Serial Stories

எங்கே நானென்று தேடட்டும் என்னை 11

தேடல் –11

அந்த மானின் போர்ட் ப்ளேயரிலிருந்து ஒருமணி நேரம் காரில் பயணித்தப் பின்பு  கண்ணில் பட்டது அந்த ரிசார்ட். ஆங்காங்கே தனித்தனியே குடில்களாய்….சிட்அவுட்டும் பால்கனியுமாய்  ஹனிமூன் கப்பிள்களுக்கு த் தோதாய் ஏகாந்தமாய்…

“மை நெஸ்ட்” ரிசார்ட்ஸ்ஸின் பக்கவாட்டு பகுதியைத் தாண்டி சிறிது தூரம் நடந்ததுமே  அந்த கேண்டில் லைட் டின்னருக்காக ஏற்பாடு செய்திருந்த இடம் வந்தது. சுற்றிலும் சாம்பல் பூத்த இருட்டு .இதமான நிலா வெளிச்சம் கடலலைகளின் தாலாட்டு எதிரே சற்றே தூரத்தில்  கடற்கரையில் வெள்ளி த் துகளாய்  மினுக்கும் நுரைப்பூக்களை அள்ளிவரும் அலைகள். மணற்பரப்பில் மேஜையும் எதிரெதிரில் நாற்காலிகளும் போடப்பட்டு நீள பெஞ்சில் உணவு பாத்திரங்களும் பறிமாறுவதற்கேதுவாகஅமைந்திருந்தன.  நான்கைந்து மெழுகுவர்த்திகளும் அந்த இடத்தை மாயாலோகமாக அடித்திருந்தது.

வைன் நிறத்தில் நீள கவுன் அவள் உடலைத் தழுவிக் கொண்டிருந்தது. கூந்தலை வாரி புதுவிதமாக முடிந்து சின்ன சின்ன சலங்கை முத்துக்கள் கோர்த்த ஊசிகளை செருகியிருந்தாள். காதிலும் கழுத்திலும் கற்கள் பதித்த அணிகளை யும் தோதாக கல் வளைகளையும் அணிந்து கொண்டு கண்ணை உறுத்தாத லேசான ஒப்பனை…

“மலர்!”

“…….”

“ஹேய்! யூ லுக் கார்ஜியஸ்.!டின்னர் கான்ஸல் பண்ணிட்டு திரும்ப ரூம்க்கே போயிடலாமா…”

“ச்ச்சீ..தேவ்! வரவர கெட்ட பையனாயிட்டீங்க…”

அவளின் சிணுங்கலுடனான ஹஸ்கி வாய்சில் தேவா வசமிழந்தான்.

சின்னசின்ன  சில்மிஷங்களுடனும் சிலிர்ப்புகளுடனும் லேசான. இதழ் உரசல்களுடனும் டின்னரை முடித்துக்கொண்டு  அறைக்கு திரும்பிய போது தம்பதியர்  எதிர்பாரா அதிர்ச்சி.

மெத்தையின் நடுவே  ஆட்டினும் அம்புமாய் பூக்களின் அலங்காரம்.!  கூடவே நாசியில் தவழ்ந்தது சுகந்தமான மணம்….கிறங்க அடித்தது.




தேவாவும் மலரும் தன் வயமிழக்க ஆரம்பித்தனர்….

“மலர் ….மலர்! “

வார்த்தை அப்படியே அந்தரத்தில் நின்றது.

அந்தப் படுக்கையில் படுத்திருந்த பேஷண்ட்டின் சார்ஜ்ஷீட்டில் எதையோ எழுத வந்த

அந்த செவிலிப் பெண் அவசரமாக பச்சை பட்டனை அழுத்தினார்.

அடுத்த பத்தாவது நிமிடம் பரபரப்பானது அந்த அறை!

                       *******

 .      ராதாநகர் கடற்கரை..!

“நாமும் கடலில் குளிப்போமா?”

“ஊஹும் எனக்கு பயம் நீங்க போய்க்குளிங்க..”

“ஹேய்…இங்கபாரு எல்லோரும் அவனவன் ஜோடியோட ஜலக்ரீடை பண்றதை… ஹனிமூனுக்கு வந்திட்டு தனியாவா….ச்சேச்சே! சான்சேயில்லை ..நான் தானிருக்கேனில்லை உன்னை விட்டிடிடுவேனா…கைய புடிச்சுக்கோ “

அவள் முட்டியை விட்டிறங்கினாற் போன்ற ஸ்கர்ட்டும் கையை நன்றாகத் தூக்கினால் இடை தெரியும் எனும்படியான நாகரிகமான டாப்பும் அணிந்திருக்க.  அலையடிக்கும் போதெல்லாம் அவளுடைய டாப் விலகி இடையை காட்ட தேவ்வின் விரல்கள் வெற்றிடையை இறுக்கிப் பிடித்து  தன்னுடலோடு இணைத்து இறுக்கின.

