Serial Stories யாரோடு யாரோ

யாரோடு யாரோ -6

(6)

குபுக் என்று வாந்தி வந்தது. சத்யா ஓங்காரித்தாள்.

‘இரு, இரு,-கௌதம் எங்கிருந்தோ ஒரு சின்ன பக்கெட்டுடன் ஓடி வந்தான். ஆதற்குள் நெஞ்சுப் பிரட்டல் நின்று விட்டது. ஆனால் படபடப்பு அதிகமாகி விட்டது.

“முதல்ல இதைக் குடி– மைதிலி ஜூஸ் டம்ளரை நீட்டினாள்.

“வேண்டாம் அண்ணி. பொரட்டுது.

“ஒண்ணுமே குடிக்கலை. வெறும் வயித்தோட இருந்தாலே பொரட்டும். இதைக் குடி. மாதுளம் பழம்தான்.– மைதிலி வற்புறுத்திக் குடிக்க வைத்தாள். களைந்து கிடந்த கூந்தலைச் சீவி பின்னி விட்டாள்.

சத்யாவுக்கு நீள முடி. இடுப்புக்குக் கீழ் தொங்கும். அடர்த்தியும் அதிகம்.

“பாம்பைத் தோள்ல போட்டிருக்கே என்பார் தங்கம்.

ஒவ்வொரு வெள்ளியும் காலை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, உன் தலையைத் தேய்த்து அலசுவதற்குள் தோள் பட்டை விட்டுப் போயிடறது என்பாள்.  மைதிலி வந்த பிறகு அவள்தான் தலையை அலசி விடுவாள். சத்யா, தனக்கு என்று தனியாக எண்ணெய் காய்ச்சிக் கொள்வாள்.

 




தலைக்கு அனாவசிய பாங்குகள் செய்ய மாட்டாள் சத்யா. உணவிலும் அதிக கட்டுபாடுகள் உண்டு. அதிகம், எண்ணெய், கொழுப்பு சேர்ந்த உணவுகள், அடிக்கடி ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுவது கிடையாது. வீட்டில் மைதிலி செய்யும் ஸ்பைசி உணவுகள் மட்டும்தான்.

வீட்டிற்கு ஒரே பெண், செல்லம் அதிகம் என்றாலும், அனாவசிய செல்லம் கிடையாது.

குடும்ப கௌரவம், மதிப்பு, மரியாதை அழியாமல், நாலுபேர் கேவலமாகப் பேசும்படி நடக்கக் கூடாது என்று அப்பா வாசுதேவன் உறுதியாக இருப்பார்.

குடும்ப ஒற்றுமை முக்கியம் என்றாலும் தனிப்பட்ட சுதந்திரத்தை ஒவ்வொருவருக்கும் தந்திருந்தார். விஜய்க்குத் திருமணம் முடிந்ததும் அவனிடம் கேட்டார்.

“தனிக்குடித்தனம் போறியா?

“என்னத்துக்கு?

“இல்லைடா, புதுப் பொண்டாட்டி. அவகூட ஜாலியா இருக்கணும்னு நினைக்கலாம். மைதிலியும் தனியா இருக்கணும்னு விரும்பலாம்.– அப்பா சொல்லத் தெரியாமல் தயங்கினார்.

“யோவ் பெரிசு. எங்களைத் தொரத்திட்டு நீயும், அம்மாவும் ஜாலியா இருக்கத் திட்டமா?– அண்ணா உஷ்ணமானான்.

“அப்படி இல்லடா. இடைஞ்சலா இருக்கலாம்ல.

“நாங்க குழந்தையா இருக்கறப்போ, இடைஞ்சல்னு எங்களைக் கொண்டுபோய் அநாதை இல்லத்துல விட்டியா?

“அது எப்படிடா?

“அப்போ, இதுவும் அப்படித்தான். எங்களை எதுக்குப் பெத்தீங்க? உங்களை ஹோமுக்குத் துரத்தவா? எங்க கடமையைச் செய்ய விட மாட்டீங்க.

“உன் கடமை என்னடா?

“நான் சம்பாதிப்பேன். சத்யா கல்யாணம் என் பொறுப்பு. சரியா? மத்தபடி எனக்கு, என் மனைவி, குழந்தைகளுக்கு நீதான் சோறு போடனும். நாள், கிழமை எல்லாத்துக்கும் நீதான் துணி எடுத்துக் கொடுக்கணும். நான் அதிகாரம் செஞ்சுண்டு, காலை ஆட்டிண்டு சாப்பிடுவேன்.

“அது எதுக்கு காலை ஆட்டிண்டு?

“என் கால், நான் ஆட்டறேன்?

“நல்லது. துணி கூட நான்தான் எடுக்கணுமா?

“ஆமாம்.

“இல்லைன்னா?

“நிர்வாணமா ரோட்டுல போவேன்.

“போய்க்கோ. ஆர்கிமிடீஸ் மாதிரி.

