Entertainment karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்- 2

2

யோவ் யாரை பிசாசென்கிறாய் ….என்னையா ….? கொத்தாக மாமனாரின் உச்சந்தலையை பிடித்து ஆட்டும் ஆசை அனுராதாவிற்கு வந்த்து .ஆனால் அப்படி செய்யமுடியாது. அப்படி செய்தால் அந்த பெரிய வீட்டு மருமகளாக பந்தாவாக அவளால் அந்த ஊருக்குள் நடமாட முடியாது .அவள் கணவனுக்கு மனைவியாக , பிள்ளைகளுக்கு தாயாக இந்த வீட்டிற்குள் இருக்கமுடியாது .இங்கிருந்து பிரச்சினை என அவள் பிறந்தகத்திற்கும் போக முடியாது .சாதாரண நடுத்தர குடும்பம் அவளது பிறந்தவீடு . மூன்று பெண் பிள்ளைகளும் , ஒரு ஆண் பிள்ளையுமான  வீட்டில் நடுவில் பிறந்தவள் அனுராதா .மூத்த அக்கா  ஒருபள்ளி ஆசிரியை .அவளுக்கு பொருத்தமாக ஒரு  பள்ளி ஆசிரியரை மணமுடித்து ஒரு நடுத்தர குடும்பவாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் .

அனுராதாவின் தங்கை இரண்டாவது அக்காவை போல ஒரு வசதியான வாழ்வென்ற கனவுடன் , தனக்கு வருகிற வரனையெல்லாம் தட்டிவிட்டுக் கொண்டு வீட்டில் உட்கார்ந்திருக்கிறாள் .இவர்கள் அனைவரின் தம்பி படிப்பில் அரியர் அரியராக அடுக்கி வைத்துவிட்டு வேலை கிடைக்காமல் வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான்.அப்பா , அம்மாவிற்கும் , தங்கை , தம்பிக்கும் , எந்நேரமும் ஏதாவது பணப்பிரச்சுனையோடு வந்து நிற்கும் அக்காவுமாக எப்போதும் களேபரமாகத்தான் இருக்கும் அவள் அம்மா வீடு

.இப்படி ஒரு சூழ்நிலை உள்ள  பிறந்தவீட்டிற்கு அனுராதா போனால் வரவேற்பு கிடைக்காதென்பது இரண்டாவது .முதலாவதாக அவளுக்கே அங்கே போய் இருக்க பிடிக்காது .இத்தனை பெரிய வீட்டில் சுதந்திரமாக எஜமானி அந்தஸ்துடன் வலம் வந்த்து போய் , அங்கே நான்கு அறைகளுக்கிள் சுற்றி சுற்றி வருவது அவளுக்கு மூச்சு முட்டுவது போலிருக்கும் .இரண்டு நாட்கள் முழுதாக அங்கே இருப்பதற்குள் அவளுக்கு போதும் பொதுமென்றாகிவிடும. ஓடி வந்துவிடுவாள் தன் புகுந்தவீட்டிற்கு .

அனுராதா கல்லூரியில் படித்த போது , உடன் படித்த முருகேசனுக்கும் அவளுக்கும் காதல் மலர்ந்த்து . முருகேசன் பக்கத்து ஊர் பண்ணையார் மகன் , வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் என அறிந்த்தும் அனுராதாவின் அன்பு காதலாகி விளைந்த விருட்சமானது .மகனின் விருப்பத்தை மதித்து பொன்னுரங்கம் சம்மதித்து விட அவர்கள் திருமணம் முடிந்துவிட்டது .  இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகும் ,திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட பிறகும் இன்னமும் கூட அனுராதாவால் அவளது வாழ்வை நம்பமுடியவில்லை .

