Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 9

9

 

அன்று அப்படி ஒன்றும் பெரிய சண்டை இல்லை .இதை விட அதிகமாக முன்பு ஏசிய போது கூட மௌனமாக இருந்திருக்கும் நீலவேணி அன்று மட்டும் ஏன் அப்படி பொங்கவேண்டும் …சௌதாமினிக்கு இன்று வரை காரணம் தெரியவில்லை .

மிக அழுக்கு தெரிந்த தனது சந்தன நிற பட்டுப்புடவை ஒன்றை பக்குவமாக துவைத்து போடுமாறு நீலவேணியை ஏவியிருந்தாள் சௌதாமினி . அதன் கெட்டி அரக்கு பார்டர் நிறம் சேலையினுள் இறங்கி விடாமலிருக்க  பார்டரை நூலால் இறுகி கட்டி வாளியை விட்டு வெளியே தொங்க விட்டு விட்டு சேலையின் உடலை பூந்திக்கொட்டை ஊறிய தண்ணீருக்குள் அமிழ்த்தி விட்டு .ஜாக்கரதையாக பார்த்து அலசும்படி கூறிவிட்டு , ஒரு விசேச வீட்டிற்கு போய்விட்டாள் .




திரும்பி வந்து பார்த்தால் அவளது சேலை முழுவதுமாக வாளிக்குள் அமிழ்ந்து கிடக்க , நீலவேணியை காணவில்லை .சேலையின் சந்தன நிற உடம்பு முழுவதும் அரக்கு நிற பார்டர் ஒட்டிக் கிடக்க  அந்த விலை உயர்ந்த பட்டு சேலை அடுப்பு துணி போல் காட்சியளித்தது . நீலவேணியை காணவில்லை .சௌதாமினிக்கு உடல் கொதித்தது .எவ்வளவு திமிர் …?

அவள் புடவையை அப்படியே நீருக்குள் மூழ்கவிட்டு விட்டு காத்ழிருந்தாள் . ஒரு மணி நேரம் கழித்து அரக்க , பரக்க தம்பி வீட்டிலிருந்து ஓடி வந்த நீலவேணி ..” எப்போது வந்தீர்கள் அண்ணி …அங்கே சாப்பிட்டீர்களா இல்லையா …?.சமையலை முடித்து வைத்திருந்தேனே .பார்த்தீர்களா …? ” என்றபடி உள்ளே போக …” நில்லு நீலா …”கத்தினாள் .

” என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு உள்ளே போ ….என்ன இது …? ” சேலை ஊறிக்கொண்டிருந்த வாளியை அப்படியே கொண டு வந்து நீர் தெறித்து நீலவேணி மேல் படும்படி வைத்தாள் .

” ஷ் …ஐயோ இதை மறந்துட்டேண்ணி .அவசரமாக சேது கூப்பிட்டானா ….சேலை பார்டரை பிரிச்சு அலசிட்டிருந்தேன் .அப்படியே மறந்து விட்டுட்டு போயிட்டேன் ….”

” இந்த சேலை விலை தெரியுமா …பன்னிரெண்டாயிரம் ருபாய் .மொத்தமே இரண்டு தடவைதான் இந்த சேலையை கட்டியிருப்பேன் .புதுசு வேற …அதை இப்படி பண்ணிட்டியே …” 
” இல்லை அண்ணி .நான் ஞாபகமறதியாகத்தான் …”

” பொய் சொல்லாதே .இந்த சேலையை கடையில் பார்த்த  போதே உனக்கு இதன் மேல் ஆசை .ஆனால் உனக்கு முன் இதை நான் எடுத்துக் கொண டதால் இப்போது இதனை இப்படி பாழாக்கி வைத்திருக்கிறாய் …”

” ஐயோ ..அப்படி இல்லை அண்ணி …”

” போதும் உன் சால்ஜாப்புகளையெல்லாம்  மூட்டை கட்டி வை. இந்த மாதிரி ஒரு வஞ்சக எண்ணத்தோடு இருப்பவளை நான் எப்படி வீட்டிற்குள் வைத்திருக்க முடியும் …? “

