Cinema Entertainment

கோகுலத்தில் சீதை: பெண்ணைச் சிறப்பாகச் சித்திரித்த படைப்பு இதுதானா?

சினிமாவிற்காக தமிழ் இலக்கியத்தை நாடுகிற சில இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவேயே இலக்கிய எழுத்து போல உருவாக்கும் அரிதான இயக்குநர்களும் இருக்கிறார்கள். இந்த வரிசையில் அகத்தியனை உத்தரவாதமாகச் சேர்க்கலாம். அரைத்த மாவையே அரைக்கும் பழக்கத்திலிருந்து விலகி ‘வித்தியாசமான’ கதைகளைப் படமாக்க வேண்டும் என்கிற சிந்தனையைக் கொண்டவர். இவர் இயக்கிய ‘விடுகதை’ என்கிற திரைப்படம் 1997-ல் வெளிவந்தது. ஆனால் இப்போது கூட அது போன்ற உள்ளடக்கத்தைத் தொடுவதற்கு எவரும் தயங்குவார்கள். அப்படியொரு சப்ஜெக்ட்!

ஹீரோவும் ஹீரோயினும் க்ளைமாக்ஸில் மட்டுமே சந்திக்கிற மாறுபட்ட கதையமைப்பைக் கொண்ட ‘காதல் கோட்டை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு தேசிய விருதை வாங்கித் தந்தார் அகத்தியன். ‘சிறந்த இயக்குநர்’ என்கிற பிரிவில் தேசிய அளவிலான அங்கீகாரத்தைத் தமிழ் சினிமாவிற்கு முதன் முதலில் பெற்றுத் தந்தவர் அகத்தியன்தான்.

ஒரு பக்கம் இத்தனை வித்தியாசமான படங்களை இயக்கியிருந்தாலும் அவர் ஆரம்பக்கட்டத்தில் இயக்கியது வழக்கமான மசாலா திரைப்படங்கள்தான். வணிகச் சூழல் தந்த நெருக்கடி தாங்காமல், வெற்றி பெற்ற அதே கதையைத் திருப்பிப் போட்டு அதையும் வெற்றி பெற வைத்தார். ஒருவகையில் இதன் மூலம் தமிழ் சினிமாவையும் அதன் பார்வையாளர்களையும் கேலி செய்தார் என்றே தோன்றுகிறது. சினிமாத் துறையில் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் நிகழ்த்திய போராட்டங்களின் கசப்பான அனுபவங்கள் அவை. அதற்குப் பின்னுள்ள கதைகளைக் கேட்டால் எவருக்குமே மனம் பதறும். ஒரு நல்ல கதாசிரியரின் உள்ளே இருக்கிற திறமையை ஆதரிக்க விரும்பாமல், அவனை வழக்கமான குண்டுசட்டியில் தள்ளிவிடும் சினிமாவின் வணிக குணம் என்பது கொடூரமானது.

அகத்தியன் இயக்கிய சிறப்பான திரைப்படங்களின் வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது ‘கோகுலத்தில் சீதை’. எத்தனையோ ஆவேசமான பெண்ணியத் திரைப்படங்களைப் பார்த்திருப்போம். ஆனால் எவ்வித ஆர்ப்பாட்டத் தொனியும் இல்லாத அட்டகாசமான பெண்ணியத் திரைப்படம் இது. ஸ்திரீலோலனும் குடிகாரனுமாக இருக்கிற ஒருவன், ‘காதல்’ என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி காமத்தை மட்டுமே நாடுகிற ஒருவன், பெண்மையின் மேன்மையை அழுத்தமாக உணர்ந்து வணங்கி பெண்ணை ஆராதிப்பதுதான் இதன் மையம். கார்த்திக் இதுவரை நடித்ததில், அவரது அசாதாரணமான நடிப்புத் திறமையை மிகச்சரியாகவும் முழுமையாகவும் பயன்படுத்திய திரைப்படம் என்று ‘கோகுலத்தில் சீதையை’ சொல்லலாம். கார்த்திக்கின் கலைப்பயணத்தில் டாப் ஒன் இடத்தை இதுதான் வகிக்கும் என்று உத்தரவாதமாகச் சொல்ல முடியும்.