“தேவ்!  தேவ்! பயமாருக்கு ….பயமாருக்கு “

தேவா வாய்விட்டு சிரித்தான்.

 படுக்கையிலிருந்தவன் சிரிக்கத்துவங்கும் போதே மருத்துவர்கள் வந்து விட்டிருந்தனர்.

விழிகள் இன்னும் இமைக்கதவை திறந்த பாடில்லை இதழ்களோ ஏதேதோ பேசின…

“தேங்க் யூ டி மை டியர் பெண்டாட்டி! என்னை அப்பாவாக்கி என் லிட்டில் ஏஞ்சலை கொடுத்திட்டியே….தேங்க் யூ டி செல்லம்! “

“………”




“அப்படியே உன்னைப்போலவே இருக்கிறா…ஜெராக்ஸ் மாதிரி.”

அவள் நெற்றியில் முத்தமிட்டான் தேவா…

படுத்திருந்தவன் முகமெல்லாம் கர்வம் பூத்துக் கிடந்தது.

“அய்யோ! சொல்றதைக் கேளு மலர். குழந்தையோடு குதி…”

“ஆ! ஸாரிடா…ஸாரிடா… அம்மாவை.படுத்தாம சமர்த்தாயிருங்க.அப்பா…அப்பா பிழைச்சிருந்தா வருவேண்டா! மலர் ! .ஸாரிடா… போயிடு போயிடு. கார் வெடிச்சிடும் வேகமா ஓடிடு…”

அவன் கைகள் யாரையோ தள்ளி விடுவது போல் காற்றில் அசைந்தது.

தேவா  தலையை உலுக்கிக் கொண்டான். டாக்டர் அவன் தோளோடு அழுத்திப்பிடித்தார். டாக்டர்களின் முகம் பெருமிதத்தில் ஒளிர்ந்தது.

பின்னே கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கும் மேலாய் கோமாவில் கிடந்தவன் இன்று  பழைய நினைவுகளோடு வாய் திறந்து பேசுவதைக் கேட்பதே சாதனை தானே….

“மது! நீ பட்ட பாட்டுக்கு பலன் கிடைச்சுடுச்சும்மா…. இனி பயமில்லை. ஆனா அதே சமயம் பேஷண்ட்டை கஷ்டப்படுத்திடக்கூடாது. “

டாக்டர் ஜோசப் சந்தோஷமாக சொன்னார்.

டாக்டர் கூப்பர் தன் நீலநிற விழிகளை மூடி கைகளால் சிலுவைக்குறியிட்டுக் கொண்டார்.

டாக்டர் ஜோசப்பின் கைகளையும்  டாக்டர் ஆனந்த நம்பியின் கைகளையும் குலுக்கினார்.

 மதுமதி உணர்வுப்பெருக்கில் கண்ணீர் விட விஷ்ணு அவளைத் தன்மீது லேசாய் சாய்த்து கொண்டான். மருத்துவர்கள் ஏதோ கூடிப் பேச. மதுமதியை மெதுவே நகர்த்தி அங்கிருந்த இருக்கையில் அமர வைத்து தோளைத் தட்டிக் கொடுத்தான்.

அவனுக்குமே கண்கலங்கி விட்டது…

கடவுளே…..

இந்த பத்துப் பதினைந்து நாளாய் எப்பேர்ப்பட்ட வேதனைகள்.

ஒரு ஆண்மகனான எனக்கே இப்படியென்றால்…. ஒன்றா இரண்டா நாலு வருடங்களாய் இவள் அனுபவித்தது…எப்பேர்ப்பட்ட கொடுமை!

கையில் குழந்தை யோடு உதவிக்கு ஆளுமின்றி உறவுகளுமின்றி பணமுமின்றி விஷ்ணுவுக்கு உள்ளுக்குள் எதுவோ உருகி ஓடியது.

அன்றைக்கு ….

அஷோக் ஹாஸ்பிடலில் வந்து அந்த மனிதர் அரவிந்தன் சந்தித்துப் பேசி விட்டுப் போனபிறகு  எத்தனை எத்தனை போன்கால்கள்!

 ஏற்பாடுகள் !

