Serial Stories சரணடைந்தேன் சகியே

சரணடைந்தேன் சகியே – 14

14

 

 

 

“திருமணம் முடித்துக் கொள்வதில் அன்று எங்களுக்குள் எந்த குற்ற உணர்வும் இல்லை.. அதன் பிறகு எங்களுக்கு விருந்து கொடுத்து, எங்களுக்கென தனிமைக்காக ஒரு அறையை அகிரோட்டோ வீட்டினர் ஒதுக்கிய போது.. நாங்கள்.. அப்போதுதான் திருமணம் முடிந்த ஒரு இயல்பான கணவன் மனைவியாக நடந்து கொண்டோம்.. இதோ இப்போது வரை அதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை..”
சொல்லி முடித்த மகனின் முகத்தை சலனமின்றி பார்த்தபடி இருந்தாள் அபிராமி..
“அப்புறம்.. எப்படி அண்ணா நீங்கள் இருவரும் பிரிந்தீர்கள்..” கேள்வி கேட்ட கார்த்திகா கன்னத்தில் கை தாங்கி உட்கார்ந்து தொடரும் போட்ட கதையின் அடுத்த அத்தியாயத்தை கேட்கும் ஆவலில் இருந்தாள்..




“இந்த கேள்விக்கான விடையை சஸாக்கிதான் கூற வேண்டும்.. அன்று பாதி இரவில் அப்பா அம்மா தேடுவார்களென அவள் கிளம்பி போய் விட்டாள்.. மறுநாள் நான் அவளை தேடிப் போன போது அவள் வீட்டில் யாருமே இல்லை.. வீடு பூட்டியிருந்தது.. நான் அவர்களை தேட ஆரம்பித்த போது ஜப்பானில் பூகம்பம் வந்தது.. மிகப் பெரிதாக ஜப்பானையே ஆட்டிப் படைத்த அந்த நில நடுக்கத்தில் நிறைய குடும்பங்கள் இடம் தெரியாமல் சிதறி போயின.. நானும் அகிரோட்டோவும் சஸாக்கி குடும்பத்தை தேடி அலுத்து போனோம்.. அவர் தேடி கண்டுபிடித்து சொல்லுவதாக உறுதி அளிக்க நாங்கள் அங்கிருந்து கிளம்பி வந்தோம்.. இங்கே வந்த பின் அன்று நாம் பாண்டிச்சேரி போய் பார்க்கும் வரை சஸாக்கியை தேடியபடிதான் இருந்தேன்..”
“ஓ அதனால்தான் கல்யாணமென்றாலே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே இருந்தீர்களா அண்ணா..?”
“ஆமாம்.. அகிரோட்டோவை அடுத்து இந்த விபரங்களெல்லாம் தெரிந்தவர்கள் சாரங்கனும், சரண்யாவும்.. அவர்களும் எனக்காக போகும் இடங்களிலெல்லாம் சஸாக்கியை தேடினார்கள்.. சரண்யாவிற்கு கடந்த சில மாதங்களாக சஸாக்கிக்காக நான் காத்திருப்பது வீணென தோன்றியதால் என்னை திருமணம் செய்ய வற்புறுத்தியபடி இருந்தாள்.. என் முன்கதை முழுவதும்.. தெரிந்தும் எல்லோம் தெரிந்தும் என்னை இப்படி நிர்பந்திக்கிறாளே என்ற கோபம் எனக்கு சரண்யா மீது..”
“பூகம்பத்திற்கு முன்னாலேயே சஸாக்கி காணாமல் போய்விட்டாள் என்றாயே.. எங்கே போனாள்..?”
“இதற்கான விடையை சஸாக்கிதான் சொல்ல வேண்டும்..”