ஒரு பெண் பித்தன், பெண்மையின் மேன்மையை உணரும் கதை

ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன் ரிஷி (கார்த்திக்). இளம் வயதிலிருந்தே, தந்தை சேர்த்து வைத்திருக்கும் பணத்தைத் தண்ணீராகச் செலவழிப்பவன். மகனாக அல்லாமல் ரிஷியை தன்னுடைய நண்பனாகவே நடத்துகிறார் அவனது அப்பா (மணிவண்ணன்). என்றாலும் அவருக்குள் இருக்கும் ‘தந்தை’ அவ்வப்போது விழித்துக் கொள்கிறார். ‘விட்டுப் பிடிப்போம்’ என்று காத்திருக்கிறார். கலை, இசை, உணவு போன்றவற்றில் சிறந்த விஷயங்களை, மிகுந்த ரசனையுடன் தேடித் தேடி நுகர்கிறவர்களை ‘Connoisseur’ என்பார்கள். பெண்கள் விஷயத்தில் அப்படித் தேர்ந்த ரசனைக்காரனாக இருக்கிறான் ரிஷி. காதல் என்பது அவனுடைய அகராதியில் கெட்ட வார்த்தை.

இப்படியொரு சூழலில் நிலா என்கிற (சுவலட்சுமி) இளம்பெண்ணை ரிஷி சந்திக்க நேர்கிறது. வழக்கம் போல் அவள் மீதும் காமம் கொள்கிறான். சுயமரியாதையும் இயல்பான துணிச்சலும் கொண்ட நிலா, ரிஷியை அநாயசமாகச் சமாளிக்கிறாள். ஒரு கட்டத்தில் நிலாவிற்குத் தங்குவதற்கு இடமில்லாத சூழல் ஏற்படுகிறது. ரிஷியின் வீட்டில் தங்க நேர்கிறது. அவனுடைய ஆதாரமான இயல்பைப் புரிந்து வைத்திருக்கும் நிலா அங்குத் தங்க முடிவு செய்கிறாள். இருவரும் நல்ல நண்பர்களாகிறார்கள். பெண்களின் மீது காமம் மட்டுமே தோன்ற முடியும் என்பதைத் தனது அசைக்க முடியாத கொள்கையாகவே வைத்திருக்கும் ரிஷியின் மனதில் ஒரு சலனம் ஏற்படுகிறது. அவனையும் அறியாமல் நிலாவைக் காதலிக்கத் தொடங்குகிறான். ஆனால் தன்னுடைய பிம்பத்தை உடைத்துக் கொண்டு இதை அவளிடம் சொல்லத் தயக்கமாக இருக்கிறது. நிலாவிற்கு இந்த விஷயம் தெரியவரும் போது நிலா வீட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படுகிறது.

பிறகு என்னவாயிற்று? ரிஷி தன் காதலை வெளிப்படுத்தினானா? நிலா அதை ஏற்றுக் கொண்டாளா? இந்த முடிவைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமல்ல, இப்படியொரு அழகான பயணத்தின் பாதையை அறிந்து கொள்வதற்காகவும் இந்தத் திரைப்படத்தை நீங்கள் பார்க்கலாம்.




நடிகர் கார்த்திக்கின் கரியரில் இதுதான் பெஸ்ட்!

ரிஷியாக கார்த்திக். ஏற்கெனவே சொன்னதுதான். அவரது கரியரில் `தி பெஸ்ட்’ என்று இந்தக் கேரக்ட்டரைத்தான் சொல்ல வேண்டும். மது, மங்கை என்று இரண்டு விஷயங்களில் புரண்டு கொண்டிருந்தாலும், இந்தப் பாத்திரத்தின் மீது பார்வையாளர்களுக்குத் துளி கூட வெறுப்போ, கோபமோ வராது. அப்படியொரு வித்தியாசமான ‘ஜென்டில்மேன்’ பாத்திரத்தை கார்த்திக் மிக அநாயசமாகக் கையாண்டிருக்கிறார்.

