Entertainment karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-5

5

கீழே நின்று இடுப்பில் கை வைத்து கோபுரத்தை அண்ணாந்து பார்த்தான் குருபரன் .கோபுரத்தை சுற்றி சாரம் அமைக்கப்பட்டு அதில் நின்று கோபுரத்து சிற்பங்களுக்கு பெயின்ட் பண்ணிக் கொண்டிருந்தனர் பெயினடர்கள் .இந்த கோவில் கும்பாபிசேக ஏற்பாடுகளால் அல்லவா …அவனது வாழ்வு தலைகீழாக மாற போகிறது …எப்போதும் எல்லா விசயத்திலும் பிள்ளைகள் விருப்பம் போல் நடந்து கொள்ளும் அப்பா …தனது விசயத்தில் மட்டும் இப்படி பிடிவாதமாக இருக்கிறாரே …குருபரனின் மனதில் வெறுமை பரவியது .

முதலில் ஆர்வமாக கோவில் கும்பாபிசேக ஏற்பாடுகளில் ஆவலுடன் பங்கேற்றவன் , பிறகு கும்பாபிசேக ஏற்பாடுகள் கொஞ்சம் கொச்ஞமாக அவன் வாழ்க்கையை  மாற்றும் திசையில் பயணிக்க ஆரம்பிக்கவும் கோவில் சம்பந்தமான பணிகளில் இருந்து விலக ஆரம்பித்தான் .அதனை உணர்ந்து கொண்ட பொன்னுரங்கம்  இது போல் ஏதாவதுசின்ன சின்ன வேலைகளை சொல்லி மகனை கோவிலுக்குள் இழுத்துக் கொண்டிருந்தார் .

பெருமூச்சுடன் கோபுர படிகளில் ஏற தொடங்கினான் .வேகமாக பத்து படி ஏறியதும் அதனை உணர்ந்தான் .அவனுக்கு முன்னால் யாரோ படி ஏறிக்கொண்டுருந.தனர் .மிக மெல்லிய சலங்கை ஓசையும் , மென்மையான காலடி ஓசையும் முன்னால் ஏறிக்கொண்டிருப்பது ஒரு பெண் எனக் கூற …இந்த நேரத்தில் இங்கே …எந்த பெண் …யோசித்தபடி வளைந்து வளைந்து சென்ற படிகளின் அடுத்த மடிப்பில் ஏறிக்கொண்டிருந்த பெண்ணை காண எட்டுக்களை எட்டி வைத்து பார்த்தான் .இடை தாண்டி நீண்டு அசைந்தாடிக் கொண்டிருந்த அந்த ரப்பர் பேன்ட் போடப்பட்டிருந்த இரட்டை ஜடைகள் அவள் யாரென்பதை அவனுக்கு காட்டியது .

இவளா ….முகம் கறுத்தான் .இவளென்ன நான் எங்கே போனாலும் வந்துவிடுவாளா ….வெறுப்புடன் கீழே இறங்கிவிட நினைத்தவன் , திடீரென முடிவை மாற்றிக்கொண்டு இவளுக்கு பயந்து நான் பின்வாங்க வேண்டுமா …? வீம்பு தலை தூக்க உறுதியான பாதங்களை அழுத்நமாக ஊன்றி நின்றான் .அவள் போகட்டும் …பிறகு போகலாம் …நின்றான் .

ஆனால் அவள் அப்படி விரைவாக ஏறுபவள் போல் தெரியவில்லை .ஒவ்வொரு படியையும் ரசித்து …அனுபவித்து ஏறிக்கொண்டிருந்தாள் .இடையிடையே நின்று பிரமிப்புடன் சுற்று சுவர்களை வருடிக் கொண்டாள் .சுவர்களை தொட்டு தன் கன்னங்களில் பதித்து கொண்டாள் .கண் மூடி நின்று கொண்டாள் .அவளது பிரமிப்பு …இவனுக்கு எரிச்சலை தந்த்து .இவள் இப்படி ஆடி அசைந்து கொண்டிருந்தால் நான் எப்படி மேலே போவதாம் .அவளை தாண்டி போக நினைத்தால் அவளருகே போகும் போது நிச்சயம் ஒருவரொடொருவர் உரச நேரும் .அவ்வளவு குறுகலான படிகள் அவை .

