Serial Stories vanavil devathai வானவில் தேவதை

வானவில்  தேவதை – 7

ஏழு

 

 சபர்மதியின் நம்பிக்கையை மெய்யாக்குவது போல் கதவு தட்டப்பட்டது .வேகமாக அக்காதான் என எண்ணியபடி கதவை திறந்தவள் ஏமாந்தாள் .வாசலை அடைத்தபடி ஐம்பதை எப்போதோ தாண்டியிருந்த ஒரு உருவம் .

 

இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே …? புருவம் சுருக்கி யோசித்தாள் .

 

“வணக்கம்மா …”

 

“வணக்கம் ” கை குவித்தாள் .

 




“என்னம்மா அடையாளம் தெரியலையா ? அது சரி பார்த்து மூணு வருசத்துக்கு மேலேயே இருக்குமே .நீங்க இதுக்குள்ள பல பேரை பார்த்திருப்பீங்க .என்னை நினைவிருக்குமா ?…பல்லிளித்தது .

 

நினைவு வந்துவிட்டது .இந்த அபார்ட்மெண்ட் ஓனர் .மூன்று வருடத்திற்கு முன்பு வாடகை ஒப்பந்தம் போடும்போது பார்த்தது .அன்று அவரது வீட்டில் அவர் மனைவியோடு இருந்தபோது எவ்வளவு பவ்யமாக இருந்தார் .என் மகள் மாதிரிம்மா நீ என்று கூட சொன்ன நினைவு .

 

இன்று அவரது பார்வை பேச்சு எதுவும் சரியில்லையே .முருகா காப்பாற்றுப்பா ..மனதிற்குள் வேலனை தொழுதபடி

“சொல்லுங்க சார் என்ன வேணும் “

என்றாள் .

 

“ம் …கேட்டதெல்லாம் கொடுத்திடுவியா..?” என்றது கிழம் .

 

கண்ணகி பார்வை பார்த்தாள் சபர்மதி .

 




“அட ஏன்மா இப்படி பார்க்கிற ?, அட்வான்ஸ் இரண்டு லட்சம் எப்ப தர போறேன்னுதான் கேட்டேன் “…

 

அட்வான்சா …”என்ன சார் சொல்றீங்க அதுதான் ஏற்கெனவே கொடுத்தாச்சே.இப்ப என்ன திரும்பவும் ?”

 

“கொடுத்ததைத்தான் உங்க அக்கா வாங்கிட்டு போயிட்டாளே “இலகுவாய் தலையில் இடி இறக்கியது அந்த கிழம் .

 

“என்னது ” அதிர்ந்தாள் .

 

“ஆமம்மா …முதல்ல ஒரு லட்சம் கொடுத்தீங்க .இப்ப கூடுதலா இன்னொரு லட்சம் உங்க அக்காகிட்ட கேட்டிருந்தேன்.இப்ப ஒரு லட்சத்தை திருப்பி குடுங்க .ஒரே வாரத்துல இரண்டு லட்சமா எங்க சப்பு உங்களுக்கு கொடுப்பான்னு போன வாரமே வாங்கிட்டு போயிட்டா உங்க அக்கா “

 

தன் காதுகளை தேய்த்து விட்டுக்கொண்டாள் சபர்மதி .ஏதேதோ தவறாக காதில் விழுகிறதே .

 

“இல்லை சார் அப்படி நடக்க வாய்ப்பில்லை .அப்படியே இருந்தாலும் நீங்க என்னை கேட்காம எப்படி அவளுக்கு பணம் கொடுக்கலாம். .நான்தானே உங்க வாடகை ஒப்பந்ததாரர் ” சுதாரித்து அடித்து பேசினாள் சபர்மதி .

 




“இங்கே பாருங்க ,நாங்கெல்லாம் வேற ஊருக்கு போக போகிறோம் இங்கே சபர்மதி மட்டுந்தான் தனியா இருப்பாள் .எங்ககிட்ட அந்த அட்வான்ஸ் ஒரு லட்சம் கொடுத்திடுங்க ,அவகிட்ட உங்களால முடிஞ்ச அளவு வசூல் பண்ணிக்கிறது உங்க சாமர்த்தியம் “என்று ஏதோ சுட்டிக்காட்டிய  பெருந்தேவியின் வார்த்தைகள்

அந்த ஓனரின் காதுகளில் இப்போதும் ஒலித்தது .

