Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 24

24

ராஸ்கல் …எவ்வளவு தைரியம் உனக்கு …” சிவபாலன் துப்பாக்கியை அவன் நெற்றியில் அழுத்த …ஜீவிதா அவன் கையை பிடித்து தடுத்து துப்பாக்கியை பிடுங்க முயல , கிஷோர் கத்தினான் .

” நான் சொல்வதை கவனி சிவா .உங்கள் இருவருக்கும் நடந்த திருமணத்தை பற்றி எனக்கு தெளிவாக தெரியும் …ஏனென்றால் அந்த …உங்கள் திருமணத்தின் போது , நான் அங்கேதான் அந்த கோவிலில்தான் இருந்தேன் .”

சிவபாலன் வேகம் தளர்ந்து அமர்ந்துவிட்டான் .ஜீவிதா விழி விரித்து கிஷோரை பார்த்தாள் .




” என் சுகன்யா என்னை மனதில் நினைத்துக் கொண்டு தனக்கு தானே தாலி கட்டிக் கொள்வதை நான் அங்கேதான் தூண் மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன் …”

” பிறகு ஏனடா பாவி வரவில்லை …?”

” சிவா காதல் பருவம் இனிமையானது .சுமைகளற்றது . ஆனால் திருமண வாழ்க்கை …அது பொறுப்பானது …பாரங்கள் நிரம்பியது .சுகன்யா என்னை தீவிரமாக காதலித்தாள் .ஆனால் பொறுப்புகளுக்கு பயந்தாள் .எனது வாழ்க்கை இதோ இதுதான் .வேலை …நியாயம் .அது கிடைக்கவில்லையென்றால் போராட்டம் .இந்த வாழ்வு சுகன்யாவிற்கானது அல்ல .அவள்பாலில் குளித்து , பஞ்சு மெத்தையில் படுத்து  உறங்க நினைப்பவள் .என்னால் அவள் நிலைக்கு உயர முடியாது .அவளால் என் நிலைக்கு இறங்க முடியாது.வயிற்றில் குழந்தை வந்துவிட்டாலும் …இந்த நிலைமையில் நாங்கள் திருமணம் செய்தால் மூன்றே மாதங்களில் விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிவிடுவோம் .அதனால் நான் கொஞ்ச நாட்கள் இருவரும் பிரிந்திருக்க நினைத்து , சுகன்யாவிடம் சொல்லாமல் பிரிந்தேன் .ஆனாலும் அவளை என் கண்காணிப்பில்தான் வைத்திருந்தேன் .அதனால்தான் உங்கள் திருமண விபரம் எனக்கு தெரிந்த்து .

நீங்கள் கடைசி வரை அந்த  திருமணத்தை வெளியே தெரியாமல் வைத்திருந்த்தால் திருமண நாளன்று அதிகாலையில்தான் எனக்கு தெரிந்த்து. உடனடியாக திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென கோவிலுக்கு ஓடிவந்தேன் .அங்கா நீ பேசிக்கொண்டிருந்தாய் ….

” உன் மனதில் இருந்த காதலை உன் அத்தை ,மாமா, அம்மா ,பாட்டி  சுகன்யா அனைவரிடமும் தெளிவாக சொல்லிக் கொண்டிருந்தாய் .நம் குடும்ப மரியாதை போகாமலிருக்க ஊருக்குள் நான் சுகன்யாவின் கணவனென கூறிக் கொள்ளுங்கள் . நான் சீக்கிரமே கிஷோரை கண்டுபிடித்து அவனிடம் சுகன்யாவை ஒப்படைப்பேன் என கூறிக்கொண்டிருந்தாய் .




உனது தீவிர காதலும் , குடும்ப பாசமும் நெகிழ வைத்தாலும் அந்நேரத்திற்கு நான் சுயநலவாதியாகி நிலைமையை எனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டேன் .எனக்கும் , சுகன்யாவிற்குமான இடைவெளியாக இந்த பொழுதை மாற்றிக் கொள்ள தீர்மானித்தேன் .ஏனென்றால் சுகன்யா அப்போது சிறு பெண் .மனதிலும் , உடலிலும் .அவள் இன்னமும் வளரட்டும் .இப்போது அவள் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறாள் என என்னை நான் தேற்றிக் கொண்டு , தனக்கு தானே தாலி கட்டிக் கொள்ளும் என் காதலியையும் பார்த்து விட்டு , பத்திரமான இடத்தில் இருக்கிறாள் என்ற மன நிம்மதியுடன் நான் வட நாட்டுப் பக்கம் போய்விட்டேன் .

