Serial Stories வானவில் தேவதை

வானவில் தேவதை -25

25

என்ன நடக்கிறது என்ற குழப்பத்துடனும், கனவோ எனும் ஐயத்துடனும் ….ஒரு வருடம் கழித்து பார்த்த தன்னவனை பார்வைக்கு இரையாக்கி கொண்டிருந்தாள் சபர்மதி .அவனோ குனிந்து மனமுருக இறைவனை தொழுது கொண்டிருந்தான் .

 


தீபாராதனை காட்டப்பட “முதலில் முருகனை பார். பிறகு என்னை காலம் முழுவதும் பார்த்துக்கொள்ளலாம் “குனிந்தபடி முணுமுணுத்தான் .

 

” இப்போது நீங்கள் பாராட்டு விழாவில் அல்லவா இருக்க வேண்டும் .இங்கே ஏன் வந்தீர்கள் ? எப்படி வந்தீர்கள் ? ” தரிசனம் முடிந்து வெளியே வந்து சிறிது கூட்டமற்ற பகுதிக்கு வந்ததும் கேட்டாள் சபர்மதி .

” ஒரு வருடமாச்சு …” ஏக்க பெருமூச்சு ஒன்றை விட்டபடி அவளை ஒரு பார்வை பார்த்தான் .கால் நகம் வரை சிவந்தாள் சபர்மதி அந்த பார்வையில் .

 

” கோவிலில் வைத்து என்ன பேச்சு இது …” முறைத்தாள் அவனை .

 

” அட நான் முருகனை சொன்னேனம்மா , இங்கிருக்கும் வரை மாதம் ஒரு முறையாவது இந்த பழனியாண்டவரை தரிசனம் பண்ணிவிடுவேன் .இப்போது ஒரு வருடமாகிவிட்டதே அதைத்தான் சொன்னேன் …நீ என்ன நினைத்தாய்

 

“பொய் யை பார்…” முணுமுணுத்தாள் சபர்மதி .

 

” ஏதாவது சொன்னாயா …?” அவள்புறம் காதை சாய்த்து கன அக்கறையாக கேட்டான் .

 

” ஒன்றுமில்லை …” கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளை துப்பினாள் .இவனிடம் பேசினால் என் மண்டைதான் காயும். காலாகாலத்தில் வீடு போய் சேர்வோம் .

 

” இல்லம்மா நானும் ஏங்கிப்போய்தான் இருக்கேன் யாரோ யார்கிட்டயோ சென்ன மாதிரி இருந்ததே …” என்ற பூரணனின் பேச்சை காதில் விழாதது போன்ற  பாவனையில் ஒதுக்கி கீழிறங்கியவளுக்கு காருடன் நின்ற தீபக்குமாரை கண்டதும் பூரணசந்திரன் எப்படி இங்கே வந்தான் என விளங்கியது .

 

இவளைக்கண்டதும் கார் கதவை திறந்து ” உட்காருங்கள் மேடம் ” என்றான் தீபக்குமார் .

 


” நீங்கள் அண்ணனுடன் எஸ்டேட் போகவில்லை ? ” கேட்டபடி காரில் ஏறினாள

 

ஒரு மாத காலமாக தர்மன் ஆபீஸ் நிர்வாகம் பார்க்க ஆரம்பித்துள்ளான் .ஆரம்பத்தில் சில நாட்கள் அவன்உடன் சென்ற சபர்மதி , அவனின் திறம் கண்டதும் , ஒரு இடத்தில் இரு நிர்வாகம் சரி வராது என தீபக்குமாரை தர்மன் மேல் ஒரு கண் வைத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு ஒதுங்கிவிட்டாள் .உடன் வருமாறு வற்புறுத்திய தர்மனிடமும் ” இல்லைண்ணா எனக்கு கொஞ்சம் ஓய்வு வேண்டுமென ” கூறிவிட்டாள் .