” இப்போது மேலே போகும் எண்ணம் இருக்கிறதா …இல்லையா …? ” சுவர்களின் ஜில்லிப்பை தனது கைகளினால் கன்னத்தில் உணர்ந்து கண் மூடி நின்று கொண்டிருந்தவள் ,திடுமென பின்னால் ஒரு ஆணின் குரல் கடுமையாக ஒலிக்கவும் திடுக்கிட்டு திரும்பினாள் .திரும்பிய வேகத்தில் இடறிய பாதங்கள் சிறிய அந்த படிகளின் மீதான பிடிமானத்தை இழக்க , தடுமாறி அவனை நேக்கி சரியலானாள் .

தனக்கு நாலு படி முன்னாலிருந்தவள் , சரிந்து கீழ் வருவதை இடுப்பில் கை தாங்கி வேடிக்கை பார்த்தபடி இருந்தவன் ,அவள் அவனருகே சமீபத்ததும் , அவள் இடையில் தன்  இடது கையை இடை நீட்டி நிறுத்திய  வேகத்தில் அப்படியே அவளை தூக்கி நிறுத்தி தள்ளினான் .





” என்னையும் சேர்த்து கீழே வரை உருட்டி விடும் எண்ணமோ …? “

அவன் மீண்டும் தள்ளிய வேகத்தில்  தடுமாறி சப்பென படிகளில் அமர்ந்து விட்ட பூந்தளிர் மலங்க , மலங்க விழித்தாள் .நடந்துவிட்ட நிகழ்வை இன்னமும் அவள் மூளை ஏற்கவே இல்லை .

” இங்கேயெல்லாம் வரும் உரிமை உனக்கெல்லாம் உண்டா என்ன …? எல்லாம் என் அப்பா கொடுக்கும் இடம் .குப்பை மேடெல்லாம் கோபுரம் ஏற ஆசைப்படுகிறது ….” தேள் கொடுக்காய் சுழன்ற நாவுடன் படிகளில் தளர்ந்து அமர்ந்து கிடந்த அவளை தாண்டி ஆளுமையாய் கால்களை ஊன்றிக் கொண்டு மேலேறி போய்விட்டான் .

பூந்தளிர் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை .இவன் இப்போது …ஏன் வந்தான் …? ஏன் இப்படி செய்தான் …? இப்போதல்ல …எப்போதுமே அவளை சுடுகதிராய் தான் சுட்டுக் கொண்டிருந்தான் .பெரிய இடத்து பிள்ளை போலவா நடந்து கொள்கிறான் .பொறுக்கி போல் நடந்து கொள்கிறான் ….பொறுக்கி என முனகிக் கொண்டவளுக்கு முன்னொரு முறை அவனை சந்தித்த சந்தர்ப்பம் நினைவு வந்த்து .

இயற்கை உரம் விபரம் என் பிள்ளைகளிடம்தான் பேச வேண்டும் …பொன்னுரங்கம் அவர் பிள்ளைகள் பக்கம் கை காட்டிவிட்டு போய்விட , பூந்தளிர் தயக்கத்துடன் அவர் வயலுக்குள் நுழைந்தாள் .வயலின் நடுவே பெரிய ஆலமரமொன்று தனது விரிந்த விழுதுகளுடன் ஆளுமை செய்தபடி இருக்க அதனடியில் சிறு வீடொன்று இருந்த்து . பெரிய வீட்டினர் சில ஓய்வு தினங்களை அங்கேதான் கழிப்பார்கள் என அவள் கேள்விப்பட்டிருந்தான் .

மெல்ல விழிகளை சுற்றியபடி உள்ளே நடந்தவளின் கண்களில் ஒரு டிராக்டர் அடியில் குனிந்து அமர்ந்து எதையோ ஆராய்ந்து கொண்டிருந்த கதிர்வேலன் கண்ணில் பட்டான் .

