Entertainment Serial Stories

யாரோடு யாரோ-14

(14)

என்ன பேசுவது என்று தெரியாமல் திக் பிரமை பிடித்து இருந்தார் அப்பா.

பேச்சே மறந்து விட்டதோ?

அவரைப் பார்க்கப் பயமாக இருந்தது.

“அப்பா என்று அழைத்தாள் சத்யா.

நிமிர்ந்து பார்த்தாரே தவிர எதுவும் பேசவில்லை.

“ஏதானும் பேசுங்கப்பா?– கலங்கினாள் சத்யா.

“அப்பா டாக்டர்கிட்ட போலாம் வாங்க.– விஜய் வேகமாக சட்டையை மாற்றப் போனான்.

“அதெல்லாம் வேண்டாம்.– அப்பா. “இவனைப் பத்தித் தெரியாம சத்யாவை பாழும் கிணத்துல தள்ள இருந்தேனே? கடவுளே. இன்னைக்கு இது நடக்கலைன்னா, என்ன ஆகியிருக்கும்?

“எந்தக் காரியமும் காரணம் இல்லாம நடக்கலைப்பா.– விஜய் சமாதானப் படுத்தினான். “காலம் எதோ சுழற்சி செய்துதான் எல்லாத்தையும் நடத்துது. அது கையைப் பிடிச்சுக்கிட்டுப் போங்க.

“நடுங்குதுடா– அப்பா சிலிர்த்தார். மகனின் கையைப் பிடித்துக் கொண்டார். இன்னமும் அவர் உடல் நடுங்கியது. சிவகாமி ஓடிப் போனாலும், அவள் மீதான அந்தப் பூனைக் குட்டிப் பாசம் அவரை விட்டு விலகவில்லை அதனால்தான் அவள் திரும்பி வந்ததும் ஏற்றுக் கொண்டார்.





உறவுகள் கூட வம்பை விலைக்கு வாங்குகிறாய் என்ற போது கூட, எல்லாத்தையும் இழந்துட்டு வந்திருக்கறா. நாமளே ஒதுக்கினா எப்படி?. என்று அவளுக்கு அனுசரணையாகப் பேசினார்.

“அண்ணா என்பது அப்பா ஸ்தானம்– என்பார். எனவேதான் சிவகாமியை அவரால் மன்னிக்க முடிந்தது. அவள் தன் கண் எதிரில் மகனிடம் அடி வாங்குகிறாள் என்பது அதிர்ச்சியாக இருந்தது. விஜய் சிறிது தன்  அம்மாவிடம் கோபமாகப் பேசினால் கூட “விஜய் என்ன அம்மாகிட்ட குரல் உயருது? என்று அதட்டுவார். இப்படிப் பளீர் என்று அடிப்பதானால்?

கடவுளே– உடல் சிலிர்த்தது.

“அப்பா, அதையே நினைச்சிட்டு இருக்காதீங்க– சத்யா அவரை எழுப்பினாள்.

“வந்து கொஞ்ச நேரம் படுங்க. இன்னைக்குக் கடைக்குப் போக வேண்டாம்

“இல்லைம்மா. ஏஜென்சி விஷயமா சிலரைப் பாக்கணும். பணம் ரெடி பண்ணனும்

“எவ்வளவுன்னு சொல்லுப்பா. நான் ரெடி பண்றேன்.– விஜய்.

“அதெல்லாம் இருக்குடா. இடத்தை வித்தா, கல்யாணம் கொஞ்சம் கிராண்டா செய்யலாம்னு நினைச்சேன்.

“இன்னமும் உங்களுக்கு இந்தக் கல்யாணக் கனவு இருக்காப்பா?– விஜய்.

அவனுக்குப் பதில் சொல்லவில்லை அப்பா. சிவசுவுக்குத் தருவதைப் பற்றி மனம் மறுதலித்தது. கௌதம் தன் தங்கை மகன். அவனுக்குக் கொடுத்தால் நாளை சத்யா தன்னுடனேயே இருப்பாள். தெரிந்த பையன் என்பதால், நல்லது. பெண்ணைப் பற்றிக் கவலை இல்லை என்றெல்லாம் யோசித்தார். ஆனால் அவனின் அன்றைய செய்கை?

