Entertainment News

சோழனின வியக்க வைக்கும் கட்டடக் கலை -கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் கோவில் பொறியாளர்களே வியக்கும் வண்ணம், அரிய பல தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டு இருக்கிறது. மன்னர் ராஜேந்திரன், தஞ்சைக்குப் பதிலாகப் புதிய தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்தில் உருவாக்கியபோது, அந்த நகரில், தஞ்சைப் பெரிய கோவில் போன்ற மாபெரும் கோவிலைக் கட்ட வேண்டும் என்று விரும்பினார். அவரது எண்ணத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில், அந்த நகரில், 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் மிகப்பெரிய சிவன் கோவில் கட்டும் வேலை, தஞ்சையில் இருந்து அழைத்து வரப்பட்ட கட்டடக்கலை நிபுணர்கள், சிற்பிகள் ஆகியோரால் தொடங்கப்பட்டது.




தலைநகருக்குள் கோவிலைக் கட்டினால், பாதுகாப்பு கெடுபிடிகளைத் தாண்டி, சுற்றுப்புறங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் அங்கு வந்து வழிபடுவது சிரமமாக இருக்கும் என்பதால், தலைநகருக்கு வெளியே கோவிலைக் கட்ட வேண்டும் என்று மன்னர் ராஜேந்திரன் தீர்மானித்தார். எனவே, தலைநகரையொட்டி, வடகிழக்குத் திசையில் கோவில் கட்டப்பட்டது. மன்னர் ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியபோது அவருடன் இருந்து பணியாற்றியவர் என்பதால், மன்னர் ராஜேந்திரன் கட்டிய கோவில், மேலும் பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது.கங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, “கங்கைகொண்ட சோழீச்சரம்” என்ற பெயரைப் பெற்ற அந்தக் கோவிலில் அடங்கி இருக்கும் அதி அற்புதமான சிறப்பு அம்சங்கள், ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டிய பின்னரும் வியக்க வைத்துக் கொண்டு இருக்கின்றன.




அங்கே என்னவெல்லாம் இருக்கின்றன என்பதை முதலில் பார்க்கலாம். அவற்றில் என்ன ஆச்சரியங்கள் அடங்கி இருக்கின்றன என்பது பின்னர் விவரிக்கப்படும். கோவிலின் நுழைவு வாசலாக, கிழக்குப் பகுதியில் 80 அடி உயரம் கொண்ட கம்பீரமான ராஜகோபுரம். (இந்தக் கோபுரம் முற்றாக அழிந்து, அங்கே கோபுரம் இருந்ததற்கு அடையாளமாக, அந்தக் கோபுரத்தின் நிலைக்கால்களான இரண்டு கல் தூண்கள் மட்டும் நின்று கொண்டு இருக்கின்றன). இந்தக் கோபுரத்தை அடுத்து, சற்று தூரத்தில், மூன்று அடுக்குகளைக் கொண்ட இரண்டாவது ராஜகோபுரம். (இந்தக் கோபுரத்தின் மேல் பகுதி அழிந்து, 24.5 மீட்டர் நீளமும், 14 மீட்டர் அகலமும் கொண்ட அடித்தளம் மட்டும் இப்போது காட்சி அளிக்கிறது). இரண்டாவது ராஜகோபுரத்தை அடுத்து, கொடிமரம். அதன் அருகே, பலி பீடம். அதனைத் தாண்டியதும், 6 மீட்டர் உயரம், 5.5 மீட்டர் அகலத்தில் அமைந்த பிரமாண்டமான நந்தி. கருங்கல் துண்டுகளால் உருவாக்கப்பட்டு, வழுவழுப்பான தோற்றத்திற்காக, மேல்பகுதியில் சுதைப் பூச்சு பூசப்பட்ட நந்தி, கம்பீரமாக அமர்ந்து இருக்கிறது.

