Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 20

20

 




வீட்டின் உள்ளே நுழையும் போதே துள்ளியபடியும் ,குதித்தபடியும் வந்த மகளை ஆச்சரியமாக பார்த்தாள் சௌதாமினி . அதோ அந்த காம்பவுண்ட் கேட்டிலிருந்து இந்த வாசல் வருவதற்குள் பத்து தடவையாவது குதித்திருப்பாள் .ஐந்து தடவையாவது தன்னைத்தானே சுத்தியிருப்பாள் .வழியில் பூத்துக் கிடந்த ரோஜாக்களை பறித்து மடி நிறைய கட்டிக் கொண்டாள் .வீட்டினுள் வந்து அந்த பூக்களை உயரே தூக்கி போட்டு தன் மீதே விழ வைத்தாள் .ஓ…எனக் கத்தினாள் .

ஜீவிதா எப்போதுமே இப்படித்தான் நடப்பாள் , ஓடுவாள் .வீடு அதிர வலம் வருவாள் .சௌந்தரம் கூட அடிக்கடி அவளை கண்டிப்பார் .பொட்டைப்பிள்ளை இப்படி நிலமதிர நடக்க கூடாது பாப்பு …என்பார் .அதன்பிறகு இன்னமும் அதிகமாக குதிப்பாள் .அவர் வாயை மூடிக்கொள்வார் .

படிப்பை முடித்து வந்த்திலிருந்து அவள் இருக்கிறாளா …இல்லையா …எனக் குழம்பும் அளவு வீட்டிற்குள் இருந்தாள் .ஆனால் இப்போது சௌதாமினி தனது பழைய மகளை பார்த்தாள் .குதித்து உள்ளே வந்த ஜீவிதா அம்மாவின் கழுத்தை இறுக கட்டிக் கொண்டாள் .” என் செல்ல அம்மா …குட்டி அம்மா …தங்க அம்மா …” கொஞ்சினாள் .

உடல் சிலிர்க்க மகிழ்ந்து போனாள் சௌதாமினி .அவளிடம் பாராமுகமாக இருந்த மகள் …இப்போது குழந்தையாய் மேலே விழுந்து கொஞ்சுவதில் சிலிர்த்தவள் தானும் மகளை அணைத்து முத்தமிட்டாள் .

” பாப்பு …என்னடா செல்லம் …இன்னைக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறாயே …? “

” ஆமாம்மா …இந்த நாளை என் வாழ்விலேயே மறக்க முடியாது .” தாயையும் தன்னோடு சேர்த்து இழுத்து சுற்றினாள் .




” அட …என்ன இது இன்னைக்கு அம்மாவும் , மகளும் இவ்வளவு சந்தோசமாக விளையாண்டு கொண்டிருக்கிறீர்கள் …? “அவர்களின் உற்சாகத்தில்  மகிழ்ந்தபடி  உள்ளே வந்த சபாபதியின் கைகளையும் சேர்த்து கோர்த்து தங்களுடன் இழுத்துக் கொண்டாள் ஜீவிதா .

” அப்பா …எனக்கு ரொம்ப ஜாலியாக இருக்கிறது …ஓன்னு கத்தனும் போல இருக்கு ….” சொன்னதோடு கத்த வேறு செய்தாள் .

மகளின் உற்சாகம் தாயையும் , தந்தையையும் நெகிழ வைக்க இருவரும் அவளோடு கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டனர் .அந்த வீட்டின் ஒரே வாரிசான ஜீவிதாவின் சோகத்தில் தானும் சோகமாகி கிடந்த வீடு , இப்போது தானும் விழித்தெழுந்து சோபிக்க தொடங்கியது .

” இப்போதான் பாப்பு நம்ம வீடே அழகாகி இருக்கிறது ….” சௌதாமினி கண் கலங்க சொல்ல , நான்கு வருடங்களாக மனைவியின் முகம் பார்த்து பேசாமல் இருந்த சபாபதி , இன்று அவளின் உற்சாகத்தில் நெகிழ்ந்து மகளோடு மனைவியின் தலையையும் வருடினார் .கணவரின் பரிவில் விழிகள் மின்ன அஅவர் தோள்களில் சாய்ந்து கொண்டாள் சௌதாமினி .