தன்னையும் மருமகளாக ஏற்றுக்கொண்ட குடும்பமென அக்கறை காட்டும் எண்ணம் மட்டும் அவளுக்கு இங்கே வரவில்லை .காரணம் அவளது சுதந்திர போக்கும் , சோம்பேறித.தனமும் .இவ்வளவு பெரிய வீட்டில் வீடு நிறைய வேலவயாட்கள் நிறைந்திருப்பார்கள் என்ற அவளது கனவு நனவாகி வீடு முழுவதும் வேலையாட்கள் இருந்தார்கள் .ஆனால் நாள் முழுவதும் அவர்களை ஏவியபடி தான் டிவி பார்த்துக் கொண்டிருக்கலாம் என்ற அவளது கனவு மட்டும் நனவாகவில்லை .எத்தனை வேலையாட்கள் இருந்தாலும் சமையல் வேலை மட்டும் வீட்டு பெண்களுக்கேயுரியதாக இருந்த்து .

அத்தனை பெரிய வீட்டு உறுப்பனர்கள்  அனைவர்க்கும் , ,  வேலையாட்களுக்கும் , எப்போதும் ஒருவர் மாற்றி ஒருவராக ஏதாவது காரணத்திற்காக  வந்து தங்கியபடியே இருக்கும் உறவினர்களுக்குமென மூன்று வேளையும் வகை வகையாக    சமைத்து பரிமாறி , சாமான்களை ஒதுக்கி என …வேலைகளின் வகைகளிலேயே விதிர்த்து போனாள் அனுராதா .அம்மாடியோவ் ….ஒரு மனுஷியால் செய்ய முடியுமா இந்த வேலைகளையெல்லாம் ….மலைத்து அவள் நின்ற போது , முடியுமென செயதே காட்டினார்கள் சொர்ணத்தாயும் , பொன்னியும் .அதிகாலை ஐந்து மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை அவர்கள் இருவரும் இடை விடாமல் சுழலுவதை ஆச்சரியமாக பார்த்தாள் அனுராதா .





” உங்கள் அம்மா வீட்டில் இது போல் தெடர்ந்து வேலை செய்து பழக்கமோ அக்கா …? ” அவர்கள் திருமணம் முடிந்த புதிதில் மெல்ல பொன்னியிடம் விசாரித்தாள் .

” இல்லைம்மா , என் அம்மா வீட்டில் சமையலுக்கும் ஆள் உண்டு …” புன்னகையோடு சொன்னாள் பொன்னி .

பொன்னியின் பிறந்தகம் பொன்னுரங்கத்தின் குடும்பத்தற்கு இணையான வசதியை கொண்டது .தனது வசதி , அந்தஸ்துக்கு ஏற்ற பெண்ணை ஜாதகம் , பொருத்தம் பார்த்து மூத்த மகனுக்கு மணமுடித்திருந்தார் பொன்னுரங்கம் .

” அங்கே வேலையே செய்யாமல் இருந்துவிட்டு இங்கே வந்து எப்படி அக்கா இவ்வளவு வேலைகள் உங்களால் செய்ய முடகிறது …? “

” நம் வீட்டு வேலைகளை நாம்தானேம்மா செய்ய ஙேண்டும் .நாம் வாழ்க்கைபட்டு வந்த வீட்டிற்கு ஏற்றபடி நம்மை மாற்றிக் கொள்வதுதானே நியாயமானது ….” நியாயம் பேசிய ஓரகத்தியை அனுராதாவிற்கு பிடிக்காமல் போனது .ஏனென்றால் அப்படியெல்லாம் உடலை வருத்திக் கொள்ள அவள் தயாரில்லை .

