Serial Stories தேர் கொண்டு வந்தவன்

தேர் கொண்டு வந்தவன் – 1

பத்மா கிரகதுரை

எழுதிய

தேர் கொண்டு வந்தவன்.

 

1

 

கீச்சு கீச்சென்று க்விக் குவிக்கென்றுவிதவிதமாக கேட்டுக் கொண்டிருந்த பறவைகளின் சத்தங்கள் விடியல் அருகாமையை நெருங்கிவிட்டதை

 




உணர்த்தியது. நர்மதா படுக்கையில் புரண்டு படுத்தாள் .அதற்குள் விடிய போகிறதா என்னபெரும் சலிப்புற்றது  அவள் மனம் .இப்போது தெருவில் பால் வண்டிகளின் ஓசை கேட்க தொடங்கியது .இதோ அவர்களது வீட்டு பால்வண்டி .பரிச்சயமான அந்த மணி அசைவில்  அவர்கள் வீட்டின் முன்னால் வண்டி நிற்பதையும்அம்மா பால் வாங்குவதையும் நர்மதா உணர்ந்தாள்.

 

இனி எழுந்து கொள்ளலாமாஎன யோசித்தவளை வேண்டாம் என அதட்டி அடக்கியது அவள் உடல் .கை கால் என ஒரு வித பலவீனம் அவள் உடல் முழுவதும் பரவி இருந்தது .அதிகாலை குளிர் காற்று ஜன்னல் திரையை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து நர்மதாவை தழுவசிலிர்த்த உடலுடன் அருகிலிருந்த தலையணையை அணைத்துக்கொண்டாள் அவள் .உடன் அவள் மனதில் அவன் நினைவு வந்துவிட்டது.

 




அவன் அணைத்துக் கொள்வதற்கு இப்படி மென்மையானவனாக இருக்கவில்லை .கரும்பாறை போன்றோஉரமான தேக்கு போன்றோ கடினமாகசொரசொரப்பாக இருந்தான் .ஆனால் அவனது அணைப்பு இதமாக , கதகதப்பாக இருந்தது .மிக எளிதாக அவள் உச்சி முதல் பாதம் வரை  தீ போல் பரவினான். ஒளி போல் ஊடுறுவினான் . உரிமையும் உணர்வுமான  அந்தத் தீண்டல் நினைப்பே கண் சொருகி கிடந்த இந்த அரைத்தூக்க நிலைமையிலும் நர்மதாவின் உடல் மயிர்க்கூச்செரிய செய்தது.மீசை முடிகள் உராயஉராய அவன் கொடுத்த முத்தங்கள் இன்னமும் தித்தித்துக் கிடந்தன மேனி முழுவதும். அன்று எனதென்று பொத்தி வைத்துக்கொள்ள அவள் உடலுக்கு எந்த அனுமதியும் கொடுக்கவில்லை அவன்.

 

நர்மதாவின் உறக்கம் கலைந்து போனது .ஆனால் இப்போதும் அவள் விழிகள் சொருகித்தான் கிடந்தன .தூக்கத்தில் இல்லை ஏதோ மயக்கத்தில்கிறக்கத்தில் .அவள் இறுக்கமாக தலையணையை கட்டிக்கொண்டாள் .இப்படியே இதே நினைவுகளுடன் இருந்துவிட விரும்பினாள்.

 

” விடிஞ்சு வெளிச்சம் வந்துருச்சு. இன்னும் படுக்கை விடமாட்டேங்குதா  ? ” விசாலாட்சியின் சத்தம் காதுகளுக்குள் குடைய நர்மதா குப்புறப் படுத்துக்கொண்டு தலையணையை தனது தலைக்கு மேல் வைத்து அம்மாவின் சத்தத்தை தடுத்துக் கொண்டாள்.

 




” கீரை பறிக்க ஆள் வந்தாச்சு .பக்கத்தில் போய் நிற்கலைனா பாதி காசு தான் கைக்கு வரும். ஓடுறேன் ஒடியாறேன்னு  இந்த மனுஷன் கருக்கல்ல போனா வெயில் சுடும் போது தான் திரும்ப வர்றாரு .இங்கே நான் ஒண்டி ஆளா எல்லா வேலையையும் பாத்துட்டு கஷ்டப்பட வேண்டி இருக்குது ” 

 

விசாலாட்சியின் புலம்பல் கூடிக்கொண்டே போனாலும் நர்மதாவிற்கு படுக்கையைவிட்டு எழும் எண்ணம் வரவில்லை . களைப்பை சொல்லிய அவள் உடலோடு மனோரஞ்சித பூக்கள் வாசம் வீசிய அவளது ஆழ்மன நினைவுகளும் அவளது சோம்பலுக்கான  காரணங்கள்.