“அப்பா சிவசுவுக்குக் கொடுங்கன்னு நான் சொல்லலை. ஆனா கௌதமுக்கு கொடுக்கறதைப் பற்றி யோசிங்க. நேரில் பார்த்த பிறகும் இந்தக் கல்யாணத்தை நடத்தனுமா?

தங்கம் கவலையுடன் அவர் முகத்தைப் பார்த்தாள். அவளின் மனம் அவருக்குப் புரிந்தது. தன் பெண்ணின் நிலை பற்றி யோசிக்கிறாள். சிவகாமி மாதிரி அடி பட்டால் இவளால் தாங்க முடியுமா?

தனக்குள் அன்று என்ன சைத்தான் புகுந்து கொண்டது? ஆரம்ப நாளிலிருந்து இந்த வீட்டில் யாருக்கும் கௌதமைப் பிடிக்கவில்லை. இப்போது அவன் செய்கையைப் பார்த்த பிறகு அவன் மேலான வெறுப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது.

“இப்போதைக்கு எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம். அப்புறம் பாக்கலாம். எல்லோரும் போய்ச் சாப்பிடுங்க.





அப்பா கண்ணை மூடித் திரும்பிக் கொண்டார். எல்லோரும் நகர்ந்தார்கள். அப்பா மனக் குழப்பத்தில் இருந்தால் தனிமையை விரும்புவார் என்று தெரியும். வாசல் திண்ணையில் காற்று வந்தது. விஜய் காரை வெளியில் நிறுத்தி இருந்தான். அப்பாவின் வண்டியும் அங்குதான் இருந்தது.

வீடு கட்டும்போது இரண்டு பக்கமும் வைத்த மஞ்சள் கொன்றை கும்மென்று பூத்து, நறுமணத்தையும், காற்றையும் சேர்த்து வீசியது. அதன் பூக்கள் முன்புற போர்டிகோவில் விழுந்திருந்தது. வெள்ளை நிற டைல்ஸில் மஞ்சள் நிறப் பூக்கள் பளிச்சென்று தெரிந்தது.

அந்த அழகை ரசிக்கும் மன நிலையில் அப்பா இல்லை. கண்ணை மூடியபடி சாய்ந்திருந்தார். அருகில் நிழலாடியது.

“மாமா– கௌதமின் நெகிழ்வான குரல்.

அப்பா பேசவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

“உங்க கோபம் நியாயம்தான் மாமா. நான் செஞ்சது மிகப் பெரிய தப்புதான். தாயை அடிச்சவனுக்கு தெய்வத்தோட மன்னிப்பு கூடக் கிடைக்காது. ஆனா ஒரு விஷயம் அநியாயம்கறப்போ என்னால அதைப் பொறுக்க முடியலை.

“- – – – – – – – –  -“

“மாமா, அம்மாவுக்கு நீங்க நிறையக் கொடுத்திருக்கீங்க. ஒரு கோடி ரூபாய்க்கு மதிப்பு இன்னைக்கு அது. அது

 



அத்தனையையும் அழிச்சுட்டு, இன்னைக்கு எனக்குத் திருப்பியும் பங்கு கொடுன்னு கேக்க்கறது எந்த விதத்தில் நியாயம்? நான் இங்க வந்தது என் மாமா எனக்கு வேணும்னுதான். அப்பா போனாட்டு எனக்குன்னு எந்த மனுஷங்களும் இல்லை. அதுவும் தாய்மாமன் உறவுங்கறது இதயத்தோடு நெருங்கிய சொந்தம். அம்மாவுக்குச் சமம். எனக்கும் மாமா வேணும், அவங்க, பிள்ளைகள் உறவு வேணும்னு வந்தேன். சத்தியமா உங்க காசை எதிர்பார்த்து இல்லை.

கௌதம் கலங்கிய குரலில் பேசினான்.

“மாமா, அப்பா வீட்டுப் பக்கம் யாரும் எங்களை ஏத்துக்கலை. நீங்க என் தாய்மாமன். உங்க ஆதரவு, அன்பு வேணும்னுதான் இங்க வந்தேன். சொந்த பந்தங்கள் இல்லாம வாழறது கொடுமை மாமா. ஏன்னு கேட்க நாதி இல்லாம இருக்கிற வேதனையை சொல்ல முடியாது. ஒரு நாள் கிழமைன்னா, நம்ம சொந்தங்களோடு சேர்ந்து கொண்டாட முடியாம என்ன மகிழ்ச்சி வேண்டி இருக்கு மாமா?

