gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 13 ஜலந்தர் திரிபுரமாலினி

அம்மனின் சக்தி பீட வரிசையில் ஜலந்தரில் உள்ள தேவி திருபுரமாலினி கோயில் முக்கியத் தலமாகக் கருதப்படுகிறது. தேவியின் தனங்களில் ஒன்று இத்தலத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. மகாசரஸ்வதி, மகாலட்சுமி, மாகாளி ஆகிய சக்திகளின் ஒருங்கிணைந்த சக்தியாக தேவி திரிபுரமாலினி விளங்குகிறார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் திரிபுரமாலினி திருத்தலம் உள்ளது. டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் வழியில் உள்ளது ஜலந்தர். பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரமான சண்டிகர், தேவியின் பெயரைத் தாங்கி உள்ளது. அன்னையின் (சண்டி) அருள் நிழலில் அமைக்கப்பட்ட நகரம் என்பதால் இது சண்டிகர் என்று பெயர் பெற்றுள்ளது.

அன்னை சண்டியே, இத்தலத்தில் திரிபுரமாலினி என்ற பெயரைத் தாங்கி அருள்பாலிக்கிறார். கால்கா என்ற பகுதியில் ‘காளி’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். கல்கத்தா காளி கட்டத்தில் காளியாக அருள்பாலிக்கிறார். பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான வடிவங்களையும், பெயர்களையும் பெற்றிருந்தாலும் சக்தி ஒன்றே என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

காளி, திரிபுரமாலினி என்ற பெயரில் ஜலந்தரில் ஆட்சி புரிகிறார் என்பது மக்களின் நம்பிக்கை. மனிதர்களிடம் உள்ள அசுர குணங்களான ஆணவம், சூது, வஞ்சகம், கயமை போன்றவற்றை அழிக்கும் சக்தியாக திரிபுரமாலினி விளங்குகிறார். தன் குழந்தைகள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று ஒவ்வொரு தாயும் நினைப்பதுபோல திருபுரமாலினி, பக்தர்களைக் காத்து அருள்கிறார்.




திரிபுரமாலினி

மூன்று உலகங்களையும் (திரிபுரம்) நடுங்க வைத்த ஜலந்தரன், அம்மையப்பனால் (திரிசடையன்) அழிக்கப்பட்ட இடத்தில் தேவியின் உடற்கூறு விழுந்ததால், இங்கு தேவி, திரிபுரமாலினி என்ற பெயர் தாங்கி அருள்பாலிக்கிறார். திரிசடையனின் சரிபாதியைக் கொண்டவர் தேவி என்பதால், தேவிக்கு ‘திரிபுரமாலினி’ என்ற பெயர் வந்தது. அதர்மம் அழிக்கப்படும் இடங்களில் எல்லாம் தேவியின் உடற்கூறு விழுந்து அவை சக்தி பீடங்களாகப் போற்றப்படுகின்றன.

மூவுலங்களிலும் ஆட்சி செலுத்துபவராக திரிபுரமாலினி விளங்குகிறார். அவ்வுலகங்களில் உள்ள அனைவரையும் தன் குழந்தைகளாக பாவித்து அருள்கிறார். காளி தேவியின் அம்சமாக ஜலந்தரில் அருள்பாலிக்கும் திரிபுரமாலினி, நல்லோரைக் காத்து, தீயோரை அழிக்கும் அரசியாக விளங்குகிறார். மேலும், மகா காளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதியின் அம்சமாக திரிபுரமாலினி விளங்குகிறார்.




ஜலந்தரன் வரலாறு

தேவர்களின் தலைவன் இந்திரன் ஒருசமயம் கயிலை மலை வழியாக பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான், முதியவர் வேடம் தாங்கி வழியில் நின்று கொண்டிருந்தார். தான் வருவதை அறிந்தும், ஒரு முதியவர் வழியில் நிற்பதை உணர்ந்த இந்திரன், அவர் மீது கோபம் கொண்டு அவர் மீது வச்சிராயுதத்தை ஏவினார். ஆனால், வச்சிராயுதம், பொடிப் பொடியாக விழுந்தது.

வச்சிராயுதத்தை ஒருவர் பொடியாக்கிவிட்டார் என்றால், அவர் நிச்சயமாக சாதாரணமானவராக இருக்க முடியாது. தான் சென்ற வழியில் குறுக்கே நின்றது சிவபெருமான் என்பதை உணர்ந்த இந்திரன், அவரிடம் மன்னிப்பு கோரினார். அறியாமல் செய்து விட்டதாக, அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார். சிவபெருமானும் இந்திரனை மன்னித்தருளினார்.