“நானும் சொல்லலாம்..” என்றபடி வந்தாள் அன்னலட்சுமி..
“வாங்க.. உட்கார்ந்து சொல்லுங்க..” அபிராமி அவளுக்கு சோபாவை காட்டினாள்..
“இன்றைய அலைச்சல் சஸாக்கி உடலுக்கு தாங்கவில்லை.. உடலெல்லாம் வலிப்பதாக இவ்வளவு நேரம் அனத்தியபடி இருந்தாள்.. வெந்நீர் வைத்து உடல் ஒத்தடம் கொடுத்து, அவளையும், சசிரூபனையும் தூங்க வைத்து விட்டு வருகிறேன்..” என்றபடி அமர்ந்தாள் அன்னலட்சுமி..
“முதலில் உங்கள் வாழ்க்கை மர்மத்தை சொல்லுங்க ஆன்ட்டி.. நான் உங்களை ஜப்பானில் வைத்து பார்த்த போது, சுத்தமான ஜப்பான் பெண்ணாக இருந்தீர்கள்.. ஒரு வார்த்தை கூட தமிழ் பேசவில்லை.. ஆனால் இப்போதோ அழகாக தமிழ் பேசுகிறீர்கள்.. தமிழ் பெண் என்கிறீர்கள்.. சஸாக்கியும் ஒரு முறை கூட என்னிடம் தமிழில் ஒரு வார்த்தை பேசியதில்லை.. இப்போது அழகாக தமிழ் பேசுகிறாள்.. உங்களுக்குள் என்ன மர்மம்..?”
“பெரிய மர்மமெல்லாம் இல்லை பாலா.. அது எனது கையாலாகாத்தனம்.. நானும் ஒசாயோவும் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டோம்.. சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தங்கள் மகளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற ஆசையில் எனது பெற்றோர் எங்கள் திருமணத்தை மறுக்கவில்லை.. ஜப்பான் போன பிறகுதான் தெரிந்தது ஒசாயோ ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று..”
“ஐயோ என்ன ஆன்ட்டி சொல்றீங்க..?” கார்த்திகா கத்தி விட்டாள்..




“ஆமாம்மா அவரது முதல் மனைவி ஒரு அமெரிக்க பெண்.. மணமுடித்து ஜப்பான் வந்த இரண்டே மாதங்களில் அவளுக்கு ஜப்பானும், ஒசாயோவும் அலுத்துவிட, வேறொரு அமெரிக்கனை பிடித்துக் கொண்டு ஒசாயோவை உதறிவிட்டு அமெரிக்கா பறந்து விட்டாள்.. அதன் பிறகுதான் இந்தியா வந்த போது என்னை பார்த்து காதலித்து மணம் முடித்திருக்கிறார் ஒசாயோ.. அவருக்கு மனதினுள் எப்போதும் ஒரு பயம்.. நானும் அந்த அமெரிக்க பெண் போல் அவரை உதறி விட்டு இந்தியா போய் விடுவேனென்ற பயம்.. அதனால் எனக்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தார்.. நான் ஒரு இந்திய பெண், தமிழ்நாட்டுக்காரி என்பதையே முற்றிலும் மறந்து விட வேண்டுமென்றார்..
முழுக்க முழுக்க ஜப்பான் பெண்ணாக மாற வேண்டுமென்றார் எனது பெயரைக் கூட மாற்றிவிட்டார்.. ஒரு ஆக்சிடென்டில் என் தாய் தந்தை ஒன்றாக மரணமைடந்த போது கூட என்னை இந்தியா வர விடவில்லை.. எங்களுக்கு சஸாக்கி பிறந்த பிறகு அவளுக்கும் எனக்கான அதே கட்டுப்பாடுகள்.. யாருடனும் அதிகமாக பேசக்கூடாது, பழகக்கூடாது என்று.. என்றாவது ஒருநாள் மனைவியும், மகளும் தன்னை விட்டு போய்விடுவார்கள் என்றே அவர் நம்பினார்.. அதனால் மிகுந்த கடுமையாக எங்களிடம் நடந்து கொண்டார்..
அவர் பார்க்காத கவனிக்காத நேரங்களில் நான் சஸாக்கிக்கு தமிழ் சொல்லி தருவேன்.. அவளுக்கும் தமிழ் மிகப் பிடித்து விட்டது.. ஆனால் எங்களுக்கு பிடித்த மொழியை எங்களால் பேச முடியாது.. அவர் அறியாமல் எங்களுக்குள் ஒரு உலகை படைத்துக் கொண்டு அதில் நாங்கள் வாழ்ந்து வந்தோம்..