தாயையும் , தந்தையையும் இணைத்து இழுத்து சோபாவில் அமர்த்திய ஜீவிதா அவர்கள் எதிரே தரையில் அமர்ந்தாள் . ” என்னடா …” இருவரும் அவளை ஆதரவாக பார்க்க …

” அவர் …எனக்காக காத்துக் கொண்டு  இருக்கிறார்….”

” யார் …? “

” பாலா …என் பாலா .அவர் சுகன்யாவை திருமணம் செய்து கொள்ளவே இல்லை .எனக்காகவே காத்துக் கொண்டிருக்கிறார் ….” புரியாமல் விழித்த பெற்றோருக்கு …முதலில் இருந்து நடந்த்தை விவரித்தாள் .




” இனி எங்களை யாரும் பிரிக்க முடியாது அப்பா .எவ்வளவு நாட்களானாலும் நானும் , பாலாவும் காத்திருந்தாவது ஒன்று சேரத்தான போகிறோம் …” தன் மன எண்ணத்தை உறுதியாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு மாடியேறினாள் .

பத்தே நிமிடங்களில் வேறு உடை மாற்றி , நேர்த்தியாக அலங்கரித்து கொண்டு வந்தவள் ” நான் பாலாவை பார்க்க போகிறேன் …” வெளிப்படையாக தெரிவித்து விட்டு வெளியே போனாள் .

அது வரை திக் பிரமை பிடித்து அமர்ந்திருந்த சபாபதியும் , சௌதாமினியும் அவள் வெளியேறியதும்தான் சுய உணர்விற்கு வந்தனர் .” ஒரே பொண்ணுங்க .அவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா வாய்க்கனும் …” அழுத சௌதமினியை ஆதரவாக அணைத்துக் கொண்டார் சபாபதி .

” அவள் அப்பழுக்கற்றவள் சௌமி .அவளது வாழ்வு நிச்சயம் வீணாகாது .நாம் அவளுக்காக கடவுளை வேண்டிக் கொள்வோம் .அழாதே ….” மனைவியை தேற்றினார் .

———————–

உதடுகளை குவித்து விசிலடிக்க வேண்டும் போல் கூட தோன்றியது ஜீவிதாவிற்கு .காரில் சத்தமாக பாடலை ஒலிக்கவிட்டு தானும் கூடவே பாடிக்கொண்டு போனாள் .சிவபாலனை தேடி சிமெண்ட் பாக்டரி போனாள் .அவன் அங்கே இல்லை .லெதர் பேக்டரியிலும் இல்லை .போனில் அவனிடம்தன் சந்தோசத்தை  பேச பிடிக்காமல் நேரிலேயே பார்க்க வேண டுமென கிளம்பியிருந்தான் .அவன் கண்ணில் படாமல் மறைந்து கொண்டிருந்தான் .

எங்கேயடா போய் தொலைந்தாய் …? செல்லமாக தன் மனதிற்குள் அவனை திட்டியபடி முந்திரி தோப்பை நோக்கி காரை செலுத்தினாள் .அவள் காருக்கு எதிரே மோதுவது போல் ஓடி வந்தாள் ஜெயந்தி .

” அக்கா …சீக்கிரம் … போங்க ….” அவசரமாக கார் கதவை திறந்து ஏறிக்கொண்டாள் .




” என்ன ஜெயந்தி …யாருக்கு என்ன …? ” ஜீவிதாவையும் பதற்றம் தொற்றிக் கொண்டது .

” நம்ம ஊரில் மீத்தேன் எடுக்க போறேன்னு ஒரு கம்பெனி வந்து கிணறு தோண்டி ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தாங்கள்ல.அந்த கிணற்றில் இருந்து வாயு கசிவு வெளியே வருதாம் .அந்த பகுதி மக்கள் எல்லோருக்கும் வாந்தி , மயக்கம்னு கிடக்குறாங்க .சிவா சார் , டாக்டர் சார் எல்லோரும் அங்கேதான் இருக்குறாங்க .வாங்க போகலாம் ….”