 

இந்தப்பொறுப்புகளையெல்லாம் விட்டு அவளும் ஒதுங்கிக்கொள்ளவும் வேண்டுமே .இன்று கூட இந்த கோவில் என்று கூறாமல் மொட்டையாக கோவிலுக்கு போகிறேனென அம்சவல்லியிடம் கூறி விட்டு வந்திருந்தாள் .பாராட்டு விழா முடியும்வரை தன்னை தேடி யாரும் வரக்கூடாது என எண்ணியே காரை மறுத்துவிட்டு பஸ்சில் இங்கு வந்திருந்தாள் .

 

” தர்மன் சார் இன்று இன்னும் கிளம்பவேயில்லையே மேடம் .எல்லோரும் பி.சி சாருக்காக வீட்டில்தான் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.”

 

நீ எப்பவும் போல என்னை துப்பறிய வந்தாயாக்கும் …இதனை தீபக்கை நோக்கி சொல்ல முடியுமா …

அது முடியாததால் …

 

” எங்கே போனாலும் என் பின்னால் வேவு பார்க்க ஆள் அனுப்பிவிடுவீர்களா …? ” பின்னால் வந்து அவளுடன் காரில் ஏறிய பூரணனிடம் காய்ந்தாள் .

 

” அந்த ஏ.ஸி டெம்ப்பரேச்சரை இன்னும் கொஞ்சம் குறை  தீபக் .ஒரே அனல் …” என்றான் பூரணன் சபர்மதி பக்கம் கை காட்டியபடி .

 

இவனை என்ன செய்யலாம் …? சட்டென இரு விரல்களால் பூரணனின் தொடையில் வலிக்கும்படி கிள்ளினாள் சபர்மதி .

 

” ஆ…ஆ ….ஆ….” கிள்ளியதற்கே கத்தியால் குத்தியது போல் கத்தியவன் ” என்னையா கிள்ற …உன்னை ….”, என்று பதிலுக்கு அவளை கிள்ள முயல , சபர்மதி தடுக்க ….

 

உலக நாடுகள் முழுவதும் சுற்றி தனது கண்டுபிடிப்பை வெற்றிகரமாக அறிமுகப்படுத்திவிட்டு , நம் அரசாங்க ஒப்புதலுக்கு காத்திருக்கும் தனது முதலாளியும் , அவர் வெளிநாடு போன நாட்களில் திறம்பட தொழில் நடத்திய தனது முதலாளியம்மாவும் …இதோ சிறு குழந்தைகளாக மாறி காரில் விளையாடிக்கொண்டிருப்பதை பெருமிதம் கலந்த புன்னகையுடன் பார்த்தபடி கார் ஓட்டிக்கொண்டிருந்தான் தீபக்குமார் .

 


” தீபக் காரை நிறுத்துங்க …” என்ற சபர்மதியின் அலறலில் சட்டென பிரேக்கை மிதித்தான் .அந்த வேகத்தில் முன் சீட்டில் முட்டிக்கொண்ட சபர்மதியின் மீது முழுவதுமாக சரிந்து விழுந்தான் பூரணசந்திரன் .

 

” உங்க ஊர்லெல்லாம்  ப்ரேக் போட்டா இப்படி பக்கத்து ஆள் மேலதான் வந்து படுப்பீங்களா…?,”

 

“அப்படி திடீர்னு ப்ரேக் போடவும்  …என்னால் பேலன்ஸ் பண்ணவே முடியலைம்மா …” இன்னமும் அவள் மீதிருந்து எழும் ஐடியாவே இல்லாமல் சாய்ந்தபடியே பேசிக்கொண்டிருந்தவனை உதறிவிட்டு கீழே இறங்கி வந்த பாதையில் வேகமாக நடக்க தொடங்கினாள் சபர்மதி .

 

இவள் எங்கே போகிறாள் …யோசித்தபடி பின் தொடர்ந்தான் பூரணசந்திரன் .

 

பின்னால் திரும்பியபடி நின்றிருந்த அந்த மொட்டை போட்டிருந்த பெண்ணின் தோளை தொட்டாள் சபர்மதி .” அனுசூயா ….” திரும்பிய அனுசூயா இவளைக்கண்டதும் மலர்ந்து ” நீ இங்கே எங்கே சபர்மதி கோவிலுக்கு வந்தாயா ”  என்றாள் .

