Entertainment karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-14

14

” நீ சந்தோசமாக இருக்கிறாயா பூவு ..உண்மையை சொல்லவேண்டும் …? ” குமரனின் பார்வை பூந்தளிரின் முகத்தில் பதிந்திருந்த்து .

இருவருமாக மாரியம்மன் கோவில் தெப்பக்குள படிகளில் அமர்ந்திருந்தனர் .கும்பாபிசேகத்திற்காக கோவில் தெப்பகுளத்தினை சுத்தம் செய்ய வேலை நடந்து கொண்டிருந்த்து .ஆட்கள் பரபரப்பாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்கள் .கோவில் தெப்பக்குள வேலைகளை பார்வையிட்டு வருமாறு பொன்னுரங்கம் மருமகளை ஏவியிருந்தார் . அப்போது அங்கே வந்த குமரனிடம் பேசியபடி அமர்ந்திருந்தாள் பூந்தளிர் .

” நிச்சயமாக மாமா .ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் .நேற்று கூட நம் வீட்டில் பார்த்தீர்களே .என் கணவர் என்னை எவ்வளவு பாசமாக கவனித்துக் கொண்டார் …” என்றவளுக்குள் இன்னமும் குருபரன் அவளிடம் , அவள் வீட்டினரிடம் காட்டிய பரிவையையும் , பவ்யத்தையும் நம்ப முடியவில்லை .வீட்டினர் அனைவரிடமும் முறையாய்  நலம் விசாரித்து , அம்மா கொடுத்த பலகாரங்களை சுவைத்து உண்டு , அப்பாவிடம் அவன் பயின்ற கலைகளை விளக்கி என… அப்பாவின் நெகிழ்வையும் , அம்மாவின் கண்ணீரையும் , அண்ணனின் பெருமித்ததையும் , அண்ணியின் பொறாமையையும் ஒரு மணி நேரத்தில் வெளிக்கொணர்ந்தான் .அவர்கள் வீட்டிலிருந்த நேரம் முழுவதும் தன் தோள் உரசியபடி அமர்ந்திருந்த அவன் தோள்களின் ஸ்பரிசத்தை இதோ …இப்போதும் பூந்தளிர் தனது மேனியில் உணர்ந்தாள் .

” நான் கூப்பிட்டதும் உடனே அம்மா வீட்டிற்கு கிளம்பி வந்துவிட்டார் ….” கனவுக் கண்களுடன் தன் தோள் வருடி பேசிய மாமன் மகளை உற்று பார்த்து ஓர் விரக்தி சிரிப்பை சிந்தினான் .

” ம் …பார்த்தேன் .அவன் உன்னை ஜீப்பில் அழைத்து வந்த்தையும் பார்த்தேன் .வாசலில் உன்னை தள்ளிவிட்டு பொறுப்பு தீர்ந்த்து என திரும்ப போனதையும் பார்த்தேன் .பிறகு என்னை எதிரில் பார்த்துவிட்டு மனதை மாற்றிக்கொண்டு வீட்டிற்குள் வந்து உத்தம மருமகனாக போட்ட வேசத்தையும் பார்த்தேன் “

” எ…என்ன உங்களை பார்த்ததும் தான் திரும்பி வந்தாரா …? ” திடீரென மாறிய கணவனின் நடவடிக்கையில் அவள் திகைப்புற்று கணவனை பார்த்தபோது …” கோவில் கும்பாபிசேகம் …” என கண் சிமிட்டி சிரித்தானே .கடைசியில் இவன் என்னை வேவு பார்க்கவா என் வீட்டிற்கு வந்தான் …? பூந்தளிரின் மனம் கசந்து வழிந்த்து .

” நீ ஒரு மாய வலையில் இருக்கிறாய் பூவு .உன் புருசன் எப்போதும் உன்னை மனைவியாக நினைத்ததில்லை .இனி வரும் காலங்களிலும் ஒரு நாளும் நினைக்க போவதில்லை .அவர்கள் குடும்ப குறிக்கோள் இந்த கோவில் கும்பாபிசேகம்தான் .அது நல்லபடியாக நடந்து முடிந்த்தும் உன் கையில் பெட்டியை தூக்கிக் கொடுத்து உன் அம்மா வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் .இதுதான் நடக்க போகிறது .அதில் எனக்கு சந்தேகமே கிடையாது ….”