” சார் …” தயக்கமாய் குரல் கொடுத்தாள் .தலையை நிமிர்த்தி பார்த்தவன் , நறுவிசான இவளது நாகரீக தோற்றத்தில் கவரப்பட்டு ..” வாங்க மேடம் …யார் வேணும் …? ” மரியாதையாக விசாரித்தான் .

” வந்து …உர …விபரம் பேச ….பெரிய்ய்யா …”

” நீங்க யாரு …? கவர்ன்மென்ட் ஆபிசரா …? “

” ஐயா …அந்த பொண்ணு நம்ம சிலம்ப வாத்யார் மகளுங்க .அதுக்கு போய் ஆபிசர் மரியாதை கொடுக்கிறீங்களே …” தகவல் சொன்னபடி வந்தான் வயலில் வேலை செய்யும் பரமன் .

” ஓ…அவர் பொண்ணா …? என்னம்மா …என்ன விபரம் …உள்ளே. தம்பி இருப்பான் போ …போய் பாரு …” கதிர்வேலன் பேச்சில் , செய்கையில் இப்போது அலட்சியம் வந்திருந்த்து .விட்டேத்தியான கையசைவு வேறு ….இது தனது சாதிக்கான அலட்சிய பாவமென உணர்ந்த பூந்தளிருக்கு எரிச்சல் வந்த்து .மரியாதையாக பேசு என அவனிடம் சொல்ல துடித்த நாவை கட்டியபடி உள்ளே நடந்தாள் .

அங்கே பெரிய ப்ளாஸ்டிக் டப்பில் எதையோ கரைத்தபடி இருந்த குருபரனை நோக்கி நடந்தாள் .இவன்தானே …அந்த தம்பி ….பார்த்தால் அவனுக்கு தம்பி மாதிரி தெரியவில்லையே .ஒரு கையில் அந்த அண்ணனை போல் நாலு அண்ணன்களை பிடித்து நசுக்கிடுவான் போலவே …கையில்லாதவெள்ளை  பனியன் கறுத்த உடலோடு படிந்து கிடக்க  , தோளில் துண்டுடன்.  தன் வேலையில் கவனமாக இருந்தவனின் அசையும் உறுதியான புஜங்களை பார்த்தபடி நடந்தாள் .

வயலில் வேலை செய்யும் இளம் பெண்ணொருத்தி அவனருகே வந்து ஏதோ கேட்க , தலை நிமிர்ந்து அவளுக்கு அக்கறையாக பதிலளித்தான் இவன் .பொங்கி சிரித்தாள் அவள் .என்ன கர்மத்திற்கு இப்போது இப்படி சிரிக்கிறாள் இவள் …காரணமில்லாமல் எரிச்சல் வர வேக எட்டெடுத்து அவன் முன் நின்றாள் .” வணக்கம் சார் …”

சிரித்தவளின் மிகு புன்னகையின் கொஞ்சத்தை தன் முகத்திலும் வாங்கியிருந்தவன் இவளது குரலுக்கு தலையுயர்த்தினான் .அவ்வளவுதான் முகத்தில் வேப்பெண்ணெயை குடித்தது போன்றதோர் சுளிப்பு .அருவெறுப்பானதோர் பாவம் கண்களில் .

” என்ன …? ” ஒற்றை வார்த்தை கேள்வியில் இப்படி கன்னத்தில் அறைய முடியுமா …? எதற்கிந்த வெறுப்பு …?

” வந்து …நான் …” பூந்தளிருக்கு வார்த்தை வரவில்லை .

” எந்த ராசாங்கத்தை ஆளும் எண்ணத்தில் வந்தாய் …? ” குத்தலான கேள்வியில் தயக்கம் உதறி நிமிர்ந்தாள் .

” உங்கள் பயிர்களுக்கு இயற்கை உரங்கள் போடுவது சம்பந்தமாக வந்தேன் …” குரல் உயர்த்தி பதிலளித்தாள் .