“யப்போவ் அண்ணா அலறினான். அப்பா ஆனந்தமாகச் சிரித்தார். இன்று வரை வீட்டுப் பொறுப்பு அப்பாவிடம்தான். தங்கம் எதிலும் தலையிட மாட்டார். நடப்பதை வேடிக்கை மட்டும் பார்ப்பார். அவருக்கு சீரியல்கள் பிடிக்கும். அதைப் பார்த்து விட்டு, மைதிலியுடன் விவாதிப்பார்.

பாக்கியலஷ்மியும், பாண்டியன் ஸ்டாரும், சுந்தரியும், ரோஜாவும், சீரியல் முடிந்த பின்னரும் வீட்டிற்குள் உலவிக் கொண்டிருப்பார்கள். ஏதேனும் ஒருநாள் தங்கம் வெளியூர், உறவுகள் வீட்டு விசேஷம் என்று போனால், மைதிலி அதைப் பார்த்து, தங்கம் வந்ததும், அந்தக் கதையை சொல்லுவாள்.

அப்பா தினசரி கடை வருமானத்தை மைதிலியிடம்தான் ஒப்படைப்பார். வீட்டு வரவு செலவு முழுதும் அவள்தான்.

“இதுக்கு உரிமையானவள் நீதானே.– என்பார் அப்பா.




மூன்று மாதத்துக்கு ஒருமுறை விஜய் மைதிலியை அழைத்துக் கொண்டு எங்கேயானும் வெளியூர் போக வேண்டும் என்பது சட்டமாகப் போட்டார் அப்பா.

“சமைக்கவும், வீட்டைப் பராமரிக்கவும் மட்டுமல்ல அவள். உன் மனைவி, வாழ்க்கைத் துணை. உன் வாரிசுகளைப் பெற்றுத் தருபவள். அவளுக்கும் உள்ளுக்குள் எத்தனையோ, கனவுகள், ஆசைகள் இருக்கும். கணவனோடு தனியா எங்கேயானும் போகனும், மனம் விட்டுப் பேசணும்னு  ஆசை இருக்கும். அதை ஒரு கணவனா நீ நிறைவேத்தனும். வீட்டுப் பெண்களை திருப்தி படுத்தாம, நீ வெளியில் எதையும் சாதிக்க முடியாது.– என்பார் அப்பா.

எந்த மனக் குறைகள் இருந்தாலும் அதைப் பேசி தீர்த்துக்கணும். அதை மற்றவர்கள் தப்பா எடுத்துக்காம, சரி செஞ்சுக்கனும் என்பார்.

“வாழும் நாள் கொஞ்சம்தான். மரணம் எப்போதும் தன் வருகையை அறிவிச்சுக்கிட்டுதான் இருக்கு. அதை உணர்ந்து எந்நேரமும், அலர்ட்டா இருக்கணும். நாமும் மகிழ்ச்சியா இருந்துண்டு, மத்தவங்களையும் மகிழ்ச்சியா வச்சிருக்கணும்– என்பார்.

வீடு எப்போதும் கலகலப்பாக, உற்சாகமாக இருக்கும். மைதிலி ஏதானும் பாடிண்டு வேலை செய்வாள். சத்யா காதில் ஹெட்போன். புதிதாக எந்த டிரஸ், மொபைல், எலக்ட்ரானிக் பொருட்கள் பார்த்தாலும், விஜய் உடனே சத்யாவுக்கு வாங்கி விடுவான். பெரிசு, கிழவா, நைனா, தெய்வமே, காட்பாதர், குருஜி என்று இஷ்டத்துக்கு அப்பாவைக் கூப்பிடுவான் விஜய். ரொம்பக் குஷியாக இருந்தால், அப்பாவை அலாக்காகத் தூக்கி விடுவான் விஜய்.

அத்தனை உற்சாகமாக இருந்த வீடு இரண்டு நாளாக, ஆடிப்போய் இருக்கிறது.

பாம்பு கழுத்தில் விழுந்து இறங்கிப் போன அதிர்ச்சியில் சத்யா பயந்து, காய்ச்சல் வந்து விட்டது. உடம்பு தூக்கிப் போடுகிறது. இடைவிடாத வாந்தி.

“பாம்பு கழுத்தில் விழுந்தா நல்லது– சபேசன்.

“யாருக்கு? பாம்புக்கா?– விஜய்.

“இல்லப்பா. சத்யாவுக்கு இனி ராஜயோகம்தான்.

“என்ன யோகமோ? அவ நார்மலா எழுந்தா போதும்.

ஆனால் இரண்டு நாளாக எதுவும் சாப்பிடாததால் உடம்பில் சக்தி இல்லாமல் கால் நடுங்குகிறது. அவள் கம்பெனியிலிருந்து டீம் மேனேஜர், சிவசு வந்து போனார்கள். சிவசு தன் நண்பர் மூலம், அவளை ராமகிருஷ்ணா ஹாஸ்பிடலில் சேர்க்க ஏற்பாடு செய்தான். டிரிப்ஸ் இறக்கி, வைட்டமின் மாத்திரைகள் தந்தாலும், இன்னும் வாந்தி நிற்கவில்லை.