” எது நடக்க போகிறது …? உனக்கு எதில் சந்தேகம் கிடையாது …? ” கேட்டபடி வந்து நின்றான் குருபரன் .

இங்கேயும் வேவு பார்க்க வந்துவிட்டான் பார்த்தாயா …? கண்ணால் பூந்தளிரிடம் சொன்னபடி குருபரனை முறைத்தான் குமரன் .

” உன்னை இங்கே நடக்கும் வேலைகளை பார்க்கத்தானே ஐயா அனுப்பினார் .நீ என்ன நிதானமாக உட்கார்ந்து வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறாய் …? “

பூந்தளிர் அமைதியாக இருந்தாள் .அவளுக்கு இருந்த மனநிலைக்கு குருபரனிடம் பேசும் தெம்பு கூட மனதில் இல்லை .ஆனால் குமரன் துள்ளினான் .

” வெட்டி அரட்டையா …எங்கள் வாழ்க்கை குறித்து முக்கியமாக பேசிக் கொண்டிருக்கிறோம் ….”

” என் மனைவியுடனா ….? ” கேட்டபடி பூந்தளிரை உரசியபடி அமர்ந்து அவள் தோள்களில் கையை வேறு போட்டுக்கொண்டான் . ” அப்படியா தளிர் …? ” என்றான் .அவனது இந்த அழைப்பில் பூந்தளிரின் உடலில் அதிர்வு பரவியது .அதை உணர்ந்த்து போல் சமாதானமாக அவள் தோள்களை மேலும் அழுத்திக் கொண்டவன் , ” அப்புறம் வேறென்ன …? ” என்றான் குமரனிடம் .

ஒட்டி அமர்ந்திருந்த இருவரையும் வெறித்து பார்த்தபடி எழுந்த குமரன் ” நான் வருகிறேன் …” என நடந்தவன் நின்று திரும்பி ” இன்னொரு நாள் நாம் நிச்சயம் பேசலாம் பூவு …” என்றுவிட்டு போனான் .அவனது வார்த்தைகளின் தாக்கத்தை தனது தோளபட்டை அழுந்திய வலியில் உணர்ந்து முகம் சுருங்கினாள் பூந்தளிர் .

” ஷ் …” என்ற அவளின் குரலில் வேகமாக தனது கை  அழுத்தம் குறைத்து ” சாரிம்மா …” என அவள் தோள் வருடினான்.  பின்னும் அவன் கை தனது தோள்களிலேயே தங்கியிருப்பதை உணர்ந்த பூந்தளிர் ” இனி நடிப்பிற்கென்ன வேலை …? ” என்றாள் .

” நடிப்பா …? ” கேட்டவனின் கைகள் மீண்டும் தோள்களில் அழுத்தமானது .

” நாம் கணவன் , மனைவி என்பது இந்த ஊரிலுள்ளவர்களுக்கு , இதோ இங்கே வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லோருக்கும் தெரியும் .பொது இடத்தில் இப்படி என்னை  உரசிதான் அதை நீங்கள் யாருக்கும் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை …”




” என்ன உளறுகிறாய் …? “

” வெட்ட வெளியில் வைத்து என்னை அசிங்கப் படுத்தாதீர்கள் .கையை எடுங்கள் என்கிறேன் ….” பூந்தளிரின் நெருப்பு துண்ட வார்த்தைகள் சுட சட்டென கையை எடுத்துக் கொண்டவன் ” எழுந்து வா …நாம் பேச வேண்டும் ” என்றான் .

