Entertainment Serial Stories யாரோடு யாரோ

யாரோடு யாரோ- 12

(12)

அப்பா முகம் கவலையில் ஆழ்ந்திருந்தது. எதோ யோசனை என்றது முகம். அம்மா எதுவும் பேசாமல் தூர அமர்ந்து அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எப்போதுமே, சோகம், துக்கம் என்றாலும் அப்பா இப்படி அமர மாட்டார். எல்லாமே சிறிது நேரம்தான். வீடு அவர் முகம் பார்த்தே நகரும். அவர்தான் அஸ்திவாரம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். தன் வீட்டை எப்பவும் உற்சாகமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்.

எல்லோருடைய உணர்வுகளுக்கும் மதிப்பளித்த அவர் சத்யாவை ஏன் உதாசீனம் செய்தார் என்று அவருக்கே தெரியவில்லை.

இதுதான் நேரம் என்பதா?

காலம் ஒரு விஷயத்தைச் செய்யத் தீர்மானித்து விட்டால் அது சூழ்நிலையை, சொல்லும் வார்த்தைகளை மாற்றி விடும் என்பார்கள். அந்த நேரத்தில் தன் நாக்கில் எந்தக் கிரகம் வந்து அமர்ந்திருந்தது என்று அவருக்குத் தெரியவில்லை.

ஏன் தனக்கு இப்படி நிகழ்ந்தது? யாருக்கும் கெடுதல் நினைத்ததில்லை. துரோகம் செய்தது இல்லை. யார் சொத்தையும் அபகரித்தது இல்லை. ஆனால் ஏன் தன் குடும்பமே தன்னை வெறுத்து ஒதுக்கும் ஒரு நிலை ஏற்பட்டது.

அப்பா என்று கொஞ்சும் மகள், யாப்பாவ், நைனா என்று கலாய்க்கும் விஜய், ஒரு விஷயம் விடாமல் தன்னுடன் பகிர்ந்து கொள்ளும் மனைவி என்று யாரும் அவரிடம் இப்போது நெருங்குவதில்லை. மைதிலி மட்டும் அவ்வப்போது ஏதானும் பேசுவாள்.

சொந்த வீட்டுக்குள்ளேயே அந்நியமான உணர்வு.

இதுதான் கர்ம வினையா? மனிதனின் கைலாகத் தனத்திற்கு கர்மவினை என்று பெயரா? விதி மாறுபட்டால் புத்தி கேட்டுப் போகும் என்று தங்கம் பேசிக் கொண்டிருந்தது நேற்று அவர் காதில் விழுந்தது.

பேதைப் படுக்கும் இழவூல் அறிவகற்றும்

ஆகழூல் உற்றக் கடை.

சிறு வயதில் படித்த குறள் நேரம் தெரியாமல் புத்தியில் வந்து இம்சித்தது.

தனக்குள் கெட்ட ஊழ்வினை வந்து விட்டதோ? அதனால்தான் புத்தி கெட்டுப் போய் இப்படி ஒரு முடிவு எடுத்தோமா?

அவருக்குப் புரியவில்லை.

சிவசுவைப் பற்றி பல நல்ல விஷயங்கள் கேள்விப்படுகிறார். ஆனாலும் அவனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குடும்ப பாரம்பரியம் என்று மனம் மறுதலித்தது.





கண்ணை மூடி அமர்ந்திருந்தார்.

“மாமா காபி ஆறிப் போச்சே.– மைதிலி.

“ஒ. சாரிம்மா. மறந்துட்டேன்.

“பரவாயில்லை. வேற கொண்டு வரேன் இருங்க.

“வேண்டாம்மா. உனக்கு ஏன் சிரமம்?

“இதிலென்ன சிரமம். இருங்க கொண்டு வரேன்.

மைதிலி வேறு காபி கொண்டு வந்து வைத்தாள்.

“அம்மாடி, விஜய் இருக்கானா?

“இருக்காரே. வரச் சொல்லவா?

“கொஞ்சம் வரச் சொல்.

வீடு அமைதியாக இருந்தது. விஜய் வீட்டில் இருந்தால் ஏதேனும் டம், டும் என்று பாடல்கள் முழங்கும். குத்துப்பாட்டுதான் அவனுக்குப் பிடிக்கும்.

“என்னடா, கண்றாவி இது என்று அப்பா புலம்பினால்

“ஒ, கமான் டாடி, லெட்ஸ் எஞ்சாய் என்று அவரையும் இழுத்து, கட்டிக் கொண்டு ஆடுவான். இவன் வம்பே வேண்டாம் என்று சத்யா, மாடிக்குப் போய் விடுவாள். அவள் இளையராஜா ரசிகை. தங்கத்துக்கு சன்னமாக கிச்சனில் பழைய பாடல்கள் ஒலிக்கும். அழகான இசையருவி பொழிந்த இடத்தில் ஒரு வேண்டாத மௌனம் நிலவுகிறது.

இதை மாற்ற வேண்டும் என்று நினைத்தார் அப்பா.

