Serial Stories

புதுச்சுடர் பொழிந்ததே – 3

3

 

 


” துரையும் , துரையம்மாவும் அம்மணி கும்புட்டுக்கனும்  ” வேணுகோபாலன் சொன்ன பிறகும் அவள் கைகள் அசையவில்லை .நேர் வெறித்த பார்வையுடனேயே நின்றிருந்தாள் .

அறையினுள் பரவியிருந்த சோம்பல் மஞ்சள் ஒளி உள்ளே மட்டும் இருட்டை சமாளிக்க , வாசல்புறம் மை தடவினாற் போன்றே இருந்தது .வரும் ஆட்கள் எண்ணிக்கை தெரிய குழந்தையும் அவன் பெற்றோரும் என தீர்மானித்து பார்த்தபடி இருந்தவள் , அவர்கள் அருகே நெருங்க நெருங்க அதிர்ந்தாள் .

கரும்பச்சையில் வெள்ளி நிற சரிகை வேலைப்பாடுகள் செய்திருந்த , வந்து கொண்டிருந்தவளது பளபள சேலை அரை இருளில் மின்னியது .அவளும்தான் .நல்ல அழகி என இருளை விரட்டிய சிறு ஒளி சொல்ல , அவளை அடுத்து வந்தவனிடம் பார்வையை போட்டவள்தான் அதிர்ந்தாள் .

அவன் மட்டும்தான் இப்படி நிலையை தொடுமளவு உயர வளர்ந்திருக்க முடியும் .அவனுக்கு மட்டும்தான் இப்படி இருளிலும் தெரியும் வெண்ணிறம் இருக்க முடியும் .

அ…அவன் …அவனேதானா …? ஆனந்தபாலன் .அவளது வாழ்வை புயலாக வந்து சூறையாடியவன் .இவனிடமா அவள் வேலைக்கு வந்திருக்கிறாள் . இவன் குழந்தையையா அவள் பார்த்துக் கொள்ள வந்திருக்கிறாள் ? கு…குழந்தை …அப்படியானால் இவனுக்கு திருமணம் ஆகி விட்டது.




தொடர் கேள்விகளில் குழம்பிய அவள் மூளை சிறிது நேரம் தனது ரத்தம் கடத்தும் பணியில் ஸ்தம்பிக்க , கண்கள் சொருகி மயக்கத்திற்கு போனாள் அவள் .

” ஏய் …யார் வேணு இது ?இப்படி நடுவீட்டிற்குள் வந்து நின்று கொண்டு மயங்கிப் போவது ? ” கத்தலாக கேட்டபடி அவளருகே வந்து நின்று எட்டிப் பார்த்தாள் அந்தப் பெண் .

” கொஞ்சம் பொறு உஷாந்தி .யாரென்று பார்க்கலாம் ” ஆனந்தபாலன் தனது செல்போன் டார்ச்சை உயிர்ப்பித்தபடி அருகே வந்தான் .

” நம்ம சின்னதுரையை பார்த்துக்க வருவாகன்னு சொன்னீகளே ! ஆ பெண்குட்டி அம்மே ! என்ன ஆச்சோ அறியலியே ! ” தண்ணீர் கூஜாவை எடுத்தார் வேணுகோபாலன் .

” ஏதோ பய மயக்கம் போல .சரியாயிடும்.ரெஸ்ட் எடுக்கட்டும்  ” சொன்ன ஆனந்தபாலன் குனிந்து அவளை அள்ளித் தூக்கிக் கொண்டான் .

” ஆனந்த் என்ன இது ? வேலைக்காரர்களை கூப்பிட்டு தூக்கச் சொல்லாமல் …” உஷாந்தி சொல்லச் சொல்லவே உள்ளே நடந்துவிட்டான் .அவள் பின்னேயே சென்றாள் .

படுக்கையில் சுடரொளியை கவனமாக படுக்க வைத்தவனை முறைத்தபடி நின்றாள் .” எதற்காக ஒரு வேலைக்காரிக்கு இத்தனை அக்கறை ஆனந்த் ? நீங்களே சுமக்க வேண்டுமென்று என்ன கட்டாயம் ?  “

” வேணுகோபால் வயதானவர் .அவரால் முடியாது . இப்போது வேறு வேலையாட்கள் இங்கே இல்லை .நாளை காலை வரை இவளை இப்படியே கிடக்கட்டுமென்று விட்டு விடச் சொல்கிறாயா ? இவளுக்கு ஏதாவது ஆனால் பழி நம் மீதுதான் வரும் .நம்மிடம் வேலைக்கு வருபவர்களின் முழு பொறுப்பும் எப்போதும் நம்முடையதுதான் உஷா .இதனை உனக்கு பலமுறை சொல்லியிருக்கிறேன் “

” கூடுதலாக ஆயிரம் ருபாயை விட்டெறிந்தால் சலாமிடப் போகிறார்கள் .அதை விட்டு …சை …என்னவோ போங்கள் ” உஷாந்தி வெளியே போய்விட , ஆனந்தபாலன் படுக்கையில் துவண்டு கிடந்தவளை சிறிது நேரம் பார்த்தபடி நின்றான் .பிறகு பெருமூச்சுடன் வெளியேறினான் .




