gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 6 கன்னியாகுமரி பகவதி அம்மன்

இந்த கோவிலில் வீற்றிருக்கும் தேவியை குமரி அம்மன், கன்னியாகுமரி அம்மன், துர்க்கை அம்மன், பகவதி அம்மன் என்று பல பெயர்களில் அழைப்பார்கள். அம்மன் குடியிருக்கும் இந்த கன்னியாகுமரி  கோவிலானது கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவும், மேற்கு பகுதியில் அரபிக்கடலும், தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் தென் கோடி முனையாகும். தேவியின் சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாக  இந்த இடம் கருதப்படுகிறது.




தல வரலாறு

முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எந்நேரமும் போர் நிகழ்ந்துவந்தது. தேவர்களை அசுரர்கள் அடக்கி ஆண்டதால், தர்மம் அழிந்து, அதர்மம் தலைதூக்கியது. எங்கும் அறியாமையும் அநீதியும் தீமையும் பாவமும் நிறைந்து காணப்பட்டன. அசுரர் தலைவனான பாணாசுரன் முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான்.

அப்போது பூமாதேவி பாணாசுரனுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று திருமாலிடம் தேவர்கள் விண்ணப்பித்தனர். திருமாலும் பாணாசுரன் பெற்ற வரத்தின்படி, அவனை கன்னிப்பெண் ஒருவரால் மட்டுமே அழிக்க முடியும் என்று கூறுகிறார். மேலும், இதுதொடர்பாக அன்னை பராசக்தி உங்களுக்கு துணை இருப்பார் என்கிறார். அதன்படி தேவர்கள், பாணாசுரனை அழிப்பதற்காக பார்வதி தேவியை வணங்கி ஒரு பெரிய வேள்வி செய்தனர். வேள்வியால் மகிழ்ந்த சக்திதேவி, தேவர்கள் முன்பாக தோன்றி, பாணாசுரனை அழிப்பதாக உறுதி அளிக்கிறார்.

அதற்காக கன்னியாகுமரி வந்தடைந்த பார்வதி தேவி, அங்கு கடும்தவம் புரிந்தார். சிறிய பெண்ணாக இருந்த கன்னிதேவி, மணப்பருவம் அடைந்ததும், சுசீந்திரத்தில் கோயில் கொண்ட சிவபெருமான் (தாணுமாலவர்), அவரை மணமுடிக்க எண்ணினார். சிவபெருமான் தனது விருப்பத்தை தேவர்களிடம் கூறினார்.

சிவபெருமானுக்கும் கன்னிதேவிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், ஒரு கன்னிப்பெண்ணால்தான் பாணாசுரனுக்கு அழிவு ஏற்படும் என்பதால், நாரத முனிவர் சற்று யோசித்தார். தேவர்களும், பாணாசுரனை வீழ்த்த வேண்டும் என்றால், அன்னையின் தவம் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நாரதரிடம் கூறினர். அதன்படி நாரதர், சிவபெருமான் – பார்வதி தேவியின் திருமணத்தை தடுத்து நிறுத்த எண்ணினார். அதேநேரத்தில், சிவபெருமானின் எண்ணத்தை மறுத்துரைக்காதபடி செயல்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொண்டார்.

அதனால், நள்ளிரவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று சிவபெருமானிடமும் பார்வதி தேவியிடமும் கூறினார் நாரதர். மேலும் கண்ணில்லா தேங்காய், காம்பில்லா மாங்காய், நரம்பில்லா வெற்றிலை, கணு இல்லா கரும்பு, இதழ் இல்லா மலர் ஆகியவற்றை திருமண சீராக வைக்க வேண்டும் என்று கூறினார்.

நாரதர் கூறிய நிபந்தனைகளை சிவபெருமான் ஏற்றுக் கொள்கிறார். அதன்படி ஒரு குறிப்பிட்ட நாளில், சீதனப் பொருட்களுடன் சுசீந்திரத்தில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்டார் சிவபெருமான். போகும்வழியில் ‘வழுக்கம் பாறை’ என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் சேவல் உருவம் கொண்டு உரக்கக் கூவினார். பொழுது புலர்ந்துவிட்டது, நள்ளிரவு நேரம் கடந்துவிட்டது என்று நினைத்த சிவபெருமான், கன்னியாகுமரி செல்லாமல், சுசீந்திரம் திரும்பினார்.




குமரிமுனையில் திருமணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் தேவியின் கோபம் உச்சத்தை எட்டியது. சூரியன் உதித்து விட்டார். ஆனால் இன்னும் தேவியை மணம் முடிப்பதற்காக ஈசன் வரவில்லை என்ற கோபம் தேவிக்கு  அதிகமாகியது. திருமணத்திற்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்களையும், அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூக்களையும் எடுத்து கடல் மணல் பரப்பில் வீசினாள். இதனால் தான் கன்னியாகுமாரியில் இருக்கும் மணல் பரப்பானது வண்ணங்களாக காட்சி தருகிறது என்று கூறப்படுகிறது.

இதனிடையே, கன்னிதேவியைப் பற்றி கேள்விப்பட்ட பாணாசுரன், தேவியை மணம்புரிய விரும்பினான். தேவி அதற்கு உடன்படாததால், தேவியை கவர்ந்து செல்ல முயன்றான். இதுதான் சமயம் என்று தனது போர்வாளை வீசினார் பார்வதி தேவி. நீண்ட நேர போருக்குப் பின் தன் சக்கராயுதத்தால் பாணாசுரனை வீழ்த்தினார் பார்வதி தேவி. தேவர்கள் அனைவரும் பார்வதி தேவிக்கு நன்றி தெரிவித்தனர். தேவர்களை வாழ்த்திய தேவி, மீண்டும் தன் தவத்தைத் தொடர்ந்தார்.

கோபம் தணிந்த தேவி சாந்தி அடைந்து அன்று முதல் இன்று வரை கன்னியாகுமாரியில் கன்னிப் பெண்ணாக, பகவதி அம்மனாக அமர்ந்து, அந்த சிவபெருமானை நினைத்து கொண்டு மக்களின்  குறைகளை நீக்கி கொண்டிருக்கின்றாள் என்கிறது வரலாறு.




பகவதி அம்மன் மூக்கில் ஓரு நாகரத்தின மூக்குத்தி உள்ளது. இந்த நாகரத்தினம் ராஜநாக பாம்பின் வயிற்றில் உருவாகுவது. அவ்வளவு எளிதாக கிடைக்காது. அதன் ஒளி கடல் வரைக்கும் விசும். ஒரு முறை கப்பல் காரன், கலங்கரை விளக்கம் என்று நினைத்து அந்த ஒளியை நோக்கி வந்து பாறையில் மோதிவிட்டான். அதனால் வருடத்திற்கு 5 முறை மட்டும் தான் அந்த கதவு திறக்கப்படும்.

பலன்கள்:

திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்கள் இந்த கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நிச்சயிக்கப்படும். காசிக்கு சென்று புண்ணிய தீர்த்தத்தில் நீராடு வதற்கு முன்பு கன்னியாகுமரியில் இருக்கும் முக்கூடல் சங்கமிக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடுவதால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.ஒளிமிக்க கன்னியாகுமரி பகவதி அன்னையின் மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது.




What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!