” எல்லாம் எனக்கு தெரியும் …போ …போ …” நாயை சூ ..சூவென விரட்டுவது போலிருந்த்து அவனது செய்கை .சொன்னதோடு அந்த டப்பை தூக்கிக் கொண்டு உள்ளே போய்விட்டான் .அந்தப் பெண் இவளை வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தவள் ….” ஏன்டி நீயெல்லாம் பெரிய வீட்டாளுங்க வயக்காட்டு பக்கம் வரலாமா …? பார் சின்னய்யாவிற்கு அந்த கோபம்தான் ….” போனவனின் பாதையை பார்த்தபடி. சொன்னவள்   உயர் சாதியை சேர்ந்தவள் .

பூந்தளிரின் உடலில் அமிலமழை பொழிந்த்து போலொரு எரிச்சல் உணர்வு .சை …என்ன பிள்ளைகள் …பெரியவர் …வயதில் அனுபவத்தில் மூத்த இவர்களது தந்தைக்கு இருக்கும் பக்குவம் …இந்த இளவயதினருக்கு இல்லையே .இந்தக் காலத்திலும் இப்படி சாதி பார்க்கின்றனரே …மனம் நொந்தவள் தளர்ந்த நடையுடன் திரும்ப நடந்தாள் .

மறுநாளே அவள் பொன்னுரங்கத்தின் காதிற்கு , அவர் மகன்களுக்கு அவளது முகம் பார்க்கும் எண்ணம் கூட இல்லை எனும் விசயத்தை பட்டும் , படாமலும் கொண்டு செல்ல அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு அவர் வயல் முழுமைக்கும் உரமிடும் வேலையையும் , மருந்தடிக்கும் வேலையையும் அவளிடமே ஒப்படைத்தார் .அவளுக்கு வேலை செய்ய சில வேலையாட்களை நியமித்துவிட்டு அவளை விபரங்கள் மட்டும் அவர்களுக்கு சொல்ல சொன்னார் .

அப்படியே அவள் வேலை செய்து கொண்டிருக்கும் போது கதிர்வேலன் வந்தானானால் கண்டும் காணாமல் போய்விடுவான் .குருபரன் அதன் பிறகு அங்கே வருவதே இல்லை .

இவன் காட்டும் இத்தனை அலட்சியத்திற்கும் எனது சாதிதான் காரணமா …? பூந்தளிரின் உள்ளத்தில் வைராக்கியம் பிறக்க எழுந்து உறுதியான முடிவுடன் படியேற ஆரம்பித்தாள் .

அடிக்கும் வெயிலிலும் மேல்தளம் குளிர்ச்சியாகத்தான் இருந்த்து .உயரம் கூடக் கூட குளிர்ச்சி கூடும் என்பதும் உண்மைதான் போலும் ….இயற்கையின் குளிர்ச்சியில் கொதித்திருந்த மனமும் சிறிது சமாதானமாக அந்த இனிமையோடு உயரத்திலிருந்து ஊரை பார்த்தாள் பூந்தளிர் .

தீப்பெட்டியாய் கட்டிடங்கள் தெரிய , ஊரின் பெரும்பகுதியை ஆக்ரமித்திருந்த வயல்வெளிகள் மரகதமாய் மின்னின.அணைவாய் மென்மையாய் வீசிய தென்றலொன்று அந்த வயல்வெளி பசும் பயிர்களின் மீது ஓர் பசு அலையொன்றை தோற்றுவிக்க கடலலை போல் அசைந்தாடிய பயிரலைகளை உள்ளங்கால் வரை சிலிர்க்க பார்த்து ரசித்தாள் .எவ்வளவு அழகான ஊர் என்னுடையது …பெருமித்ததில் விம்மிய மனதுடன் இரு கைகளையும் கன்னத்தில் பதித்தபடி சுற்றி சுற்றி பார்த்தவள் பொம்மை போல் சைக்களில் போன மனிதர்களை ஆவலோடு வேடிக்கை பார்த்தாள் .