இது போன்ற வார்த்தைகளை சௌதாமினி எப்போதுமே சொல்லுவாள் .நீலவேணக்கு இது தனது சொந்த வீடென்ற எண்ணம் வந்துவிடக் கூடாது எனபதற்காக அடிக்கடி ஏதாவது வம்பழுத்து …இது என வீடு , போனாப் போகுதுன்னு உன்னை இங்கே விட்டு வச்சிருக்கேன் என்பதை அடிக்கடி நினைவிறுத்திக. கொண்டே இருப்பாள் .அன்றும் அப்படித்தான் சொன்னாள் .ஆனால் நீலவேணி …

” வேண்டாம் அண்ணி .இப்படி மனக்கஷ்டத்தோடு நீங்க எங்களை இங்கே வைத்திருக்க வேண்டாம் .நாங்க போயிடுறோம் ….”




சௌதாமினி திகைத்து போய்விட்டாள் .

” போறியா …எங்கே போகப்போற …? “

” என் கூடப்பிறந்தவங்க இரண்டு பேராச்சே .இவ்வளவு நாள் இங்கே இருந்தேன் .இனி அங்கே இருக்கேன் …” பக்கத்து வீட்டை காட்டினாள் .

இவள் திடீரென ஏன் இப்படி சொல்கிறாளென்ற குழப்பம் சௌதாமினிக்கு வந்தாலும் , அப்பாடி என்ற நிம்மதி பெருமூச்சும் சேர்ந்தே அவளுக்கு வந்த்து .திடுமென இவள் உண்மையாகத்தான் சொல்கிறாளா …சும்மா என்னை சீண்டிப் பார்க்கிறாளா …? சந்தேகம் தோன்ற …

” ஏன்டா உன் அம்மா சொல்வதெல்லாம் நிஜம்தானா …? ” ஏதோ யோசனையுடன் உள்ளே நுழைந்த சிவபாலனை நோண்டினாள் .மின்கம்பியை மிதித்தது போலொரு அதிர்ச்சியை உடலில் வாங்கினாள் .அவன் அப்படி ஒரு ரௌத்ரத்துடன் அவளை பார்த்தான் . இதுவரை இப்படி பார்த்ததில்லையே இவன் …? ஏனோ அவன் பார்வை நெஞ்சத்தில் ஒரு பிசைதலை உண்டாக்கியது அவளுக்கு .

” நாம் சேது மாமா வீட்டுக்கு போய்விடுவோம்தானே சிவா …? ” தாய்க்கு பதில் சொல்லாமல் அவன் பார்வை மாடிப்படியை நோக்கியது .அப்போதுதான் ஜீவிதா இறங்கி வந்து கொண்டிருந்தாள் .வாசலில் வரிசையாக நின்று கொண்டிருந்த மூன்று பேரையும் பார்த்தபடி …

” என்ன …என்னாச்சு …? ” அவள் மனதில் அப்போதே விபரீதமென பட்டிருக்க வேண்டும்

ஆமாம் …அப்போதே அன்று மூவரும் வரிசையாக வாசலில் நின்று கொண்டிருந்த்தே அவள் மனதிற்கு விபரீதமாக பட்டது .கடைசியில் அவள் உள் மன உணர்வு நிஜம்மாகி விட்டது .

வெடுக்கென தன் கைகளை நீலவேணியிடமிருந்து பிடுங்கிக்கொண்டாள்  ஜீவிதா .அன்று பாலா கூட லேசாக தயங்கனார்தான் …ஆனால் இந்த அத்தைதான் …அவரை ஏதேதோ பேசி இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள் .இப்படி நினைத்துக் கொண்டாலும் …ஆமாம் உன் பாலா பச்சை மண்ணு …அவன் அம்மா இடுப்பிலேற்றி வைத்து கூட்டி போய்விட்டார்கள் …மனசாட்சி  உறுத்தியது ஜீவிதாவை .

