Entertainment Serial Stories யாரோடு யாரோ

யாரோடு யாரோ-13

(13)

நல்லவரோ, கெட்டவரோ, எல்லா வேஷங்களும் ஒருநாள் வெளிப்பட்டு விடும். சுயநலத்தை என்றைக்கும் மறைக்க முடியாது. நல்லவராக வேஷம் போட்டாலும், உள்ளுக்குள் ஒரு பதை பதைப்பு, இருப்புக் கொள்ளாமை எந்தச் சுயநலத்தையும் காட்டிக் கொடுத்து விடும்.

சிவகாமி தன் சுகம்தான் முக்கியம் என்று எவனோ அறிமுகம் இல்லாதவனைக் காதலித்து, அவனுடன் ஓடிப் போனாள். தன் குடும்ப மானம், பெற்றவர்கள் என்று எதையும் நினைக்கவில்லை. யாரைப் பற்றியும் கவலைப் படாமல் போனாள். கொடுத்த சொத்துக்கள், நகைகள் எல்லாமே போதும் என்று எழுதிக் கொடுத்து விட்டுப் போனாள்.

அவளின் அப்பாவும் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தார். பிதுரார்ஜித சொத்து என்று அதையும் மதிப்பு போட்டு அவளுக்குக் கொடுத்தார். சிவகாமியின் புருஷன் ஊதாரியாக இருந்தான். குடித்தே அழித்தான். மகனை மட்டும் படிக்க வைத்தாள். அவனும் அப்பாவைப் போலவே குள்ள நரித்தனம், பேராசை, சுயநலம் என்று இருந்ததால் அவளுக்கு ஒரு பயம் வந்து விட்டது.

நாளை இவன் தன்னைக் காப்பாற்றுவானோ, மாட்டானோ தெரியாது. தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டாள். வாசுதேவன் இடத்தை விற்கிறார் என்று தெரிந்ததும் இதுதான் சமயம் என்று தனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டு விட்டாள்.

வாசுதேவன் நியாயமாக நடக்க விரும்பினார்.

ஒரு ஞாயிறு அன்று  அனைவரையும் ஹாலில் கூட்டி அமர வைத்து விஷயத்தைச் சொன்னார். தான் டூவீலர், ஏஜென்சி ஆரம்பிப்பதை, சத்யா கல்யாணத்திற்கு பணம் தேவைப் படுவதையும் சொல்லி, கிணத்துக் கடவு அருகில் உள்ள நிலத்தை விற்கப் போவதாகவும் சொன்னார். யாரும் எந்த மறுப்பும் சொல்லவில்லை.





“அது உங்க சொத்து அப்பா. அதுவும் அது சும்மா கிடக்கு. வித்து ஏஜென்சிதான் ஆரம்பிக்கறீங்க. அதனால எங்களைக் கேக்கனும்கிற அவசியமில்லை. மத்த படி சத்யா கல்யாணம் என் பொறுப்பு. இப்பவே பத்து லட்சம் செக் எழுதித் தரேன்.– விஜய்.

அப்பா நெகிழ்ந்த தன் உணர்வுகளை மறைக்கச் சிரமப் பட்டார். என்ன தவம் செய்தேன் நான் என்று மனம் துள்ளியது. பதில் பேசாமல் எழுந்து அவனை அனைத்துக் கொண்டார். தங்கம் வழிந்த கண்ணீரை மறைக்க முடியாமல் திணறினாள். அந்தச் சூழ்நிலை சிவகாமியின் மனப் பொறாமைத் தீயை விசிறி விட்டது. கௌதம் முகத்தைப் பார்த்தால். அவன் தன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்தான்.

“கௌதம், அடுத்த வாரம் நிச்சயம். அதைக் கொஞ்சம் தள்ளிப் போடறேன்.

“எதுக்கு மாமா? கௌதம் திடுக்கிட்டான்.

“இந்த ஏஜென்சி விஷயமா நீ சென்னை போகவேண்டும். அவங்க தொழிற்சாலை ஹுசூர்ல இருக்கு. நம்ம வக்கீல், ஆடிட்டர் உன் கூட வருவாங்க. நீங்க போய்ட்டு வந்ததும், அவங்க இங்க வராங்க. டாக்குமெண்ட்ல மைதிலி, சத்யா கையெழுத்துப் போடனும். அதுக்கான பேப்பர்ஸ் ரெடி செய்யணும். அடுத்து நிச்சயம் வளர்பிறைல செய்யனும்னு தங்கம் விரும்பறா.

கௌதம் தங்கத்தின் முகத்தைப் பார்த்தான்.