 

“அதனால் என்ன குழந்தை …நீ என் பொண்ணு மாதிரி ,உன்கிட்ட போயி நான் பணப்பேச்சு பேசுவேனா ? எந்த அவசரமும் இல்லை .நீ மெதுவாகவே கொடு .நான் அடுத்த வாரம் வர்றேன் .” பேசியபடியே எதிர்பார்க்காத நேரத்தில் அவள் கன்னத்தை வருடி விட்டு வேகமாக போய்விட்டது அந்த ஜந்து .

 

அடிவயிற்றை புரட்டிக்கொண்டு வாந்தி வர வேகமாக குளியலறை சென்று கன்னம் எரிய எரிய தேய்த்து தேய்த்து கழுவினாள் சபர்மதி .

 

நாய் !…தெருநாய் …! காறி துப்பினாள் .

என்ன செய்ய …தலையை பிடித்தபடி யோசித்தாள் .அவள் மீதும் அக்கறை கொண்ட நண்பர்கள் சிலர் ஞாபகம் வந்தது .எல்லாருடைய போன் நம்பரும் அவள் கைபேசியில் இருக்கிறது .போனிற்கு ஆசைப்பட்டு அதையும் தூக்கிக்கொண்டு போய்விட்டது அந்த கொள்ளைக்கூட்ட கும்பல் .

 

ஒரு நம்பராவது மனதில் இருக்கிறதா ? முன்னேறிய விஞ்ஞானத்தை நொந்து கொண்டாள் .

 




நேரில்தான் போய் பார்க்க வேண்டும் .உதவக்கூடும் என்று அவள் எண்ணிய ஓரிரு நண்பர்களின் இருப்பிடம் போய் பார்ப்பதற்கு பதில் சேனல் அலுவலகத்திற்கே போய்விட எண்ணினாள் .

 

போனால் போகட்டுமென பெருந்தேவி விட்டுப்போயிருந்த சில பழைய சுடிதார்களும் ,உள்ளாடைகளும் ஒரு பேக்கில் சுருண்டு கிடந்தது .

 

மனதிற்குள்ளாக குமுறியபடியே குளித்து தயாராகி ,ஆட்டோவில் சேனல் அலுவலகத்தை அடைந்தாள் .

 

இனி இங்கே வரவே போவதில்லை என நேற்றுத்தானே நினைத்தாள் .நேற்றைய நிகழ்ச்சிகளெல்லாம் எப்போதோ போன ஜென்மத்தில் நடந்தது போல் தோன்றியது .

 

என்ன செய்யப்போகிறாள் என கேட்டால் அவளுக்கே தெரியவில்லை .ஆனால் அந்த ஓனர் கிழத்திடம் இரண்டுலட்சத்தை ஒரு வாரத்திற்குள் தூக்கியெறிய வேண்டும் என்ற வேகம் மட்டும் இருந்தது .

 

அது முடியவில்லையெனில் வீட்டை காலி செய்துவிட்டு ஏதாவது நல்ல ஹாஸ்டலில் தங்கியபடி தொடர்ந்து சீரியல்களில் நடிக்க வேண்டியதுதான் தனக்குள் திட்டமிட்டபடி நடக்க தொடங்கியவளின் கால்கள் திடீரென பின்னினாற்போல் நின்றன .

அவனை எப்படி மறந்தாள் ? பாலனை ? அவனால்தானே இனி இந்த பக்கமே வரக்கூடாதென எண்ணியிருந்தாள் .நேற்று அவன் என்னென்னவோ பேசி விட்டானே .அதன் பிறகு பெருந்தேவி செய்த துரோகமும் ,இன்று காலை அந்த கிழம் செய்த கோலமும் பாலனை கிட்டத்தட்ட மறக்க வைத்திருந்தது .

 

கடவுளே ! முருகா !..என்ன செய்யப்போகிறேன் நான் …குழம்பியபடி அதே இடத்தில் நின்றாள் .

 

“மேடம் …மேடம் …இரண்டு முறை அழைத்த பின்பே நிமிர்ந்து பார்த்தாள் .

 




அலுவலக ப்யூன் .,”என்ன மேடம் இங்கே நின்னுக்கிட்டிருக்கீங்க உங்களை இன்னைக்கு காலைல இருந்து எம் டி தேடுறாரு .போன் போட்டா எடுக்க மாட்டேங்கிறீங்களாமே .போங்கம்மா ஆபிஸ்லதான் இருக்காரு .போய் பாருங்க “என்றுவிட்டு போய்விட்டான்

இது நல்லதிற்கில்லை .மனதில் ஒரு பட்சி சொன்னது சபர்மதிக்கு .பேசாமல் திரும்பி ஓடிவிடலாமா ? ம்ஹும் அது தப்பு .என்ன பிரச்சினையா இருந்தாலும் பார்த்திடுவோம் .வேகமாக நடந்தாள் .