 

” வாங்க…வாங்க ..நல்லாயிருக்கீங்களா ? …எப்போது வந்தீர்கள் …? ” என்று கை கூப்பினாள் பின்னால் வந்த பூரணசந்திரனை பார்த்து .

 

” என்ன அனுசூயா இது …?”, சபர்மதியின் குரல் தழுதழுத்தது .

 

” என் வேண்டுதல் சபர்மதி …” புன்னகைத்தாள் அனுசூயா .

 

அனுசூயாவின்  தலைக்கு மேல் நிமிர்ந்து பார்த்து என்னவென்று கண்களால்  வினவினான் பூரணன் .அப்புறம் சொல்வதாக அவனுக்கு கண்களாலேயே பதிலுரைத்தாள் சபர்மதி .

 

பெண்மைக்கான முக்கிய அடையாளத்தை சிறு உறுத்தலுமின்றி காணிக்கையாக்கி விட்டு , அமைதியாக நிற்கும் அனுசூயாவைக் கண்டு உள்ளம் பொங்க , கண்கலங்கி நின்றாள் சபர்மதி .அவள் கைகளை அழுந்த பற்றி அவளுக்கு ஆறுதல் உணர்த்திய பூரணன் அனுசூயாவிடம் ” வீட்டிற்குதானே வாம்மா , நாங்களும் அங்கேதான் போகிறோம் “, என அழைத்தான் .

 

” இல்லை ..நான் பஸ்ஸிலேயே ….”

 


” ஐயோ வேண்டாம்மா …இவள் கூட என்னை மீண்டும் தனியாக விட்டுடாதே …ஒரு வழி பண்ணிடுவாள் ..தயவுசெய்து கூட வந்திடு ” சூழ்நிலையை இலகுவாக்க கேலி பேசியபடி இருவரையும் காரில் ஏற்றினான் பூரணசந்திரன் .

 

அவனது பயண அனுபவங்களை உற்சாகமாக கேள்வியாக்கியபடி அனுசூயா வர …

 

ஒன்றுமே பேச தோன்றாது வெறுமனே அனுசூயாவின் கைகளை பற்றியபடி வெளியே வெறித்தவண்ணம் வந்தாள் சபர்மதி.இப்போதைக்கு அனுசூயாவிற்கு சபர்மதியால் அளிக்க முடிந்த ஆறுதல் அவ்வளவுதான .

 

சோலைவனத்திற்கே சுந்தரவடிவும் வந்து விட …மொத்த குடும்பமும் பூரணனுக்காக வாசலிலேயே காத்திருந்தது .சுற்று சுவர் அருகே கார் மெதுவாகும் போதே இறங்கிய அனுசூயா , பின்வழியாக உள்ளே சென்றுவிட்டாள் .ஒரு வருடம் கழித்து பார்த்த மகனை சுந்தரவடிவு உச்சி முகர்ந்தார்., தம்பிக்கு ஆரத்தி எடுக்க அம்சவல்லி வர, சபர்மதியையும் இழுத்து அருகில் நிற்க வைக்கிறான் பூரணன் .

 

” என்ன இது …நான் எதற்கு , என்னை விடுங்க ” சபர்மதி தடுமாற …

 

” ஷ் …சும்மா இரு மதி …அக்காவுக்கு இது ஒரு டிரெய்னிங்  மாதிரி இருக்கட்டும் ” கைகளை இறுக்கிக்கொள்கிறான் .

 

கண்டும் காணாமல் சிரித்துக்கொள்கின்றனர் பெரியவர்கள் .தெளிவான மதியுடனும் , ஒளி நிறைநத கண்களுடனும் ஒரு முழு மனிதனாக  நிமிர்ந்து நின்று  வாழ்த்துக்கள் சொன்ன தர்மனை ஆரத்தழுவிக்கொள்கிறான் பூரணசந்திரன் .

 

“ஏன்டா உன்னைப்பார்த்து ஒரு வருடமாகிவிட்டது , காலையிலேயே இங்கே வந்துவிட்டாய் . அம்மாவை பார்க்க வர இவ்வளவு நேரமா ? ” சிறு கோபத்துடன் சுந்தரவடிவு கேட்க …

 

” என்னம்மா செய்வது ….ஒரு முக்கியமான ஆளை பார்க்க வேண்டியதாகி விட்டது ” கண்கள் சபர்மதியை மொய்க்க வாய் தாய்க்கு பதில் சொல்லியது .