மிஸ்டர் அரவிந்தன் விஷ்ணுவிடம் காலில் விழாத குறையாகத்தான் மன்னிப்பு கேட்டார்.

ஆம் அவர் அலுவலகம் செய்து வைத்த குளறுபடி அப்படி.!

இதுவரை ஒரு சின்னத் தவறு கூட நடந்ததில்லை.

இதுவோ இமாலயத் தவறு. அதனால்தான் மனிதர் பதறியடித்துக்கொண்டு ஓடியே வந்துவிட்டார்.

அரவிந்தனின் செயலால் எத்தனை குழப்பங்கள்! உளைச்சல்கள்!  தவறான முன்னெடுப்புகள்!

வேறொருவராய் இருந்தால் இந்நேரம் விஷ்ணு சிவதாண்டவம் ஆடியிருப்பான்.இதுவரை அவர்கள் நிறுவனம் நூற்றுக்கு நூறு சரியான நம்பகமானத் தகவல்களையே தந்திருக்கிறார்கள்.

இதுதான் முதல்முறை .எங்கே எப்படி நிகழ்ந்ததோ இவனுக்கு வரவேண்டிய தகவல்கள் தவறுதலாய் மாறி வேறொரு மதுமதியின் தகவல்கள் இவனுடைய மெயிலுக்கு வந்து விட்டன.

ஆம் விஷ்ணு சத்யா குடும்பம்  பற்றிய தகவல்களுக்காக தனக்கு எப்போதுமே துப்பறிந்து ரிப்போர்ட் தரும் பழக்கமான ஏஜன்சியை நாடிக் கேட்க அங்கே நடந்த பெயர்க்குழப்பத்தில் எல்லாமே தாறுமாறாகி விட்டது.

இப்போது நேரில் வந்து நூறு முறை மன்னிப்பு கேட்டு வாய்வழியாகவும் விவரம் கூறிவிட்டு அவனுடைய மெயிலுக்கும் டிடெயில்ஸ் அனுப்பிவிட்டார்.

அதைப்படித்ததுமே தலைமீது கை வைத்துக் கொண்டான் விஷ்ணு.  கருமேகங்கள் கலைந்த வானம் போல எல்லாக் குழப்பங்களும் விலகி விட. மதுமதியின் மீது சொல்லிலடங்காத உணர்வு எழுந்தது.




அம்மா அப்பா சகோதரி என்று எல்லோரையும் ஒரே சமயத்தில் விபத்தில் பறி கொடுத்து நிர்க்கதியாய் த் தெருவில் நின்ற சின்ன பெண்ணை நினைத்த போது தொண்டையை அடைத்தது.

தானும் தான் என்னவெல்லாம் பேசினோம்.? கஷ்டம் கொடுத்தோம்.? ஓட ஓட விரட்டினோமே! அவன்மீதே அவனுக்கு அசூயையெழுந்தது.

அவள் கடன் வாங்கியிருந்தவரிடம் அவளுக்கு நிர்ப்பந்தம் தரும்படி செய்ய வைத்ததும் அவள் மூன்று மாதம் டைம் கேட்டு அழுததும். அதையெல்லாம் வீடியோ மூலம் பார்த்து ரசித்ததும் இப்போது நினைக்கையில் தன்மீதே அவனுக்கு அசங்கியம் எழுந்தது.

அன்றைக்கு

வீட்டில் இவள் யாருமில்லாத நாளாய்த் தேர்ந்தெடுத்து ஆட்களை அனுப்பி மிரட்டியதும். அவளோ பூர்விக வீட்டையும் நிலத்தையும் விற்றுத் தருவதாகக் கெஞ்சியதும். இப்போதைக்கு நகையோ பணமோ கேட்டு நெருக்க அவள் கையில் இரண்டு தாலிச்சரடுகளை மட்டுமே காட்டி இதைத் தவிர தங்கமென்று தன்னிடம் எதுவுமேயில்லை யென மடிந்து உட்கார்ந்து அழத் துவங்க அதற்கு மேல் அவள் கண்ணீரை காண மனம் ஒப்பாமல் விஷ்ணு அவர்களைத் திரும்பும் படி கட்டளையிட்டான்.

கொஞ்சம் யோசித்திருந்திருக்கலாம். அவளை இத்தனைக் கஷ்டப்படுத்தியவன் ஹாஸ்பிடலில் இருப்பது யார் என்று விசாரித்து தெரிந்து கொண்டிருந்தால் எத்தனையோ விஷயங்கள் எப்போதோ லகு வாகி முடிவுக்கு வந்திருக்கும்.