சசிகலாவிடம் தொடர்ந்து வாய் சண்டையிடும் எண்ணத்திலிருந்த சௌதாமினியை கையை பிடித்து இழுத்தபடி கோவிலிலிருந்து வெளியேறினாள் .

” அவளை நல்லா நாலு கேள்வி கேட்டிருப்பேன் .அதுக்குள்ளே ஏன்டி இழுத்துட்டு வந்த …? “




” இப்போ நீங்க வாயை மூடலைன்னா …இப்படியே விட்டுட்டு நான் மட்டும் போயிட்டே இருப்பேன் .நீங்க மெல்ல ஆட்டோ பிடிச்சு வாங்க …” சௌதாமினி ஆட்டோவில் போவதை கௌரவக் குறைச்சலாக கருதியதால் வாயை மூடிக்கொள்ள ஜீவிதா காரை எடுத்தாள் .

” அம்மாவும் ,மகனுமாக திட்டம் போட்டுத்தான் நம் வீட்டை விட்டு வெளியேறினார்கள் .முன்பே உன் சித்தப்பாவை தூண்டி விட்டு சொத்துக்களை பிரித்து வாங்கி வர வைத்து , பிறகு நம் வீட்டிலிருந்து , அவர்கள் வீட்டிற்கு போய் உட்கார்ந்து கொண்டு , இரண்டாவது நாளே அந்த சுகன்யாவை கல்யாணம் செய்து கொண்டு …ஆத்தி ..எத்தனை திட்டங்கள் போட்டிருக்கிறார்கள. …” சௌதாமினி முகவாயில் கை வைத்து ஆச்சரியப்பட்டாள் .

” சிவ …சிவா கொஞ்ச நேரம் சும்மா இருங்களேன்மா ….”

” நான் சும்மா இருக்கிறதால் நடந்த்தெல்லாம் இல்லைன்னு ஆயிடாது பாப்பு .நீ முதல்ல இந்த சிவாவை விடு …”

” முயற்சிக்கிறேன் .முடியத்தான் மாட்டேனென்கிறது ” மனதுக்குள் சொல்லிக்கொண்டவள் ” நான் சொன்னது கடவுளை ” என்றாள் தாயிடம் .

“:அதைத்தான்டி சொல்கிறேன் .ஒரு படித்து பட்டம் வாங்கிய பெரிய டாக்டர் , இப்படியா வாய்க்கு வாய் கடவுளை கூப்பிட்டுக் கொட்டிருப்பாள் …? “

” டாக்டரெல்லாம் சாமி பெயரை சொல்லக் கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா …? “

எந்த சிவாவை நினைவுறுத்துகிறது எனத் தெரிந்தே அறியாதவர்கள் போல் தாயும் , மகளும் சண்டையிட்டுக் கொண்டனர் .

” உன் அத்தைக்காரிக்கும் , அந்த சிவா பயலுக்கும் இது ரொம்ப நாள் திட்டம் போல பாப்பு .முதலில் நம் வீட்டில் இருந்து கொண்டு நம் சொத்துக்களையெல்லாம் பிடுங்கிக் கொள்ள திட்டம் போட்டார்கள் .நான் விடலை .உன்னை வேறு பெரிய படிப்பு  படிக்க  அனுப்பிட்டேனா …நம்ம பப்பு இங்கே வேகாதுன்னு உன் சித்தப்பா வீட்டு பக்கம் போயிட்டாங்க .அந்த சசிகலா ஒரு அரைவேக்காடு , அந்த சுகன்யா ஒரு தத்தி, அந்த சேது ஒரு தலையாட்டி …அங்கே போய் சுளுவா இடத்தை பிடிச்சிட்டாங்க …”