மூன்று வருடங்கள் கழித்து வந்து பார்த்தேன் .அவள் அதே போன்ற பிடிவாத்த்துடன் அதே குண நலன்களுடன் அப்படியே ஒரு கோடீஸ்வர வீட்டு பெண்ணாகவே இருந்தாள் .என்ன செய்வது …எப்படி அவளை அணுகுவது …எனத் தெரியாமல் 
அவளை இரண்டு வருடமாக தள்ளியிருந்து கண்காணித்தபடி இருந்தேன் .இப்போது உங்கள் ஊரில் போராட்டமெனவும், உள்ளுக்குள் சுகன்யாவோடு சேரும் வாய்ப்பு கிடைக்குமோ…என்ற நப்பாசையுடன்தான் வந்தேன் .ஆனால் ….”

” இதையெல்லாம் நீ முதலிலேயே என்னிடம் சொல்லியிருக்க வேண்டும் .நான் உனக்கு தகுந்த உதவிகள் செய்திருப்பேன் .சரி விடு …முடிந்த்தை பேச வேண்டாம் .இப்போதும் சுகன்யாவை உன்னுடன் அழைத்துக் கொள்வதில் என்ன பிரச்சனை …? “




” நான் இரண்டு நாட்களாக இங்கே இருக்கிறேன் சிவா .போராட்டத்திற்கு ஊர் பெண்கள் அனைவரும் வந்திருக்கிறார்கள் .உன் வீட்டு பெண்களை தவிர , ஜீவிதாவை விடு .இந்த போராட்டத்தில் அவள் ஆரமபத்திலிருந்தே இருக்கிறாள் .இன்று காலைதான் ஜீவிதாவின் அம்மாவை கஷ்டப்பட்டு இழுத்து வந்து உட்கார வைத்தீர்கள் .மற்ற உங்கள் வீட்டு பெண்கள் யாரும் இல்லை .வரவில்லை .அவர்கள் இதனை …இந்த இடத்தை அசிங்கமாக நினைக்கிறார்கள் .இந்த மக்களை கேவலமாக பார்க்கிறார்கள் .ஆனால் எனக்கு இது போன்ற இடங்கள்தான் உயிர்நாடி .எனது இயல்புகள் இது போன்ற மக்களிடம்தான் உறைந்திருக்கும் .இப்போது சொல் இது போன்ற எதிர் துருவங்களில் இருக்கும் நாங்கள் எப்படி வாழ்க்கையில் ஒன்றாக பயணிக்க முடியும் …நீயே சொல்லு .இந்த எண்ணம் தோன்றவும் இரண்டு நாட்களாக உன் கண்ணில் படாமல் ஒளிந்தே போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன் .நிச்சயம் இந்த போராட்டத்தை உங்களுக்கு ஜெயித்தும் கொடுத்து விடுவேன் .ஆனால் என் வாழ்க்கை தான் ….என்ன ஆகப் போகிறதென தெரியவில்லை “

சிவபாலனுக்கு திரும்பவும் அவனை உதைக்க வேண்டுமென்றுதான் தோன்றியது .அதை செய்துமிருப்பான் .ஆனால் அதற்குள் கிஷோரின் போன் ஒலித்தது .

” சிவா மினிஸ்டர் பேச வருகிறாராம் .நாம் பிறகு பேசலாம்.இப்போது போகலாம் . வாருங்கள் …” மூவரும் தங்கள் குடும்ப பிரச்சனைகளை மறந்து விட்டு  போராட்ட களத்தை நோக்கி போனார்கள் .

மந்திரியுடனான பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிய …அடுத்து என்ன செய்வதென தெரியாமல் அமர்ந்திருந்தனர் அனைவரும் .கிஷோர் தனது சகாக்களுடன் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர் .

” நானும் இங்கே உட்காரலாமா …? ” கேட்ட சத்தத்தில் திரும்பிய கிஷோர் நம்ப முடியாமல் கண்களை தேய்த்து விட்டுக் கொண்டான் .