நந்தியை அடுத்து, 185 மீட்டர் நீளம், 110 மீட்டர் அகலம் கொண்ட செவ்வகப் பகுதியில், கோவில் கட்டுமானத்தின் முழு அமைப்பு. இது தரையில் இருந்து சற்று உயரத்தில் இருக்கிறது. இதன் முதல் பகுதியில், 14 மீட்டர் நீளம், 9 மீட்டர் அகலமான முகமண்டபம். தரையில் இருந்து, கோவிலின் உயர் மட்டத்திற்கு ஏறி வருவதற்காக, முகமண்டபத்தின் வடபுறமும், தென்புறமும் அழகிய படிக்கட்டுகள். முகமண்டபத்தை அடுத்து, 50 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம் என்ற அளவில் அமைந்த மகாமண்டபம். இடது மற்றும் வலதுபுறங்களில் மேடை அமைப்பைக் கொண்ட மகாமண்டபத்தில் அழகான 153 தூண்கள். மகாமண்டபத்திற்கும், கருவறைக்கும் இடையே இடைநாழி என்ற அர்த்தமண்டபம். இங்கு, விமானத்தைத் தாங்கி நிற்கும் வகையில் ஆங்கி எழுத்தான ‘T’ வடிவில் 8 தூண்கள். கருவறையில் உள்ள லிங்கத்திற்கு எதிரே காணப்படும் அர்த்தமண்டபச் சுவரில், சண்டீசப்பதம், அர்ச்சுனனும், ஈசனும் மோதிக்கொள்ளும் காட்சி, மார்க்கண்டேயன் வரலாறு, மீனாட்சி திருக்கல்யாணம், விஷ்ணு அனுக்கிரக மூர்த்தி, கயிலை மலையை ராவணன் தூக்க முயற்சிக்கும் தோற்றம் ஆகியவற்றின் கண்கவர் சிற்பங்கள்.




கோவிலின் வெளிப்பிரகாரத்தில் இருந்து நேரடியாகக் கருவறைக்கு வரும் வகையில், அர்த்தமண்டபத்தின் வடபுறமும், தென்புறமும் படிக்கட்டுகள். அங்கே காவல்காக்கும் பிரமாண்ட துவார பாலகர்கள். தென்புறப் படிக்கட்டு அருகே, கைகளில் தாமரை மலர் ஏந்திய கஜலட்சுமியின் அழகிய சிற்பம். வடபுறப் படிக்கட்டு அருகே, சண்டீசர் வரலாற்றை விளக்கும் சிற்பத் தொகுதி மற்றும் கல்விக் கடவுளான சரசுவதியின் சிற்பம். 8.5 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட சதுரமான கருவறையின் நடுவில், 60 அடி சுற்றளவுடன் ஆவுடை அமைப்பு. அந்த ஆவுடையில் நிலை நிறுத்தப்பட்ட 16½ அடி சுற்றளவும், 13 அடி 4 அங்குலம் உயரமும் கொண்ட, பெருவுடையார் பிரகதீஸ்வரர் என்ற பெயருடைய மாபெரும் லிங்கம். கருவறை, அடுத்தடுத்து அமைந்த இரட்டைச் சுவர்களுடன் காட்சி அளிக்கிறது. முதலாவது சுவருக்கும், இரண்டாவது சுவருக்கும் இடையே 10 அடி அகல இடைவெளி, சாந்தாரம் எனப்படுகிறது. இதன் வழியே, கருவறையைச் சுற்றி வரமுடியும்.

இந்த இரட்டைச் சுவர்கள் மீதுதான் விமானம் நிற்கிறது. விமானத்தின் நான்கு பக்கச் சுவர்களிலும், உச்சிப்பகுதி வரை அழகிய சிற்பங்கள். விமானத்தின் மேல்கூரை போல அமைந்து இருக்கிறது, 34 அடி குறுக்களவு கொண்ட வட்ட வடிவக் கல். கீழே இருந்து மேலே வரும் சுவர்களின் இறுதிப் பகுதி, இந்தக் கல்லுடன் இணைந்து, தாமரை மலர் போன்ற தோற்றத்தைத் தருகிறது. வட்ட வடிவக் கல்லின் மீது, பல துண்டுக் கற்களால் உருவாக்கப்பட்ட கிரீடம். கிரீடத்தின் நான்கு திசைகளிலும், திசைக்கு ஒன்றாக நான்கு நந்திகள். கிரீடத்தின் உச்சியில் 15 அடி உயர அழகிய கலசம். லிங்கம் போன்ற தோற்றத்தை அளிக்க வேண்டும் என்பதற்காக, கீழ்ப்பகுதியில் சதுரமாகவும், நடுவே எண் கோண வடிவிலும், மேல்பகுதியில் உருளை வடிவிலும் கட்டப்பட்ட விமான வெளிப்புறக் கட்டுமானம்.