” ஏய் ….நீயா …? நீயெல்லாம் இங்கே எப்படி …? உன்னை யார் இங்கே வரவிட்டது ….அடக்கடவுளே கோவிலுக்கே தீட்டு பட்டுருச்சே ….” கத்தலுடன் அங்கே வந்தவன் பொன்னுரங்கத்தின் சொந்தக்காரன் ஒருவன் .கோபத்தோடு அருவெறுப்பும் இருந்த்து அவனிடம் .

” எவ்வளவு திமிர்டி உனக்கு …கீழே இறங்கு …இப்பவே பஞ்சாயத்து கூட்டி …உன் குடும்பத்தையே ஒரு வழி பண்ணலைன்னா , என்னன்னு கேளு .இறங்குடி கீழே ….” சொன்னதோடு அவளது இரட்டை நீள சடைகளில் ஒன்றையும் பிடித்து இழுத்தான் அவன் பொன்ராசு .





” சீ …விடு என்னை .எனக்கும் இங்கே வர உரிமை இருக்கிறது வந்தேன் .அப்படித்தான் வருவேன் …” அவன் கையிலிருந்து தனது கூந்தலை இழுத்தபடி பதிலுக்கு கத்தினாள் .

” என்னடி உரிமை …என் பெரியப்பா செய்த முட்டாள்தனத்தை தானே சொல்கிறாய் .அதை நாங்கள் நடக்க விட மாட்டோம் .நீயும் உன் சாதி ஆட்களும் வெட்டி கனவு காணாதீர்கள் .நிச்சயம் நாங்கள. இந்த திருமணத்தை நடக்க விட மாட்டோம் ….இப்போது கீழே இறங்குடி …” கூந்தலை பிடித்து அவன் மேலும் இழுக்க , அவள் கால்களை அழுத்தி ஊன்றி நிற்க முயன்றாள் .

” அவளை விடு பொன்னா ….” பின்னால் குரல் கேட்க வந்தவன் குருபரன் . அவன் அவ்வளவு நேரம் அங்கேதான் நின்றிருந்தான் .சுற்றி …சுற்றி ரசித்துக் கொண்டிருந்த பூந்தளிரை பார்க்க பிடிக்காமல் கோபுரத்தின் மறுபுறம் சென்று பெயின்டரிடம் பேசிக்கொண்டிருந்தான் .

” இன்னைக்கு கார்த்திகை தீபம் ஆரம்பங்கய்யா.கோவில் பணி முடியாமல்  இந்த வருடம் நாம் கோபுரத்தில் தீபமேற்ற முடியாது .தை மாசம் கும்பாபிசேத்திற்கு நாள் குறிச்சிருக்கோம் .அதுக்குள்ளே வேலை முடிஞ்சிடும் .அடுத்த வருடம் பாருங்க நம் கோவில் கோபுரம் முழுவதும் விளக்கேற்றி வைத்து ஜெகஜோதியாய் கோவில் முழுவதும் மின்ன போகிறது …” பெருமை பேசிக் கொண்டிருந்த பெயின்டருக்கு உம் கொட்டிக் கொண்டிருந்தான் .அப்போதுதான் மறுபுறம் சத்தம் கேட்டு எட்டி பார்த்தான் .

” இவளையா விடச் சொல்கிறீர்கள் …? இவளுக்கு தைரியத்தை பார்த்தீர்களா அண்ணா ….எப்படி மேலேறி வந்து நிற்கிறாள் .அழுத்தி பிடித்து தள்ளினால் ஒரு நொடியில் கீழே விழுந்து கிடப்பாள் .சொல்லுங்கள் அண்ணா …கீழே தள்ளி விட்டடுமா…? ” பொன்ராஜை பார்த்தால் வாய் பேச்சில் வீரன் போல் தெரயவில்லை .குருபரனின் தலை லேசாக அசைந்தாலும் அவளை உடனடியாக கோபுரத்தின் மேலிருந்து கீழே தள்ளும் வேகம் அவனுக்கிருந்த்து .

” வேண்டாம் பொன்னா .தவறு நம் பக்கம் இருக்கிறது .நீ முதலில் அவளை விடு ….”