” நானும் உங்களுடன் போராட்டத்தில்தான் கலந்து கொள்ள வந்திருக்கிறேன் சார் .கொஞ்சம் இடம் கொடுங்களேன் …” என்றபடி நின்றிருந்தவள் சுகன்யாவேதான் .கையில் குழந்தையையும் பிடித்திருந்தாள் .




” நீங்க சிவபாலன் சாரோட ஒய்ப் தானே …வாங்கம்மா …உங்களை மாதிரி பெரிய இடத்து பெண்களெல்லாம் கலந்து கொண டால் தானுங்கம்மா இந்த போராட்டம் வெற்றி பெறும் ….” எழுந்து இடம் கொடுத்தவன் கிஷோரின் சகா ஒருவன் .

” என் தாத்தாவும் , அப்பாவும் சம்பாதித்து  வைத்த சொத்துக்களுக்கு எனக்கு பெரிய இடமென்ற அந்தஸ்து தருகிறீர்களே சார் .நான் சாதாரணமானவள் தான் ….” ஓரப்பார்வையில் கிஷோரை அளந்தபடி அமர்ந்தாள் .அவன்  யோசனையுடன் பார்த்தபடி இருந்தான் .

——————–

தலைக்கு ஒரு கையை அணைவாக வைத்துக் கொண்டு , அருகில் மகளையும் படுக்க வைத்து அவளுக்கு தன் முந்தானையால் மூடியபடி தூங்கிக் கொண்டிருந்தாள் சுகன்யா .அவள் முகத்தில் சலிப்பு இல்லை , கஷ்டம் இல்லை .நிம்மதியும் , நிறைவும் தெரிந்த்து .எதிரேயிருந்த பந்தலை பார்த்தான் கிஷோர் .அங்கேயும் பெண்கள் இருந்தனர் .ஆனால் ஜீவிதா இல்லை .அவள் இரவு அங்கே தங்குவதில்லை .வீட்டிற்கு போய்விடுவாள் .ஆனால் நான்கு நாட்களாக சுகன்யா இங்கேயேதான் இருக்கிறாள் . சாப்பிடுகிறாள் …தூங்குகிறாள்  .போராட்ட பெண்களுக்காக அருகில் ஏற்பாடு செய்திருந்த தற்காலிக பாத்ரூமை உபயோகித்தாள் .முகம் சுணங்கவில்லை .மகிழ்ச்சியாக இருப்பது போல்தான் இருந்த்து .

இவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் …என்ன செய்வது …எப்படி செய்வது …? இந்த போராட்டம் வேறு நீண்டு கொண்டே போகிறது …இதனை முடிக்க வேண்டும் .ஏதாவது அதிரடியாய் செய்தால்தான் இந்த போராட்டம் கவர்ன்மென்ட் பார்வையில் பட்டு ஒரு முடிவுக்கு வரும் .

கிஷோர் ஒரு முடிவுக்கு வந்தான் .




அங்கே சிறு சிறு பந்தல்களாக போடப்பட்டிருந்த்து . அவன் இருந்த பந்தலில் கிஷோரும் , அவன் சகாக்களும் , இன்னும் சில குழந்தைகளும் இருந்தனர் .கிஷோர் தூங்கிக் கொண்டிருந்த  அந்த குழந்தைகளை தூக்கிப் போய் பக்கத்து பந்தலில் கிடத்தினான் .தனது நண்பர்களை எழுப்பி எதையோ சொல்லி தனியே அனுப்பினான் .பின் பந்தலின் பின்புறம் போய் மரத்தின் பின்னால் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து வந்தான் .தான் இருந்த பந்தலை சுற்றி ஊற்றினான் .பந்தலின் மேலும் தெளித்தான் .நிமிர்ந்து மற்ற பந்தலில் உள்ளவர்களை பார்த்தான் .நடு இரவை தாண்டிய நேரம் எல்லோருமே தூங்கிக் கொண்டுருந்தனர் .காவலென சுற்றி வரும் சிவபாலனும் , கைலாஷும் கூட சேரில் உட்கார்ந்தபடி  தூங்கியிருந்தனர் .

