gowri panchangam Sprituality

ஆறாவது  படைவீடு – பழமுதிர் சோலை

தெய்வ வழிபாடு

முருகனின் ஆறுபடை வீடு

ஆறாவது  படைவீடு பழமுதிர் சோலை

  

பழமுதிர்சோலை முருகன் கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், மதுரையிலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளது. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதான் என்று நம்பப்படுகிறது. விஷ்ணு கோவிலான அழகர் கோவில் இதற்கு அண்மையில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.




சோலைமலை என்ற பெயரும் இதற்கு உண்டு. இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்சோலை என்பதற்கு “பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை” என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

pazhamudir cholai murugan temple, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சோலைமலை (பழமுதிர்சோலை), மதுரை - முருகனில் 6 ஆம் படைவீடு - sri solaimalai murugan temple ...

கோவில் வரலாறு

அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத் தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாகச் சொல்கிறார்கள்.

தனது புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற ஔவையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார். அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் ஔவையார். நீண்ட தொலைவு பயணம் செய்திருந்ததால் அவருக்குக் களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.




அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம், “குழந்தாய்… எனக்குப் பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?” என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், “சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டார்.

சிறுவனின் கேள்வி ஔவைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப் பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக “சுடாத பழத்தையே கொடுப்பா…” என்று கேட்டுக் கொண்டார். “சுடாத பழம் வேண்டுமா? சரி உலுக்கி விடுகிறேன் சுடாத பழமா பார்த்து எடுத்துக்கோ” என்று கூறி, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வை, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், என்ன பாட்டி… பழம் சுடுகிறதா? என்று கேட்டார்.




சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே ஔவையின் அகங்காரம் பறந்து போனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, “குழந்தாய்… நீ யாரப்பா?” என்று கேட்டார். மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுய உருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.

இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.

மூலவர்

ஆரம்ப காலத்தில் இங்கு வேல் மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது. முருகனுக்கு வலப்புறம் வித்தக விநாயகர் வீற்றிருக்கிறார். ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டும் தான் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.




முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோவில் சோலைமலை (பழமுதிர்சோலை) மட்டுமே. கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும்.

நூபுர கங்கை தீர்த்தம்

பழமுதிர்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மலை உச்சியில் இந்த தீர்த்தத் தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர் கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.

நாவல் மரம்

சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.




திருவிழா:

இந்தக் கோவிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய வைகாசி விசாகம்  , ஆடி கார்த்திகை, ஆவணி பூரத்தில் வருஷாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை , பங்குனி உத்திரம்,  தமிழ் வருடப்பிறப்பு ஆகிய நாட்களிலும் சிறப்பு பூசைகளும், அபிசேகங்களும் நடைபெறுகின்றன.

பிரார்த்தனை: திருமணத் தடை உள்ளவர்களும், புத்திரபாக்கியம் வேண்டுபவர்களும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியதும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!