்கூட பொறுப்புகளை அனு அக்காவிடம் கொடுத்திருக்கிறீர்கள் .இப்பொது அதில் நான் இடையில் நுழைந்தால் …பிரச்சினை வரும் .முன்பிருந்தே எனக்கும் , அவர்களுக்கும் ஆகாது ….”

” ஏன் …என்ன பிரச்சினை உங்களுக்குள் …? ” கேட்டது குருபரன் .

” அனு அக்கா காலேஜில் என் சீனியர் மாமா .நாங்கள் ஒரே ஊரென அவர்களிடம் நான் பேசி பழக முயன்றபோது ….அவர்கள் என் சாதியை காரணம் காட்டி என்னை காலேஜில் ஒதுக்கி வைத்தார்கள் .அதனால் அப்போதிருந்தே எனக்கும் , அவர்களுக்கும் ஒத்து வராது …” பதிலை பொன்னுரங்கத்திடம் சொன்னாள் .

” ம் …இந்த அனு பொண்ணுக்கு கொஞ்சம் சின்ன புத்திதான் .அவளுக்காகவாது நீ நம் பள்ளிக்கு போய் அதை சரி பண்ணத்தான் வேண்டும்மா .அனுவின் கைகளில் நம் பள்ளி நிர்வாகம் சரியாக இல்லை …நீ போனால் சரி செய்துவிடுவாய் …”

இது பூந்தளிருக்கு தெரிந்த்துதான் .பள்ளிக்கூடத்திற்கு போய் தலைமையாசிரியை என்ற பதவிக்குரிய பொறுப்பில்லாமல் வகுப்பறை வாசலில் சேரை எடுத்துப் போட்டுக்கொண்டு , மற்ற வகுப்பு ஆசிரியைகளையெல்லாம் அழைத்து அவர்களிடம் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருப்பாள் .ஆசிரியைகளெல்லாம் அவளை சுற்றி உட்கார்ந்திருக்க வகுப்பு எப்படி நடக்கும் …? வகுப்பறைக்குள் பிள்ளைகள் பாடம் இல்லாத ஜாலியில் ஆட்டம் போட்டுக் கொண்டிருப.பார்கள் .

இவள் இந்த லட்சணத்தில் பள்ளியை நடத்திவிட்டு , இந்த பள்ளிக்கூடம் சரியில்லையென அவள் பிள்ளைகளை தஞ்சாவூரில் பெரிய பள்ளியில் சேர்த்திருந்தாள் .ராஜா , ரவியை பின்பற்றி கீர்த்தனாவும் தஞ்சாவூர் பள்ளிநிலேயே சேர்க்கப்பட்டாள் .இது போல் தினமும் காரில் தஞ்சாவூர் போய் படிக்கும் வசதியில்லாத குடும்பத்து பிள்ளைகள் வேறு வழியில்லாமல் இந்த பள்ளியிலேயே தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தனர் .

” நீ இன்னையிலிருந்தே நம்ம பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சுடு தாயி …”

” வேண்டாம் மாமா. என்னை இந்த ஊர் ஜனங்க ஏத்துக்க மாட்டாங்க …,”

” ஏம்மா உங்க பக்கத்து ஆட்கள் நீ அங்கே ஒரு பெரிய பதவியில் இருந்தால் சந்தோசம்தானே படுவாங்க …”

” அவுங்களை சொல்லை மாமா..வந்து நான் …சிலம்பம் சொல்லிக் கொடுத்தால் என்கிட்ட படிக்க உங்க பக்கத்து ஆட்கள் வரமாட்டாங்க …”

” உளறாதே …அப்படி எவன் சொல்றான்னு நான் பார்க்கிறேன் ” அடிக்குரலில் உறுமிய குருதரனை கை உயர்த்தி தடுத்த பொன்னுரங்கம் , ” என்ன தாயி பெரிய  பண்ணையார் பொன்னுரங்கத்தோடு மருமகள் …கீழே இறங்கி வந்து இவுங்களுக்கு சிலம்பம் கத்துக் கொடுத்தால் கசக்குமா ..? “

பூந்தளிர் மனம் நெகிழ்ந்தாள் .

