Entertainment gowri panchangam Sprituality

அஷ்ட வீரட்ட தலங்கள்-5  (திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்)

 




சிவன் சாகசம் புரிந்த அஷ்ட வீரட்ட தலங்கள்-5  

திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்

 

திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவேரி தலங்களில் காவேரி தென்கரை தலங்களில்  அமைந்துள்ள 74ஆவது சிவதலமாகும். பாவங்கள் பல புரிந்து மக்களை எல்லாம் கொடுமை படுத்திய சலந்திரன் என்னும் அசுரனை கொன்ற தலம். இத்தலத்தில் சலந்தரன் சங்கரிக்கப்பட்டான் என்பதும் அவன் மனைவி பிருந்தையைத் திருமால் துளசியாக ஏற்றார் என்பதும் தொன்நம்பிக்கை. இக்கோயிலில் உள்ள இறைவன் வீரட்டானேசுவரர்,இறைவி ஏலவார் குழலம்மை.

திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு யூ வடிவ சாலை வளைவு வரும்;அந்த வளைவைக் கடந்த உடனே விற்குடி என்ற சாலையோர வழிகாட்டி தெரியும்.அந்த வழிகாட்டியின் படி பயணித்தால் ஒரு சிறிய பாலம் தென்படும்;அந்த பாலத்தைக் கடந்ததும்,விற்குடி என்னும் கிராமம் வரும்;அந்த கிராமத்தின் மையத்தில் இந்த வீரட்டானம் அமைந்திருக்கிறது.

 




தல வரலாறு

ஒரு முறை இந்திரன், தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று, உள்ளே செல்ல முடியாதபடி  தடுத்தார்.

கோபமடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர், சிவன் என்பதை அறிந்த இந்திரன், ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான். கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளியை பாற்கடலில் தெளித்தார் சிவன்.

அதில் ஒரு அசுர குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது.

இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரனாதலால் குழந்தைக்கு “ஜலந்தராசூரன்’ என பெயர் வைக்கப்பட்டது.




அவன் பெரியவனானதும், மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும், சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசூரன், “தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்,” என வரம் வாங்கி விட்டான். இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான்.

சிவன் அந்தணர் வேடமிட்டு, அசுரன் முன் வந்து நின்று, தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார். “”இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும்,” என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன், “”என் மனைவியின் கற்பின் திறனால், எனக்கு அழிவு வராது,” என சவால் விட்டான்.

இந்த நேரத்தில், திருமாலை அழைத்த சிவன், ” நீர் ஜலந்தராசூரனைப் போல்  வடிவெடுத்து, அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை”. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது.

இந்நேரத்தில், சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது. இதை அறிந்த பிருந்தை, தன் கணவன் அழிய காரணமாக இருந்த விஷ்ணுவிடம்,

“நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீயும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்,”என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்தது. பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீக்குளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது.

இந்த துளசியால் மாலைதொடுத்து திருமாலுக்கு சாற்ற பித்து விலகுகிறது. அசுரனை அழிக்க காரணமாக இருந்த சக்கரத்தை சிவனிடம் திருமால் கேட்டார்.

அதைப் பெறுவதற்காக ஆயிரம் தாமரைகளால், சிவனை பூஜித்தார். சிவனின் திருவிளையாடலால் இரண்டு பூ குறைந்தது. திருமால் தன் இருகண்களையும் எடுத்து, சிவனை பூஜிக்க மகிழ்ந்த சிவன் சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தார்.

 




கோவில் அமைப்பு

 

கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம் உள்ளன. திருச்சுற்றில் மகாலட்சுமி, சுப்பிரமணியர், மகாலிங்கம், சனீஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன், தட்சிணாமூர்த்தி, நால்வர், சேக்கிழார், பிரதான விநாயகர், சோமாஸ்கந்தர் ஆகியோர் உள்ளனர். பைரவர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும், துர்க்கையம்மன் சன்னிதியும், பள்ளியறையும், நிர்மால்ய அறையும், உக்ராண அறையும், மடைப்பள்ளியும் உள்ளன. பள்ளியறையை அடுத்து ஜலந்தரவதமூர்த்தி சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் முன்பாக இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும், விக்னேஸ்வரரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக கொடி மரமும், பலி பீடமும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் மகாவிஷ்ணு உள்ளார்.மூலவர் சன்னதியின் வலது புறம் ஏழவார்குழலி அம்மை சன்னதி உள்ளது. சன்னதிக்கு முன்பாக பலி பீடமும், நந்தியும் உள்ளன. கோயிலுக்கு முன்பாக குளம் உள்ளது.

திருமந்திரம்

எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழகின்ற
அங்க முதல்வன் அருமறை ஓதிபால்
பொங்கும் சலந்தரன் போர்  செய்ய நீர்மையின் 
அங்கு விரல் ஆழி செய்தானே.


செய்த பாவங்கள் நீக்கி  மக்களை எல்லாம் காக்கும் தெய்வம் என நம்பப்படுக்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!