சுடரொளியின் மயக்கம் தூக்கமாகி தொடர்ந்து ஏதோ ஒரு மன முணுமுணுப்பினால்  முன் காலையில் கலைந்தது. மூன்று மணி எனக் காட்டிய தனது செல்போனை பார்த்து விட்டு சட்டென எழுந்து அமர்ந்தாள் .உடனேயே நடந்த சம்பவங்களனைத்தும் படிப்படியாக நினைவு வர , அவள் உடலில் ஓர் பரபரப்பு பற்றிக் கொண்டது.

இல்லை …இனி ஒரு நிமிடம் கூட இங்கே இருக்கக் கூடாது .இ…இவன் வீட்டில் அவளுக்கு வேலையா ?அதுவும் அவன் குழந்தையை பார்த்துக் கொள்வதா ? ஆனால் இவன் எப்படி இவ்வளவு வசதி படைத்தவனானான் ? தனது போனில் அக்கவுன்ட் பேலன்ஸ் பார்த்து பார்த்து செலவழிக்கும் ஆனந்தபாலன் அவள் நினைவிற்கு வந்தான் .

ஏதோ கோர்ஸ் படித்துக் கொண்டிருப்பதாக சொல்வான் .பார்ட் டைம் வேலை பார்ப்பதாக சொல்வான் .மிக சொற்ப பணமே அவனிடம் புழங்கும் . அவர்கள் இருவரும் வெளியே போகும் போது இவள் செலவழிக்க முன் வந்தாலும் அவன் மறுப்பான் .அப்போதெல்லாம் சிறு அவமானத்தில் சிவக்கும் அவன் முகத்தை பார்த்தவள் , இனி அவர்களது அவுட்டிங் செலவில் இருவருக்கும் சரி பாதி எனச் சொல்லி அதனையே செயல் படுத்தியும் வந்திருந்தாள் .

இ…இப்போது இவ்வளவு பெரிய வீட்டின் உரிமையாளன் இவனா ? ஆக இவன் உண்மையிலேயே துரைதான் .சுடரொளியின் உள்ளம் அழுதது. முன்பே பிரிந்து போய்விட்டவன்தான் .எனினும் இப்போது வானேறி நின்று கொண்டிருப்பதாக உணர்ந்தாள் .

அந்த வான் சிம்மாசன மகாராசாவிடம் கை கட்டும் பணி அவளுக்குத் தேவையில்லை .பிரித்து அடுக்கியிருந்த தனது துணிகளை மீண்டும் மூட்டை கட்டினாள் .டிராலியை உருட்டியபடி அறையை விட்டு வெளியே வந்தாள் .வீட்டினுள் ஆங்காங்கே சில சிறிய இரவு விளக்குகள் எரிய , அது ஒரு வகை அமானுஷ்ய தோற்றத்தை வீட்டிற்கு கொடுத்தது .

டிராலியை உருட்டாமல் தூக்கிக் கொண்டு இரண்டாம் கட்டிலிருந்து முதல் கட்டிற்கு வந்தவள் திகைத்தாள் . அங்கே கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது .எட்டிப் பார்க்க டிவி ஓடிக் கொண்டிருந்தது .

யார் …அவனா …? ஒரு வேளை என்னைப் போல் தூக்கம் வராமல் டிவி பார்த்துக் கொண்டிருக்கின்றானோ ? ஏதோ எதிர்பார்ப்பில் ஹாலுக்கு வந்தவள் சோர்ந்தாள் .அங்கிருந்த சோபாவில் சாய்ந்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தது அந்தக் குட்டிப் பையன் .ஆனந்தபாலனின் மகன் .




குழந்தை கவனிப்பு என்றதும் தனது மனக்காயத்திற்கான சரியான வேலையென்று எண்ணி வந்தவள்தான் .இப்போதோ அந்தக் குழந்தையையே வெறுத்தாள் .அவன் அருகில் செல்லக் கூட விரும்பவில்லை .மீண்டும் அறைக்குள் வந்தாள் . சிறிது நேரம் அங்குமிங்கும் நடந்தபடி இருந்தவள் அரை மணி நேரம் கழித்து மீண்டும் போய் பார்க்க , அப்போதும் குழந்தை அதே நிலையில் சரிந்து டிவியில் பார்வை பதித்திருந்தான் .

ஏனோ இப்போது ஒரு வித பரிதாபம் அவளுள் பிறக்க , அவன் முன் போய் நின்றாள். விழிகளை மட்டும் நகற்றி அவளை பார்த்துவிட்டு மீண்டும் டிவியில் பார்வை பதித்துக் கொண்டான் .