அந்தவீட்டில் அனுராதாவும் , அவள் கணவன் முருகேசனும்தான் டிகிரி முடித்தவர்கள். மூத்த மகன் கதிர்வேலன் எட்டாவதோடு படிப்பை நிறுத்திக்கொண்டு டிராக்டர் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான் .அப்பாவோடு சேர்ந்து முழு விவசாயி ஆகிவிட்டான் .மூன்றாவது மகன் குருபரன் தட்டு தடுமாறி பன்னிரெண்டாவது பாஸ் ஆனதும் மண்வெட்டியை கையில் தூக்கிக்கொண்டான் .தலையில் கட்டிய துண்டும் வெற்று மேனியுமாக வெயிலில் கிடந்து கறுக்கும் அண்ணன் , தம்பியின் நிலைமை முரகேசனுக்கு ஒத்துவரவில்லை .அவனுக்கு வெயில் மேனியில் பட்டாலே அலர்ஜியானது .அதனால் பாதுகாப்பாக அறைக்குள் அமர்ந்து கொள்ள படிப்பை தேர்ந்தெடுத்து புத்தகத்தோடு அவன் உட்கார்ந்து கொள்ள , பொன்னுரங்கமும் அவன் விருப்பம் போல் விட்டுவிட்டார் .

இப்போது வயலில் கிடந்து , வாய்காலில் ஓடி , அறுவடையை எடுத்து , அள்ளி கட்டும் வரை அப்பாவும் , சகோதர்ர்களும் அயராது உழைக்க , முருகேசன் வயல்காட்டு பக்கம் வராமல் அவர்களது மற்ற தொழில்களை ரைஸ்மில் , பள்ளிக்கூடம் போன்றவற்றை பார்த்துக் கொண்டிருந்தான் .படித்த மருமகள் என்ற தைரியத்தில் அனுராதாவும் வேகமாக தனது கணவனுடன் அவன் கவனித்து வந்த தொழில்களுக்குள் புகுந்து கொண்டாள் .தனது படிப்பு வீணாகி விடக்கூடாது என்ற அவளது வாதம் வீட்டினரால் அரைகுறை மனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு , பெரிய கம்யூட்டர் கம்பெனி எம்.டி போன்ற பந்தாவுடன் அவள் அந்த வீட்டில் வளைய வந்து கொண்டிருந்தாள் .

இப்படி வீட்டு வேலைகள் முழுவதையும் பொன்னியின் தலையில் கட்டிவிட்டு , தான் வெளியே சுற்றுவதற்கு மற்றுமொரு காரணத்தை கைவசம் வைத்திருந்தாள் அனுராதா .அது ….அந்த வீட்டின் முதல் முழுமையான மருமகள் அவள்தானென்னும் அவளது திமிரான பேச்சு .அதற்கான அடிப்படையும் அங்கே நறையவே இருந்த்து .அது ….அந்த வீட்டின் மூத்த மருமகள் பொன்னி திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் வரை ஒரு குழந்தையை பெறவல்லை .எத்தனையோ வேண்டுதல்கள் , ஏதேதோ சிகிச்சைகளுக்கு பிறகு பொன்னிக்கு கீர்த்தனா பிறந்த போது , அனுராதாஅதற்கு முன்பே  ராஜேந்திரன் , ரவீந்திரனை இரட்டை பிள்ளைகளாக பெற்று , வீட்டுக்கு ஒன்றுக்கு …இரண்டாக ஆண் பிள்ளைகளை வாரிசாக கொடுத்துவிட்டேன்   என தலை நிமிர்ந்திருந்தாள் .

அந்த அறிவிப்பிலும் , இயல்பான தனது பொறுமை குணத்திலும் …பொன்னி தன் கொழுந்தன் மனைவியை அனுசரித்து போக பழகியிருந்தாள் .அதனால் தனது பிள்ளைகளின் வேலையையும் சேர்த்து பொன்னியின் தலையிலேயே கட்டிவிட்டு அலங்கரித்து கொண்டு வெளியே போய் வருவதையே பெரிய வேலையாக காட்டிக் கொண்மிருந்தாள் அனுராதா .சொர்ணத்தாய்க்கு அவளது இந்த விட்டேத்தியான குணம் பிடிக்கவில்லையென்றாலும் , பொன்னி அட்ஜஸ் செய்து போய்விட , அவளும் விட்டுவிட்டாள் .அத்தோடு அடிக்கடி ஆங்கிலத்தில் அலட்டும் அனுராதா மேல் சொர்ணத்தாய்க்கு  படித்த மருமகளென்ற சிறு பிரமிப்பும் உண்டு . எனவே   அவளது மாமியார்த்தன விரட்டல் எல்லாமே பொன்னியிடம் மட்டுமே இருக்கும் .

