Serial Stories

புதுச்சுடர் பொழிந்ததே – 4

4

 


” ஏய் பொண்ணு ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறாய் ? ” விரலால் சொடுக்கிட்டு கேட்டவளை வெறுமையாகப் பார்த்துவிட்டு , ஆனந்தபாலனை பார்த்தாள் .

” பிள்ளை தூங்கினால் உள்ளே கொண்டு போய் படுக்க வைக்காமல் இப்படியே ஏன் உட்கார்ந்திருக்கிறாய் என்று உஷா கேட்கிறாள் “

அவளுக்கு நீ என்ன பொழிபெயர்ப்பாளராடா ? பட்டென வழியத் துடித்த வார்த்தைகளை விழுங்கியவள் ” குழந்தை இரவெல்லாம் உறங்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தான் மேடம் ” என்றாள் .

” ப்ச் , அது தெரிந்ததுதானே ! வேறு ஏதாவது இருக்கிறதா ?” உஷாந்தி எதிர் சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டாள் .

சை ..என்ன அம்மா இவள் ? சுடரொளியின் பார்வை இப்போது ஆனந்தபாலனுக்கு மாறியது .நீயாவது உணர்ந்து கொள்வாயா …என்றுக் கேட்ட அவளது பார்வையை சந்திக்காமலேயே ” முதலில் அமிர்தபாலனை பெட்ரூமுக்குள் படுக்க வைத்துவிட்டு வாருங்கள் மேடம் ” என்றான் .

சுடரொளி சட்டென எழுந்து விட்டாள் .மேடமாம் மேடம் …பேசும் லட்சணத்தை பார் .பூப் போல் பிள்ளையை தாங்கிப் போய் படுக்கையில் கிடத்தி விட்டு வந்தாள் .

ஆனந்தபாலனின் மகன் அமிர்தபாலன் .பிள்ளையின் பெயர் அவளுள் அமிர்தமாக இறங்கியது .

” இங்கே பாருங்கள் மேடம் .நாங்கள் இருவருமே கொஞ்சம் பிசியானவர்கள் .எனக்கு எஸ்டேட் வேலைகள் .உஷா மாஸ்டர்ஸ் படிக்கிறாள் .அவளுக்கு பாட வேலைகள் .எங்கள் இருவராலுமே குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாது .அதனால்தான் அமிர்தனை கவனிக்க ஒரு ஆள் போட முடிவெடுத்து விளம்பரம் கொடுத்தேன் “

” எல்லோருக்கும் வேலைகள்தான் சார் .ஆனால் நம் குழந்தையை நாமேதான் வளர்க்க வேண்டும் சார் .படிப்பு எங்கேயும் ஓடி விடாது சார் .குழந்தை கொஞ்சம் வளர்ந்த பிறகு படித்துக் கொள்ளலாமே சார் ? ” அவனது மேடத்திற்கு பதிலடியாக வாக்கியத்திற்கு வாக்கியம் சார் சேர்த்தாள் .




” அதை நீ சொல்லாதே ” அலறினாள் உஷாந்தி .” என் ப்யூச்சர் .எனக்குத்தான் தெரியும் “

ஆனந்தபாலனின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை .கருங்கல்லை முழுங்கியவன் ஜீரணிக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தை கடப்பவன் போலொரு முகபாவத்தில் இருந்தான் . அவளது சாரின் பிரதிபலிப்பு அவனிடம் ஏதுமில்லை .

” பாருங்க மேடம் .அவரவர்க்கு அவரவர் நியாயங்கள் . பெற்ற பிள்ளையை கவனிக்க முடியாமல் என்ன வேலை என்று வெளியாட்கள்  கேட்கலாம் . ஆனால் இங்கிருக்கும் நிலைமை அவர்களுக்கு தெரியாது . அமிர்தன் இப்போதெல்லாம் ரொம்பவே அடம் பிடிக்க தொடங்கிவிட்டான் .எனக்கோ , உஷாவுக்கோ அவன் கட்டுப்படுவதே இல்லை “

” குழந்தையும் , தெய்வமும் குணத்தால் ஒன்று சார் .இரண்டு பேருமே கொண்டாடுகிற இடத்தில் என்பார்கள் . நாம் குழந்தையை கவனிக்காவிட்டால் அவர்கள் இப்படித்தான் பிடிவாதக்காரர்களாக மாறி விடுவார்கள் “

” அட , உங்களுக்கு குழந்தைகளை பற்றி நிறைய விபரங்கள் தெரிகிறதே ? உங்களுக்கு எத்தனை குழந்தைகள் மேடம் ? ” கேட்ட பின் உயர்ந்த அவன் புருவங்களை இழுத்து நறுக்க வேண்டும் போல் அவளிடம் ஒரு வேகம் .