அம்மா பேசுவது எரிச்சலாக இருந்தாலும் இருக்கலாமோ என்ற எண்ணமும் ஓர் ஓரம் ஜீவிதாவிறகு எழாமலில்லை .ஏனெனில் இப்போதும் இந்த சொத்துக்களில் சிவபாலன் காட்டும் ஆர்வம் .அவர்கள் இங்கே வந்த்திலிருந்தே சௌந்தரம் பாட்டி பேரனை இந்த சொத்துக்களுக்கு உடையவனாகத்தான்  பார்த்து வந்தார் .இதை இதை இப்படி பராமரிக்க வேண்டிமென பேரனுக்கு அறிவுறுத்தியபடியே இருப்பார் .ஜீவிதாவிற்கும் , சிவபாலனுக்கும் திருமணம் செய்துவித்து இந்த சொத்துக்களை அவன் கையில் ஒப்படைத்து விட வேண்டுமென்பது பாட்டியின் ஆசை .

சிவா தனது டாக்டர் படிப்பு ஆசையை சொன்ன போது முதலில் மறுத்தது பாட்டிதான் .டாக்டரானதும் பேரன் டவுன் பக்கம் போய்விடுவானென மறுத்தார் .அவரை சமாதானப்படுத்தி தான் இங்கேயேதான் இருப்பேனென சிவபாலன் சத்தியமே செய்து கொடுத்தான் .ஆனால் டாக்டர் என்ற பெரிய மதிப்பை நாத்தனாருக்கு தர விரும்பாத சௌதாமினி செலவை காரணம். காட்டி அதை மறுத்து விட , தன் ஆசையை உள்ளுக்குள் விழுங்கிக் கொண்ட சிவா , பாட்டி , அம்மாவின் ஆசைப்படி தொழிலதிபராகி விட்டான் .படிப்பையும் விடாமல் ஸ்காலர்ஷிப்பிலேயே இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டான் .

இந்த படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு அவனை தங்கள் சொத்துக்களுக்கு வெறும் மேனேஜராக மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டுமென்ற சௌதாமினியின் திட்டம் மட்டும் நிறைவேறவில்லை .இங்கே தங்கள் இடத்தில் இருந்தால் , அவனால் முதலாளியாக மாறமுடியாது என்றுதான் அவன் சுகன்யாவை மணம் முடித்து சேதுபதியோடு சேர்ந்து முதலாளியாகி விட்டான் என்பது சௌதாமினியின் வாதம் .நான்கு வருடங்களாக ஊர் பக்கமே வராமல் இருந்த மகளிடம் இதையெல்லாம் சொல்ல முடியாமல் , இப்போது எல்லாவற்றையும் அவள் மண்டைக்கிள் திணித்து விடும் அவசரத்தில் பேசினாள் சௌதாமினி .

” நீ இப்படி டாக்டராவேன்னு அவன் நினைச்சே பார்கலை பாப்பு .காலேஜில் சேர்ந்து ஒரு வரசமானதும் , இனி நீ டாக்டர்தான் .உன்னை நெருங்க முடியாதுன்னு நல்லா தெரிந்த்தும் அந்த சுகன்யா பக்கம் போய்விட்டான் ” கணிப்புகளில் உயரமான கோட்டை எழுப்பிக் கொண்டிருந்த தாயை இகழ்ச்சி புன்னகையோடு பார்த்தாள் ஜீவிதா .

அப்போது கார்  குலுங்கி நின்றது .” உங்க அபவாத பேச்சில் காருக்கே பொறுக்காமல் நின்றுவிட்டது …இறங்குங்க என்னன்னு பார்க்கலாம் …” ஜீவிதா எரிச்சலுடன் கீழே இறங்கினாள் .பானெட்டை திறந்து ஆராய்ந்தாள் .கார் நின்றாலும் சௌதாமினியின் வாய் நிற்கவில்லை .அவள் தொடர்ந்து நீலவேணியையும் , சிவபாலனையும் துவைத்து காயப் போட்டிக் கொண்டிருந்தாள் .