இந்தநிலையில்தான் சஸாக்கி உங்களை பற்றி என்னிடம் சொன்னாள்.. ஒரு தமிழரை சந்தித்ததாக சொன்னாள்.. அவருடன் பேச பழக பிடித்திருப்பதாக சொன்னாள்.. நான் என் மகளை தடுக்கவில்லை.. இந்த சிறை வாழ்க்கையில் இருந்து என் மகள் விடுபட்டு என் தாய்நாட்டிற்கு போய்விட வேண்டுமென்று விரும்பினேன்..
அப்போதுதான் நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தீர்கள்.. நேரில் உங்களை பார்த்தது, உங்களுடன் பேசியது எல்லாமே எனக்கு உங்கள் மீது மிகுந்த மனநிறைவு.. ஆனால் ஒசாயோவிற்கு அன்று உங்கள் மீது சந்தேகம்.. உங்களுடன் மிக நல்லவிதமாக பேசி அனுப்பி விட்டு எங்கள் இருவரையும் அன்று ஒருவழி பண்ணிவிட்டார்..”
“உ.. உங்களை.. ச..சஸாக்கியை அடித்தாரா..? அப்படியெல்லாம் செய்வாரா அவர்..?” பாலகுமரன் பதட்டமாக இடையிட, அன்னலட்சுமி புன்னகைத்து தலையாட்டி மறுத்தாள்..
“இல்லை.. அவர் அந்த அளவு கீழிறங்கி நடந்துக்கொள்ள மாட்டார்.. ஆனால் சொற்களாலேயே எதிராளி மனதை குத்தி புண்ணாக்கி விடுவார்.. அவரது பேச்சிற்கு பயந்தே நிறைய விசயங்களில் அவரை ஒத்து போய்விடுவோம் நானும், சஸாக்கியும் அன்று..
சஸாக்கி உங்களை காதலிப்பதை சொன்னாள்.. உங்களையே திருமணம் செய்து கொள்ள போவதாக உறுதியாக நின்றாள்.. அப்படி அந்த தமிழ் பையன் சொன்னானா.. எனக்கேட்டார்.. சஸாக்கி லேசாக தயங்கவும், அந்த தயக்கத்தை வைத்தே அவளை குழப்பினார்.. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மிகவும் ஆபத்தானவர்கள், ஏமாற்றுக்காரர்கள்.. அதனால் நீ அவனை விட்டுவிடு.. மறந்துவிடு.. நாம் டோக்கியோ போய்விடுவோம் இங்கே இருக்கவே வேண்டாம் என்றார்..
சஸாக்கியும் டோக்கியோ வர ஒத்துக் கொண்டாள்.. ஆனால் அதற்கு முன்பு உங்கள் அன்பை உறுதி செய்து கொள்கிறேன்.. அவரது அன்பு உறுதியானால் என்னை அவருடன் அனுப்பிவிட வேண்டும்.. இல்லையானால் உங்களுடன் டோக்கியோ வந்து விடுகிறேன் என்றாள்.. அவருக்கு வேறு வழியில்லை.. உங்களை பார்க்க அனுப்பி வைத்தார்..
உங்களை சந்திக்க வந்த சஸாக்கி இரவு வெகு நேரமாக வீடு திரும்பவில்லை.. நாங்கள் பயந்தோம்.. பாதி இரவில் அகிரோட்டோவின் வீட்டிற்கு வந்தோம்.. என்னை போனில் சஸாக்கியுடன் பேச சொன்னார்.. நான் பேசி அவளை வெளியே வரச் சொன்னேன்.. ஏனெனில் அகிரோட்டோவின் வீட்டிற்குள் எல்லோராலும் நுழைந்து விட முடியாதே அதுவும் அந்த இரவில்..