ஆனாலும் சில நேரங்களில் அனுராதா காட்டும் அலட்டல்களில் நொந்து , பொன்னுரங்கம் அவளை கண்டிப்பது உண்டு .சில நேரங்களில் நேரடியாக ….சில நேரங்களில் இப்போது போல் மறைமுகமாக …அப்போதெல்லாம் ….எல்லோரிடமும் வேகும் பருப்பு இவரிடம் மட்டும் வேகவே மாட்டேனெனகறதே ….அனுராதா எரிச்சலடைவாள் .

இவர் வேண்டுமென்றேதான் எனக்கு போட்டியாகத்தான் அந்த …அவளை வீட்டிற்குள் அழைத்து வரப் போகிறாரோ ….? அப்படித்தான் இருக்கும் . அவளெல்லாம் இந்த வீட்டு வாசப்படியைக் கூட மிதிக்கும் தகுதியற்றவள் .அவளை போய் ….தன்னையறியாமல் பல்லை கடித்து நின்ற மருமகளை பார்த்து …” என்னாத்துக்கு இந்த ஆத்திரம் …? யார் மேல ….? ” கை , கால்களை கழுவியபடி ஓரக்கண்ணால் அனுராதாவை பார்த்து கேட்டார் .

” இல்லையே மாமா ….நான் இந்த புள்ளைங்களை ….குளிக்க போகச் சொன்னால் …இங்கேயே எருமை மாதிரி நிற்குதுகளேன்னு ….” இழுத்தபடி திரும்பி பார்த்தவள் எப்போதோ குளிக்க போய்விட்ட தன் குழந்தைகளை உணர்ந்தவள் ….ஹி…ஹி …என்ற அசட்டு சிரிப்பு ஒன்றுடன் அடுத்து மாமனாரின் கேள்விக்கு பயந்து தனது அறைக்குள் ஓடிவிட்டாள் .

——————————

பசேரென்று இருந்த குருத்து வாழையிலையின் மேல் ஆவி பறக்கும் வெண்ணிற இட்லிகளை வைத்த சொர்ணத்தாய் , சுடச்சுட சாம்பாரை மேலே ஊற்றினாள் .ஓரமாக தேங்காய் சட்னி ,தக்காளி சட்னி வைத்தாள் .” சுகர் இல்லைன்னாலும் …வயசான காலத்தில் இது போல் இனிப்பை குறைக்கறது நல்லது சொர்ணா ….” சொன்னபடி    சேமியா கேசரியை இரண்டு விரலால் எடுத்து தேங்காய் சட்னியில் லேசாக தீற்றி வாயில் போட்டுக் கொண்டார் பொன்னுரங்கம் .

” இந்த தடவை எத்தனை மூட்டைடா தேறும் கதிர் ….? ” அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பெரிய மகனிடம் கேட்டார் .





” ஆயிரத்திற்கு மேலேயே தேறுங்கய்யா ….” அவர்கள் அனைவரும் அப்பாவை ஐயா என்றுதான் அழைப்பார்கள் .

” ம் …ம் …நம்ம உழைப்புடா ….” பெருமிதமாய் மீசையை வருடிக்கொண்டவர் ” நம்ம மில்லிலும் இந்த தடவை நல்ல வேலை இருக்கும்டா முருகா …தயாராக இரு ” இரண்டாவது மகனுக்கு சொன்னார் .

” சரிங்கய்யா ….” பணிவாய் சொல்லிவிட்டு மொறு மொறுப்பான உளுந்த வடையில் கவனமானான் முருகேசன் .