“ஒரே பொண்ணு. அவ கல்யாண விஷயத்தை ஏன் தேய்பிறைல ஆரம்பிக்கணும். போற இடத்துல அவ அமோகமா வாழனும்கற ஒரு தாயோட எண்ணம்தான்.

கௌதம் பதில் சொல்வதற்குள் சிவகாமி குறுக்கே புகுந்தாள்.

“இடமும் விக்கனும்ல. அண்ணா நீ சொல்றது கரெக்ட்.

“ஆமாமா.– அப்பா ஆமோதித்தார்.

“எவ்வளவுக்கு கேக்கறாங்க?

“அது உள்ள கிராமப் பகுதி. அஞ்சு சென்ட் தாத்தா வாங்கிப் போட்டார். இன்னைக்கு ஒரு சென்ட் பத்து லட்சம் கேக்கறான். நான் மொத்தமா எழுபது கேக்கறேன்.

“முன்ன பின்ன இருந்தாலும் முடிச்சிடுங்கப்பா. இழுத்துட்டு கிடக்க வேண்டாம்.– விஜய்.

“எனக்கு எவ்வளவு அண்ணா கொடுப்பே?– சிவகாமி

வீடு அதிர்ந்தது. என்ன பேசுகிறாள் இவள்?

“பிதுரார்ஜித சொத்துல எனக்கும் பங்கு இருக்குல்ல?

“தாத்தா, அப்பவே கணக்கு போட்டு உனக்குப் பணம் கொடுத்தாறேம்மா. நீயும் இனி உரிமை கோர மாட்டேன்னு சொல்லி எழுதிக் கொடுத்தியே?





“அப்போதைய, விலைவாசி, இப்போது யோசிச்சுப் பாருண்ணா. நானா எழுதிக் கொடுக்கலை. நீங்க வற்புறுத்தி எழுதி வாங்கினீங்க.. காதலிச்ச குற்றத்துக்காக நான் என் உரிமைகளை விட்டுத் தர முடியுமா?

“அம்மா இதென்ன?-கௌதம் குறுக்கே புகுந்தான்.

“நீ சும்மா இரு கௌதம். நீ அவங்க வீட்டு மாப்பிள்ளை ஆயிடுவே. உன் செலவுக்கு அவங்க பணம் தருவாங்க. ஆனா என் செலவுக்கு நான் உன்னை கெஞ்சிகிட்டு இருக்க முடியுமா? இல்லை சத்யாவைத்தான் கேட்க முடியுமா?

“நீ கேக்கறது அநியாயம்னு தோணலையா சிவகாமி. ஏற்கனவே அவ்வளவு பணம், நகைன்னு எல்லாம் கொடுத்து எங்களை முழுசா தொடைச்சு வச்சிட்டுப் போனே. இப்போ எதோ சொத்துன்னு இதுதான் இருக்கு. கடை இப்பதான் வளருது. எங்க அண்ணா இருக்கக் கொண்டு உதவி செஞ்சார்.– தங்கம் ஆதங்கத்துடன் பேசினாள்.

“என் சொத்தை நீங்கதானே வாங்கினீங்க அண்ணி.

“அது முழுகி ஏலத்துக்கு வந்துச்சு. குடும்ப சேர்த்து போயிடக் கூடாதுன்னு எங்க அண்ணா அதை வாங்கித் தந்தான்.

“மனிதாபிமானம் இருந்தா, அதை என்கிட்டே திருப்பி ஒப்படைச்சிருக்கனும்ல அண்ணி.

“அம்மா நீ பேசறது ரொம்ப தப்பு.– கௌதம் பதறினான்.

“நமக்காக மாமா அத்தனை செய்யறார். அவர்கிட்ட நீ கணக்கு பேசறது தப்பு.

“நான் என் பாதுகாப்பு பத்தி யோசிக்கறேன் கௌதம். நாளைக்கு இந்தக் காசும் உனக்குத்தான் சேரும். சத்யா, உனக்குத்தானே உன் குழந்தைகளுக்குத்தானே சேரும்?– சிவகாமி கேள்வி கேட்க,

“கல்யாணத்தைப் பத்தி அப்புறம் பேசலாம் கௌதம்– சத்யா.

“என்ன சத்யா இப்படிச் சொல்றே?

“ஆமாம். உங்களுக்குக் காசுலதான் குறின்னு தெரியுது. எல்லாத்தையும் வாங்கிண்டு இன்னைக்கு நியாயம் இல்லாம, பங்கு கேக்கறப்போ வேற எப்படி பேச முடியும்? முதல்ல இந்தப் பிரச்சினையை முடிங்க. பிறகு கல்யாணத்தைப் பத்திப் பேசலாம்.