” சும்மா இருங்கண்ணா .உங்களுக்கு அப்படியே பெரியப்பா போல் இளகிய மனது .எனக்கெல்லாம் அப்படி இல்லை …இவளை ….” வெறி பிடித்தவன் போல் வலுவாக சடையை பற்றி இழுக்க , பூந்தளிர் வலி தாங்காமல் அலறினாள் .

” முட்டாள் …விடு அவளை ….” அதட்டியபடி இடையில் வந்த குருபரன் வலது கையை கத்தி போல் வைத்து பொன்ராஜின் கையில் ஓங்கி அடித்தான் .வலி தாங்காமல் அவன் பிடியை விட , அவன் கையில் இருந்த பூந்தளிரின் கூந்தலை பிடித்து திரும்ப அவள் முகத்தை நோக்கி எறிந்தான் .” கீழே போ .,..” உறுமினான் .

உச்சந்தலை வரை தாக்கிய வலியுடன் , அவமானமும் சேர்ந்து கண் கலங்க நின்றவள் , அப்போதும் தன் நிலையை விடாமல் இருவரையும் நிமிர்வாய் பார்த்தபடி பாதங்களை அழுத்தி அங்கேயே நின்றாள் .அந்த கோலம் ஆண்கள் இருவருக்கும் கோபத்தை தர ,பொன்னன் அவளை அடிக்கும் நோக்கத்தில் பாய , அவனை தடுத்து கீழே இழுத்து போனான் குருபரன் .நடந்தபடி அவன் பூந்தளிரின் மேல் வீசிய பாவனை வித்தியாசம் சுமந்திருந்த்து .

” நீங்க என்னண்ணா அவளுக்காக என்னை அடிக்கிறீங்க …? கையை மட்டும் கொஞ்சம் விடுங்க ஒரே அறையில் அவள் பல்லை பெயர்த்தெடுக்கிறேன் ….”

” வேண்டாம் பொன்னா …இப்போது அவள் மேல் கை வைத்தால் , அது ஊருக்குள் பெரிய பிரச்சினையாகி சாதி கலவரமாக வெடித்துவிடும் .இவளை வேறு வழியில்தான் அடக்க வேண்டும் ….”

கோபுரத்தில் வேலை செயது கொண்டிருந்த அனைவரும் வேலையை விட்டு விட்டு இவர்களை வேடக்கை பார்க்க கூடிவிட , அவமானத்தில் தேகம் எரிய அவர்களை முறைத்தபடி நின்றாள் பூந்தளிர.

”  .இவளை பார்த்தீங்களா …எவ்வளவு திமிராக நிற்கிறாள் .இந்த திமிரை அடக்கனும. …. இந்த கல்யாணம் நடக்க கூடாதுண்ணா. ஏதாவது செய்து உடனடியாக கல்யாணத்தை நிறுத்தனும் ….”

” ம் ….அதறகு ஏதாவது யோசனை சொல்லு .அதுதான் இப்போது  நாம் செய்ய ஙேண்டிய முக்கியமான வேலை ….”

” கல்யாணம் நடந்துதான் தீரும் .அதனை உங்களால் நிறுத்த முடியாது ….” தன்னை மறந்து ஆங்காரமாய் குரல் கொடுத்தாள் பூந்தளிர் .

நடந்து கொண்டிருந்தவர்கள் நின்று அவளை முறைத்தனர் .அதனை அலட்சியப்படுத்தி ” நிச்சயம் …இந்த மாரியம்மன் மேல் சத்தியமாக இந்த திரமணம் நடக்கத்தான் போகிறது .எங்கள் சாதி மக்கள் இந்த கோபுரத்தின் மேல் ஏறத்தான் போகிறார்கள் ….” கத்தினாள் .

ஆத்திரம் கொப்பளிக்க அவளை நோக்கி மீண்டும் பாய்ந்த பொன்னனை அடக்கியபடி , ” உம் ” என தன் உதட்டில் விரலை வைத்து அவள் வாயை மூடும்படி சைகை காட்டிய குருபரனின்முகம் மிகுந்த கோபத்தில் சிவந்திருந்த்து .அவன் தனது ஆத்திரத்தை கட்டுப்படுத்தியிருப்பது ,அடக்கப்பட்டு துடித்துக் கொண்டிருந்த அவனது கன்னத்து தசைகளில் தெரிந்த்து .