பெருமூச்சு விட்ட கிஷோர் தன் பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்து உரசி தான் ஊற்றி வைத்திருந்த பெட்ரோல் மீது போட்டான் . தீ பேராசையுடன் பெட்ரோல் தடம் முழுவதும் பரவி படர தொடங்கியது .ஐந்தே நிமிடங்களில் கிஷோர் இருந்த பந்தல் முழுவதையும் ஆக்ரமித்தது . சிவபாலன் தூக்கத்திலிருந்து விழித்து சுதாரித்து கவனத்திற்கு வருவதற்குள் , தீ பக்கத்து பந்தல்களுக்கும் பரவ ஆரம்பித்திருந்த்து .

——————–

ஜெயங்கொண்டத்தில் மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு எதிராக போராடிய போராட்டக்கார்ர்கள் ஆறு பேர் தீ விபத்தில் பலி .பத்து பேர் காயம் .பலியானவர்களில் இருவர் பெரிய தொழிலதிபரின்  மனைவியும் , குழந்தையும்  ஆவர் .டிவிக்கள் கத்தின .ஊடகங்கள் அலறின .பத்திரிக்கைகள் கதறின .பொது மக்கள் பொங்கி எழுந்து நாடு முழுவதும்  ஆங்காங்கே போராட்டங்கள் நடை பெற துவங்கின .

நிலைமை கட்டு மீற துவங்கிவதை உணர்ந்த அரசாங்கம் தங்கள் நிலையிலிருந்து இறங்கி வந்த்து . அந்த ஊரிலிருந்த மீத்தேன் ஆய்வு கிணறுகளை மூடி விட்டு , மீத்தேன் தொழிற்சாலை ஆரம்பிக்கும் திட்டத்தையும் கைவிட்டது .

ஊர் மக்கள் தோரணம் கட்டி , பட்டாசு வெடித்து தங்கள் வெற்றியை கொண்டாடினார்கள் .ஜெயங்கொண்டமும் , பக்கத்து ஊர்களும் விழாக்கோலம் பூண்டிருந்தன .




மாறாக அந்த ஊர் பெரிய மனிதர் வீடு துயரத்தில் மூழ்கி இருந்த்து .விளக்கு கூட போடப்படாமல் இருளில் மூழ்கி கிடந்தன அந்த மாளிகைகள் .க்ளினிக்கில் இருந்து வந்த ஜீவிதா வாசல் விளக்கை போட்டாள் .அம்மாவை தேடி வீட்டினுள் போனாள் .வீட்டில் யாரும் இல்லை .உள்ளே மற்ற விளக்குகளையும் போட்டு விட்டு பக்கத்து வீட்டிற்கு நடந்தாள் .

அங்கே வாசலில் சேதுபதியின் முதுகை தடவி ஆறுதலளித்தபடி அமர்ந்திருந்தார் சபாபதி .உள்ளே அழுது அழுது ஓய்ந்திருந்த சசிகலாவை தன் மடியில் படுக்க வைத்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் சௌதாமினி .

” விளக்கை கூட போடாமல் …ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள் …? ” கேட்டபடி வந்த ஜீவிதா எல்லா விளக்குகளையும் எரிய விட்டாள் .

” எங்கள் வாழ்க்கையில் வெளிச்சமே போய்விட்டதே …” சசிகலா திரும்ப விம்ம ஆரம்பிக்க சௌதாமினி அவளை வருடி சமாதானப்படுத்த …அப்போது அங்கே வந்த சிவபாலன் சந்தோசமாக இருந்தான் .சிரித்தபடி வாசல் படியேறினான் .

” ஜீவா நம்ம போராட்டம் வெற்றி பெற்றதறகான ஆதாரம் வந்துவிட்டது .இதோ மீத்தேன் பேக்டரியை கேன்சல் செய்து கோர்ட் அனுப்பிய ஆர்டர் .நம்ம வக்கீல் இப்போதுதான் கொண்டு வந்து கொடுத்தார் ….” உற்சாகமாக கத்தியவனின் முன் வெறியோடு வந்து நின்றாள் சசிகலா .




” சீ …நீயெல்லாம் ஒரு மனுசனா …? உன் அல்ப ஆசைக்காக என் பொண்ணு வாழ்க்கையையே கெடுத்துட்டியே .வயிரெறிஞ்சு சொல்றேன் .நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட….” கைகளை ஆட்டி சாபமிட்டாள் .

What’s your Reaction?
+1
8
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Aieshak
3 years ago

பாவம் சசிகலா… கதை விறுவிறுப்பாகிறது…

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!