பணத்துக்காக தன்னிடம் வரும் பெண்களில் தன் ரசனைக்கு உகந்தவரைத் தேர்வு செய்வது, பட்டுப்புடவை, மல்லிகைப்பூ, கடல் அலை, கொலுசு சத்தம் என்று பிரத்யேக ரசனையைத் தெரிவிப்பது என்று காமத்தை ஒரு கலையாக அணுகும் ஒரு அதிரசனைக்காரன் பாத்திரத்தில் கார்த்திக் அனுபவித்து நடித்திருக்கிறார். இதே ரசனையை நிலாவிடம் தெரிவித்து மூக்கு உடைபடுவது, பிறகும் கூட தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருப்பது (இந்தக் கேரக்ட்டரில் உள்ள நெருடல் இது), நிலாவை தன்னுடைய நண்பன் காதலித்து திருமணம் செய்யவிருக்கிறான் என்பதை அறிந்ததும் அதிர்ச்சியடைவது, அதை மறைத்துக் கொண்டு காதலுக்காகத் தூது போவது, அங்கு நேரும் இக்கட்டான சூழலில் நிலாவிற்கு அடைக்கலம் தருவது, கிடைத்த சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்ளாமல் பெருந்தன்மையாக நடப்பது என்று ஒவ்வொரு காட்சியிலும் ரிஷியாகவே கார்த்திக் வாழ்ந்திருக்கிறார் எனலாம்.

தன்னை இந்தச் சமூகம் ஸ்திரீலோலனாக அறிந்திருக்கும் போது, முதன் முதலாக நிலாவின் வாயால் ஒரு பாராட்டைக் கேட்கும் காட்சியில் கார்த்திக் தந்திருக்கிற முகபாவமும் நடிப்பும் அருமையானது. இதைப் போலவே நட்பை மதிப்பதில் ரிஷி காட்டும் உண்மைத்தன்மை பாராட்ட வைக்கிறது. அப்படியொரு கலவையில் அற்புதமாக இந்தக் கேரக்ட்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. தனக்குக் கீழே பணிபுரிபவனாக இருந்தாலும் நண்பன் என்கிற அந்தஸ்தைக் கரணுக்குத் தருவது, அந்த மதிப்பைக் காப்பாற்றத் தவறிய கரணிடம் ‘இனிமே என்னை முதலாளியாகத்தான் பார்க்கணும்’ என்று வெறுப்புடன் சொல்வது சிறந்த காட்சி. ஒரு விருந்தில் நிலாவிடம் தவறாக அணுகும் தன்னுடைய நண்பர்களை எரிச்சலுடன் அடித்துவிட்டு பின்பு அந்தச் சம்பவம் நடந்த குற்றவுணர்வில் அளவிற்கு அதிகமாக மதுவை அருந்துவதும், தடுக்க வரும் நிலாவிடம் “இந்தச் சமயத்துல என் பக்கத்துல வராதீங்க” என்று வெடிப்பதும் படத்தின் சிறந்த காட்சிகளுள் ஒன்று.




சுவலட்சுமி என்கிற அற்புதமான நடிகை!

ஒரு சிறந்த இயக்குநரின் அடையாளம் என்பது, நாயகனுக்கு இணையாக நாயகியின் பாத்திரத்தை உருவாக்குவது. இயக்குநர் அகத்தியன் அப்படிப்பட்டவர். இதில் ரிஷிக்கு இணையான பாத்திரத்தைத் திறம்பட ஏற்றிருப்பவர் சுவலட்சுமி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுவலட்சுமி, கிளாஸிக்கல் நடனத்தில் சிறந்த பயிற்சி பெற்றவர். இவரது வேலைத்திறமையினால் கவரப்பட்டு சினிமாவில் அறிமுகம் செய்தவர் சத்யஜித் ரேவின் மகனும் இயக்குநருமான சந்தீப் ரே. 1994-ல் வெளியான ‘உட்டோரன்’ என்கிற அந்தத் திரைப்படம், கான் மற்றும் தேசிய விருதைப் பெற்றது. பிறகு ‘ஆசை’ என்கிற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் வசந்தினால் அறிமுகம் செய்யப்பட்டுப் பல தென்னிந்திய மொழிகளில் நடித்தார் சுவலட்சுமி. திருமணத்திற்குப் பிறகு இவர் நடிப்பை நிறுத்திக் கொண்டது சினிமாவிற்கு இழப்புதான்.

நெருக்கடி மிகும் சூழலில் கூட அமர்ந்து கண்ணீர் விடாமல், `அடுத்து என்ன செய்யலாம்?’ என்று பிராக்டிக்கலாக எதிர்கொள்ளும் பெண் பாத்திரம் தமிழ் சினிமாவில் குறைவு. எந்தவொரு சூழலிலும் தன் சுயமரியாதையை விட்டுத்தராத ‘நிலா’வை பெண்களுக்கான முன்னுதாரணம் எனலாம்.