 

எல்லாம் அம்மா சமாளித்துக் கொள்வார்கள்இப்படி தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டு அவள் மீண்டும் தனது மன லாகிரிக்குள்  நுழைந்தாள்.

 

” நர்முநர்மதா ” விசாலாட்சி இப்போது நேரிடையாகவே அவளை அழைக்க துவங்கினாள். நர்மதா இன்னமும் இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டாள்.

 

” அடியே திருட்டு கழுதைமுழிச்சுக்கிட்டே வேலைக்கு பயந்து எந்திரிச்சு வரமாட்டேங்கிறியாஇப்போ நான் ரூமுக்குள்ள வந்தேன்னா முதுகுத் தோலை உரித்து எடுத்து விடுவேன் ”  விசாலாட்சியின் கோப கத்தலுக்கும் சிறிதும் அசங்கவில்லை அவள்.

 




” அக்கா ஏன் இப்படி காலங்கார்த்தாலே கத்திக்கொண்டு இருக்கிறீர்கள் ? ” என்ற குரலைக் கேட்டதும் நர்மதாவிற்கு நிம்மதி மூச்சு வந்தது .அப்பாடா தாண்டவன் வந்துவிட்டான்அம்மாவிற்கு வேண்டிய உதவிகளை அவனே செய்துவிடுவான். அவள் இப்போது எழுந்திருக்க வேண்டிய தேவையில்லை. வசமாக சுருண்டு கொண்டாள்.

 

” குடல் வெளியே வந்து  விழுகிற அளவுக்கு கத்தி விட்டேன். காதிலேயே வாங்காமல் மகாராணி இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறாள் ” 

 

” சரி விடுங்க அக்கா .நம்ம நர்மு சின்ன பொண்ணு.அவளுக்கு என்ன வேலை தெரியும்இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு போகிறாள் ” தாண்டவனின் பதில் தனக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்று நர்மதாவிற்கு தெரியும் .அவள் பக்கம் பேசுவதோடு மட்டுமல்லாமல் விசாலாட்சிக்கு  தேவையான வேலைகளையும் கடகடவென்று செய்து முடித்து விடுவான் தாண்டவன் . கொஞ்சம் வெகுளி .மிக நல்லவன் .அதனால்தான் அவனது வரவை நிம்மதியாக உணர்ந்தாள் நர்மதா.

 

அதன் பிறகு வீட்டிற்குள் எந்த சத்தமும் கேட்கவில்லை .முன் வாசலை பூட்டிவிட்டு அம்மாவும் தாண்டவனும் வீட்டின் பின்புறம் போயிருப்பார்கள் .அங்கேதான் அவர்களது வீட்டுத் தோட்டம் இருக்கிறது .பல்வேறு வகையான கீரை வகைகளை அங்கே நர்மதாவின் அப்பா சுப்பையா வளர்த்து வருகிறார் .முதலில் விளையாட்டாக வீட்டுத் தேவைக்காக  மட்டும் ஆரம்பித்ததுதான்.இப்போது பெரிய தோட்டமாக மாறிவிட்டது .மிக நல்ல வருமானத்தையும் கூட கொடுக்கிறது .எல்லா வகை கீரைகளோடு சில  மருந்துச் செடிகளும் அவர்களிடம் உண்டு .நியாயமான விலை வாங்கிக்கொண்டுசில நேரம் இலவசமாகக் கூட சுப்பையா இந்த தொழிலை செய்துவருகிறார்.

 




அரை மணி நேரம் ஏதேதோ இனிய நினைவுகளுடன் படுக்கையில் புரண்டு கொண்டிருந்து விட்டு மெல்ல எழுந்தாள் நர்மதா .பாதங்களை தரையில் ஊன்றி எழுந்து நின்றதும் தலை சுழல்வது போல் இருந்தது. மீண்டும் கட்டிலில் அமர்ந்து தன்னை தானே சமாளித்துக்கொண்டு பின் திரும்பவும் எழுந்தாள் .உடம்பிற்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே இரண்டு நாட்களாகவே உடம்பு ஒரு மாதிரியாகவே இருக்கிறதுதலையை உலுக்கிக் கொண்டு சமாளித்து எழுந்தாள்.