சத்யா கோபத்துடன் பேசினாள்.

“பாசம், பிரிய, பாரம்பரியம், குடும்ப கௌரவம்னு எங்கப்பா ஏமாளியாப் போறதை நான் பாத்துட்டு இருக்க முடியாது. அன்னைக்கு எதுவும் வேண்டாம்னுதானே எழுதிக் கொடுத்துட்டுப் போனீங்க.? இப்போ என்ன திடீர்னு?

“சத்யா, நீ அமைதியா இரு.– அப்பா எழுந்தார்.

“இதைப் பத்தி அப்புறம் பேசலாம்.

“எப்போ பேசினாலும் என் முடிவில் மாற்றம் இல்லை அண்ணா. இல்லைன்னா நான் கோர்ட்டுல கேஸ் போடுவேன்.





“போடுவியா? கேஸ் போடுவியா? மாமாகிட்ட இப்படிப் பேச என்ன தைரியம் உனக்கு?– கௌதம் அம்மா மேல் பாய்ந்தான். பளீரென்று அவளை ஓங்கி அறைந்தான். இழுத்துத் தள்ளினான். நிலை தடுமாறி விழப் போனவளை மைதிலி ஓடிப் போய் பிடித்தாள்.

“ராஸ்கல்– விஜய் கௌதம் மேல் பாய்ந்தான். பெத்த தாயை அடிக்கறியே. நீயெல்லாம் மனுஷனாடா? வெளியில போ.

அவனைப் பிடித்துத் தள்ளினான் விஜய். வெளியில் போய் விழுந்தான் கௌதம்.

“இனி இந்த வீட்டுக்குள் நுழைஞ்சா உன்னைக் கொன்னே போடுவேன். ஓடிப் போய்டு.

“விஜய் அவ மாமாவை எதிர்த்துப் பேசினா.

“அதுக்காக பெத்தவளை அடிக்கறதா? போடா. என் கண் எதிர்ல நிக்காதே. விஜயின் சீற்றக் குரல் கேட்டு அக்கம் பக்கம் கூட,

“என்னாச்சு விஜய். போலீஸைக் கூப்பிடவா?– சம்பத்.

“இல்லை சார். வேண்டாம். ஆனா இவன் மேல ஒரு கம்ப்ளெயின்ட் ஒன்னு கொடுத்து வைக்கலாம்.

“அதெல்லாம் எதுவும் வேண்டாம். குடும்ப சண்டையை தெருவுக்கு கொண்டு வந்துட்ட கௌதம். இந்தக் குடும்பம் அமைதியா, கௌரவமா வாழ்ந்த குடும்பம். இதோட அமைதியே உன்னால போச்சு. நீ நல்லவன்னு நம்பித்தான் என் பொண்ணையே உனக்குக் கொடுக்க நினைச்சேன். என்னை ஏமாத்திட்ட.– அப்பா வேதனையோடு பேசினார்.

“மாமா அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க. அம்மா நியாயம் இல்லாம உங்ககிட்ட பங்கு கேட்டாங்க. அதுலதான் கோபப் பட்டேன். என்னையறியாம கை நீட்டிட்டேன்.

கௌதம் அப்பா காலில் விழுந்தான்.

“போதும். நாறிப் போச்சு. அவனை உள்ள கூப்பிடுங்க. கௌதம் நீ மேல உன் வீட்டுக்குப் போ. எல்லோரும் உள்ள வாங்க.– தங்கம்

கௌதம் தலை குனிந்தபடி மாடி ஏறினான். அக்கம்பக்கம் நகர, மற்றவர்கள் உள்ளே நுழைந்தனர். சிவகாமி சுவரில் சாய்ந்து அழுது கொண்டிருக்க, சத்யாவும், மைதிலியும் அவளை சமாதானப் படுத்தி காபி குடிக்க வைத்தார்கள்.

“அண்ணா நீயே பாத்தீள்ள? இப்படித்தான். இவனும், இவன் அப்பனும் சேர்ந்து என்னை அடிச்சு, அடிச்சு, கையெழுத்து வாங்கி சொத்தை எல்லாம் வித்தாங்க. எல்லாம் அழிஞ்சு. அப்பனும் இறந்து போக, என்னை கட்டாயப்படுத்தி, இங்க கூட்டிட்டு வந்தான். இவனைப் பத்தி இப்ப தெரிஞ்சிருச்சில்ல?

சிவகாமி அழ, அழ அப்பா திக் பிரமை பிடித்து அப்படியே அமர்ந்திருந்தார்.

“நெஞ்சை வலிக்குதுடா– என்றார் அப்பா.




 

What’s your Reaction?
+1
6
+1
16
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!