அரை இருளில் வீட்டினுள் இருந்து வந்த சஸாக்கியை பார்த்தபடி இருந்த போது சர்ரென எங்கள் அருகில் ஒரு டாக்சி வந்து நின்றது.. எங்கள் இருவரையும் அதனுள் பிடித்து தள்ளினார்.. நாங்கள் ஏமாந்து விட்டதை உணர்ந்தோம்.. தப்பித்து போக நினைத்தால் தான் டாக்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து விடுவதாக எங்களை மிரட்டினார்.. மூவரும் டோக்கியோ செல்வதற்காக ரயில்வே ஸ்டேசனில் புல்லட் ட்ரெயினுக்காக நின்ற போதுதான் அந்த பூகம்பம் வந்தது.. ரயில்வே ஸ்டேசனில் எங்கள் கண் முன்னாலேயே அவர் அமர்ந்திருந்த இருக்கையோடு பூமிக்குள் புதைந்து போனார்..
அதிரந்து நின்ற எங்களை போலீஸ் ரயில்வே ஸ்டேசனை விட்டு வெளியே இழுத்து வந்தனர்.. ஜப்பான் முழுவதும் அடுக்கடுக்காக அடுத்தடுத்து பூகம்பங்கள் வர, மக்கள் அனைவரும் வீட்டிற்குள் போகாமல் ரோட்டிலேயே நாள் முழுவதும் கழித்தனர்..
அங்கிருக்க பயந்து வேறு நாடுகளுக்கு வெளியேற நினைத்தவர்களுக்கு அரசாங்கம் உதவ, நாங்கள் சிறிதும் யோசிக்காமல் இந்தியாவிற்கு ப்ளைட் ஏறினோம்.. தமிழ்நாடு வந்தோம்.. நேரடியாக உங்களை உடனே வந்து பார்க்க சஸாக்கி தயங்கினாள்.. எனது தூரத்து உறவினர் மூலம் திருச்சியில் தங்கினோம்.. அங்கே சஸாக்கியின் கர்ப்ப விபரம் தெரிந்தது.. உங்களை பார்க்க வர தயங்கி பாண்டிச்சேரியில் தங்கினோம்..
சஸாக்கி உங்களை வந்து பார்க்க முழுவதுமாக மறுத்து விட்டாள்… குழந்தையோடு அவளை பார்க்கும் நீங்கள் தவறாக நினைப்பீர்களென அவள் நினைத்திருக்கலாம்.. இனி இந்த குழந்தையோடே.. என் மீதான வாழ்நாட்களை நான் வாழ்ந்து விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.. அவளது பிரசவ சமயத்தில் சிக்கலாக ஆஸ்பிடலில் உங்களது அட்ரஸ் கொடுக்க வேண்டிய சூழ்நிலை அந்த சூழ்நிலைதான் இப்போது சஸக்கியை உங்களுடன் இணைத்து வைத்திருக்கிறது..”




அன்னலட்சுமி தனது இருண்ட கடந்த காலத்தை சொல்லி முடித்தாள்.. பாலகுமரன் கண்களை இறுக் மூடி அவள் சொன்ன தகவல்களை தனக்குள் உள்வாங்க முயன்றாள்.. மிக இறுக்கமாக இருந்தது அவனது முகம்..
அபிராமியும், கார்த்திகாவும் எழுந்து வந்து அன்னலட்சுமிக்கு ஆதரவாக இருபுறமும் அமர்ந்து கொண்டனர்.. அவளது இரு கைகளையும் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு ஆதரவாக வருடிக் கொடுத்தனர்.. அன்னலட்சுமி நெகிழ்ந்து அபிராமியின் தோள்களில் சரிந்து கொண்டாள்..

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

3 Comments
Inline Feedbacks
View all comments
Anonymous
Anonymous
1 year ago

Visitor Rating: 3 Stars

3
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!