அதற்கு முன் சத்யா கல்யாணத்திற்கு பணம் ரெடி செய்ய வேண்டும். அவளின் திருமணத்திற்கு என்றுதான் கிணத்துக்கடவு பக்கத்து இடத்தை விட்டு வைத்திருந்தார். அது தாத்தா வாங்கிய நிலம். சிவகாமி ஓடிப் போனபோது, தாத்தா அந்த நிலத்தை வாசுதேவன் பெயரில் எழுதி, சிவகாமிக்கு இதில் உரிமை இல்லை என்று எழுதி வைத்திருந்தார். சிவகாமியும் கையெழுத்துப் போட்டுக் தந்திருந்தாள்.

அது விஷயமாக விஜய் சம்மதம் வாங்க வேண்டும்.

“என்னப்பா?– விஜய் வந்து உட்கார்ந்தான்.

அப்பா விஷயம் சொன்னதும், “அப்பா இடம் உங்களுடையது. அதை விக்கறதுல நான் தலையிட மாட்டேன். ஆனா சத்யா கல்யாணம் என் பொறுப்பு. ஆகற செலவுக்கு பில் மட்டும் கொடுங்க.

அப்பா திகைத்தார்.

“அண்ணா அப்படிங்கறவர் இன்னொரு அப்பா. என் தங்கை கண் கலங்காம வாழணும் அவ்வளவுதான். அவளுக்கான என் கடமையிலிருந்து நான் விலக மாட்டேன். ஆனா உங்க கடமையை விட்டுடாதீங்க. மாப்பிள்ளை நம் குடும்பத்துக்கு, சத்யாவுக்கு எத்தவனான்னு பாருங்க.

“கௌதமுக்கு என்ன குறைச்சல்?

“நீங்களே தெரிஞ்சுக்குங்க. ஒரு ரிக்வெஸ்ட்.

“சொல்லு.

“நிச்சயத்தை ஒரு பத்து நாள் தள்ளிப் போடுங்க.





“போட்டா?

“என்ன நடக்கும்னு எனக்குத் தெரியாது. அது கௌதம் நல்லவன்னு கூட நிரூபிக்கலாம். ஆனா ஒரு நல்ல முடிவு கிடைக்கும். சத்யாவோட உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்களேன்பா. உங்க பொண்ணுன்னா உங்களுக்கு அடிமையா இருக்கனுமா? அவளுக்குன்னு ஒரு ஆசை, கனவு, எதிர்பார்ப்பு இருக்கும்ல?

“அதுக்காக ஊர் பேர் தெரியாதவனுக்கு என் பொன்னைக் கொடுக்கனுமா?

“ஊர் பேர் தெரிஞ்சவன் மட்டும் யோக்கியமா இருக்கானா?

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை அவரால்.

“இதோ பாருங்க, சிவசு என்ன குலம், கோத்திரம்னு தெரியாது. ஆனா அவனை விட்டுட்டுப் போன அவன் தாய், ஒரு கடிதம் வச்சுட்டுப் போயிருக்கா. பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு பெரிய குடும்பம் அவளுடையது. பண்ணையில் வேலை பாக்கறவனை நம்பி ஓடிப் போய், குழந்தையை பெத்துகிட்டு, புருஷனும் ஒரு விபத்துல இறந்து போக, குழந்தையை இவர் ஆசிரமத்து வாசல்ல விட்டுட்டுப் போயிட்டா. அந்த லெட்டர்ல குழந்தைக்கு சுப்ரமணியம்னு பெயர் வைக்கச் சொல்லி எழுதி இருக்கா. சிதம்பரத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவைதான் அவ. ஆனா அவர் வெளில சொல்லலை. அது ஏன், எதற்குன்னு ஆராயறது நம்ம வேலை இல்லை. ஆனா அவன் நல்லவன். இதை நீங்க உணருவீங்க.

“அவ எங்க இருக்கா இப்போ?

“அது நமக்கு எதுக்கு? இருக்கலாம். செத்துப் போயிருக்கலாம்.

“பொள்ளாச்சியில யார்?

“எதோ ஒரு பெரிய குடும்பம். உண்மை வெளில தெரிஞ்சா, அந்தக் குடும்பத்தின் கௌரவம் பாதிக்கப் படும்னு சொல்லலை சிதம்பரம்.

“சரி. பத்து நாள் தள்ளி வைக்கிறேன், நிச்சயத்தை.– மகனைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை வாசுதேவன்.

“நன்றிப்பா. என்ற விஜய் இன்னொரு விஷயமும் கேட்டான்.

கௌதமை நாலுநாள் வெளியூர் அனுப்புங்க. நிலம் விக்கற விஷயத்தை அத்தைகிட்டச் சொல்லுங்க.

“அவகிட்ட எதுக்கு? அவளுக்கு இதுல எந்த உரிமையும் இல்லையே?

“இல்லைதான். ஆனா மனுஷ மனம் ஆசைக்கு அடிமை. சொல்லிப் பாருங்க.

விஜய் எழுந்தான். “ஆபீஸ் வேலை இருக்குப்பா. செஞ்சுட்டு வரேன். தேவைன்னா கூப்பிடுங்க.

