Sprituality

பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது ?

பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது….? அதன் சிறப்புகள் என்ன…?

கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் மக்கள் கொண்டாடும் திருவிழாவே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் என்ற சொல்லுக்கு கொதித்தல், மிகுதல், சமைத்தல், மற்றும் செழித்தல் என்ற பல பொருள் உண்டு.




நமது கலாச்சாரத்தில் பெரும்பாலும் எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்ராண்ய காலம் ஆரம்பமாகிறது.

ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு  விழாக்களை கொண்டாடுகின்றனர். பல்வேறு வழிபாட்டு முறைகளும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன.

தை முதல் நாள் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இது தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் ஒரு உன்னத திருநாள். இது வேளாண்மையை அடிப்படையாக கொண்ட விவசாய திருநாள்.  இந்நாளில் தமிழர்களின் இறைவனான சூரியனுக்கு நன்றி செலுத்துவர்.

பொங்கல் பண்டிகை வரலாறு

தைப்பொங்கல் திருவிழா உலகில் உள்ள அனைத்து தமிழர்களாலும்  சூரிய நாட்காட்டியின் படி, தை மாதத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக தமிழர்கள் சூரிய நாட்காட்டியவே தங்கள் நாட்காட்டியாக கடைபிடித்து வருகிறார்கள்.  அதன்படி சூரியன் மகர ராசியில் நுழையும் போது சூரியனின் ஆறு மாத நீண்ட பயணத்தின் தொடக்கத்தை இந்த பொங்கல் திருவிழா குறிக்கிறது.

இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா, மேலும் புதுச்சேரி, இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா போன்ற பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.




ஆற்று ஓரப் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் வருடத்தில் மூன்று முறை அறுவடை செய்வார்கள், ஆனால் மானாவாரி இடங்களில் மழை பெய்யும் காலங்களில் மட்டுமே விவசாயம் செய்வார்கள். அந்த வகையான நிலங்களில் வருடத்தில் ஆடி மாதத்தில் விதை விதைத்து மார்கழி மாதத்தில் அறுவடை செய்வார்கள். அவ்வாறு அறுவடை செய்த தானியங்களை வைத்து, புதுப் பானையில் பொங்கல் வைத்து பூஜை செய்வர்.

உழவர் திருநாள் என்று போற்றப்படும் இந்த பொங்கல் பண்டிகைகள் நான்கு நாட்கள் நடத்தப்படுகிறது. போகி பொங்கல், தை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு தினங்கள் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை மிகவும் பழமையான விழா என்பதற்கு எடுத்துக்காட்டாக திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியில்

“மதுக்குலாம் அலங்கல் மாலை

மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்”

என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் மாணிக்கவாசகர் எழுதிய ஒன்பதாம் நூற்றாண்டின் சிவ பக்தி உரையாட திருவெம்பாவை இந்த பொங்கல் திருவிழாவை பற்றி தெளிவாக குறிப்பிடுகிறது.

பொங்கல் பண்டிகையின் வரலாறு பற்றிய தகவல்கள் அதிகமாக சோழர் காலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றன. இது பல்வேறு கல்வெட்டுகளின் மூலம் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

ஆரம்ப கால பதிவுகளில் இந்த பொங்கல் என்ற பெயரானது வானகம், போனகம், திருப்போனகம், பொங்கல் போன்ற சொற்களாக கல்வெட்டுகளில் தோன்றுகிறது.

இந்தக் கல்வெட்டுகளில் பொங்கல் உணவை சமைப்பதற்கு உண்டான குறிப்புகள் தெளிவாக அப்பொழுதே பொறிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையின் சிறப்பு

இந்தியாவில் கொண்டாடப்படும் மிகவும் பழமையான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. நமக்கு உணவளிக்கும் விவசாயத்திற்கு உதவும் சூரியன், உழவர்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. மத வேறுபாடு இன்றி ஒட்டுமொத்த இந்திய மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல்.

பொங்கல் பண்டிகை தை பொங்கல், உழவர் திருநாள், தமிழர் திருநாள், அறுவடை திருநாள், தை திருநாள் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென் ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.




பொங்கல் தினத்தன்று புது பானை வாங்கி, புது பச்சரிசியில் பொங்கல் வைப்பர்.  பொங்கல் பானை பொங்கி வழிவது போல இல்லத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் பொங்கி வழிய வேண்டும் என்று இறைவனை வேண்டுவர்.

முதல் பண்டிகையான போகி பண்டிகையை பற்றி பார்க்கலாம். 

போகி பண்டிகை;

மார்கழி மாதத்தின் கடைசி தினத்தன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் இந்த போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

“பழையன கழித்து புதியன புகுதலே” போகி. போகி பண்டிகை அன்று வீடுகளை சுத்தம் செய்து குப்பைகள் மற்றும் பயனற்ற பொருட்கள் அனைத்தையும் தீயில் இட்டு கொளுத்துவர். பழைய பொருட்களை நீக்கினால், புதிய பொருட்கள் சேரும் என்பது நம்பிக்கை.

போகி பண்டிகை அன்று வேப்பிலை, பூளைப்பூ, மற்றும் ஆவாரம்பூ சேர்த்து காப்பு கட்டும் வழக்கம் உள்ளது.

நம் முன்னோர்கள் கடந்த ஆண்டுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், புதிய ஆண்டை வரவேற்கும் விதமாகவும் இந்த போகி பண்டிகையை கொண்டாடினர். போக்கி என்பது மருவி போகி என்றாகிவிட்டது.

  இரண்டாம் நாள் பண்டிகையை பற்றி நாளைய பதிவில் பார்க்கலாம்.

        இந்த பொங்கல் உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் சேர்க்க, நமது இணையதளம் சார்பாக அனைவருக்கும் “இனிய பொங்கல் வாழ்த்துகள்!!”




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!