” சிவ …சிவா …” புலம்பியபடி காரை வேகமாக ஓட்டினாள் ஜீவிதா .அவள் காரை விட்டு இறங்கிய உடனேயே  அவளருகில் ஓடி வந்த சிவபாலன் அவள் முகத்தில் முகமூடியை பொருத்தினான் .ஜெயந்திக்கும் கொடுத்தான் .ஆங்காங்கே சுருண்டு விழுந்து கிடந்தவர்களை நோக்கி போக போனவளை தடுத்தவன் …

” மயங்கினவங்களை அதோ அங்கே பள்ளிக்கூடத்தில் படுக்க வைத்திருக்கிறோம் ஜீவா .நீ அங்கே போய் அவர்களை கவனி .இங்கே மயங்கியிருப்பவர்களையும் அங்கேதான் கொண்டு வரப் போகிறோம் .போ ….” சொல்லிக் கொண்டே தனது முகமூடியை சரி செய்தபடி  ஓடினான் . கைலாஷும் அங்கேதான் இருந்தான் .முகத்தை முகமூடியால் பாதுகாத்தபடி  மயங்கி விழுந்தவர்களுக்கு முதலுதவி அளித்து பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருந்தான் .

முகமூடி அணிந்திருந்த சிவபாலன் கம்பெனி ஆட்கள் துரிதமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் .செய்தி அறிந்த்தும் தனது கம்பெனியில் இருந்த முகமூடியுடனும் ஆட்களுடனும் அந்த இடத்திற்கு வந்திருந்தான் சிவபாலன் .

ஜீவிதாவும் , ஜெயந்தியும் பள்ளிக்கூடத்திற்குள் போய் மூச்சு திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க துவங்கினர் .சிவபாலனின் விரட்டலில் அங்கிருந்த அரசு மருத்துவமனை டாக்டரும் , நர்சும் வர , மிக வேகமாக அந்த இடம் சீரடைய துவங்கியது . ஓரளவு நிலைமை சீரானவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண டு செல்லப்பட்டனர் .

ஜீவிதாவின் க்ளினிக் நிறைந்து , வெளியே வராண்டாவிலெல்லாம் நோயாளிகள் நிரம்பினார்கள் .எங்கே பார்த்தாலும் ஓலமும் , கூச்சலுமாக இருந்த்து .மிக கடுமையாக  பாதிக்கப்பட்டவர்கள் பத்து பேர் இருந்தனர் .உடனடி சிகிச்சையும் , தீவிர கண்காணிப்புமாக  உயிர்சேதமின்றி காப்பாற்றி விட எல்லோரும் தீவிரமாக முனைந்து கொண்டிருந்தார்கள் .




அன்று இரவு முழுவதும் போராடியும் அதிகாலை இரண்டு உயிர்கள் பலியாகிவிட , அந்த இடம் முழுவதும் சோகம் சூழ்ந்த்து .வாலிபத்தின் வாசலில் காலடி எடுத்து வைத்திருக்கும் இளைஞனொருவன் , திருமண வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் குடும்ப தலைவனொருவன் .இரண்டு குடும்பங்களும் கதறினர்.

பீறிட்டு வந்த அழுகையை அடக்கியபடி தன் அறைக்குள் போய் சோர்ந்து அமர்ந்துவிட்டாள் ஜீவிதா .இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக போகிறதோ …பயத்தில் துடித்தது அவள் மனது .கண்களை இறுக மூடி சேரில் பின்னால் சாய்ந்து கொண்டாள் .சிவ …சிவா …அந்த எளிய மக்களை காப்பாற்றப்பா ….மனமார வேண்டிக் கொண்டாள் .

” நிச்சயம் இனி எல்லோரையும்   காப்பாற்றி விடலாம்  ஜீவா. ஆனால்  அதற்கு நீ இப்படி சோர்ந்து போகாமல் தைரியமாக நிமிர்ந்து நின்று உழைக்க வேண்டும் .” தைரியம் கொடுத்தபடி அருகே வந்த சிவபாலனின் குரலிலும் உழைப்பின் சோர்வு தெரிந்த்து .