அவனருகே நின்று கணவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்த அனுராதாவற்கு , நாவில் நீர் ஊற வைத்துக் கொண்டிருந்தன அந்த பொன்னிற முறு முறு வடைகள் . சை ….கொஞ்சம் முன்னால் அடுப்படிக்குள் போய் பார்க்காமல் போனேனே ….நானகு வடைகளையாவது சுடச்சுட எடுத்து தின்றிருப்பேன் .இப்போது இந்த வீட்டில்  ஆண்கள் சாப்பிட்ட பிறகுதான் பெண்கள் சாப்பிட உட்கார வேண்டும் .இந்த மாதிரி சட்டங்களெல்லாம் எவன்டா போட்டான் ….ஆணுக்கும் …பெண்ணுக்கும் ஒரே வயிறுதானே …ஏக்கத்துடன் எச்சில் விழுங்கியபடி நெய் ஒழுகும் அந்த கேசரியையும் ஓரப்பார்வை பார்த்தாள்

” அம்மா எனக்கு இன்னொரு வடை ….” ரவீந்திரன் வேறு அவளது எரிச்சலை கூட்டினான் .வடை பாத்திரத்திலிருந்து இரண்டு வடைகளை எடுத்து ஒன்றை மகன் இலையில் வைத்துவிட்டு மற்றொன்றை உள்ளங்கையில் மறைத்து வைத்துக் கொண்டு ,நுனிவிரலால் கிள்ளி ,கிள்ளி யாருமறியாமல் வாய்க்குள் போட ஆரம்பித்தாள் .

” இன்னும் கொஞ்சம் கேசரி வை அனு ….” கணவனின் குரலில் மட்டற்ற ஆத்திரம் வந்த்து அ வளுக்கு .பொண்டாட்டி சாப்பிட்டாளான்னு ஒரு பார்வை இல்லை …வார்த்தை இல்லை .முழுதாய்  கால் கிலோ கேசரி , ஆறு இட்லி , நாலு வடை விழுங்கிட்டு திரும்ப கேசரின்னு ஆரம்பத்திலிருந்து வர்றானே …இவனை ….கணவன் குரல் காதில் விழாத்து போல் திரும்பிக் கொண்டாள் .

” சாப்பிடுங்க தம்பி …” வஞ்சனையில்லாமல் அள்ளி அவன் இலையை நிரப்பினாள் பொன்னி .அவள் வைத்த அளவிற்கு கேசரி மிச்சம் இருக்கிறதா …காலியாகிவிட்டதா …என்ற கவலை அனுராதாவிற்கு வந்த்து .

” உள்ளே நிறைய இருக்கிறது அனு ….” பரிமாறி விட்டு நகர்கிற சாக்கில் கொழுந்தனின் மனைவிக்கு தைரியமளித்துவிட்டு போனாள் பொன்னி .கஷ்டப்பட்டு முக சிரிப்பை இருத்தினாள் அனுராதா .

” அம்மாடி …கல்யாணத்துக்கான மெனுவை நீயும் , உன் அத்தையும் சேர்ந்து தயார் பண்ணுங்கம்மா …எந்த ஊர் சமையல்கார்ர் வந்தாலும் உன் கைப்பக்குவத்திற்கு ஈடாகாது .ஆனாலும் வேறு வழியில்லை .கல்யாணம்னா சமையலுக்கு ஆளுங்களைத்தான் போட்டாகனும் .வேணும்னா ஒண்ணு பண்ணலாம் .நீ கூட நின்னு அவுங்களுக்கு பக்குவம் சொல்லிடு ….” மூத்த மருமகளின் சமையலை பாராட்டினார் பொன்னுரங்கம் .பொன்னியின் முகம்  பூவாய் மலர்ந்த்து .

