Serial Stories எங்கே நானென்று தேடட்டும் என்னை

எங்கே நானென்று தேடட்டும் என்னை 1

செல்லம் ஜெரினா

எழுதும்

எங்கே நானென்று தேடட்டும் என்னை

தேடல் :1

உள்ளே வேகமாக அரைவட்டமிட்டு நின்ற ஆட்டோவை தன்னறை ஜன்னல் வழியே பார்த்து விட்டான் விஷ்ணு ப்ரியன். வேகமாய் அதிலிருந்து இறங்கியவளின் தோளில் பின்புறம் பை ஒன்றிருக்க குழந்தை ஒன்று குதித்து இறங்கியது. குழந்தையின் தோளில் அவளின் புத்தகப் பையை மாட்டி சரிசெய்தவள் அங்கிருந்த ஆயா கற்பகத்தைக் கூப்பிட்டாள்.

“கற்பகாம்மா! இவளை அவள் வகுப்பில் விட்டுவிடுங்களேன் “

குழந்தை “பை! பை! “என்று சொல்லி நகர இவளும் இன்னும் வேக மாய் படிக்கட்டுகளில் ஏறினாள்.

நாலைந்து நீளமான படிக்கட்டுகள் தாம். அடுத்து நீள காரிடார். தொடர்ந்து கரஸ்பாண்டெண்ட் அறை அலுவலக அறை தலைமை யாசிரியர் அறை என வரிசையாக அந்த முடிவுவரை இருக்கும். மூன்றாவது படிக்கட்டிலேயே தடுமாறி முன் புறமாய் விழ இருந்தாள்.

“ஹேய்! “விஷ்ணுப்ரியன் தன்னையறியாமலே இருக்கையை விட்டெழுந்து விட்டான்.

 கேஷியர் ரத்னா அறையினுள்ளிருந்து ஓடிவந்து தாங்கிப் பிடித்தார்.

அவள் நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்துப்பார்த்தவர் என்னவோ சொல்வது தெரிந்தது.

‘அவளுக்கென்ன உடம்பு சரியில்லையா? ‘

‘இருக்கட்டுமே! நமக்கென்னவாம். ?’

‘இல்லை….வந்து ‘

‘இது சரியில்லை விஷ்ணு! அவன் உன் குடும்பத்தையே நாசம் செய்தவள்! ஞாபகத்தில் வை! ‘ —- விஷ்ணுவின் முகம் இறுகியது.

உடனே தன் முன்னே விரிந்திருந்த கோப்புக்குள் தலையை புதைத்துக்கொண்டான். ஆனாலும் விழிகள் அடுத்த அறைக்குத் தாவியது அடம் பிடிக்கிற குழந்தையாய். .




அது பெரிய நீள் சதுர அறை.  அதை விஷ்ணு பொறுப்பேற்றப்பின்பு நடுவே மரத்தடுப்புச் சுவரும் அதில் பதியப்பட்ட கண்ணாடிச்சுவர் பாதியுமாகத்தடுத்து தனக்கொரு கேபின் போல செய்து கொண்டு விட்டிருந்தான் கூடவே சிறிய தடுப்புடன் கூடிய அறையை ப்ரத்யேக உபயோகத்திற்காக மாற்றியிருந்தான் கழிவறையுடன். அப்படியோர் அறையிருப்பதே வெளியேயிருந்து பார்த்தால் தெரியாதவண்ணம் அமைப்பாக அமைந்திருந்தது.

ரத்னா ஏதோ சொல்வதும்  உடனே அவள் முகம்மாறியவளாய் வேகமாய் எழுந்து தன் அறைநோக்கி வருவதையும் கண்டவன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டான்.

கதவைத் தட்டிவிட்டு காத்திருந்தவளுக்கு “எஸ் கமின்! ” என்று பதில் தந்தான் விஷ்ணு ப்ரியன்.

“குட் மார்னிங் ஸார் “

வெறுமனே நிமிர்ந்தவனை

“ஸாரி ஸார். பஸ் பிரேக் டவுன்னாயிட்டுது. அதான் லேட்டாகிவிட்டது. ஐயாம் ஸாரி. “

ஒருநிமிடம் தாமதித்தவள்

“வந்ததுமே உங்களைப் பார்க்கச் சொன்னீர்களாம்! “

தலையைக் குனிந்து கொண்டாள்.

நாற்காலியைப் பிடித்திருந்த விரல்கள் நடுங்கின. முகத்தில் அசதி கிளைபரப்பியிருந்தது.

“எனக்கு கடைசி நான்கு வருட வரவு செலவு கணக்கு வேணும். ஹாஸ்டலுடையதும் சேர்த்து.

