Serial Stories

எங்கே நானென்று தேடட்டும் என்னை 9

தேடல் -9

       “என்ன பாலன்? என்னாச்சு”

“ஸார்! லாவண்யா மேம் சாமுவேல் ஸாரை கைநீட்டி அடிச்சுட்டாங்க ஸார்”

“வ்வாட் “

“உங்களுக்கு ஒரு வீடியோ அனுப்பியிருக்கேன் பாருங்க”

சக்கரம் சுழன்றோடி நின்று படத்தைக்காட்டியது.

லாவண்யா  நாற்காலியில் கால் மேல் போட்டபடி காலாட்டிய வண்ணம் அமர்ந்திருக்கிறாள்.

சாமுவேல் அனைவருக்கும் டீ கப்புகளை விநியோகித்தபடியே வருகிறார்.

டேபிளுக்கு குறுக்காக பாதை நடுவே அமர்ந்திருக்கும் லாவண்யாவின் கால் அவருடைய முழங்காலில் இடிக்க அவர் தடுமாற கையிலிருந்த கப் அவள் மீது கவிழ்ந்து விட விருட்டென எழுந்த லாவண்யா அவர் கன்னத்தில் கையை இறக்குவதும். ‘ஹௌ டேர் யூ? ‘ என அலறுவதும் க்ளியராக இருந்தது.

சாமுவேல் விஷ்ணுப்ரியனின் நண்பனுடைய தந்தை. ராணுவ வீரனான மகனை கார்கில் யுத்தத்தில் பலி கொடுத்தவர். வெறுமனே உதவுகிறேன் என்று சொன்னால் அவர் தன்மானத்துக்கு அடி விழுமே என்று நினைத்தும் மேலும் மகனையே எண்ணியெண்ணி  மனம் கலங்கி விடுவாரே என்றும் தான் அவருக்கு அலுவலகத்தில் சின்னசின்ன வேலை செய்ய வைத்திருந்தான்.

உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவர் மகன் இறந்த செய்தி வந்த கையோடு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையை பெற்றுப் போட்டுவிட்டு போய் சேர்ந்து விட்டாள் மருமகள். அந்தக் குழந்தையையும் இந்த முதியவர்களே வளர்க்கின்றனர்.

அவரைப்போய்….

விஷ்ணு கொதித்துப்போனான்.




“பாலா! உன் போனை ஸ்பீக்கரில் போடு.  வீடியோ காலிங் வா!லாவண்யாவைக் கூப்பிடு “

“ஹாய் அத்தான்! “

“லாவண்யா என்ன செய்றே ஆபிசுலே? “

“நீங்க வந்தாத்தான் உங்களை கவனிக்கிற வேலை. நீங்க வரும் வரை இந்த ஆபிசுல யாரும் ஓபியடிக்காம வாங்கற சம்பளத்துக்கு வேலை செய்றாங்களான்னு செக் பண்ணிட்டு இருக்கேன் த்தான்! “

“ச்சீ! வாயை மூடு! சாமுவேல் சாரைக்  கை நீட்டுனியா”

“ஓ…அதுவா! ஆமாம்! இங்க பாருங்க! என் ட்ரஸ்ஸை பாழாக்கிட்டார். இந்த ஓல்டு மேனையெல்லாம் தூக்கியெறிஞ்சுட்டு இளமைப்பட்டாளமா வேலைக்கு வையுங்க அத்தான். அதான் நல்லது “

“ஹ்ம்! இப்போ நீ என்ன பண்றே ..சாமுவேல் சார் கிட்ட முதலில் மன்னிப்பு கேட்கிறே”

“என்ன? நானா??  நான் ஏன் கேட்கனும். அவர்தான் என்கிட்டே கேட்கனும். “

“லாவண்யா! டூ வாட் ஐ ஸே …டாமிட்! “

“முடியாது அத்தான் “

“என் கோபத்தை அதிகப்படுத்தாதே! சொன்னதை செய்! “

“முடியாது! “

“லாவண்யா! நான் அங்கேஇல்லைன்னு நினைச்சு விளையாடாதே! என் கோபத்தை பத்தி தெரியுமா? தெரியாதா?  சாமுவேல் ஸார்கிட்டே இப்போ நீ நிதானமா மனப்பூர்வமா ‘நான் செய்தது தப்பு. என்னை மன்னிச்சுடுங்கன்னு’ ‘சொல்லனும். இல்லைன்னா நாளைக்கே  அங்கே வருவேன். வந்தபின் இதைவிட மோசமான நிகழ்வுகள் நடக்கும். இது விஷ்ணுப்ரியன் பூபதியின் ஆர்டர்.கமான்! க்விக்! “

“லாவண்யாவுக்கு அந்தக்குரலும் அதிலிருந்த அழுத்தமும் திகிலூட்டியது.