” எத்தனை வேளை சாப்பாடு மாமா …? என்னென்ன வகைகள் வைக்கலாம் அத்தை …? ” அவளின் ஆர்வமான கேள்விக்கு அசுவாரஸ்யமாய் உச் கொட்டினாள் சொர்ணத்தாய் .அவளது ஈடுபாடின்மை அந்த வீட்டு உறுப்பினர்கள் அனைவரிடமும் தெரிந்த்து . பொன்னியை தவிர்த்து   எல்லோருமே இந்தகல்யாண ஏற்பாடு கட்டாயம் தேவையா …என்பது போல் பொன்னுரங்கத்தை பார்த்தனர் .

” நிச்சயமான கல்யாணத்திற்கான ஏற்பாட்டை எத்தனை நாட்கள்தான் தள்ளி போடமுடியும் …? நாளை அமாவாசை .நாளையிலிருந்து ஏற்பாடுகளை ஆரம்பித்துவிடலாம் …”மொன்னுரங்கத்தின் குரலில்  குடும்பத்து ஆட்களோடு கலந்து கொள்வது போன்ற பாவம் இருந்தாலும் …இதுதான் எனும் அதிகாரம்தான் உள்ளூற இருந்த்து .

அப்பாவை எதிர்க்கும் தைரியமற்றோ , விருப்பமற்றோ மகன்கள் சாப்பாட்டை தொடர்ந்தனர் .பெண்கள் பரிமாறலை தொடர்ந்தனர் .

” குருவை எங்கே சொர்ணம்…? ” மீசையை முறுக்கி தனது அதிகாரத்தை காட்டியபடி மனைவியிடம் மூன்றாவது மகனை விசாரித்தார் .

” அவன் சாப்பிட வரலை …” எந்திரமாய் பதிலளித்தாள் சொர்ணத்தாய் .

” ஏன் …? “

” நிச்சயம் ஆன நாளிலிருந்தே அவன் சரியாக சாப்பிடுறதில்லை …சரியாக வீடு தங்குவதில்லை …” கணவன் மேல் குற்றவாளி பார்வை எறிந்தாள் .

” ஓஹோ ….அப்படியா ….” அலட்சிய பாவனை பொன்னுரங்கத்திற்கு .

” அதோ …சித்தப்பா ….” கீர்த்தனா கத்தினாள் .

” குரு சாப்பிட வாய்யா ….” சொர்ணத்தாயின் கத்தலுக்கு ” வேண்டாம் ….” என்ற பதிலுடன் சாப்பாட்டு அறையை கடந்தான் குருபரன் .” குரு ….” என்ற பொன்னியின் கூப்பிடலுக்கு ” பசியில்லை ” என்பதை பதிலாக்கினான் .

” டேய் …நின்னு பதில் சொல்லிட்டு போடா .இத்தனை பேர் கூப்பிடுறோம் , நீ பாட்டுக்கு போனால் என்ன அர்த்தம் …? ” பொன்னுரங்கம் அதட்ட , நடையை நிறுத்தி நின்றான் குருபரன் .
கூர்விழியால் தந்தையின் கண்களை நேராக துளைத்தவன் ” எனக்கு வேலை இருக்கு .சாப்பிட முடியாது ….” ஒவ்வொரு வார்த்தையாக நிதானமாக சொல்லிவிட்டு நடந்துவிட்டான் .

அவரையே …வீட்டு தலைவரையே எதிர்த்து பேசுகிறானா …?  ஒரு நிமிடம் அனைவரும் ஸ்தம்பித்து சாப்பிட மறந்து நிறுத்தி விட , ” ஏன் எல்லோரும் முழிச்சிட்டிருக்கீங்க …? இலையை பார்த்து சாப்பிடுங்க …” அதட்டிவிட்டு தான் சாப்பிட ஆரம்பித்த பொன்னுரங்கம் மனதிற்குள் ” வித்தியாசமானவன்டா மகனே நீ ….” என மகனை மெச்சிக்கொண்டார் .




What’s your Reaction?
+1
32
+1
38
+1
1
+1
0
+1
1
+1
3
+1
3
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!