 

நானா …அந்த முக்கியமான ஆள்…சபர்மதியின் உள்ளம் படபடத்தது .

 

” அது யாருடா..அம்மாவை விட அவ்வளவு முக்கியமான ஆள் …” சுந்தரவடிவு விடாமல் விரட்ட …”

 

” அட வேறு யாரும்மா …அந்த பழனிமலை முருகன்தான் …அவரைப்பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டதே , என் கண்ணுக்குள்ளேயே இருந்தார் அவர் .” சமாளித்தான் .

 

சிறு தடுமாற்றத்துடன் கைத்தடி ஊன்றி நடந்த சத்யேந்திரனை ” மச்சான் சாதிச்சிட்டீங்க ” என்று  பாராட்டினான் .

 

“டேய் பரவாயில்லைடா …படிப்புக்கு இப்போ உன்னை கொஞ்சம் பிடிக்க ஆரம்பித்து விட்டது போலவே ….” ராஜனை கிண்டல் செய்தான் .

 


” அக்கா ஊர்சேவையெல்லாம் விட்டுட்டு வீட்டு சேவையில் மட்டுமே மூழ்கிட்டீங்க போலவே …வீடு சும்மா ஜொலிக்கிறதே …” வீட்டை சுற்றி கண்களை ஓட்டியபடி அம்சவல்லியிடம் கேட்கிறான் .

 

” ஆமாம்பா எங்கள் வீட்டிற்குள் வானவில்லை இறக்கி வைத்திருக்கிறோமே …வீடு ஜொலிக்காமல் என்ன செய்யும் …”

 

” அப்படியா …எங்கிருந்து வாங்கினீர்கள் ..?, எனக்கு தெரியாதே “

 

” நீதானேப்பா கண்டுபிடித்து எங்களிடம் சேர்த்தாய் …..”

 

” நானா  …என்றவனின் பார்வை அம்சவல்லியை தொடர்ந்து சபர்மதியிடம் பாய்ந்தது .

 

பாராட்டுவிழாவிற்கு ஸ்வாதி வருவாளே ..நான் எப்படி போவது …? என்ன சொல்லி இங்கேயே தங்கிவிடுவது ….?இப்படி யோசித்தபடி இருந்த சபர்மதி திடீரென அம்சவல்லி தன் தோள்களை அணைத்து ,

 

” இந்த வானவில் வரத்தை எங்களுக்கு அளித்ததற்கு உனக்கு எப்படி நன்றி சொல்லட்டும் ” எனக் கேட்க …அதற்கு பூரணசந்திரன் …

 

” அந்த வரத்தில் எனக்கும் கொஞ்சம் பங்கு கொடுங்கள் போதும் ” என பதில் கொடுக்க …

 

சபர்மதிக்கு தலையை பிய்த்துக்கொள்ளலாம் போல் இருந்தது .என்ன நடக்கிறது இங்கே .ஏன் எல்லோரும் இப்படி புரியாமலேயே பேசித்தொலைக்கிறார்கள் …என்ன வானவில்…என்ன வரம் …அப்பனே முருகா …ஒன்றும் புரியவில்லையே எனக்கு .ஆனால் அந்த ஸ்வாதியை நினைக்கவே பிடிக்கவில்லையே .எப்படி அவள் முன் போய் நிறபது …சில நிமிடம் குழம்பிவிட்டு தனது கவலைக்குள் மீண்டும் புகுந்து கொண்டாள் .

 

சபர்மதி பயந்ததது போலவேதான் அந்த ஸ்வாதியும் நடந்து கொண்டாள் .” உன்னை என்ன சொன்னால் , என்ன செய்கிறாய் ? ” வள்ளென்று விழுந்தாள் .

 

முதலில் விழாவிற்கு கிளம்பவே கூடாது எனும் சபர்மதியின் முடிவை அவள் கைகளை பற்றியபடியே இருந்து பூரணசந்திரன் முறியடித்தான் .