 

சுப்பையா காலை வாக்கிங் போனவர் இன்னமும் வீடு திரும்பவில்லை .அவர் போலீஸ் இலாகாவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் .தனது காவல் துறைக்கு உரிய கம்பீரத்துடன் இன்னமும் வலம் வருபவர் .அதிகாலை நடைப்பயிற்சி அதன்பின் யோகா என்று ஒரு ஒழுங்கு முறையான வாழ்க்கை வாழ்ந்து வருபவர்.

 

சொந்த வீடு போக கணிசமான மாத வருமானம் வரும் சொத்துக்களோடுபதவியின் ஓய்வூதியமும்  , கூடுதலாக இப்போது தானாக அமைந்துவிட்ட இந்த தோட்ட வருமானமுமாக அவர்களது வாழ்க்கை வளமாகவே இருந்தது .ஒரே மகளான நர்மதாவின் வாழ்க்கைச் செலவு போக தாண்டவன் போன்ற தூரத்துச் சொந்தம்உறவுகளை படிக்க வைத்து பராமரிப்பதற்கும் தயங்காமல் செலவழிக்கும் செல்வ நிலையை கொண்டிருந்தார் சுப்பையா.

 




தாண்டவன்  ஏதோவோர் சுற்றல் உறவில் விசாலாட்சிக்கு  தம்பி முறை வருபவன் .பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறந்துவிட சுப்பையாவும் விசாலாட்சியும் பரிதாபப்பட்டு ஹாஸ்டலில் சேர்த்து அவனை  படிக்க வைத்தனர். படித்து முடித்து அவன் வேலை தேடிக் கொண்டிருக்கிறான் .கிடைத்த நேரங்களில் அவர்கள் வீட்டிற்கு வந்து தேவையான உதவிகளை செய்து தனது நன்றிக் கடனை தீர்த்துக் கொண்டிருக்கிறான்.

 

நர்மதா பல் தேய்ப்பதற்காக பிரஷ்ஷை வாயில் வைத்ததும் ஒரு மாதிரி குமட்டிக் கொண்டு வர வேகமாக வாயை கொப்பளித்தாள் . தன் போக்கில் சுழன்ற தலையை சமாளித்துக்கொண்டு அடுப்படிக்குள் நுழைந்து காபி கலந்து குடிப்பதற்காக வாயருகில் கொண்டு சென்றதும் மீண்டும் வாந்தி உணர்வு வந்தது.

 

முந்தாநாள் இங்கே பிரியாணி நன்றாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டு எங்கேயோ இருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான் அந்த தாண்டவன் .அதை சாப்பிட்டதில் இருந்து இப்படித்தான் இருக்கிறது .இனி அவன் கொண்டு வந்து கொடுக்கும் எதையும் சாப்பிடக்கூடாது என்று நினைத்தபடி நர்மதா சோர்வுடன் ஷோபாவில் அமர்ந்துகொண்டாள்.

 

” நர்மு  என்னடா டல்லாக தெரிகிறாய்உடம்பு சரி இல்லையா ? ” வீட்டுக்கதவை திறந்துகொண்டு உள்ளே வந்ததும் மகளை பார்த்து கேட்டார் சுப்பையா.

 

” ஒன்றுமில்லை அப்பா கொஞ்சம் தலைவலி ” 

 




” அம்மாவிடம் சூடாக காபி வாங்கி குடிக்க வேண்டியது தானேஅவளை எங்கே..? விசாலாட்சி…” 

 

” அம்மா தோட்டத்தில் இருக்கிறார்கள் அப்பா ” 

 

  சரிம்மா உனக்கு நான் காபி போட்டு தருகிறேன் ” அவருக்கென்று இப்படி ஒரு நாள் கூட அடுப்படி பக்கம் போகாதவர் .இப்போது தனக்காக போகும் அப்பாவை நெகிழ்வாக பார்த்தாள் நர்மதா.

 

” மொத்தம் 60 கீரைக் கட்டுகள் .எல்லாவற்றிற்கும் பணம் வாங்கிவிட்டேன் ” சொன்னபடி வந்த விசாலாட்சி மகளுக்கு காபி நீட்டிக்கொண்டிருந்த அப்பாவை பார்த்ததும் அலட்சியமாக உதடு சுளித்தாள் .