அதாவது பில்ஸ் செக்பண்ணி ரிப்போர்ட்டாக வேணும். ம்! அப்புறம் நேரத்தோடு டைம்மிற்கு வரப்பாருங்க. அப்படி முடியலைன்னா வேலைக்குன்னு புறப்பட்டு வரக்கூடாது. எல்லோர் டைமும் வேஸ்டாகிறது. இதுக்கு முன்னே எப்படியோ. எனக்கு டைம் முக்யம். இன்னொரு முறை இப்படி நடந்தா உங்க சீட்டுக்கு வேற கேண்டிடேட் வந்திடுவாங்க. இதுதான் லாஸ்ட் அண்  பர்ஸ்ட் வார்னிங்! மைன்ட் இட்!  “

கண்ணில் துளிர்த்த நீரை இமையைக்கொட்டி உள்ளிழுத்த வேகத்தில்

“இனி இப்படி நடக்காது ஸார் ஸாரி “

முன்பிருந்தவர் கடிந்து பேசமாட்டார். தாமதமாக எப்போதேனும் வந்தாலும் இருந்து கணக்கை முடித்துவிட்டே போவாள். அவளைப் பற்றி அறிந்தவர். அவர் வெளிநாட்டில் வாழும் மகனோடு செட்டில் ஆகவேண்டி பள்ளியை கைமாற்றிவிட்டார்.

எல்லா ஸ்டாப்களுடனும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை வாங்கியவனும் ஏற்றான் தான்!

ஆனாலும்

இவன் ரொம்பவே கறார் பேர்வழி. பேச்சும் பார்வையும் ஊசியாய்க் குத்தும். மற்றவர்களை விட இவளிடம் கூர்மையும் குத்தலும் அதிகமாகவேயிருக்கிறது. காரணம்தான் தெரியவில்லை. இருந்தாலும் நான் வேலை செய்பவள். அவன் முதலாளி சொல்கிற வேலையை செவ்வனே முடித்துவிட்டால் ஆயிற்று என்று நினைத்து கொண்டு செயல்படத் துவங்கியவளுக்கு ஜோசியமா தெரியும்?

மறுவாரமே இவள் சேலம் போய்வர வழியில் பஸ் பிரச்னை தருமெனக் கண்டாளா என்ன?




அவளுக்கு மலைப்பாக இருந்தது. காட்டில் ஊசியைத்தேடுகிற வேலை. இவள் வந்தது முதல் ஓரளவு கணிணியில் ஏற்றியிருந்தாலும் ஹாஸ்டல் செலவினம் கணிணியில் இதற்கு முன்பிருந்தவர் ஏற்றவில்லை.

இவள் வந்த வருடத்திலிருந்து பக்காவாக பைல் போட்டிருக்கிறாள்.

ஆனாலும் தலையாட்டினாள்.

“எனக்கு ஒரு வாரத்திலேயே வேணும் .கொஞ்சம் வேகமாய் செய்யுங்க. சாயந்திரம் கொஞ்சம் இருந்து பண்ணிக் கொடுங்க “

முகத்தில் முள்ளைக்கட்டிக்கொண்டிருக்கிறானோ?

அவளுக்கு கால்கள் தொய்வடைவது போலிருந்தது. சமாளித்து நின்று தலையாட்டி விட்டு  நகர்ந்தாள்.

வெளியே வந்தளுக்கு தலை சுற்றியது. ஜூரவேகத்துடன் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததும் சேர்ந்து கொண்டது.

ரத்னா ப்ளாஸ்கிலிருந்து கப்பில் காபியை ஊற்றி நீட்டினாள்.

அப்பா!

தெம்பு மீண்டார் போலிருந்தது.

ரெக்கார்டு ரூம் என்ற அந்த சின்ன அறைக்குள் நுழைந்து பழைய பைல்களைத் தூசி தட்டி எடுக்க அடுக்கடுக்காய் தும்மல் வந்தது.

முகமும் நாசியும் செவ்வரளி போல கனிந்து சிவந்திருக்க கண்களிலிருந்து நீர் கொட்டியது.

தன் முன்னே விரிந்திருந்த பைலை ஊன்றி படித்தான் விஷ்ணுப்ரியன்

நிஷாகந்தி தேவமலர்.

தந்தையின் பெயர் சத்யதேவ்

பிறந்த நாள் வருடம் அனைத்துமிருக்க கார்டியன் என்ற இடத்தில் மதுமதி என்று கையெழுத்திடப்பட்டிருந்தது.

சத்யதேவ் குழந்தையா நிஷா?