நீ உயர்ந்த படிப்பு படித்திருப்பவள் .நிறைய சொத்துடைய அழகான பெண் .உனக்கு உன் அத்தை மகன் ஈடாக மாட்டான் …என தன் மனதுக்குள் பதிய வைக்க படாத பாடு பட்டுக் கொண்டிருந்தவளை ஏன் இந்த பாடு என்ற பார்வை பார்த்தாள் ஜீவிதா.




” நான் ஒரே மாத்த்தில் படிப்பை நிறுத்தியிருக்க வேண்டியவள் .நினைவிருக்கிறதாம்மா உங்களுக்கு ..? ” நிதானமாக கேட்டாள் .சௌதாமினி மௌனமாகி விட்டாள் .இத்தனை நேரம் அவள் மேலே ….மேலே அடுக்கிக் கொண்டிருந்த செங்கற்களெல்லாம் சரிந்து காலடியில் விழுந்தன .

அன்று ….

” ஜீவா எங்கே இருக்கிறாள் அத்தை …? ” அதட்டலாய் கேட்டபடி சமையலறுக்குள் வந்து நின்றவனை ,பெற்று பெயர் வைத்தாயா …என்னடா ஜீவா என …    அறையத்தான் சௌதாமினி மிகவும் ஆசைப்பட்டாள் .ஆனால் இப்போது அது முடியாது .இப்போது ஜீவிதாவை சமாதானப்படுத்தும் ஒரே ஆள் சிவபாலன்தான் என அவளுக்கு நன்றாக தெரியும் .எனவே …

” மாடியில் அவள் ரூமில் இருக்கிறாள் .போய் பேசு ” முதன்முறையாக தானே நாத்தனார் மகனுக்கு மகளிடம் பேச கை காட்டினாள் .அவன் வேகமாக மாடிப்படி ஏறிவதையும் பார்த்தபடி நின்றாள் .

மாடிக்கு ஏதாவது சுத்தப்படுத்தும் வேலை தவிர வேறு எதற்கும் அவள் நீலவேணியையோ , சிவபாலனையோ அனுமதிப்பதில்லை . அவர்கள் இருவருக்கும் கீழே இருக்கும் அறைகளையே தந்திருந்தாள் .தாங்கள் அந்த வீட்டு உரிமையாளர்கள் .அதனால் தங்களுக்கு மாடி அறை .அம்மாவும் , மகனும் தங்கள் தயவில் வாழ்பவர்கள் அதனால் கீழுள்ள அறைகள் …என அவள் பிரித்து வைத்திருந்தாள் 
ஏதாவது வேலையென சௌதாமினியே ஏவினால் ஒழிய சிவபாலனும் மாடியேறுவதில்லை .

இன்று அவளிடமே கேட்டுக்கொண்டு ஜீவிதாவை பார்க்க என்றே சொல்லிக் கொண்டு மேலே போகிறான் .கோபத்திற்கு பதில் அவன் ஏதாவது பேசி மகளை சமாளித்து விட வேண்டுமென சௌதாமினி வேண்டிக்கொண்டிருந்தாள் .ஏனென்றாள் ஜீவிதா …படிக்கவென சென்னை போனவள் ஒரே மாதத்தில் என்னால் ஹாஸ்டலில் இருக்க முடியாது .படிப்பு கஷ்டமாக இருக்கிறது .ப்ரெண்ட்ஸை பிடிக்கவில்லை …என ஏதேதோ காரணம் சொல்லியபடி இனி படிக்க போவதில்லை என்ற முடிவுடன் திரும்பி வந்திருந்தாள் .