” ஹாய் பேபி “

” நான் பேபி இல்லை .பாய் ” துடுக்காக பதில் வந்தது.

சுடரொளிக்கு தானே இதழ்கள் புன்னகைத்தன.

” ஓ.கே ,பாய் .நீங்க தூங்கலையா ? “

” தூக்கம் வரலை “

” ஏன்மா தூக்கம் வரலை ? ” மென்மையாக அவன் தலையை கோத , பட்டென தட்டி விட்டான் .

” எனக்கு நைட் தூக்கம் வராது . என்னைத் தொடாதே “

” அச்சோ ! இது தப்பாச்சே . உன் அப்…வந்து சாரும் , மேடமும் என்ன செய்கிறார்கள் ? ” அப்பா , அம்மா என அவர்களை குறிப்பிட அவளுக்கு மனதில்லை .

” அவர்கள் தூங்குகிறார்கள் ” மீண்டும் தலை நகர்த்தி வருட வந்த அவள் கையை தவிர்த்தான் .

குழந்தை தூக்கம் வராமல் தவித்திருக்கிறான் .பெற்றோருக்கு ஆனந்தமாக தூக்கம் வருகிறதாக்கும் ? சுடரொளிக்கு மிக உடனே இதனை அவர்கள் முகம் பார்த்துக் கேட்க வேண்டுமென தோன்ற கஷ்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்தினாள் .




” நீங்கள் எப்போது தூங்குவீர்கள் பேபி…சாரி பாய் ? “

” வெளிச்சம் வந்ததும் “

இதென்ன அநியாயம் ! இவர்கள் என்ன பிள்ளை வளர்க்கிறார்கள் ? அவளுக்கு அப்போதுதான் தனக்கு கொடுத்திருக்கும் பணி நினைவு வந்தது .

ஆக , இவர்களால் குழந்தையை கவனிக்க முடியாமல் அதற்கொரு ஆள் போட்டாகிறதாக்கும். சை பணம் படைத்தவர்களின் பாசமற்ற அலட்சிய போக்கு .சுடரொளி ஒரு முடிவெடுத்தாள் .இன்று ஒரு நாளாவது இருந்து இந்தக் குழந்தையை உறங்க வைத்துவிட்டு போகலாமென்று .

” குட்டி என்கிட்ட வாங்க .உங்களை நான் தூங்க வைக்கிறேன் “

” நான் குட்டி இல்லை .பாய் .உன்கிட்டேயெல்லாம் வர முடியாது . எனக்கு தூங்க பிடிக்காது “

” நான் தூங்க வைக்கிறேன் .பிடிக்கும் பாருங்களேன். வாங்க “

நீண்ட அவள் கரங்களை தட்டி விட்டான் .” முடியாது .எனக்கு உன்னையும் பிடிக்காது .தூங்கவும் பிடிக்காது .நீ ஏன் இங்கே இருக்கிறாய் .போ .நான் வரும்போதே உன்னை பாலால் அடித்தேனே .பிறகும் நீ ஏன் போகவில்லை ? “

சுடரொளி அதிர்ந்தாள் .பந்து தெரியாமல் தன் மேல் பட்டதாகத்தான் இது வரை நினைத்திருந்தாள் .இந்த சின்னக் குழந்தைக்கு இவ்வளவு வன்மமா ?

” ஏன்மா என்னை அடித்தாய் ? “

” நான் டிவி பார்க்க வேண்டும் .தள்ளிப் போ “




அதன் பிறகு குழந்தை பதில் சொல்வதை நிறுத்திக் கொண்டான் .டிவியின் கார்ட்டூன் கேரக்டர்களுடன் ஒன்றிப் போனான் .அதன் பிறகு சுடரொளி கேட்ட கேள்விகள் ஒன்றிற்கு கூட பதில் சொல்லவில்லை .அவளும் குழந்தையருகிலேயே அமர்ந்து விட்டாள் .

என்ன வளர்ப்பு இது ? பெரியவர்களிடம் மரியாதையின்றி  பேசுவது , எந்நேரமும் டிவியில் முழுகிக் கிடப்பது .வன்முறையில் இறங்குவது …இந்தக் குழந்தையை இப்படியே விட்டுப் போக அவளுக்கு மனதில்லை .

அந்த வீட்டு துரைக்கும் , துரையம்மாவிற்கும் விடியல் என்பது காலை ஒன்பது மணிதான் போலும் .ஒன்பது மணிக்கு மாடியிறங்கி வந்தவர்கள் தூங்கும் குழந்தையை தன் மடியில் போட்டபடி அமர்ந்திருந்தவளை கேள்வியாகப் பார்த்தனர் .




What’s your Reaction?
+1
46
+1
38
+1
4
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!