பொன்னனை சமாதானப்படுத்தி அவனது பைக்கில ஏற்றி அனுப்பிவிட்டு, தனது பைக்கில் ஏறிய குருபரன் திடுமென நிமிரந்து மேலே பார்க்க கோபுரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பூந்தளிர் தனது தலையை உள்ளிழுத்துக் கொண்டாள் .இங்கே வரும்போது கூட இந்த திருமணம் நடப்பதில் அவளுக்கு அவ்வளவாக விருப்பமில்லாமல் இருந்த்து .ஆனால் இப்போதோ எவஙளவு விரைவாக நடக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த திருமணம் நடக்க வேண்டுமென அவள் மிக விரும.பனாள் .

——————————+—-+-++

வீடு முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்த தன் வீட்டை மொட்டை மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் குருபரன. அவன் மனம் அன்று காலை கோவில் கோபுரத்தில் நடந்த நிகழ்ச்சியிலேயே இருந்த்து .எவ்வளவு திமிர் அவளுக்கு …எத்தனை தைரியமாக இரண்டு ஆண்பிள்ளைகள் எதிரில் அறைகூவல் விடுகிறாள்…? அவளை ….பல்லை கடித்தவனின் பார்வை வாசல் காம்பவுண்ட் கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த உருவத்தின் மேல் படிந்த்து .

யாரது …பெண் …சைக்களில் …வருவதென்றால் …அவள் போல…அவளேதான் .இங்கே எதற்கு…இப்போது  வருகிறாள் …ஒரு வேளை …கல்யாணத்தை நிறுத்தும் எண்ணத்தில் …இப்படி தோன்றியவுடன் அவசரமாக மாடிப்படிகளில் இறங்கி வாசலுக்கு நடந்தான் .

விழிகளை சுற்றி அலைய விட்டபடி பூந்தளிர் வீட்டு  தலைவாசல் படிகளில் காலை வைத்தபோது அவள் எதிரில்வழி மறித்தபடி  போய் நின்றான் .

” என்ன …? ” அவசரமாக கேட்டவனை அலட்சியமாக பார்த்தவள் ” நான் பெரிய்ய்யாவை பார்க்கனும் ….,” என்றாள் .

” எதற்கு ….? கல்யாணத்தை நிறுத்த போகிறாயா …? ” ஆவலாக கேட்டான் .

” இல்லை .கல்யாணத்தை உடனடியாக நடத்த சொல்ல போகிறேன் ….” அழுத்தமாக சொன்னாள் .

” உடம்பு பூராவும் திமிர் உனக்கு .உன்னையெல்லாம் முன்வாசல் வழியாக அம்மா உள்ளே அனுமதிக்க மாட்டாங்க .பின்வாசலுக்கு போ ….” அவள் உள்ளே நுழைய முடியாமல் கைகளை சுவரில் குறுக்காக வைத்தான் .

” ம்ஹூம்….” அலன்சியமாக அவனை பார்த்தவள் தன் முன் குறுக்காக தடுத்திருந்த அவனது வலிவான கைகளின் மீது தனது மெல்லிய கரங்களை பதித்து தள்ளினாள் .

” தீட்டு …போய் குளிச்சிடுங்க …” என்றுவிட்டு தைரியமாக வலது காலெடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைந்தாள் .

” ஐய்யய்யோ ….இவளா தம்பி …இவளை ஏன் நடுவீட்டில் விட்டுக் கொண்டு நிற்கிறீர்கள் …? ” கேட்டபடி பின்னால் நின்றாள் அனுராதா .எரிச்சலுடன் அவளை பார்த்துவிட்டு தனது அறைக்குள் போனான் குருபரன் .

பத்து நிமிடங்களில் உடனே வருமாறு பொன்னுரங்கத்திடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது .




What’s your Reaction?
+1
28
+1
19
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!