 

” மகளுக்கு உபச்சாரம் நடக்கிறதாக்கும் ? ” 

 

” உனக்கு ஏன்டி பொறாமை ?குழந்தையை கவனிக்காமல் எங்கே போனாய்? ” 

 

” சொல்ல மாட்டீங்கவெதச்சதோடு சரி .வீட்டுக்கு பின்னால் காலை எடுத்து வைக்க மாட்டேங்கிறீங்க .தோட்ட வேலைகளையும் நானே இழுத்துப் போட்டுக்கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறேன் ” 

 

” எல்லாவற்றிற்கும் ஆள்  போட்டிருக்கிறேன் .நீ ஏதோ எல்லாம் உன் தலையில் இருப்பதுபோல அலட்டிக் கொண்டிருக்கிறாய் ” 

 

” நீங்கள் போட்டிருக்கும் ஆட்களை நம்பினால் இன்று பாதிக்குப் பாதியாக  30 கட்டுத்தான் கை சேர்ந்திருக்கும் .அந்த லட்சணத்தில் வேலைக்கு ஆள் போட்டிருக்கிறீர்கள் .ஏதோ என்

 




தம்பி இருந்ததால் நான் பிழைத்தேன் ” விசாலாட்சி அளவற்ற வாஞ்சையோடு தாண்டவனை பார்த்தாள் .அவன் மும்முரமாக ரூபாய்களை எண்ணிக் கொண்டிருந்தான்.

 

” அக்கா தம்பி பாசம் அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதே நர்முஎன்னடா செய்யலாம் ? ” கிண்டலாக தன்னிடம் கேட்ட தந்தைக்கு நர்மதாவால் பதில் சொல்ல முடியவில்லை .அவளுக்கு மீண்டும் வாந்தி வருவது போல் இருந்தது.

 

” 1800 ரூபாய் மச்சான் .இந்தாருங்கள்தாண்டவன் பணத்தை சுப்பையாவின் கொடுத்தான்.

 

” விசாலாட்சிக்கா எனக்கு அரைக்கிலோ ஆவக்காய் வேண்டுமே ” என்றபடி வந்தாள் பக்கத்துவீட்டு பெண். அவர்கள் தோட்டத்தில் ஆவக்காய் மரம் உண்டு.

 

” என்ன கமலா ஊறுகாய்  போட போகிறாயா  ? ” 

 

” ஆமாம் அக்கா. என் மகள் மசக்கையோடு வந்திருக்கிறாள். வாந்தி மயக்கம் என்று தலைசுத்தி போய் கிடக்கிறாள்.

 அவளுக்கு வாய்க்கு ருசியாக சமைத்து போட்டு உடம்பை தேற்றி விட வேண்டாமா ? “அடுத்த தலைமுறையை எதிர் பார்க்கும் ஆர்வம் தெரிந்தது அந்த பெண்ணிடம்.

 

இந்தப் பேச்சு நர்மதாவினுள்  சுருக்கென்று தைத்தது .வாந்தியும்மயக்கமுமாக மசக்கைஅவள் கை தானாக தன் வயிற்றை வருடியது .பொலபொலவென அவளுக்கு வியர்க்கத் தொடங்கியது.

 




ஒருவேளை அப்படி இருக்குமோ ? நடுக்கத்துடன் தனது நாட்களை கணக்கிட்டாள் . இன்னமும் அதிகமாக வியர்வை வழிந்தது. இல்லைஇப்படி நானாக எதையாவது முடிவு செய்து கொள்ளக்கூடாது தலையசைத்து தனக்குத் தானே மறுத்து கொண்டாள்.

 

” இன்று எனக்கு ஒரு இண்டர்வியூ இருக்கிறது .இப்போது கிளம்புகிறேன் .வரும்போது வீட்டிற்கு எதுவும் வாங்கி வர வேண்டுமா அக்காநர்மதா உனக்கு எதுவும் வேண்டுமா ? ” தாண்டவன் கேட்க

 

” ஒரு பிரக்னன்சி டெஸ்ட் கிட் ”  என்று வாய் வரை வந்த வார்த்தையை விழுங்கிவிட்டு இல்லை என தலையாட்டினாள்.

 

மதிய உணவிற்கு பிறகு தாயும்




தந்தையும் சற்று கண்ணயர்ந்த நேரம் தெருமுனையில் இருந்த மெடிக்கல் ஸ்டோரில்  வாங்கிவந்து மறுநாள் காலை சோதனை செய்து பார்த்தபோது சந்தேகத்திற்கு இடமின்றி அவள் கர்ப்பமாக இருப்பதாக சொன்னது அந்த மருத்துவ கருவி.

 

 

 

 

What’s your Reaction?
+1
5
+1
4
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!