‘இப்போ கேட்கலைன்னா ஏதாவது வச்சி செய்வான். எல்லாமும் இந்தக் கிழச் சனியனால் வந்தது. ‘கறுவிக்கொண்டே ஏறிட்டு பார்த்தாள்.

அலுவலகம் மொத்தமுமே அவளைப்பார்த்தது பார்த்தபடியிருக்க விழிகளையோட்டினாள்.

       சாமுவேல் அவருடைய இருக்கையில்  தன் இரு கைகளுக்குள்ளும்  முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார்.

பாலன் அவரை நெருங்கி தோளைத்தொட அவர் நிமிர்ந்தார். முகம் இருண்டு போயிருந்தது.

லாவண்யா அவரெதிரில் வந்து நிற்க அவர் இரண்டடி பின்னே நகர்ந்தார்.

“சாமுவேல் ஸார்! நான் செய்தது தப்பு. மன்னிச்சிடுங்க “என்றாள் நிமிர்வுடன்.

அவரோ மிரண்டு போய் பார்த்தார்.

“ஸார்! சாமுவேல் ஸார்! இங்கே ….இங்கே பாருங்க. நான் விஷ்ணு  பேசுறேன். எனக்காக நடந்ததை மன்னிச்சு மறந்துடுங்க “என்றபடி கை கூப்பினான்.




“அய்யோ ஸார்! இதென்ன நீங்க என்கிட்டே மன்னிப்பு கேட்டுகிட்டு”.

“ஸாரி ஸார்!  அப்புறம் நாளைமுதல் ஒருவாரம் உங்க வேலையில் சின்ன மாற்றம் வரும் அதை நாளைக்கு பாலன் சொல்வார்.

அப்புறம் லாவண்யா! நீ நாளை முதல் ஒரு வாரம் நம்ம ஸ்டாஃப் களுக்கு டீ ஸ்நாக்ஸ் கொடுக்கனும் ரெண்டு வேளையும். சாமுவேல் ஸார் பார்த்திட்டிருந்த வேலைகளை நீதான் நாளை முதல் செய்யனும். திஸ் ஈஸ் மை ஆர்டர்!

ஆபிசுக்கே வராமல் இருந்திடலாம்னு நினைக்காதே! பனிஷ்மெண்ட்  இன்னும் தீவிரமாகும். பாலன் எனக்கு வீடியோவோட அப்டேட் உடனுக்குடனே  வரணும்.ஓகே… அடுத்த வாரம் வந்திடுவேன். பை! “

லாவண்யா பேயடித்தாற் போல நின்று கொண்டிருந்தாள். உள்ளம் செங்கல் சூளையாய் கனன்று கொண்டிருந்தது.

வீட்டிலும் நிலைமை சரியில்லை. அம்மா வீட்டு வேலைகளில் உதவியாயிருந்தேயாக வேண்டும் என்று கூறிவிட்டான்.

ஏதோ ரஞ்சனி வழக்கம்போலவேயிருந்தாலும் முன்பு போல கூப்பிட்டக் குரலுக்கு வேலைகளை ஏவ முடிவதில்லை.

அதேபோல் தன் அனுமதியின்றி ஒரு பைசா கூடத் தரக்கூடாதென மானேஜருக்கும் சொன்னதோடு தாயிடமும் வாக்கு பெற்றுக்கொண்டான்.

‘ஆபிசில் ஏதோ பொழுதை போக்கலாம் என்று வந்ததற்கு…. அதுவும் ஏதோ ஒரு கிழட்டு நாயை அடித்ததற்கு இந்த ஜமின் வாரிசு சேவை செய்யனுமா? இந்த விஷ்ணுவுக்கு எத்தனை திமிர்.? இவனை  இதற்காகவே கல்யாணம் பண்ணிக்கிட்டு என் காலில் போட்டு மிதிக்கலை என் பேரு லாவண்யா தேவி இல்லை’.