இந்திரன் சிவபெருமானை வச்சிராயுதத்தால் தாக்கிய சமயம், ஏற்பட்ட சினம், வியர்வைத் துளிகளாக, சிவபெருமானின் மேனியில் இருந்தது. சிவபெருமான் வியர்வைத் துளியை வழித்து எறிந்தார். அந்த வியர்வைத் துளி, கடலில் விழுந்து, ஓர் அசுரனாக உருவம் பெற்றது. சமுத்திர ராஜனும் அந்த அசுரனை தன் மகனாக எண்ணி வளர்த்து வந்தார். ஜலத்தில் இருந்து பிறந்ததால் அசுரனுக்கு ‘ஜலந்தரன்’ என்று பெயர் சூட்டினார்.




ஜலந்தர் பெயர்க் காரணம்

சிறந்த வல்லமை படைத்தவனாக ஜலந்தரன் வளர்ந்து வந்தான். தனக்கென்று ஒரு நகரத்தை அமைத்துக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். தக்க வயதில் காலநேமி என்பவருடைய பெண் பிருந்தையை மணந்தான். அனைத்து வளங்களையும் பெற்றிருந்ததால், ஆணவம் கொண்டான் ஜலந்தரன். தானாக வலியச் சென்று தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமானையும் வெற்றி காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டான்.

அந்த எண்ணத்தை நிறைவேற்ற கயிலையை நோக்கி பயணித்தான். ஜலந்தரன் வருவதை அறிந்த முனிவர்கள் ஓடி ஒளிந்தனர். இனி கொடியவனால் என்ன நேருமோ என்று அஞ்சினர். அப்போது வேதியர் வேடம் தாங்கி சிவபெருமான், ஜலந்தரன் செல்லும் பாதையில் அவனை நோக்கி வந்தார். யார்? எங்கிருந்து வருகிறாய்? எங்கே செல்லப் போகிறாய்? என்று ஜலந்தரனைப் பார்த்து வினவினார் சிவபெருமான். அதற்கு, தன் பெயர் ஜலந்தரன் என்றும், சிவபெருமானுடன் போரிட்டு அவரை வெல்லச் செல்வதாகவும் ஆணவத்துடன் கூறினான். வேதியரும், முதலில் தன்னை வென்றுவிட்டு, பிறகு சிவபெருமானுடன் போரிடச் செல்லுமாறு பணித்தார்.

இதைக் கேட்டு சிரித்தான் ஜலந்தரன். “தேவாதி தேவர்களே என்னிடம் தோற்று விட்டார்கள். நீயா என்னை வெல்லப் போகிறாய்?” என்று வேதியரைப் பார்த்து ஏளனம் செய்தான். வேதியரும், தேவாதி தேவர்களை வெற்றி கண்டதுபோல, தன்னிடமும் போரிட்டு, அதில் வெற்றி பெற்றுவிட்டு சிவபெருமானுடன் போரிடச் செல்லலாம் என்று கூறினார்.

கோபம் கொண்ட ஜலந்தரன், வேதியரை நோக்கி, “இனி எமலோகம் செல்லப் போகிறாய்” என்று கர்ஜித்தான். உடனே வேதியர் தன் கால் கட்டை விரலால் ஒரு சக்கரத்தை வரைந்தார். பூமியில் வரையப்பட்ட அந்த சக்கரத்தை தூக்கிவிட்டு, சிவபெருமானிடம் போர் புரியலாம் என்று ஜலந்தரனை அறிவுறுத்தினார் வேதியர்.

அந்த சக்கரத்தை அலட்சியமாக எண்ணி, ஜலந்தரன் தூக்கத் தொடங்கினான். முழு பலத்தையும் உபயோகித்து அதை தூக்கியபோது, அந்த சக்கரம் அவனை இரு துண்டுகளாக்கியது. இப்படி, ஆணவத்துடன் செயல்பட்ட ஜலந்தரனை, சிவபெருமான் அழித்து, முனிவர்களையும் தேவர்களையும் காத்த இடம் என்பதால், இந்த இடம் ஜலந்தர் என்று அழைக்கப்படுகிறது.




திருவிழாக்கள்

சக்தி பீடங்கள் குறித்து வியாசர் தனது தேவி பாகவதத்தில் கூறும்போது, சக்தி பீடங்களைப் பற்றிய செய்திகளை படிக்கும்போது, கேட்கும்போது, மனதால் சிந்திக்கும்போது, நேரில் சென்றால் என்ன பலன்கள் கிட்டுமோ, அவை கிட்டும் என்கிறார். அவர்கள் சகல பாவங்களில் இருந்து விடுபட்டு அனைத்து நன்மைகளையும் பெறுவர் என்று தேவி பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. பிரம்மதேவர், சிவபெருமான், திருமால் மூவரும் தேவியை நோக்கியே தியானம் செய்தனர் என்று இதில் கூறப்பட்டுள்ளது.

நவராத்திரி சமயத்தில் இங்கே துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தேவிக்கு விதவிதமான உடைகள், ஆபரணங்கள் உடுத்தி வழிபடுவது வழக்கமாக உள்ளது. அப்போது மகிஷாசுர மர்த்தினி, துர்கா மாதா ஸ்துதி கூறப்பட்டு, தேவிக்கு சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்படும். நவராத்திரி நாட்களில் பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!