“உட்காரும்மா , உடல் நடுக்கத்தை வெளிக்காட்டாமல் அமர்ந்தாள் .

 

“இங்கே பாரும்மா ,எங்களுக்கு உன்னை தெரியாது .உங்க அக்காதான் நம்ம சேனல்ல சின்ன சின்ன ரோல் பண்ணிக்கிட்டிருந்தாங்க.அதை வச்சு உனக்கும் இங்க சான்ஸ் கொடுத்தோம் .நீ இந்த சேனலோட விதிமுறைகளுக்கு பலதடவை கட்டுப்பட மறுத்தப்பெல்லாம் உங்க அக்கா வந்து கேட்டுக்கிட்டதாலதான் உன்னை நாங்க உன் விருப்பத்திற்கு விட்டோம் .

 

ஆனா நேற்று இரவு உங்க அக்கா வந்து  இனிமேல் உனக்கும் அவுங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டு போயிட்டாங்க .அதனால் நம்ம பழைய ஒப்பந்தம் முடிவுக்கு வருது .

 

இதோ நமது புது ஒப்பந்தம் .இதில் கையெழுத்து போட்டுவிட்டு இன்னைலயிருந்து வேலையை தொடங்கு “

 

ஒப்பந்த பத்திரம் ஒன்று அவள்புறம் தள்ளப்பட்டது .சானலின் எல்லாவித நிகழ்ச்சிகளிலும் எந்தவொரு நிபந்தனையுமின்றி கலந்து கொள்வதாக அதிலிருந்தது .மேலும் சம்பள விவரங்கள் .பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டவர்களுக்கு இது ஒரு நல்ல ஆபர் .

 




ஆனால் மானம் மரியாதைக்காக தனது திறமைகளையெல்லாம் அடுப்பு விறகாக்கியபடி தனது சகோதரன் வீட்டு அடுப்போடு எரிந்து கொண்டிருந்த தமயந்தியின் மகளுக்கு இது எரிக்கும் சூரியகதிர் .

 

தலை நிமிர்த்தி கம்பீரமாக,” நான் மறுத்தால் …? என வினவுனாள் .

 

“சிம்ப்பிள் எங்களுக்குரிய நஷ்ட ஈட்டினை கொடுத்து விட்டு நீ போய்க்கொண்டே இருக்கலாம் “அமர்த்தலாக மொழிந்தது தலைமை .

பண எண்ணிக்கையை கேட்ட போது அந்த அறையே சபர்மதியோடு சேர்ந்து ஒருமுறை சுழன்றது .

 

பத்து லட்சம் …ப்பப்பத்த்த்துதுது லட்சம் .இன்று காலையிலிருந்து இருக்கும் சொற்ப பணத்தையும் சாப்பிட்டு விட்டால் ,….நாளையை எண்ணியபடி தன் ஸ்திரத்திற்காக போராடிக்கொண்டிருந்த பெண்மைக்கு கிடைத்த அபராதம் பத்துலட்சம் .இல்லை அந்த வீட்டு ஓனரையும் சேர்த்து பன்னிரண்டு லட்சம் .

 

எப்படியோ ஆட்டோவில் ஏறி தன் வீட்டை அடைந்துவிட்டாள் .படியேறும்போது எதிரில் வந்தவன் திடீரென தன் வலது பாதையை இடப்புறம் மாற்றி இவள் தோள்களை நன்றாக இடித்துவிட்டு இரண்டு படி இறங்கி நின்று சாரி என இளித்துவிட்டு சென்றான் .

 




வேண்டுமென்றே இடிக்கிறது மாடு …எருமை மாடு …படியின் கைப்பிடியை பிடித்தபடி திருப்பத்தில் மறைந்த அவன் தலையை முறைத்துக்கொண்டிருந்தவளின் தோள்கள் அணைக்கப்பட்டன .

 

அநிச்சையாக கைகளை தட்டிவிட்டு திரும்பி பார்க்க அவளது வீட்டிற்கு மேல் வீட்டு ஆள் .இரண்டு பெண் குழந்தைகளின் தகப்பன் வேறு .

“அவன் இடித்ததில் கீழே விழப்போனாயே ,அதனால் தாங்கி நிறுத்தினேன் “ஓநாய் பல்லிளித்தது .

 

“தேவையில்லை நானே பார்த்து கொள்வேன் ” வெட்டினாற் போல் அவனை பார்த்துவிட்டு வேகமாக படியேறி ,இன்னும் எந்த நாயோ ,எருமையோ ,ஓநாயோ வரும் முன் தன் வீட்டையடைந்து கதவை பூட்டிக்கொண்டாள் .