அப்போது இவளின் கணவன்?

என்னஒரு தைரியம்? இவள் பெண்தானா?

சத்யதேவ்வின் குழந்தை சரி! ஆனால்  இரண்டாம் கணவனுடனான வாழ்க்கையைத் தொடர்பவள் இந்தக்குழந்தையை…… நிஷா சத்யதேவ்வின் பேபிதானா?

அம்மாவும் அப்பாவும் இதுபற்றியேதுமே சொல்லவில்லையே! சத்யதேவ்வின் குழந்தையை உடையவர்களிடம் ஒப்படைத்து விட்டு இவள் தன்பாட்டுக்கு போகலாம் தானே?எங்களை என்னவென்று நினைத்துக் கொண்டாள்?  நான் விட மாட்டேன் என்னைப் பற்றி தெரியாமல் விளையாடுகிறாள்.  நிஷா மட்டும் சத்யதேவ்வின் மகளென்றால் இவளை கோர்ட்டுக்கு இழுத்து சந்தி சிரிக்க வைப்பேன்! யாரிடம்? இந்த விஷ்ணுவிடமேவா…. மதுமதி! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்

 ….நாலு வருடக் கணக்குக்கும்  சாவுடி பெண்ணே! உன்னை தினம் இப்படி தேவையில்லாத வேலை செய்ய வைத்தே ஓட ஓட விரட்டுறேன் பார். “

விஷ்ணு வின் முகம் இறுகியது.முதல் புருஷன் செத்ததுமே எப்போ எப்போன்னு கல்யாணம் பண்ணிக்கொண்டு  இரண்டாவது புருஷனையும் வெளிநாடு அனுப்பிட்டு…. இதென்ன வாழ்க்கை…?இதைவிட விஷம் குடித்து செத்திருக்கலாம். நாலு வருஷமா வெட்கம் கெட்ட வாழ்க்கையை வாழுற! ச்சீ…!உன்னிடம் போய் மயங்கினான் பார் அப்பாவி சத்ய தேவ் அவனைச் சொல்லணுமடி!

ஏன் நீயும் தானே? என்று கேட்ட மனசாட்சியின் கழுத்தைத் திருகினான்.  “

முஷ்டி இறுகியது.




மதுமதி சாப்பிடக்கூடப் போகவில்லை. சாப்பாடும் கொண்டு வரவில்லை. சேலத்திலிருந்து பஸ்ஸை விட்டிறங்கி நேரே பள்ளிக்கு வந்திருந்தாள். நிஷாவுக்கு மட்டும்  ஆயா மூலமாக ஹோட்டலிலிருந்து இட்லி வாங்கிவரச் சொல்லித் தந்திருந்தாள். இவளுக்கு வாயெல்லாம் கசந்து வழிந்ததில் சாப்பிடப் பிடிக்கவில்லை. தலைவலி மண்டையைப் பிளந்தது.

விஷ்ணு இந்தப்பள்ளியை வாங்கிப் பொறுப்பேற்று பத்து நாட்கள் கூட ஆகவில்லை.

அவன் தந்திருக்கிற முதல் வேலையிது. எப்படியாவது நல்லவிதமாக செய்துதானே ஆகனும்.

என்ன முகத்தில் முள்ளைவைத்துத் தைத்தாற் போலின்றி தன்மையாகச்சொன்னால் நன்றாக இருக்கும். அவனியல்பே அதுதான் போலும்.

நிஷாவை தங்கம் அக்காவோடு அனுப்பி விட்டாள்.

ஆறுமாதக் கணக்கு கூட முடியவில்லை. உடம்பு வேறு படுத்தியது…

பள்ளியில் எல்லோருமே கிளம்பி விட்டார்கள்.

‘இந்த பில்லை சேர்த்து விட்டால் நாளை பார்த்துக்கொள்ளலாம்’ என்று எட்டி எதையோ எடுக்க கை நீட்டியவளைக் கொண்டு தள்ளியது. அப்படியே மேஜையில் சாய்ந்தாள்.

விஷ்ணு இங்கிருந்தவண்ணமே தன்னுடைய மற்றத் தொழில்களையும் கணிணி மூலமே மல்லுகட்டிக் கொண்டிருந்தான்.

இந்தப்பள்ளியை

புதிதாக வாங்கியிருந்தான். அவன் அம்மாவுக்காக என்று வெளியில் சொல்லிக் கொண்டானே தவிர ….உண்மைக் காரணம் அவன் மட்டுமே அறிவான்.