வெளியே இருந்து பார்க்கும்போது, 9 அடுக்குகளைக் கொண்டதாகக் காட்சி அளிக்கும் விமானம், உள்புறம் 2 அடுக்குகளை மட்டுமே கொண்டு இருக்கும் அதிசயம். மொட்டைக் கோபுரமாக நிற்கும் 2-வது ராஜகோபுரத்தை இணைக்கும் வகையில், கோவில் கட்டுமானத்தைச் சுற்றி, 4 அடி அகலத்தில் மதில் சுவர். இந்தச் சுவரையொட்டி, கோவிலின் நான்கு புறங்களிலும், இரட்டை அடுக்குகளைக் கொண்ட திருச்சுற்று மாளிகை. அந்த மாளிகையில் 8 திசைகளுக்கு ஏற்ற மூர்த்திகளுடன் 32 பரிவார ஆலயங்கள். (இப்போது அனைத்து பரிவார ஆலயங்களும், திருச்சுற்று மாளிகையின் பெரும்பகுதியும் அழிந்துவிட்டன. திருச்சுற்று மாளிகை இருந்ததற்கு அடையாளமாக, அதன் ஒரு சிறிய பகுதி மட்டும் கோவிலின் வடபகுதியில் காட்சி அளிக்கிறது) வெளிப்பிரகாரத்தில், தென்புறம் இரண்டு சிறிய கோவில்கள். முதலாவது சோமாஸ்கந்தருக்கு உரியது.

இரண்டாவது, தென்கயிலாயம். (இவற்றில் தென்கயிலாயம் மட்டுமே இப்போது உள்ளது). வெளிப்பிரகாரத்தின் வடபகுதியில், வடகயிலாயம் என்ற அம்மன் ஆலயம். மகாமண்டபத்தையொட்டி, வடதிசையில் 11.2 மீட்டர் நீளமும், 6 மீட்டர் அகலமும் கொண்ட சண்டீசுவரர் ஆலயம். அதே வடபகுதியில், கொற்றவைக்கு உரிய கோவிலாக மகிஷா சுரமர்த்தினி ஆலயம். கோவில் வளாகத்தின் முன்பகுதி வலது ஓரம், 8 மீட்டர் சுற்றளவுடன் கிணறு. அந்தக் கிணற்றில் இருந்து 8 மீட்டர் தொலைவில், படிக்கட்டு அமைப்புகளைக் கொண்ட சிம்மக் கிணறு. கோவிலுக்குத் தேவையான தண்ணீரை, படிக்கட்டுகள் வழியாகச் சென்று எடுத்து வரும் வகையில் ஏற்பாடு. கிணறு, சிம்மக் கிணறு ஆகிய இரண்டுக்கும் இடையே 8 மீட்டர் நீள சுரங்கப் பாதை. கோவிலைச் சுற்றிலும் அகழி அமைப்பு. இந்த அகழிக்குத் தேவையான தண்ணீர், சோழகங்கம் ஏரியில் இருந்து வரும் வகையில், கோவிலுக்கு வெளியே தென்மேற்கில் ஒரு கால்வாய் அமைப்பு. கோவிலின் மூன்று பக்கச் சுவர்களிலும், உலகமே வியக்கும் வகையிலான அதி அற்புதச் சிற்பங்கள், 19 கோஷ்டங்களில் காட்சி அளிக்கின்றன. கங்கைகொண்ட சோழீச்சரம் கோவிலின் சுற்றுப்புறங்களில் மேலும் சில சிறிய கோவில்களும் கட்டப்பட்டன. திசைக்கு ஒன்றாக நான்கு புறமும், நான்கு காளி கோவில்கள் எழுப்பப்பட்டன.




தலைநகரைக் காவல் காக்கும் வகையில் இவை உள்ளன. கோவில் வளாகத்திற்கு வெளியே, தென்மேற்கே கனக விநாயகர் அல்லது கணக்கு விநாயகர் என்ற சிறிய கோவில் கட்டப்பட்டது. (மன்னர் ராஜேந்திரன், கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டபோது, கோவில் கட்டுமானச் செலவு விவரங்கள் தொடர்பான ஐயப்பாட்டை இந்த விநாயகர் தீர்த்து வைத்தார் என்ற ஒரு கதையும் அந்தப் பகுதியில் கூறப்படுகிறது). இந்தக் கணக்கு விநாயகரின் உருவ அமைப்பு தமிழகத்திற்கானது போலத் தெரியவில்லை. மன்னர் ராஜேந்திரன், வேற்று நாட்டு படையெடுப்பு வெற்றியின்போது அங்கே இருந்து கொண்டுவரப்பட்ட சிலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரம் கோவில், ஏதோ ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், சாதாரணமாக உருவாக்கப்பட்டது அல்ல. அந்தக் கோவில், தற்போதைய பொறியாளர்களே வியக்கும் வண்ணம், அரிய பல தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டு இருக்கிறது. மேலோட்டமாக கோவிலைப் பார்க்கும்போது புலப்படாத அந்த ஆச்சரிய தொழில்நுட்பங்களும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கட்டடக்கலை நிபுணர்களின் வியத்தகு ஆற்றலும், கோவில் கட்டுமானத்திற்குள் அடங்கிக் கிடக்கின்றன.




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!