அவளது டாக்டர் படிப்பு அந்த வீட்டில் சௌதாமினிக்கு மட்டுமே முக்கியமாக இருந்த்து . படிப்பு கஷ்டம் , சாப்பாடு சரியில்லை , உங்களையெல்லாம் விட்டு இருக்க முடியவில்லை என்ற ஜீவிதாவின் புலம்பல்களை கேட்டதும் சௌந்தரமும் , நீலவேணியும் கலங்கி விட , சபாபதி ஒரு படி மேலே போய் பணம் போனா போகுது …”நீ அப்படி கஷ்டப்பட்டு அந்த படிப்பு படிக்க வேணாம் பாப்பு .இங்கே வீட்டிலேயே இருந்து கொண டு ஏதாவது ஒரு காலேஜிக்கு போய் , ஈஸியான படிப்பு எதையாவது படி ” என முடித்துவிட்டு போய்விட்டார் .சௌதாமினிக்கு திக்கென்றது .இப்படி சொன்னால் எப்படி …?அவள் மகளை டாக்டராகவே நினைக்க ஆரம்பித்திருந்தாள் .




சிவபாலனுக்கு மருத்துவ படிப்பை மறுத்த அன்றே மனதிற்குள்ளாகவே அதனை அவள் மகளுக்கு வழங்கிவிட்டாள் .உன் மகனை விட என் மகள் உயர்த்தி என நாத்தனாருக்கும் ,என் மகளின் உயரம் பெரியது , என் மகளை நீ மனதாலும் நெருங்க முடியாதென நாத்தனார் மகனுக்கும்  காட்ட எண்ணினாள் .அந்த திட்டங்களெல்லாம் ஆகாது போல் இதோ ஜீவிதா இப்படி கண்ணை கசக்கி கொண்டு வந்து நிற்கிறாள் .அவளை சரி பண்ண சிவபாலனால்தான் முடியுமென்பதனை அவள் அறிவாள் .

ஜீவிதாவை டாக்டராக்க சிவபாலன் சம்மதிக்க மாட்டானென நினைத்தபடிதான் மெல்ல தன் கணவரிடம் மகளின் படிப்பு பற்றிய பேச்சை எடுத்துக் கொண்டிருந்தாள் .அவ்வளவு தூரம் அனுப்பி வைத்து என்ன படிப்பு பொட்டை புள்ளைக்கு …எல்லாம் இங்கே இருக்கிறதை படிக்கட்டும் ” சபாபதி மறுத்துக். கொண்டிருந்தார் .

” பெண்குழந்தைகளுக்குத்தான் மாமா இப்போது முக்கியமாக இது போன்ற படிப்புகளெல்லாம் தேவைப்படுகின்றன ….” என்றபடி வந்து நின்றான் சிவபாலன் .அவன் கையில் ஜீவிதாவின் மெடிக்கல் என்ட்ரசுக்கான புத்தகங்கள் .         கண்களை தேய்த்து விட்டுக் கொண்டு ஆச்சரியமாய் அவனை பார்த்தாள் சௌதாமினி .

”             ,”

ஙே என விழித்தவளிடம் ” உயர்ந்தவர்களின் சிந்தனை எப்போதும் ஒன்று போல் இருக்கும் அத்தை ” என விளக்கம் சொன்னான் .

” சும்மா …அன்னைக்கு உன்னை சமாதானப்படுத்தினான்டி .அப்படி ஒண்ணும் பெரிய நல்லவன் கிடையாது .நீ வேணும்னாலும் இப்போது போய் கேட்டு பாரேன் …நீயெல்லாம் எதற்கு படித்தாய் என்பான் …”




கவனமாக வார்த்தைகளை போட்டு மகளிடம் பேசினாள் .

” நான் எதற்கு நீங்களே கேட்டுவிடுங்கள் …” பானட்டுக்குள் தலையை நுழைத்தபடி சொன்னாள் ஜீவிதா .

” நானா …? அவனிடம் போயா …? “

” போகெல்லாம் வேண்டாம் .இதோ உங்க மருமகனே வந்துகொண்டிருக்கிறார் .நேரடியாக கேட்டுடுங்க …” ஜிவிதா நிதானமாக சொல்ல ,சௌதாமினி திடுக்கிட்டு எட்டிப் பார்க்க …

தூரமாக சிவபாலனின் கார் வந்து கொண்டிருந்த்து .இவர்களருகே வர வர கார் வேகம் குறைந்த்து .

What’s your Reaction?
+1
4
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!