gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 14 துவாரகா ருக்மணி தேவி

அம்மனின் சக்தி பீட வரிசையில் துவாரகாபுரியில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயில் அருகே உள்ள ருக்மணி தேவி கோயிலும் ஒன்று. குஜராத் மாநிலத்தின் கோமதி நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள துவாரகா நகரத்தில், ருக்மணி என்ற பெயரில் ஆதிசக்தி அருள்பாலித்து வருகிறார்.

108 வைணவத் தலங்களுள் ஒன்றான துவாரகாதீசர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது ருக்மணி தேவி கோயில். துவாரகாதீசன், துவாரகா நாதன், கல்யாண நாராயணன் ஆகிய பெயர்களைத் தாங்கி கிருஷ்ண பரமாத்மா இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். கல்யாண நாச்சியார், லட்சுமி தேவி, ருக்மணி தேவி ஆகிய பெயர்களைத் தாங்கி இதே தலத்தில் தனி கோயிலில் ஆதிசக்தி அருள்பாலிக்கிறார்.




தல வரலாறு

ருக்மிணிக்கும் அவரது கணவர் கிருஷ்ணருக்கும் ஒருவருக்கொருவர் வெகு தொலைவில் உள்ள தனித்தனி கோவில்களை நியாயப்படுத்த ஒரு புராணக்கதை கூறப்பட்டுள்ளது. துர்வாச முனிவரின் வேண்டுகோளின் பேரில் (அவரது கோபத்திற்கும் சாபங்களுக்கும் பெயர் பெற்றவர்) கிருஷ்ணனும் ருக்மணியும் துர்வாச முனிவரை தங்கள் வீட்டிற்கு இரவு உணவிற்கு அழைத்துச் சென்று தேர் இழுத்தனர். வழியில், ருக்மிணி தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டபோது, ​​கிருஷ்ணன் அவள் குடிப்பதற்காக தன் கால்விரலால் தரையைத் தூண்டி கங்கை நீரை இழுத்தான். ருக்மணி கங்கை நீரால் தாகத்தைத் தணித்தாள். ஆனால் ருக்மிணி தனக்கு முதலில் குடிக்க தண்ணீர் கொடுக்காததால் துர்வாசன் அவமானப்பட்டான். அதனால், அவள் கணவனைப் பிரிந்து வாழ்வாள் என்று சபித்தார்.

அந்த இடத்தில் தான் ருக்மணி தேவி கோவில் இருப்பதாக நம்பப்படுகிறது. துவாரகைக்கு அருகில் உள்ள ருக்மிணி தேவி கோவில், துர்வாச முனிவரின் பழிவாங்கலுக்கு மௌன சாட்சியாக நிற்கிறது, கருவறையில் உள்ள ருக்மணி தேவியின் சிலை, அவளுடைய அன்புக்குரிய கிருஷ்ணரின் சகவாசம் இல்லாமல் தனித்து நிற்கிறது.

கிருஷ்ணா மற்றும் ருக்மணியின் காதல்

தங்கை தேவகிக்கு பிறக்கும் குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என்ற அசரீரியின் வாக்கைக் கேட்ட அரசன் கம்சன், அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை அழித்து வந்தான். தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையான கிருஷ்ண பரமாத்மாதான் கம்சனை அழிக்கப் போகிறார் என்பது ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டதால், கிருஷ்ணர் பிறந்து, இடமாற்றம் செய்யப்பட்டு கோகுலத்தில் நந்தகோபர் – யசோதை மைந்தனாக வளர்ந்து வந்தார்.

உரிய நேரம் வந்ததும் கிருஷ்ணர், கம்சனை மாய்த்து, உக்ரசேனனை மதுராவுக்கு அரசனாக்கினார். இது கம்சனின் மாமனார் ஜராசந்தனுக்கு கோபத்தை உண்டாக்கியது. இதனால் ஜராசந்தன், கிருஷ்ணருடன் போரிட்டு, மதுராவைக் கைப்பற்றத் தயாராக இருந்தார். இச்செய்தி, கிருஷ்ணருக்கு தெரிய வந்தது. ஜராசந்தன் படையெடுத்து வரும்போதெல்லாம் யாதவர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரை விரட்டியடித்தார்கள். இப்படி பதினேழு முறை யாதவர்களிடம் தோற்றார் ஜராசந்தன்.

தக்க தருணம் பார்த்து பதினெட்டாவது முறையாக போரிடத் தயாராக இருந்தார் ஜராசந்தன். அப்போது போரின் நிலைமை தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை உணர்ந்த கிருஷ்ணர், மதுரா நகரத்தில் இருந்து யாதவர்களை வெளியேறப் பணித்தார். ஜராசந்தன் அவமானப்படுத்தப்பட்டதை அறிந்த, அவரது மகன் காலயவனன், மதுரா நகரைத் தாக்குவதற்குத் தயாரானான். தற்போது இரண்டு எதிரிகள் ஆகிவிட்டதால், கிருஷ்ணர், தன் அண்ணன் பலராமனையும், யாதவர்களையும் அழைத்துக் கொண்டு மதுராவை விட்டு கிளம்பினார்.