“கருநாகம்– என்றான் கௌதம்.

“ஒரு நிமிஷம் நான் நடுங்கிட்டேன். ஆனா என்னைவிட சத்யாவைக் காப்பத்தணும்னுதான் என் மனசுள் உடனே தோணிச்சு.

“நல்லவேளை. சத்யாவை நீ இழுத்த வேகத்துல அது  உன்னைக் கொத்தாம இருந்துச்சே– தங்கம்.

“யாரும் இழுத்திருக்க வேண்டியதில்லை. விழுந்த வேகத்தில் அது இறங்கி, அது பாட்டுல போயிருக்கும்.– சபேசன்.

“கௌதம் இல்லைன்னா, சத்யாவோட நிலை?– சிவகாமி கலங்கினார்.

“ஒரு விஷயம் நடந்ததை விட, இப்படி நடந்திருந்தால்னு நினைப்பதுதான் நம்ம கலக்கத்துக்குக் காரணம். நடந்து போச்சா? சரி முடிஞ்சது. அது கொத்தினா என்ன ஆகும்? கழுத்தைச் சுத்தினா என்ன ஆகும்னு கேள்வி கேட்டு, கலங்கி மனசைக் குழப்பிக்கிறோம். அதான் நடக்கலையே– என்றார் சபேசன்.




“எல்லாமே நம்ம மனசுதான். தைரியம்தான் வேணும். எது நடந்தாலும் துணிஞ்சு நில். வாழ்வு, சாவு இது ரெண்டுல ஒண்ணுதான் நடக்கும்.– சிவசு.

அவனின் வார்த்தைகள் மனதைச் சிறிது நிலைப்படுத்தியது.

சத்யா மெதுவாகத் தேறி அமர்ந்தாள்.

“பாம்பையே கைல பிடிக்கரவன்னு நினைச்சேன். இப்படி பயந்து போயிட்டியே?– டீம் மேனேஜர் கிண்டல் அடித்தார். சிவசு நல்ல மெலடி பாடல்களை ஒரு பென் டிரைவில் போட்டுக் கொண்டு வந்து தந்தான்.

‘இசை மனதை சரியாக்கும். கேளு.

சரியாக்கியது. “உனக்கு எந்த மாதிரியான பாட்டு பிடிக்கும்னு சொல்லு. நான் சேவ் பண்ணித் தரேன்– என்றான் கௌதம்.

சத்யாவுக்கு அமைதியாக இருக்க வேண்டும் போல் தோன்றியது. இன்னும் கௌதம் கை பிடித்து இழுத்த இடத்தில் இனம் புரியாத உறுத்தல் இருந்தது. ஒரு ஆளின் தொடுகையில் அது எந்த மாதிரியான தொடுகை என்று ஒரு பெண் உணர்ந்து கொண்டு விடுவாள்.

பார்வை, சொற்களில் வித்தியாசத்தை உணர்ந்து விடுவார்கள்.

அது மாதிரி கௌதமிடம் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள் சத்யா. ஆனால் வீடே இன்று கௌதமைப் புகழுகையில் அவளுக்குத் தன் மன உணர்வுகளை வெளிப்படுத்த தயக்கமாக இருந்தது.

அதுவே அவளை குழப்பத்தில் தள்ளி, சோர்வாக்கியது.

மைதிலி மட்டும் அவளைக் கூர்ந்து கவனித்தாள்.

“என்ன பிரச்சினை?

“ஒண்ணுமில்லை.

“எனக்குத் தெரியும். கௌதம்தானே.

“- – – – – – “

“நானும் கவனிச்சேன். ஆனா அமைதியா இரு.

“இல்லை அண்ணி. தேவையில்லாம தொடறான். விரல்கள் வித்தியாசமா இருக்கு.

“சத்யா. இது முள்மேல் நடக்கற மாதிரி. மெதுவா, புத்திசாலித் தனமா விலக்கனும். ஆனா நீ ஜாக்கிரதையா இரு. இப்போ அவன் ஒரு தேவதூதன் நிலைல இருக்கான். ஆனா எப்பவும் ஒருத்தனுடைய திருட்டுத் தனத்தை மறைக்க முடியாது.

முடிந்தவரை சத்யா அவனை விளக்கினாள். ஆனால் அவனே வலிய வந்து உதவி செய்கிறேன் என்று உணவு ஸ்பூனில் எடுத்து ஊட்டினான். டம்ளரில் ஜூஸ் புகட்டினான். சத்யா தடுத்தும் கேட்கவில்லை.

சத்யா நிலை அறியாது தவித்தாள்.

அடுத்தடுத்த சம்பவங்கள் அவளின் தவிப்பை அதிகப்படுத்தியது.

 




What’s your Reaction?
+1
6
+1
13
+1
3
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!