மெல்ல விழிகளை திறந்து அ வனை பார்த்தாள் .” கண் முன்னாலேயே உயிர் போகும் போது நான் படித்த படிப்பின் மேலேயே வெறுப்பு வருகிறது பாலா .”

” ம்ஹூம் …உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பான வேலையில் இருப்பவள் , இது போல் பேசலாமா …? எழுந்து வா …இப்போது இரண்டு பேர் வந்திருக்கிறார்கள் .கைலாஷ் பார்த்துக் கொண்டிருக்கிறார.நீயும் வந்து பார் …” சொன்னபடி திரும்ப போனவனை நோக்கி தன் கையை நீட்டினாள் .

” ப்ளீஸ் என்னைக் கூட்டிட்டு போங்க பாலா …”

.என்னை ஏந்திக் கொள்ளேன் என்பது போலான அந்த தாங்கல் தவிப்பில் , உருகியவன் வேகமாக முன் வந்து அவள் இரு கரங்களையும் தன் கைகளில் ஏந்திக்கொண்டான் .

” வாடா …போகலாம் .தோள் சேர்த்து அணைத்து அழைத்து போனான் .

அந்த நோயாளிகளை அவள் பரிசோதிக்கும் வரை ஆதரவாக அருகிலேயே இருந்தான். அவளுக்கு தேவையான உபகரணங்களை குறிப்பறிந்து எடுத்துக் கொடுத்தான் .கை தொட்டு , தோள் வருடி என சிறு சிறு தொடுதல்களில் தன் தைரியத்தை அவளுக்கு சொல்லிக் கொண்டிருந்தான் .இன்னமும் அங்கே சீரியசாக இருந்த பத்து பேர்களும் ஓரளவு முன்னேற்றத்தை எட்ட அனைவரும் நிம்மதியாக மூச்சு விட்டனர் .

ஓரளவு அந்த இடத்தில் அனத்தல் குறையத் தொடங்கியிருக்க வானம் மிக லேசாக வெளுத்து வந்து கொண்டிருக்கும் போது , தனது இருக்கையில் அமர்ந்து அப்படியே தூங்கிக் கொண்டிருந்த ஜீவிதாவை எழுப்பி , ஒரு பெஞ்சில் படுக்க வைத்தான் சிவபாலன் .மெல்ல க்ளினிக்கை ஒரு வலம் வந்தவன் கைலாஷும் நோயாளிகளை கவனித்தபடி இருக்க கண்டான் .ஜெயந்தி ஒரு ஓரமாக படுத்து தூங்கிப் போயிருந்தாள் .




மெல்ல க்ளினிக்கின் பின்புறம் வந்து கால்வாயாக ஓடிக் கொண்டிருந்த அந்த நதிக்கரையின் கல்லில் அமர்ந்து கொண்டான் . சபாபதி தனது பண்ணை வீட்டைத்தான் ஜீவிதாவிற்கு க்ளினிக்காக மாற்றிக் கொடுத்திருந்தார் .தோப்பும் , வயலுமாக இயற்கை சூழலில் அழகாக அமைந்திருக்கும் அவளது க்ளினிக் .நதியிலிருந்து வந்த குளிர்காற்றை அனுபவித்தபடி சிவபாலன் அங்கே அமர்ந்திருந்தான் .அவன் மனதில் ஜீவிதாவும் , அவனுமாக இந்த நதிக்கரையில் கழித்த சிறுவயது நினைவுகள் வலம் வந்தன .

கவலைகள் ஏதுமின்றி குதூகலத்தை மட்டுமே வாரி பெற்றுக் கொண்ட பருவம் .பெருமூச்சு விட்டான் .

” என்ன சிவா …இப்படி ஒரு பெருமூச்சு …? என்ன நினைப்பில் உட்கார்ந்திருக்கிறீர்கள் …? ” கேட்டபடி அவனருகில் வந்து அமர்ந்தான் கைலாஷ் .