 

” கொஞ்சம் கைகளை விடுங்களேன் …” என்று பல்லை கடித்த  சபர்மதியை ” விட்டால் நீ ஓடி விடுவாயே ” என்றுவிட்டு கைகளை மேலும் இறுக்கிக்கொண்டான் .

 


விழாவில் ஸ்வாதியை  சந்திக்கவே கூடாது என்று விலகி விலகி போனவளை , விரட்டி பிடித்த அவள் இப்படி சீறினாள் .” உன் அம்மாவைப்போல் வாழ தயாராகி விட்டாய் போலவே ” என்ற போது அப்படியே அவளது மூஞ்சியிலேயே ஒன்று போடலாமா ? என்றிருந்தது சபர்மதிக்கு .

 

” இதோ பார் நீ சொன்னது போல் நடக்க நான் ஆளில்லை .அது போன்ற வாழ்வுக்கு நான் தயாரில்லை என்று முன்பே தெளிவாக கூறிவிட்டேன் .எப்படி இதிலிருந து விலக வேண்டுமென எனக்கு தெரியும் .நீ வாயை மூடிக்கொண்டிரு ” பட்டென கூறி அவள் வாயை அடைத்தவளால் …பூரணணின் வாயை அடைக்க முடியவில்லை.

 

ஏதேதோ வேலைகளை காரணம் கூறி , அவளை பின்தங்குமாறு செய்து விட்டு , மற்றவர்களை முதலிலேயே அனுப்பிவிட்டான் பூரணன் .

 

” சொல்லு ஏன் என்னுடன் போனில் பேசவில்லை .என் மெயில்களுக்கு ஏன் பதில் அனுப்பவில்லை .”

 

என்ன சொல்வது விழித்தாள் சபர்மதி .கேட்கலாம்தான் நீயும் ஸ்வாதியும் லவ் பண்ணுகிறீர்களா ..?கேட்கலாம் .இதற்கு இரண்டு பதில்கள்தான் வரும் .ஒன்று ஆமாம் .இரண்டாவது இல்லை .முதலாவது பதிலை பூரணன் வாயால் கேட்கும் தெம்பு சபர்மதிக்கு இல்லை .இரண்டாவது பதிலை சொன்னாலும் அதனை சபர்மதி நம்புவதற்கில்லை .எனவே இதழ்களை இறுக மூடியபடி வெளியே வேடிக்கை பார்க்கலானாள் .

 

பதிலுக்காக சிறிது நேரம் காத்திருந்து பார்த்த பூரணன் , பதில் வராததால் ” பார் சபர்மதி நான் நினைத்ததை விட மிக அழகாக வீட்டையும் , தொழிலையும் நடத்தியிருக்கிறாய் .இந்த குடும்பம் அழிவதை அருகிலிருந்து பார்க்க போகிறேன்னு சபதம் செய்தாய் .ஆனால் இன்று புதைந்து கொண்டிருந்த குடும்பத்தையே தூக்கு நிறுத்தியிருக்கிறாய் …ஏன் …யாருக்காக …?”

 

உங்களுக்காகத்தான் .அம்மா , அப்பா , அண்ணா என ஆயிரம் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் உங்கள் விருப்பத்திற்காகத்தான் …நான் இதனை செய்ய நினைத்ததே .மனதுக்குள் கூறிக்கொண்டாள் சபர்மதி .

 

“அவ்வளவையும் செய்தவள் இன்று ஏன் ஒதுங்கி செல்ல முயற்சிக்கிறாய் .சொல்லு …சபர்மதி …?”

 

” சொல்கிறேன் இப்போது அல்ல …இரண்டு நாட்களில் சொல்கிறேன் “

 

பூரணனிடம் பெரிதாக சொல்லி விட்டு வந்துவிட்டாளே தவிர இப்போது வரை என்ன சொல்வதென சபர்மதிக்கு தெரியவில்லை .போன் ஒலித்தது .போன் சதிஷிடமிருந்து …..உடனே .சபர்மதியின் மனதில் ஒரு திட்டம் உருவானது .




What’s your Reaction?
+1
38
+1
25
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!