மேற்கு கடற்கரைப் பக்கம் வந்து, ஒரு புதிய நகரை உருவாக்குவதற்காக, சமுத்திரராஜனிடம், 12 யோசனை தூரம் கடலில் இடம் கேட்டார் கிருஷ்ணர். சமுத்திரராஜனும் அதற்கு உடன்பட்டு இடம் தருகிறார். அதே இடத்தில் ஒரே இரவில் தங்கத்தால் ஆன நகரத்தை உருவாக்குகிறார் கிருஷ்ணர். இந்த இடமே துவாரகா என்று அழைக்கப்படுகிறது.

ருக்மணி தேவி

துவாரகையில் கிருஷ்ணர் இருந்தபோது, சௌராஷ்டிரா தேசத்து மகாராஜாவின் மகள் ருக்மணி தேவிக்கு தீயவர்களால் ஆபத்து நேர இருந்தது. சிசுபாலன் என்பவர் ருக்மணி தேவியை மணக்க எண்ணினார். ஆனால், ருக்மணி தேவிக்கு கிருஷ்ணரை மணம் புரியவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்நிலையில் ருக்மணி தேவியின் சகோதரனான ருக்மண், கிருஷ்ணர் மீது தீராக பகை கொண்டவராக இருந்தார். ஆதிசக்தியின் அம்சமாக இத்தலத்தில் அவதரித்த ருக்மணி தேவிக்கு, அதர்மத்தில் ஈடுபடும் சிசுபாலன், ருக்மண் ஆகியோர் மீது வெறுப்பு வந்தது. கிருஷ்ணரும் அதர்மத்தை அழிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் என்பதால், துவாரகாபதியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.




ருக்மணி தேவியின் எண்ணத்தை உணர்ந்த கிருஷ்ணர், அவரை தேரில் ஏற்றிச் சென்று மணம்புரிந்து கொண்டார்.இச்செயலால் கோபம் கொண்ட சிசுபாலன், கிருஷ்ணரை வீழ்த்த எண்ணினார். இந்த நேரத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் மூண்டது. சிசுபாலன் கவுரவர்களை ஆதரித்துப் பேசி, கிருஷ்ணரை அவமதித்தார். இதைத் தொடர்ந்து, தனது சுதர்சன சக்கரத்தைக் கொண்டு சிசுபாலனை, கிருஷ்ணர் மாய்த்தார்.

ருக்மண், தன் படைகளைத் திரட்டிக் கொண்டு, பாண்டவர்களை சந்திக்கிறார். பாண்டவர் படை சிறிய அளவில் இருப்பதால் அவர்களுக்கு போரில் உதவிபுரிவதாக ருக்மண் வாக்களிக்கிறார். உதவ வந்திருந்தாலும் ருக்மணின் ஆணவப் போக்கு பாண்டவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதர்ம வழியில் செல்லும் தன் சகோதரனை, ருக்மணி தேவி வெறுத்து ஒதுக்கினார். பாண்டவர்கள், ருக்மணி தேவியின் போக்கால் அவமானம் அடைந்த ருக்மண் போரில் கலந்து கொள்ளாது ஒதுங்கினார்.

அதர்மத்தின் வழி செல்லும் நபர் தன் சகோதரனாக இருந்தாலும், தாட்சாயணி போலவே தானும் சொந்த பந்தங்களைப் பார்க்காமல், தர்மத்தின் வழி நின்றார் ருக்மணி தேவி. சிவசக்தி என்று பெயர் பெற்றவரே வைஷ்ணவி என்ற பெயரைத் தாங்கி இங்கு அருள்பாலிக்கிறார். காளியாக உருவெடுத்து தட்சணையும், அவர் செய்த யாகத்தையும் அழித்த தேவியே, கிருஷ்ணரின் பிராட்டியாக அவதரித்துள்ளார்.




கோவில் அமைப்பு

கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில் இருந்த துவாரகா நகர் தற்போது இல்லை என்று கூறப்படுகிறது. கி.பி 8 முதல் 10-ம் நூற்றாண்டுகளில் அந்நிய படையெடுப்பால் துவாரகா நகரம் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர், 15, 16-ம் நூற்றாண்டுகளில் குஜராத்தை ஆட்சிபுரிந்த சாளுக்கிய அரச வம்சத்தினர், தற்போதுள்ள கோயிலைக் கட்டியுள்ளனர்.

இந்தக் கோயில் சோமநாதர் கோயில் போல அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோமதி நதிக்கரையை ஒட்டி உயரமான இடத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 56 படிக்கட்டுகள் ஏறி, இக்கோயிலுக்குச் செல்ல வேண்டும். நான்கு நிலைகளைக் கொண்ட கோபுரத்தின் உயரம் 51.8 மீட்டர். 72 தூண்களைக் கொண்டு பெரிய நுழைவாயில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில், சிரசில் கொண்டையுடன், 3 அடி உயரத்தில் நின்ற கோலத்தில், மேற்கு நோக்கி, கரிய திருமேனி கொண்டவராக துவாரகாதீசர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயில் பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.




திருவிழாக்கள்

கிருஷ்ண ஜென்மாஷ்டமி இங்கே வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். அதையொட்டி ‘மட்கோபாட்’ என்ற உறியடி நிகழ்ச்சி நடைபெறும். ‘பாவன் பேடா’ என்ற நடனத்தை பெண்கள் ஆடுவர். ஒவ்வொரு பெண்ணும் 52 பானைகளை தலையில் சுமந்து ஆடுவதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். தீபாவளி, ஹோலி, குஜராத் புத்தாண்டு தினங்களில் இங்கே கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். இந்நாட்களில் துவாரகாதீசர் நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!