பல்லைக் கடித்து தன்னை சமாளித்தவள் நக்கல் புன்னகை ஒன்றை இதழ்களில் தவழ விட்டாள் .” எனக்கு இன்னமும் கல்யாணமே ஆகவில்லை சார் “

” வாட் , எப்படியும் உனக்கு நாற்பது வயதிருக்காது ? இன்னமுமா கல்யாணம் ஆகவில்லை ? ” கேட்டது உஷாந்தி .

இந்தக் கேள்வியில் சுடரொளியின் தேகம் எரிந்தது .சூடாக பதில் பேச எண்ணி வாயை திறந்தவள் , ஆனந்தபாலன் தனது பதிலுக்காக ஆவலாக காத்திருப்பதை உணர்ந்ததும் , வார்த்தைகளை விழுங்கி அழகாக புன்னகைத்தாள் .

” உங்கள் கணிப்பு சரிதான் மேடம் .எனக்கு நாற்பத்தியிரண்டு வயதாகிறது .இன்னமும்  மாப்பிள்ளை கிடைக்கவில்லை .அதனால் கல்யாணம் ஆகவில்லை . எனக்கு யாராவது நல்ல மாப்பிள்ளை இருக்கிறார்களா  மேடம் ? சொல்லுங்களேன்….ப்ளீஸ் ” தலை சரித்து கெஞ்சியவளை உஷாந்தி முறைத்தாள்.




” நான் மேட்ரிமோனியல் சைட் நடத்தவில்லை “

” நீங்கள் நடத்தவில்லையென்றாலும் , உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் நடத்தினால் சொல்கிறீர்களா ? நல்ல நிறமாக , உயரமாக , நன்றாக படித்த ஒரு மாப்பிள்ளை எனக்கு வேண்டும் .வயது முப்பது வரை இருக்கலாம் .பார்க்கிறீர்களா ? “

” ஆனந்த் என்ன இது ? இந்தப் பெண் எதுவும் மனநிலை பாதிக்கப்பட்டவளா ? ஒரு மாதிரி பேசுகிறாளே ? இவளிடம் எப்படி குழந்தையை ஒப்படைக்க முடியும் ? ” உஷாந்தியிடம் உண்மையிலேயே இப்போது அந்தக் கவலை வந்திருந்தது .

” விடு உஷா .உனக்கு கிளாசுக்கு நேரமாகிவிட்டது .நீ போய் அதை பார் .இவளை …நான் பார்த்துக் கொள்கிறேன் “

அவனது பார்த்துக் கொள்கிறேன் உச்சரிப்பில் வித்தியாசம் தெரிய அவனை ஏறிட்டு பார்த்தவள் , அவனது ப்ரௌன் விழிகளில் மின்னிய சிரிப்பை உணர்ந்தாள். மடிந்து கிடந்த அவனது உதடுகளுக்குள் சிரிப்பு மறைந்து கிடந்தது.

எதற்கு இளிக்கிறானாம் ? அப்படி என்ன நகைச்சுவை செய்து விட்டேனாம் ? அவனை முறைக்க, அவன் இவளுக்கு மிக அருகே வந்தான் .

” எ…என்ன …? ” வேகமாக பின் வாங்கினாள் .

” ம் …உயரம் ,நிறம் , வயது …ப்ச் மாப்பிள்ளை என்னைப் போல் இருந்தால் போதுமா மேடம் ? “

” என்ன ? ” அவனிடம் இந்தக் கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை .

” நீங்கள் என்னைத்தானே விரும்புகிறீர்கள் ? ஐ மீன் என்னைப் போல ஒரு வாலிபனை …ம் ? “

” கல்யாணமாகி ஐந்து வயதில் பிள்ளை வைத்திருக்கும் அரைக் கிழடையெல்லாம் நான் விரும்புவதில்லை “

பொத்து வந்த சிரிப்பை அவன் அடக்கினான் .” ஆனால் எனக்கு விருப்பம் உண்டு “

” எ…என்ன …எதில் விருப்பம் ? ” அவளுக்கு ஏனோ வயிற்றில் புளி கரைத்தது.