அப்பா கௌதம் பேசுவதை வியப்புடன் பார்த்தார். அவன் கண்கள் கலங்கி இருந்தது. கையில் ஒரு துணி சுற்றி இருந்தான்.

“நான் விரும்பினது உங்க உறவுகளை, அம்மா அதைக் குலைக்கிற மாதிரி நடந்ததும் என்னால கோபத்தைக் கட்டுப்படுத்த முடியலை. தப்புதான். அதனால்தான் எனக்கு நானே தண்டனை கொடுத்துகிட்டேன்.

“என்ன கௌதம் இது?– தங்கம் முன்னாடி வந்தார்.

“தண்டனை, அது இதுன்னு பேசிகிட்டு?

“இல்லை அத்தை. என் மனசுக்கு இதுதான் சரின்னு பட்டுத்து.

“என்னடா செஞ்சே?– விஜய் வேகமாக வந்து அவன் கைக் கட்டை தொட வலியில் முகம் சுருக்கினான் கௌதம்.

“என்ன ஆச்சு?

“என்னை அடிச்ச கையை நெருப்புல சுட்டுகிட்டான்.– சிவகாமி மெதுவாகப் பேசினாள். அவன் பின்னிருந்து முன்னால் வந்தாள்.

“என்னை அடிச்சது தப்புன்னு தலை, தலையா அடிச்சுகிட்டான். நானே எதிர்பாராம, கேஸ் அடுப்பைத் திறந்து கையை அதுல காட்டிட்டான்.

“கடவுளே– அப்பா பதறி எழுந்தார்.

“என்ன மடத்தனம் இது?

“இல்லை மாமா. இதான் சரியான தண்டனை எனக்கு. நீங்க என்னை மன்னிக்கணும் மாமா.– கண்ணீர் மல்க கௌதம் அவர் காலில் விழ அப்பா, அவனை எழுப்பி அனைத்துக் கொண்டார். அவரின் தொண்டையும் கமறியது. விஜய் கார் சாவியுடன் ஓடி வந்தான்.

“மடையா, மடையா. வா, டாக்டர்கிட்ட போய்ட்டு வந்துடலாம்.

“இல்லை வேண்டாம் விஜய்.

“பேசாதே.– விஜய் அவனை இழுத்துக் கொண்டு காருக்குப் போக,

“நீ போய் சாப்பிட்டு. இந்த மாதிரி பைத்தியக்காரத்தனம் எல்லாம் இனி வேண்டாம்.

சிவகாமி தலையாட்டியபடி படி ஏறினாள்.

“தங்கம் எனக்கும் சாப்பாடு போடு– அப்பா உள்ளே வந்தார். சத்யா மெதுவாகத் தன் ரூமுக்கு வந்தாள். மனம் குமுறியது. கௌதம் எதோ நாடகம் போடுகிறான் என்று தெளிவாகத் தெரிந்தது. இத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சி காணாமல் போனது. மீண்டும் அவன் அப்பா மனதில் புகுது விட்டான் என்று உணர்ந்தாள்.

கண்ணை மூட்டி ஜன்னல் கம்பியில் சாய்ந்து கொண்டாள். மூடிய கண்களுக்குள் சிவசு வந்து நின்றான். அவன் சிரிப்பும், சத்யா என்ற அழைப்பும் காதுகளில் வந்து மோதியது.

குழைவும், நெகிழ்வும் கலந்த குரல். அன்பும், பிரியமும் நிறைந்த அழைப்பு. “விழியில் விழுந்து, இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே= அவன் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் இன்று அர்த்தம் புரிந்து இதயத்தைப் பிளக்க வைத்தது.

“நீதானே வேண்டும் என்று ஏங்கினேன்– உதடுகள் உச்சரிக்க, ஜன்னல் கம்பியில் சாய்ந்து அழத் துவங்கினாள் சத்யா.




What’s your Reaction?
+1
7
+1
14
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!