அவனை பார்த்ததுமே முதல் நாளிலிருந்து இடைவிடாது அவன் செய்த சேவைகள் ஞாபகம் வர புன்னகைத்தான் சிவபாலன் .இவனுக்கென்ன தேவை இருக்கிறது …இந்த சிறிய ஊரில் மாட்டிக் கொண்டு இந்த சாதாரண மக்களுக்கு இப்படி இரவு முழுவதும் கண் விழித்து  அவசர சிகிச்சை அளிக்க வேண்டுமென்று ….?

” ரொம்ப நன்றி டாக்டர் சார் .நேற்றிலிருந்து எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறீர்கள் .நாங்கள் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம் …” நன்றியுடன் பேசினான் .

” சும்மா இருங்க சிவா.  உங்களை விடவா நான் அதிக வேலை பார்த்துவிட்டேன் .நீங்கள்தான் ஒரு இடத்தில் நிற்காமல் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தீர்கள் .இப்போது நீங்கள் எனக்கு சொன்ன நன்றியை ஜீவிதாவிற்கோ …..ஜெயந்திக்கோ சொன்னீர்களா …? என்னிடம் மட்டும் ஏன் இந்த பாரபட்சம் …? “

” அவர்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள் . இந்த ஊர் மக்களின்மேல்  அவர்களின் அக்கறை இயல்பானது .தினமும் லட்சக்கணக்கில் வருமானம் வரும் உங்கள் தொழிலை விட்டு விட்டு இங்கே சேவை செய்யும் மனது உங்களுத்தான் இருக்கும் . நிஜம்மாகவே நீங்க கிரேட் டாக்டர் சார் ….”

” இப்போது சொன்னீர்களே இந்த டாக்டர் சார் …அந்த பதவிக்குரிய தர்ம்ம் இது .நீங்கள் சொல்வதை போல் பெரிதாக நினைக்க இதில் ஒன்றும் இல்லை .இனி இந்த புகழ்ச்சியை விட்டு விடுங்கள் .அப்புறம் இன்னொரு வேண்டுகோள் …இந்த டாக்டர் சாரையும் விட்டு விட்டால் நன்றாக இருக்கும் .நான் உங்களை என் நண்பனாகத்தான் நினைக்கிறேன் .நீங்களும் என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டு பெயர் சொல்லி அழைத்தால் சந்தோசப்படுவேன் …”

” நிச்சயம் கைலாஷ் …ஜீவிதாவின் நண்பன் எனக்கும் நண்பன்தானே …” சிரித்தபடி கைகுலுக்கிக் கொண்டார்கள் .




” ஸ்மோக் பண்ணுவியா சிவா …? ” கைலாஷ் தன் பாக்கெட்டிலிருந்து சிகரெட் எடுத்தான் .

” ம் …எப்போதாவது .ஆனால் உடல்நலம் பேண வேண்டிய டாக்டரே புகை பிடிப்பது …தப்பாச்சே …”

” ஹேய் …நானும் எப்போதாவதுதாம்பா .நேற்றிலிருந்து ஹெவி டென்சனில்லையா ….? ஜஸ்ட் ஒரு ரிலாக்சேஷன் …உனக்கு …? ” கைலாஷ் நீட்டிய சிகரெட்டை வாங்கி பற்ற வைத்தான் சிவபாலன் .

” ஐ ஆம் ஆல்சோ நீட் சம் ரிலாக்சேஷன் …”

” ம் …சரி .இப்போது சொல்லு சிவா . கொஞ்ச நேரம் முன்பு என்ன நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாய் …? “

சிவபாலன் அவனை கூர்ந்து பார்த்தான் .பிறகு ஒரு முடிவெடுத்தவனாய் சொன்னான் .

” ஜீவிதாவை நினைத்துக் கொண்டிருந்தேன் ….”

What’s your Reaction?
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
ஆயிஷா. கே
ஆயிஷா. கே
3 years ago

பாராட்டுக்கள் மா..

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!