அப்பாவுக்கு அவன் அருகில் இருந்தால் தேவலாம் என்று தோன்றியது. அப்பா தளர்ந்து போயிருந்தார். மனம், உடம்பு என்று எல்லாம் சோர்ந்து போயிருந்தது. அமைதியாக எந்தச் சிந்தனையும் இல்லாமல் தனியாக இருக்க வேண்டும் போல் இருந்தது.

ஒரு கட்டத்தில் தன் எண்ணங்களுக்கு மாறாக நடக்கும்போது மனம் சோர்ந்து விடுகிறது. நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும்போது தான் தப்பு செய்கிறோமோ? என்றுதான் நினைத்தார். ஆனால் கௌதம் மிகவும் பணிவாக நடக்கிறான். அவர் பேச்சுக்கு மறு பேச்சு பேசுவதில்லை. வீட்டில் ஒவ்வொன்றையும் கவனித்து, சத்யாவுக்கு என்ன வேண்டும் என்பதை உடனுக்குடன் கவனித்துச் செய்கிறான்.

இதை விட வேறு என்ன வேண்டும்?

அப்பா குழம்பித் தவித்தார். ஆனாலும் விஜய் சொல்வதைக் கேட்கலாமே என்று முடிவு செய்தார்.

மிகச் சரியாக கௌதம் கடையிலிருந்து வந்தான். அவன் கையில் ஒரு கடிதம்.

“ஒரு மிகப்பெரிய மோட்டார் கம்பெனியின் டூ வீலர் ஏஜென்சி ஆரம்பிக்க அனுமதி கேட்டு, அவர்கள் கூறிய டெபாசிட் தொகைக்கு சம்மதித்து கடிதம் எழுதியிருந்தார். அதுக்குச் சம்மதம் தெரிவித்து மெயிலும் அனுப்பி, கடிதமும் அனுப்பியிருந்தார்கள்.





“உய்– என்று விசிலடித்தான் விஜய். “சூப்பர் அப்பு. எனக்கு ஒரு பைக்.

“உனக்கு இல்லாமலா? மைதிலிக்கு ஒண்ணு, சத்யாவுக்கு ஒண்ணு

“ஹை– விஷயம் கேட்டு ஓடி வந்தாள் சத்யா.

“இந்தக் கம்பெனி ஏஜென்சி எடுக்க நிறையப் போட்டிப்பா.

“ஆமாம்மா. உக்கடத்துல ஒண்ணு ஏற்கனவே இருந்தது. அவர் சரியா கவனிக்கலை. அதை நான் டேக் ஓவர் பண்றேன்.

“கொஞ்சம் விளம்பரம் செய்யணும். நான் என்ன ஹெல்ப் வேணும்னாலும் செய்யறேன்பா– விஜய்.

“நீ இருக்கற தைரியம்தான் கண்ணு.

“இந்த ஏஜென்சி சத்யா பெயரில்தான் எடுக்கறேன். அவளுக்குன்னு ஒரு நிரந்தர வருமானம் வேணும். அவளோட திறமைகள் அழிஞ்சிடக் கூடாது. அவதான் இதோட முழுப் பொறுப்பும்.

“நானா?– சத்யா திகைத்தாள். “என்னால முடியுமா?

“உன்னால மட்டும்தான் முடியும் சத்யா. உன் கல்யாணத்துக்கு அப்பாவோட பரிசு இது.

“என்ன பயம் சத்யா? நான்தான் உன் கூடவே இருக்கப் போறேனே.– கௌதம். அவன் குரலில் உற்சாகம்.

“கிளப்பு சத்யா. நீ வெறும் ஏட்டுச் சுரைக்காய்னு காட்டாதே. பொம்பளைன்னு வீட்டுக்குள்ள அடங்கி இருக்கக் கூடாது. உன்னாலயும் இந்த பூமியை வலம் வர  முடியும். சாதிக்க முடியும். நீதான் சக்தி. சூப்பர், சூப்பர்.– விஜய் குதூகலித்தான்.

“ஏண்டா, உன் தங்கைக்கு மட்டும்தான் இந்த வார்த்தையா? உன்  மனைவிக்கு இல்லையா?

“அவளுக்கும் உண்டுப்பா. பெண்கள் துணிஞ்சு வெளிக் கிளம்பனும்.

“இந்த டூ வீலர்களுக்கான ஸ்பேர் பார்ட்சும் நான்தான் ஏஜென்சி. அது மைதிலி பெயர்லதான். அவளும் என் பொண்ணுதான்.

அப்பா சொல்லச் சொல்ல மைதிலியும், சத்யாவும் உற்சாகத்தில் குதித்தார்கள்.

“இதுக்கெல்லாம் பணம் வேணும். கிணத்துக் கடவு இடத்தை விக்கப் போறேன். உங்களுக்குச் சம்மதம்தானே?

“உங்க இஷ்டம்தான்பா எல்லாம்.– பிள்ளைகள் ஒருமித்த குரலில் கூற, சிவகாமி மட்டும் எதிர்ப்பு தெரிவித்தாள்.

“பிதுரார்ஜித சொத்து. எனக்கும் பங்கு வேணும்– என்றாள்.




What’s your Reaction?
+1
12
+1
13
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!