ஆனால்

விதி தான் எழுதுவதை விரைவாகவும் மோசமாகவும் எழுதிக் கொண்டிருந்ததே!

இவனுடைய ரிப்போர்ட்டில் இந்த மதுமதி குறித்த பெயரும் குடும்ப உறுப்பினர் பெயர்களுமிருக்க மற்ற விவரங்கள் வேறொரு மதுமதியைப் பற்றியது. இடையிடையே இவளைப்பற்றிய சில விவரங்கள் என்று குழப்பமான ரிப்போர்ட்.

அதன்படி விஷ்ணுவும்

கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல அவள் மோசமானவள்,தன் தம்பியின் சாவுக்கு காரணமானவள்,சிறிதும் மனசாட்சியேயின்றி மற்றொருவனை மணந்தவள் என்று சாயத்துக்கு மேல் சாயம் பூசி அவளை கேவலமானமானவளாகவே உருவகித்துக் கொண்டு அவளை மனதாலும் உடலாலும் கொடுமை படுத்துவதே தெரியாதபடி கொடூரமாய் நடந்து கொண்டான்.

அதில் அவள் மேலிருந்த அவனுடைய ரகசியமாய் முகிழ்த்த ப்ரியம் கூட அமிழ்ந்து  போய் விட்டது.

ஒருவேளை அதுகூட இதெல்லாவற்றிற்கும்  மூலகாரணமாக இருந்திருக்கலாம்.

அவனுக்கே அவன் மனம் புரியவில்லை. ஏதோ ஒன்றைத்தேடி தவறாக ஓடிக் கொண்டிருந்தான்.

 அவள்தான் தன் குடும்பத்தைக் கெடுத்தவள் என்று வன்மைத்தை வளர்த்துக் கொள்ள அவளோ தன் குடும்பத்துக்காகவே மெழுகு போல உருகியிருக்கிறாள் உடலை தேய்த்து வருத்திக் கொண்டிருக்கிறாள். வயசுக்கேற்ற எந்த ஆசாபாசமுமின்றி போராட்டம்  நடத்திக் கொண்டிருந்திருக்கிறாள் ஒரு தவ யோகினியைப் போல! . கடைசி காசு வரை தங்களுக்காகவே செலவு செய்திருக்கிறாள்.

விஷ்ணுவுக்கு வாய்விட்டு அழவேண்டும்  போலிருந்தது.

அவள் கையைப்பிடித்துக் கொண்டு வெகு நேரம் அமர்ந்திருந்தான். மனசார பாவமன்னிப்பு கேட்டானோ…. அது இந்த விஷ்ணுவுக்கும் அந்த விஷ்ணு பரமாத்மாவுக்குமே வெளிச்சம்

ஆனால்

ஒரு முடிவுக்கு வந்திருந்தான் ‘இனி இவளை எப்போதுமே கலங்க வைப்பதில்லையென்று. அவள் தன் தம்பி மனைவிக்கு தங்கை என்று தெரிந்ததுமே அந்த ரகசியப் ப்ரேமை எல்லாவற்றையுமே உதறித் தள்ளிவிட்டு பிரம்மாண்டமாய் பூத்து இதழ்களை விரித்தது.

கிருஷ்ண மூர்த்திக்கு போன் போட்டு விசாரித்தான். விபத்தையும் நடந்த விஷயங்களையும் கேட்டறிந்தான். அரவிந்தனின் சமர்ப்பறிக்கை ஒத்து போனது.

தேவாவுக்காக மதுமதி பட்ட பாட்டை அவர் விவரித்தார். வாராவாரம் குழந்தையோடு ஹாஸ்பிடலுக்கு ரன் அடித்த தாயில்லாக் குழந்தைக்காக பட்ட அவதியை கண்ணெதிரே உறவுகளை இழந்த பரிதாபத்தை சொல்ல சொல்ல குருதி வடிந்தது.

பின்பு அஷோக்கிடம் ஓடினான். சேலம் அடைக்கலம் ஹாஸ்பிடல் பற்றி கேட்டுவிட்டு அவன் மூலமாகவே தேவா என்ற பேஷண்ட்டின் நிலைமையை விசாரித்ததோடு  பணத்தையும் ட்ரான்ஸ்பர் செய்தான். ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் வில்லியம் கூப்பர் வருகையையும் எப்போது ஆபரேஷன் என்று அஷோக்கை விட்டே கேட்கச் சொன்னான்.