 

ஆட்களோ ,பொருட்களோ இல்லாத வீடு அமானுஷ்யமாக காட்சியளித்தது .

 

இத்தனை நாட்களாக பெருந்தேவிக்கு பயந்து இந்த மிருகங்கள் எல்லாம் அவள் வழியிலிருந்து விலகி சென்றிருக்கின்றன .அந்த ஒரு வகையில் பெருந்தேவி சபர்மதிக்கு நன்மையே செய்திருக்கிறாள் .

 

ஒருவேளை பின்னொருநாள் தனக்கு மட்டுமேயான பண்டமென்று கூட சபர்மதியை இவ்வளவு நாட்களாக

அடுப்பிலேற்றி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சமைத்து கொண்டிருந்திருக்கலாம் அவள் .

 




இரவு பத்து மணிக்கு அழைப்புமணி ஓசை .ஞாபகமாக பாதுகாப்பு சங்கிலியை மாட்டி விட்டு கதவை லேசாக திறந்தாள் .”குழாயில் தண்ணி வரலைன்னு சொன்னீங்களாமே ..திறங்க அதைப்பார்க்கத்தான் வந்திருக்கிறேன் “யாரென்று தெரியவில்லை .ஆனால் இந்த ஏரியாதான் அடிக்கடி கண்ணில் பட்டிருக்கிறான் .இரவு பத்து மணிக்குத்தான் குழாய் ரிப்பேர் பார்ப்பானோ ?

 

“இல்லை நன்றாகத்தான் இருக்கிறது .” கதவை பூட்ட முனைந்தாள் .

 

“அட கதவை திறம்மா நானே உள்ளே வந்து செக் பண்ணுகிறேன் “

 

முகத்திலறைந்தாற் போல் கதவை அடித்து சாத்தினாள் .

 

சமையல்காரியாகவேனும தன் சகோதரனின் வீட்டில் முடங்கிய தன் தாயின் செய்கையின் நியாயம் விளங்கியது .

 

பதினோரு மணிக்கு ஒருமுறை அழைப்புமணி அடிக்கப்பட்டது .இப்போது எந்த ஜந்துவோ ? தொடர்ந்து யாரோ மெல்லிய குரலில் அழைக்கும் ஓசை .

 




காதுகளை இறுக்கமாக மூடியபடி சுவரில் சாய்ந்தபடி கிடந்தாள் சபர்மதி .சிறிது நேரத்தில் ஓசை நின்றுவிட வயிறு நானிருக்கிறேன் ன் என குரல் கொடுத்தது .

 

வரும்போது வழியில் வாங்கிய பிரட்டை தண்ணீர் பாட்டில் தண்ணீரோடு சேர்த்து விழுங்கினாள் .கூடவே வடிந்துவிடட்டுமா எனக்கேட்ட கண்ணீரையும் .

 

நாய்களும் ,எருமைகளும் ,ஓநாய்களும் விரட்ட விரட்ட கொடுமையான கானக கனவுகளில் இரவு முழுவதையும் கழித்தாள் சபர்மதி .

 

பன்னீரில் நனைந்தபடி

ஜாதி மல்லியை அவள்

தொடுத்துக் கொண்டிருக்கையில்

ரத்தப்பசி ஓநாயொன்று அவள்

தொடை கவ்வி இழுத்தது

குருதி பூசி சிவந்த மல்லி

தொடுக்க நாரின்றி வாடுகிறது .

 




மீதமிருக்கும் சுவாரஸ்யமற்ற இந்த வாழ்நாளை எப்படியும் வாழ்ந்து காட்டி விடவே வேண்டும் என்ற தீர்மானத்துடன் ,மறுநாள் காலை உணவாக இரண்டு இட்லிகளை சாப்பிட அருகிலிருந்த சிறு உணவகத்தில் அமர்ந்திருந்தாள் சபர்மதி .

 

அவள் எதிரிலிருந்த நாற்காலி அரவமுடன் நிரம்பியது .யாரென்றறிய நிமிர்ந்தவளின் பார்வை திகைத்தது .இவனா …..

 

என்னை எப்படி மறந்தாய் ? எனக் கேட்டபடி அழகாக சிரித்தபடி எதிரில் அமர்ந்திருந்தான் அவன் தீபக்குமார் .

 

இனி உன் வாழ்நாள் முழுவதும் சுவாரஸ்யந்தான் என சொல்லாமல் சொல்லியது அவன் விழிகள் .

 




What’s your Reaction?
+1
18
+1
33
+1
0
+1
0
+1
0
+1
0
+1
5
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!