” போர்வையை சேலையாக மாற்றிக் கட்டிக் கொண்டு , டேபிள் லென்சை கண்ணில் மாட்டிக் கொண்டு , எண்ணெய் வழிய வழிய கொண்டை போட்டுக் கொண்டிருக்கும் நாற்பத்தியிரண்டு வயது பெண்ணின் மீது “

சுடரொளி கண்களை இறுக மூடி நின்றாள் .மனங்கவர்ந்தவனின் முன்னால் எந்தப் பெண்ணும் இப்படி ஒரு தோற்றத்தில் இருப்பதை விரும்புவதில்லை .இது அவளது திருமணத்தை நடத்தியே தீருவேன் என்று பிடிவாதமாக நின்ற தந்தைக்காக அவள் மேற்கொண்ட வேடம் .

என் வாழ்வில் எல்லாமும் முடிந்துவிட்டது .நான் வயோதிகத்தை தொடத் தொடங்கி விட்டேன் என அப்பாவின் பிடிவாதத்திடம் நாடகமாடினாள் .கூடவே தனது மனதையும் ஒரு கட்டுக்குள் வைத்துக் கொண்டாள் .

வரம் கேட்டு வயோதிகம் வாங்கிக் கொண்ட ஔவையாராக நின்றிருந்தவளை இமைக்காமல் பார்த்தான் ஆனந்தபாலன் .

ஒற்றை விரலால் அவள் உச்சி தொட்டான் .” இது என்ன கோலம் …ம் ? “

உரிமை கலந்த செல்ல அதட்டலாய் வெளிவந்த அவனது கோபத்தை விழி மூடி ஒரு நொடி அனுபவித்து நின்றவள் , திடுமென நிகழ் உறைக்க , உச்சந்தலை தொடுதல் சூட்டுக்கோலாய் தகிக்க , அவனை விட்டு விலகி நின்றாள் .

” நீங்கள் வரம்பு மீறுகிறீர்கள் சார்.உங்களிடம் வேலைக்கு வரும் பெண்ணிடம் இப்படித்தான் முறைகேடாக நடந்து கொள்வீர்களா ? “

” முறைகேடா ? நான் நடந்து கொண்டதா ? நீ செய்த செயல்களா ? “




” நான் செய்த எல்லாமே சரிதான் .தப்பான ஒன்றை நான் இது வரை செய்ததே இல்லை .தவறுகளும் , பாவங்களும் செய்திருப்பது நீங்கள்தான் “

” உன் செயல்களின் சரி தவறை உணர முடியாதவளுக்கு , என் பாவங்களை சாட உரிமையில்லை “

எவ்வளவு திமிர் ? இவனையே மனதில் நினைத்து , பெற்றவர்களையே  மனம் கலங்க வைத்து ,யோகினியாய் வாழ்ந்து கொண்டிருப்பவளை , உடனே திருமணம் முடித்து ஆனந்தமாய் குழந்தையும் பெற்றுக் கொண்ட இவன் கேள்வி கேட்கிறான் .

சுடரொளி மௌனமாக திரும்பி வீட்டினுள் நடந்தாள் .” ஏய் எங்கே போகிறாய் ? “

” என் ஊருக்கு கிளம்புகிறேன் .எனக்கு இங்கே வேலை பார்க்க விருப்பமில்லை “

” ஏன் என்னைப் பார்த்து பயமா ? “

சட்டென நின்று திரும்பினாள் .” உங்களைப் பார்த்து நான் ஏன் பயப்பட வேண்டும் ? “

” என் அழகை பார்த்து …திரும்பவும் இவனிடம் விழுந்து விடுவோமோ என்ற பயம் “

சுடரொளி காதுகளை தேய்த்து விட்டுக் கொண்டாள் .தன் காது கேட்கும் வார்த்தைகளை அவளால் நம்பவே முடியவில்லை .

” மீண்டும் மீண்டும் தவறு செய்ய நான் அவ்வளவு முட்டாள் இல்லை “

ஆனந்தபாலன் அவளருகே வந்திருந்தான் .” இதிலெல்லாம் சரி தவறே கிடையாது சுடர் .நமக்கு பிடித்திருந்தால் எல்லாமே சரிதான் ” சொன்னதோடு அவள் கையையும் பற்றியிருந்தான் .

” சீ …” ஒரு சத்தமான அலறலோடு அவனை விட்டு விலகியிருந்தாள் அவள் .

” நீ…நீ …எவ்வளவு பெரிய அயோக்கியன்.உ…உன்னைப் பற்றி உன் மனைவியிடம் சொல்கிறேன் ” விடு விடுவென மாடியேறி ஓடியவளை புன்னகையோடு பார்த்திருந்தான் அவன் .




What’s your Reaction?
+1
53
+1
35
+1
4
+1
3
+1
3
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!