மற்ற கேரக்டர்

ரிஷி, நிலா மட்டுமல்ல, இந்தத் திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் தனித்தன்மையான சுவாரஸ்யத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைவாசல் விஜய், கரண், தன் நடிப்புத் திறமையால் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார். மகனை தன் நண்பனாக அணுகும் பணக்காரத்தந்தையின் பாத்திரத்தை மணிவண்ணன் இயல்பாகக் கையாண்டுள்ளார். மகன் சுதந்திரமாக இருக்க அனுமதித்தாலும் ஒரு தந்தையின் பொறுப்போடு சரியான சமயத்தில் உள்ளே வருவது ஒரு நல்ல அணுகுமுறை. “இதுவரைக்கும் நான் பார்த்த பொண்ணுங்க எல்லாம் என் முன்னாடியே டிரஸ்ஸை மாத்திப்பாங்க. ஆனா இவ என்னை ரூமை விட்டு வெளிய போகச் சொல்றாப்பா… ஒண்ணும் புரியலை” என்று ரிஷி கேட்கும் போது “இப்பத்தான் நீ உண்மையான பொண்ணைப் பார்க்க ஆரம்பிச்சிருக்கே” என்று சொல்வது முதல் பல காட்சிகளில் மணிவண்ணின் இயல்பான நையாண்டி வெளிப்படுகிறது.




ராவணனின் நெஞ்சில் காமமில்லை’ – படத்தின் ஒன்லைன்

அகத்தியனின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு இசையமைத்திருப்பவர் தேவா. இருவருக்குமான அலைவரிசை கச்சிதமாகப் பொருந்திப் போயிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ‘கோகுலத்தில் சீதை’ படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியிருப்பவர் இயக்குநரேதான். ‘கோகுலத்துக் கண்ணா கண்ணா’ என்னும் பாடலில் இந்தப் படத்தின் உள்ளடக்கம் அருமையாக வெளிப்பட்டிருக்கிறது. ‘சோகமில்லை… சொந்தம் யாரும் இல்லை, ராவணனின் நெஞ்சில் காமமில்லை’… என்பதுதான் ரிஷி பாத்திரத்தின் சரியான வரையறை.

படத்தின் ஜனரஞ்சகமான அம்சங்கள் கலந்திருந்தாலும் ஒரு சிறந்த நாவலை வாசிப்பதற்கு இணையான அனுபவத்தை வழங்கியிருக்கிறார். பல அற்புதமான காட்சிகளின் வழியாக நகரும் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் அருமையானது. பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கும் கார்த்திக்கினால் பஸ் டிக்கெட் வாங்க முடியாத சூழல் அப்போது நேர்கிறது. (இந்தக் காட்சியில் நடத்துநராக வரும் இயக்குநர் அகத்தியனின் நடிப்பு அத்தனை இயல்பாக இருக்கிறது) தலைப்பையும் இங்குப் பொருத்திப் பார்க்கலாம். ‘பெண்களுடன் கூத்தாடினான், பெண்ணைக் கண்டு கை கூப்பினான்’ என்பது போன்ற அருமையான வரிகளின் மூலம், படத்தின் ஒட்டுமொத்த கதையையே இந்தப் பாடலில் அடக்கியிருப்பார் அகத்தியன்.

இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட இந்தத் திரைப்படம், ‘பெண்ணைச் சிறப்பாகச் சித்திரித்த படைப்பு’ என்கிற வகைமையில் தமிழக அரசின் விருதைப் பெற்றது. கார்த்திக்கின் அட்டகாசமான நடிப்பு, சுவலட்சுமியின் அருமையான பங்களிப்பு, அகத்தியனின் வித்தியாசமான இயக்கம் உள்ளிட்ட காரணங்களால், காணத் தவறவே கூடாத தமிழ்த் திரைப்படங்களுள் ஒன்றாக ‘கோகுலத்துச் சீதை’யை உறுதியாகச் சொல்லலாம்.இந்த படத்தில் முதலில்  தேர்வானது  தேவயானி தானாம்.  ஆனால் திட்டத்திற்கான தேதிகளை ஒதுக்க முடியாததால் சுவலட்சுமி  தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 




 

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!