கன்ஸ்ட்ரக்கஷன் தொழில் அவனுடையது. கூடவே கட்டுமானத் தொழிலின் உதிரியான சிலவற்றுக்கும் டீலர்ஷிப் எடுத்திருந்தான். குடும்பத் தொழில் வேறு இருக்கிறது. அப்பா கவனித்துக் கொண்டாலும் இவனும் அவ்வப்போது நேரில் சென்று கவனிப்பான்.

இப்போது  இந்தப் பள்ளி நிர்வாகம் வேறு.!

புதிய தொழில் என்பதால்…. ஆம் அவனைப்பொறுத்தவரை கல்வி என்பது சேவையின்கீழ் வராது. நல்ல வருமானம் தருகிற பிஸினஸ்! ஆனால்

அவன் தாய் ரஞ்சனிக்கு ஒரு பள்ளியை கல்லூரியை சேவையாக எடுத்து நடத்தி வருடம் பத்துப்பேரையேனும் கட்டணமின்றி படிக்க வைத்து முன்னேற்ற வேண்டும் என்று அவாயிருந்தது. அதை அடிக்கடி தன் பிள்ளைகளிடமும் பகிர்ந்து கொள்வார்.

அதுபற்றி யாருமே முனைப்பெடுக்காத நேரம் …அவர் ஆசையும் புதைந்து தான் போனது.

அப்போதுதான் ……இந்தப்பள்ளியை பற்றிய செய்தி கிடைக்க முஸ்தீபுடன் இறங்கி வெற்றியும் அடைந்தான். ரஞ்சனியோ பூரித்துப் போனாள். பெயரைக்கூட தன் இளைய மகனின் நினைவாக மாற்ற விரும்பினாள்.

“சத்யா மெட்ரி.குலேஷன் ” இப்படித்தான் பிறந்தது. ஒரு மூன்றுமாதமேனும் இங்கேயிருந்தால்தான் இது வசப்படும் என்பதால்….இங்கேயிருந்து கொண்டே தொழிலை செய்தான். சனிஞாயிறு மற்ற  தொழிலைப் பார்க்க ஓடினான்.

 தன் வேலைகளை முடித்துவிட்டு

தற்செயலாக நிமிர்ந்தவன் கண்ணில் அவள் மேஜையில் கவிழ்ந்து படுத்திருப்பது பட்டதுமே சுறுசுறுவென்று ஏறியது.

“இடியட்! தூங்கறாளா …?”இடைக்கதவைத் திறந்து இந்தப்புறம் வந்தவன் நாலெட்டில் அவளை நெருங்கினான். அவள் விழுந்திருந்த கோலமே ஏதோ ப்ரச்னை என்று சொன்னது.

கையில் ஃபைலும் பென்சிலுமிருக்க எப்படியோ விழுந்துகிடந்தாள்.

“மதுமதி! மதுமதி! “

ஊஹும் ……நெற்றியைத்தொட்டுப்பார்த்தான் நெருப்பாய் கனன்றது. முகத்தைத் திருப்பினான். உதடுகள் காய்ந்து போய் மூச்சு சூடாய் பட்டது.

அடிப்பாவி! இத்தனை ஜூரத்தோடு வேலை செய்யணுமா?

முணுக் கென்று கோபம் வர இப்போது எப்படி என்ன செய்ய என்று ஒரு நிமிடம் யோசித்தான்.

அவள் கையிலிருந்த பென்சில் பேப்பர் இவற்றை அகற்றி கணிணியை ஷட்டவுன் செய்தவன் தாடையைத் தேய்த்தபடி யோசித்தான்.

மெல்ல நிமிர்த்தி அவளின் முகவாயில் கை வைத்து அசைக்க அவளிடம் எந்த எதிர் வினையுமேயில்லை.

வெயிலில் வெட்டிப்போட்ட கொடி போலத் துவண்டு கிடந்தாள்.

“உஃப் “என்று வாயைக்குவித்து காற்றை வெளியேற்றியவன் அவளிடையில் கைகொடுத்து தூக்கினான்.

‘ஹ்ம்! இது வேறா? “

யார் காரணமாக பழக்கமில்லாத பள்ளி நிர்வாகத்தை கையிலெடுத்தானோ அதற்கு காரணமானவள் இதொன்றும் அறியாமலே அவன் கைகளில் துவண்டு போய்க் கிடந்தாள்.

அவன் இவள் மீது கொண்டிருக்கும் வன்மத்தையும் பகையையும் அவள் அறிய வரும்போது ….

என்ன நினைப்பாள் அந்தப் பேதை?

(தேடல் தொடரும்.)




What’s your Reaction?
+1
20
+1
11
+1
1
+1
0
+1
0
+1
0
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!