மதுமதியையும் அருகிலிருந்து கவனிக்கத் தவறவில்லை.தன்னுடைய எல்லா புரோகிராம்களையும் தள்ளி வைத்தான் அவசரமெனில் தன்னை தொடர்பு கொள்ளும்படி தன்  பி.ஏக்களுக்கு உத்திரவுகளைப் பிறப்பித்தான். இரவில் வந்திருக்கும் எல்லா அப்டேட்களையும் சரிபார்த்து தேவைப் படும்  மாற்றங்களை  அனுப்பி வைத்தான்.




மருந்தின் உபயத்தால் இரண்டு நாட்களும் நன்கு உறங்கி எழுந்தவளுக்கு உடனே தன் கண் முன் பிரச்னைகள் நிற்பதை உணர்ந்தாள்.

இந்த மருத்துவ மனையின் பிரம்மாண்டமே அவளை அச்சப்படுத்தியது.

 ‘கடவுளே!  இவ்ளோ பெரிய ஹாஸ்பிடலிலா இந்தமனிதர் சேர்க்கனும். இருக்கிற செலவில் இது வேறா ‘

தனக்குள் நொந்து கொண்டாள்.

“ஸார்! லாயர் வந்தாரா ஸார்? என் வீடு விஷயம் என்னாச்சு ஸார்? ஏதும் சொன்னாரா? “

“மது! ரிலாக்ஸ்! ஏன் இப்படி பதட்டப்படுறீங்க? நேற்றெல்லாம் உங்க நிலைமை எப்படியிருந்தது தெரியுமா? பயமுறுத்திட்டீங்க.”

“அதில்லை ஸார். வீட்டு விஷயம் செட்டிலானா தான் தேவா மாமாவைக் காப்பாத்த முடியும்? “

“அந்த வீடு உங்களுக்கு ஆ…ங்! அதென்ன வரும்போது பாடுனீங்களே….!ம்! ஞாபகம் வந்திருச்சு! எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இவ்வீடே !ன்னு! அது வெறும் பேச்சு தானா?  “

“…….”

“இப்போ என்னன்னா அதைவித்துடலாம் ங்கிறிங்க. அவ்ளோ தானா அந்த வீட்டோட முக்யத்துவம். ?”

“வீடும் அதில் படிந்திருக்கிற ஞாபகங்களும் ஒப்புயர்வற்றது தான் ஸார்!. ஆனா ….ஆனால் அதைவிட ஒரு உயிரு முக்யமானதாச்சே ஸார்.”

அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் தன் கண்ணீரை அவன் கண்டு விடக்கூடாதென வறண்டு போய்க்கிடந்த கீழுதட்டை கடித்துக்  கொண்டாள். கேசம் கலைந்து கண் அடியில் கருவளையமிட்டு வாடினாற் போலிருந்த மதுமதியின் முகக் கசங்கல் அவனை அசைத்தது.

இருக்கையை விட்டு எழுந்து தன் விரல்களால் அவள் இதழை வருடி விடுவித்து

“ஏன் இப்போ இதை இப்படி கஷ்டப்படுத்துறீங்க மதி! லாயர் மூலமா வேற ஏற்பாடு செஞ்சிருக்கு. கவலைப்படாதீங்க திரும்ப உடம்புக்கு இழுத்து விட்டுக்காதீங்க. ஏற்கெனவே இங்கேயே ரெண்டுநாளா ஸ்டே….ஆகியாச்சு. ப்ளீஸ் “

என்றவனை புதிசாய் விழி விரித்துப்பார்க்க

அவனோ அவள் நாடியை ஒரு விரலால் தூக்கி நெற்றியில் தன் இதழ்களைப் புதைத்தான். மதுமதி  குரல் எழும்பாமல் தடுமாறினாள்.

‘இந்த முள்ளுக்காட்டை முகத்தில் கட்டிக் கொண்டு அலைபவனுக்கு என்னாச்சு’

 ‘என்று யோசித்தவளை யோசிக்க விடாமல் அவன் முத்தமிட்ட இடத்தில் அவன் இதழின் ஈரமும் மீசையின் குறுகுறுப்பும் கதகதப்பாய் குளிர்ந்தது.

அவள் கண்மூடி அதை ரசித்தாள்.

 கதவு வரையும் போனவன் ஓரெட்டுப் பின் வைத்து..

“ஹேய்! மை டியர் ஹனி!”

என விளித்து

அவள் இமை திறந்ததுமே கண்சிமிட்டி குறும்பாய்ச் சிரித்து நகர்ந்தான்.

மதுமதி பனிச்சிலையாய் உறைந்து நின்றாள்.

(தேடல் தொடரும்)




What’s your Reaction?
+1
15
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!