” இதை நல்லா கேட்டுக்கோ தாயி .உன் சாதியை மனதில் வைத்து இந்த ஊரில் எந்த பயலாவது உன்னை குறைவாக நினைத்தான்னா ஒரே ஒரு கண் மட்டும் காட்டு தாயி ்அவன் கை , காலை வெட்டி ஆத்துல தூக்கி போடுறேன் …”

பூந்தளிர் குருபரனை திரும்பி பார்த்து என்ன …உன்னை சொல்லி விடவா என கண்ணால் கேட்டாள் ்அவன் திருதிருவென விழித்து ” சரியாக சொன்னீங்கய்யா .நானெல்லாம் ஒரு நாளும் பூந்தளிரை அப்படி நினைத்ததில்லை . ஊருக்குள் ஒரு பயலையும் அப்படி நினைக்க விடவும் மாட்டேன் …” அவசரமாக அப்பா முன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு பொண்டாட்டியின் ஊர் பாதுகாப்பையும் உறுதி செயது கொண்டான் .

” புளுகுனி பய ….” மாமனார் காதில் கேட்காதவாறு முணுமுணுத்தாள் பூந்தளிர் .

அவள் தன்னை வைகிறாள் எனத் தெரிந்தாலும் அந்த வசவு தந்தைக்கு தெரியாமல் தங்களுக்கு மட்டுமேயான அந்நியோன்னியமாக பட , குருபரனின் முகம் மலர்ந்தது .




.அடர்ந்த மீசைக்குள் துடித்த அவன் மேலுதடு புன்னகையை உணர்த்த , வையுறதுக்கு எதுக்கு பல்லை காட்டுறான் .. புரியாமல் குழம்பினாள் பூந்தளிர். உன் குழப்பத்தை போக்க நான் தயார் என கண்ணால் அறிவித்தவனை  பார்த்ததும் பயந்து புரிந்தும் புரியாமல் குழப்பும் அந்த புதிரின் தெரிந்த விடையை பிடிவாதமாக பிரித்து பார்க்காமல் அடி மனதில் தள்ளி பூட்டினாள் .

—————————-

” ட ” வடிவில் மொத்தம் முப்பது வகுப்பறைகளுடன் இருந்த அந்த பள்ளிக்கூடத்தை தனது சைக்கிளை மிதித்து உள்ளே வரும் போதே பார்வையிட்டபடி வந்தாள் .இங்கே …இந்த பள்ளிக்கூடத்தில் அதோ அந்த வகுப்பறை வாசலில்  அவள் அனுராதாவால் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறாள் .அதே பள்ளிக்கு இது போல் ஒரு பதவியோடு … வருவாளென ஒருநாளும் நினைத்து பார்த்ததில்லை .

முன்பு தான் தலைகுனிந்து நின்ற அந்த வகுப்பறை முன் கால்களை ஊன்றி சைக்களை நிறுத்தினாள் .அன்று …தன் அண்ணன் மகனை பள்ளியில் விடுவதற்காக இங்கே அழைத்து வந்தாள் .அனுராதா …இதோ இந்த வகுப்பறை வாசலில்தான் நிறைய ஆசிரியைகளை கூப்பட்டு வைத்துக் கொண்டு சீரியல் கதைகளை கேட்டுக் கொண்டிருந்தாள் பக்கத்து வீட்டு பெண்ணுடன் அரட்டை அடிப்பது போல் .ஏழு பெண்கள் ஒன்றாக உட்கார்ந்து டிவி கதை பேசிக் கொண்டிருக்க , வகுப்பறையனுள் மாணவர்கள் ஒருவரையொருவர் அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் .

” தினமும் இப்படித்தான் நடக்கும் அத்தை .” தகவல் தந்தான் அண்ணன் மகன் .

” எங்க பரசுவோட டீச்சர் யாரு …? ” பூந்தளிரின் கத்தல் குரலில் கலைந்த பெண்களிலிருந்து எழுந்த பெண்ணொருத்தி ” நான்தான் என்ன விசயம் ..என்றாள் .