” வேண்டாம் இப்போது நாம் பேசினால் …பிறகு வாழ்நாள் முழுவதும் ஒருவர் முகத்தில் ஒருவர் விழிக்க கூட யோசிக்கும் அளவு நான் ஏதாவது பேசினாலும் பேசிவிடுவேன் .நீங்க  போங்க .நாம் பிறகு பேசலாம் …”

முள் தைத்த பறவையின் வாதையை அவள் கண்களில் பார்த்தவன் பரிவோடு ” தளிர் …” என அழைத்தபடி அவளருகில் அமர பேனான் .

” வேண்டாம் …அப்படி கூப்பிட வேண்டாம் .இங்கே இருக்க வேண்டாம் .போய்விடுங்கள் …” மெல்லிய கத்தலுடன் தன் மடியில் முகம் புதைத்து கொண்டவளை செய்வதறியாது திரும்பி திரும்பி பார்த்தபடி தெப்பக்குள படிக்கட்டுகளை ஏறிக்கடந்து அவள் வருவதற்காக மரத்தடியில் காத்திருந்தான் .ஒரு மணிநேரம் கழித்து சரிந்து விழுந்து விடுவாள் போல் துவண்ட நடையுடன் வந்தவளை துடிக்கும் மனதுடன் அருகில் நெருங்க முடியாமல் பார்த்தபடி இருந்தான் .அவள் தனது சைக்கிளில் ஏறு மெதுவாக மிதித்து வீட்டிற்கு வரும் வரை தன் பைக்கிலேயே பின்னாலேயே வந்தான் .அவன் பைக்கை நிறுத்தி விட்டு அவர்கள் அறைக்குள் வந்த போது பூந்தளிர் சோபாவில் படுத்து உறங்கிப் போயிருந்தாள் .

————————

மரத்தில் அமர்ந்து உற்சாகமாய் கூவிக் கொண்டிருந்த வரிக்குயிலை  சன்னல் வழியாக ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள் பூந்தளிர் .நானும் உன்னைப் போல் ஒரு காலத்தில் சுதந்திரமாகத்தான் பறந்து கொண்டிருந்தேன் .ஆனால் இப்போது சிறகுடைத்து என்னை கூண்டில் அடைத்துவிட்டனர் .விரிந்திருந்த அவள் கூந்தல் பரிவாக வருடப்பட அவள் தேகம் விரைத்தது .

” தலை குளித்து விட்டு நன்றாக தலையை துவட்டக் கூடாதா …ம் …? ” அதட்டியபடி இருந்தான் குருபரன் .இவன் வெளியே போகவில்லையா …? அவன் கிளம்பி போகும் வரை கண்களை மூடிக் கிடந்து விட்டு இப்போதுதான் எழுந்து குளித்தாள் .பின்னாலேயே வந்து நிற்கிறான்.

” நேற்று சாயங்காலம் வந்து படுத்தவள் .இன்னுமும் அறையை விட்டு வெளியே வரவில்லையேன்னு எல்லோரும் கேட்கிறாங்க .காய்ச்சல்னு சொல்லி வைத்திருக்கிறேன் .இப்போது வா சாப்பிட போகலாம் …” கை பற்றி அழைத்தான் .

,” நீங்க போங்க நான் சாப்பிட்டுக்கிறேன் …”

” இல்லை பூந்தளிர் நான் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வந்திருக்கிறேன் .உன்னுடன் பேச வேண்டும் .போய் சாப்பிட்டு விட்டு வா …” இப்போது போய் சாப்பிடாவிட்டால் இவனோடு சேர்த்து இவன் குடும்பம் மொத்தத்திற்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் …என நினைத்தவள் போய் நலம் விசாரித்தவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு அரை குறையாக உணவை விழுங்கி விட்டு திரும்ப வந்த போது அவன் பொறுமையாக அ வளுக்கு காத்திருந்தான் .

வெறுமையான விழிகளுடன் சோபாவில் அமர்ந்திருந்தவளின் அருகில் அமர போனவன் , அவள் முறைப்பில் தோள்களை குலுக்கியபடி அவளுக்கு எதிரில் ஒரு சேரை இழுத்து போட்டு அமர்ந்தான் .கொஞ்ச நேரம் அவள் முகத்தை பார்த்தபடி இருந்தான் .பூந்தளிரின் கண்கள் சன்னலுக்கு வெளியே இருந்த்து .