லாவண்யா வன்மத்தை நெஞ்சத்தில் தேக்கினாள்.

        சிவகாமியின் நிலைமையும் சொல்லும் படியாக இல்லை. இப்போதெல்லாம் ரஞ்சனியை வேலை வாங்வே யோசனையாக இருந்தது.

முன்பெல்லாம் தண்ணீர் வேண்டுமென்றாலும்

“ஏ! ரஞ்சனி! “என்று கூக்குரலிட்டு தனக்கு வேண்டியதை செய்து தரும்படி ஏவுவாள்.

இப்போதெல்லாம் பறிமாறக் கூட வருவதில்லை.

புருஷனுக்கு பறிமாறிவிட்டு நகர்ந்து விடுகிறாள். பேசுவதும் இல்லை. எல்லாம் இந்த விஷ்ணுவால் வந்தது. மனம் முழுக்க எரிச்சல் பரவியது.

சிவகாமியும் லேசுபட்டாவள் அல்ல. தம்பி வீட்டில் நடக்கும் விசேஷங்களில் தம்பி தன் மனைவிக்கோ மகளுக்கோ நகை வாங்கினால் இவரும் தன் மகளுக்கும் தனக்குமாக கேட்டு வாங்கிக் கொள்வார்.

சொத்து வாங்கினாலும் தம்பியிடம் தனியே கண்ணை கசக்கி விட்டுக்கொண்டு தனக்காக பாத்யதையோ பங்கோ ஏன் இன்னுமொரு சொத்தோ கூட வாங்கி வசப்படுத்திக் கொள்வார்.

இதெல்லாம் தெரிந்தும் ரஞ்சனி பெருந்தன்மையாக நீக்கு போக்காக நடந்து கொள்வார்.




என்ன நடந்து என்ன?

இளையவன் சத்யா இறந்த செய்தி வந்ததும் அவன் உடல் கூடக் கிடைக்கவில்லை என்பதற்காக ரஞ்சனியை அத்தனை பேச்சு பேசினார்.

ரஞ்சனியே துக்கத்தில் நிற்க அவளை துளைப்பது போல் பேசியதில் வீரேந்தருக்கே உடன்பாடில்லை தான்.

ஆனாலும் மௌனமாய்த்தானிருந்தார்.

ரஞ்சனி அப்போது அமைதியானவள் தான். இப்போது இன்னும் தன்னை கூட்டுக்குள் வைத்துக் கொண்டாள்.

விஷ்ணு சொன்னது போலவே நாளும் கிழமைக்குக் கூட எதையும் செய்யாமல் இழுத்துப்பிடித்தாள்.

அவளுக்கும் தெரியும். சிவகாமியிடம் ஆஸ்தி பாஸ்தி கணிசமாகவே ஈருக்கிறதென்று.!ஆனாலும் தம்பியிடம் எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறப்பது மட்டுமல்ல விஷ்ணுவுக்கு லாவண்யாவை முடி போடவும் விரும்பி தம்பியிடம் ஓதிக் கொண்டேதானிருந்தாள்.

ஆனாலும் முடியை போட வேண்டியவன் தான் சிம்ம சொப்பனமாயிருக்கிறானே!

இதில்

பெண்ணின் மீதும் சிவகாமிக்கு கழுத்து மட்டும் வருத்தம்

‘என்ன பெண்ணொ? ஒவ்வொருத்தி வெட்டிகிட்டு வாடின்னா கட்டிக்கிட்டே வராளுங்க. இந்நேரத்துக்கு அவனை முந்தானையிலே முடிஞ்சிருக்க வேணாமா? இது ஒரு தண்டம்! ‘

என்று தான் பெற்ற மகளையும் வாணலியின்றியே வறுத்தெடுத்தாள்.

அலுவலகத்திலிருந்து திரும்பியவளும் நடந்ததை சொல்ல இருவருமாய் புலம்ப

சம்பந்த பட்டவனோ வேறு ஒரு பிரச்சினையில் டாக்டர் அஷோக் திரிபாதி முன்னே விழித்துக்கொண்டிருந்தான்.

(தேடல் தொடரும்).




What’s your Reaction?
+1
12
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!