” நீங்கெல்லாம் ஏன்மா வாத்தியார் வேலைக்கு வர்றீங்க .பிள்ளைங்க வாழ்க்கையை கெடுக்கவா …? ” அவ்வளவுதான் அனுராதா சேலையை இழுத்து சொருகிக் கொண்டு சண்டைக்கு வந்துவிட்டாள் .

உன்னையும் உன் சாதிப்பிள்ளைகளையும் நாங்கள் இந்த ஸ்கூலுக்குள் விட்டதே தப்பு .போனாப் போகுதுன்னு உங்களுக்கெல்லாம் பிச்சை போடுவது மாதிரி படிப்பு சொல்லிக் கொடுத்தால் …நீ இதுவும் பேசுவாய் .இன்னமும் பேசுவாய் .இனி உன் சாதி ஆட்கள் இந்த பள்ளிக்கூடத்திற்குள்ளேயே விடுகிறேனா பார் ….என சூளுரைக்க பூந்தளிர் பயந்து போனாள் .

அந்த ஊரில் அரசுப்பள்ளி உண்டு .அது எட்டாவது வரை மட்டுமே இருந்த்து .அதறகு மேல் படிக்க நினைக்கும் அவள் சாதி பிள்ளைகள் இந்த பள்ளியில்தான் படித்து வந்தனர் .இப்போது இவள் சொல்வது போல் ஏதாவது செய்து விட்டாளானால் , பூந்தளிர் சாதி ஆட்கள் …குறிப்பாக பெண் குழந்தைகள்  எட்டாவதோடு படிப்பையே நிறுத்திவிடுவார்கள் . பிறகு சீக்கிரமாக கல்யாணம் வேறு முடித்து வைத்துவிடுவார்கள் .அந்த பிஞ்சுகளின் பரிதாப நிலை சங்கடப்படுத்த பூந்தளிர் தன் வேகம் மறைத்து அனுராதாவிடம் மன்னிப்பு வேண்டினாள் .

திரும்ப திரும்ப அவளை மன்னிப்பு கேட்க வைத்த பின் , அந்த ஆசுரியைகளின் நக்கல் புன்னகைகளுக்கிடையே அவமானத்தில் குனிந்த அவளது தலையை திருப்தியுடன் பார்த்தபடி கையசைத்து போ என அனுப்பினாள் அனுராதா .அந்த பச்சை ரணம் இன்னமும் அடிமனதில் காந்தியபடி இருக்க தரையில் ஊன்றிய பூந்தளிரின் கால்கள் நடுங்கின .

” இங்கே என்ன வேடிக்கை …? உன் இடம் இது இல்லை .அதோ அங்கே …? ” ஓரமாக இருந்த தகரசெட்டை சுட்டிக் காட்டியபடி மகாராணி தோரணையுடன் வகுப்பறை படிக்கட்டுகளில் இறங்கி வந்தாள் அனுராதா .

” அதுதான் விளையாட்டு அறை .அங்கேதான் விளையாட்டு சாமான்கள் இருக்கிறது .நீ உன் குடும்ப தொழிலை சொல்லிக் கொடுக்கத்தானே இங்கே வந்திருக்க .அங்கே ஓரமாக நின்னு சொல்லித் தந்துட்டு அப்படியே போயிடு …” அன்றைய திமிரில் இம்மியும் குறைவில்லை அனுராதாவிடம் .

” அவளது இடம் அது இல்லை மதினி .இங்கே இருக்கு …” பூந்தளிரின் கையிலிருந்த சைக்களை வாங்கி ஸ்டாண்டிட்டான்  குருபரன் . இவன் இங்கே ஏன் வந்தான் அனுராதா கலக்கத்துடன் அவனை பார்த்த போதே ” வா தளிர் …” என அவள் கையோடு தன் கைகளை கோர்த்துக் கொண்டு குருபரன் அழைத்து சென்ற இடத்தை பார்த்ததும் அனுராதாவிற்கு கண்கள் இருண்டு மயக்கம் வந்தது .




What’s your Reaction?
+1
26
+1
19
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!