” ஏன்டா என்ன குழப்பம் மனதில் …? ” மென்மையாக கைகளை பற்றிக் கொண்டான் .

” கும்பாபிசேகம் நிச்சயம் நடக்கும் .கவலைப்படாதீர்கள் …” தன் கைகளை உருவ முயன்றாள் .

” நான் என்ன கேட்டால் …நீ என்ன சொல்கிறாய் …? “

” நமக்கிடையே கும்பாபிசேகம் தவிர பேச வேறெதுவும் இல்லை .அது நின்று விடுமோ என பயந்து இனி நீங்கள் என்னிடம் குழைய வேண்டிய தேவையும் இல்லை …”

” இல்லை தளிர் .நமக்கிடையே நமது வாழ்வு மட்டும்தான் இருக்கிறது .கோவில் கும்பாபிசேகமெல்லாம் பிறகுதான் .மூன்று மாதமாக முட்டாள்தனமாக நாம் வீண்டித்த நம் வாழ்வை இனி சந்தோசமாக வாழ நினைக்கிறேன் …”

” நான் நினைக்க ஙேண்டாமா…? “

” தளிர் …என்னம்மா …?” எழுந்து அவளருகில் அமர பேனவனை கையுயர்த்தி தடுத்தாள் .”

”  உங்கள் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது …? அப்பா சொல்லுக்காக , கோவில் கும்பாபிசேகத்திற்காக ஒரு தாழ்ந்த சாதி பெண்ணை வேறு வழியில்லாமல் மணம் முடித்தோம் .இப்போது தடைபட்டிக் கொண்டேயிருக்கும் கோவில் வேலைகளுக்காக கண்ணை மூடிக்கொண்டு அவளோடு மனைவியாக வாழ்ந்தும் தொலைவோமென்று நினைக்கிறீர்கள் .வசதி குறைந்த குடும்ப பெண்தானே ..நமது பெரிய வீட்டு வசதிக்கு பழகியிருப்பாள் .விரலை சொடுக்கியதும் வந்து மடியில் விழுந்து விடுவாள் என்றுதானே நினைத்தீர்கள் …? “

” யோசித்து பேசு பூந்தளிர் .வார்த்தைகளை விடாதே .திரும்ப பெற முடியாது …” எச்சரித்தான் .அவள் அவனை அலட்சியம் செய்தாள் .

” இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க .எனக்கு உங்களை பிடிக்கலை .உங்க முகத்தை பார்க்கவே வெறுப்பா இருக்கு .நீங்க என்னை தொட்டால் தீக்குளிக்கிற மாதிரி உடம்பெல்லாம் எரியுது .உங்களை கணவனாக அடைந்த்தை நான் எனது பெரிய துரதிர்ஷ்டமாக நினைக்கிறேன் ….” பின்விளைவை பற்றி யோசிக்காமல் அப்போதைய தனது மனநிலையை கொட்டித் தீர்த்தாள் .அவமானத்தில் முகம் கன்ற விழி மூடி அமர்ந்திருந்தவனை திருப்தியாக பார்த்தாள் .

ஐந்தே நிமிடம்தான் .தன்னை சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தவன் ” இது எப்போதிருந்து ? ” என்றான் .

” எது …? “




” அதுதான் …இந்த தொட்டால் தீக்குளிக்க தோன்றுவது ….”

” உங்களுக்கு எப்போது …நமக்குள நம் வாழ்க்கை மட்டும்தான் என்ற அரிய பெரிய தத்துவம் விளங்கியது ….? “

” அது …நிறைய காரணம் இருக்கிறது .இப்போது வேண்டாம்.நீ கேட்கும் நிலையில் இல்லை .என் கேள்விக்கு நீ முதலில் பதில் சொல்லு ….”

” முதலில் உங்களை பார்த்த நாளிலிருந்து … என்னை அருவெறுப்பாக பார்த்துக் கொண்டிருப்பீர்களே …அப்போதிருந்து .சின்ன சாதிக்காரி
என்றுதானே அப்போது அப்படி நடந்து கொண்டீர்கள் .இப்போது திடீரென நான் உயர் சாதி பெண்ணாகி விட்டேனா …? ஆசையோடு அணைக்க வருகிறீர்கள் என நம்பி ..நான் உங்கள் கைகளில் ….” படபடவென பேசி வந்தவள் இதற்கு மேல் பேச வாய் வராமல் உதடுகளை பற்களால் அழுந்த கடித்தாள் .

மெல்ல தலையசைத்து ” விட்டு விடு தளிர் ….” என தோள் தட்டியவனின் கைகளை தட்டி விட்டாள் .

” முதலில் வரமாட்டேனென்று விட்டு , பின்னாலேயே என் அம்மா வீட்டிற்குள் ஏன் வந்தீர்கள் ….? அங்கே வந்து ஏன் அந்த நாடகம் போட்டீர்கள. …? “

” அது நாடகமில்லை ….”

” ஓ …உங்கள் ஆழ்ந்த அன்போ ….? என் முகத்தை பார்த்து சொல்லுங்கள் .குமரன் மாமாவை பார்த்து விட்டு அவரிடம் நான் பழகுவதை வேவு பார்க்கத்தானே வந்தீர்கள் ….? “

அவள் முகத்தை உற்று பார்த்தவன்  ” ஆமாம் ..குமரனை பார்த்து விட்டுத்தான் வந்தேன் .ஆனால் நம் வாழ்வை பற்றி அவன் தவறாக புரிந்து வைத்திருந்ததை சரி படுத்தும் நோக்கத்தில் தான் வந்தேன் “

” அட..டா என்ன உயர்ந்த நோக்கம் …? இதற்காக ஒரு தாழ்ந்த சாதி குடும்பத்தோடு ஒட்டி உறவாடும் துர்பாக்கியம் உங்களுக்கு வாய்த்து விட்டதே …? “

” போதும் பூந்தளிர் .நீ நினைப்பது போல் நான் எப்போதும் சாதி வித்தியாசம் பார்த்தில்லை “

” ஓ ….அப்போ நம்ம கல்யாணத்திற்கு முன்பே என்னை அடிக்கடி முறைத்துக் கொண்டிருந்த்து , திருமணத்தை நிறுத்த நினைத்தது …இதற்கெல்லாம் என்ன காரணம் …? “

” அது ….” தயங்கினான் .

” ஏன் …எதை சொல்லி ஏமாற்ற என்று தெரியவில்லையாக்கும் …? “

இல்லையென தலையசைத்தவன் ” இப்போதிருக்கும் சூழ்நிலையில் நான் இதனை சொன்னால் அது எனக்குத்தான் பாதகமாக முடியும் .உன் கோபம் , வெறுப்பு அதிகரிக்கும் …”

” இதற்கு மேல் அதிகரிக்க வாய்ப்பில்லை .ஏற்கெனவே அதெல்லாம் உச்சக்கட்டத்தில்தான் இருக்கிறது .அலட்டமால் சொல்லுங்கள் ….”

பெருமூச்சுடன் அவள் முகத்தை பார்த்தவன் மெல்ல ” கோபாலன் …” என்றான் .  ” அவன் என் பள்ளித் தோழன் .நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவென்று ஒரு கார் கொண்டு வந்தானே .அது என்னுடைய கார்தான் .நம் வீட்டு கார் .திருட்டு கல்யாணமென்று அன்று அவன் என் உதவியைத்தான் கேட்டான் . அன்று நீங்கள் இருவரும் ஊரை விட்டு ஓடிப் போகவென வந்த போது உங்களுக்கு கார் ஓட்டியதே நான்தான் . உனக்கு அன்றிருந்த பதட்ட மனநிலையில் நீ என்னை கவனிக்கவில்லை ….”

பூந்தளிரின் முகம் மாறத் துவங்கியது .




What’s your Reaction?
+1
24
+1
19
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!