Serial Stories சரணடைந்தேன் சகியே

சரணடைந்தேன் சகியே – 12

12

 

 

 

படபடவென அந்த ஆளுடன் ஜப்பான் மொழியில் பேசத் துவங்கினாள் அந்த பெண்..

பாலகுமரனை கை காட்டி.. “ஓட்டோ..” என்றாள்.. “ட்டுசுமா..” என தன்னைக் கை காட்டிக் கொண்டாள்.. பேசியபடியே தனது பர்சை எடுத்து அவள் பணத்தாள்களை எடுக்கவும்தான் பாலகுமரனுக்கு புரிந்தது.. இந்தப் பெண் எனக்காக அவனுக்கு பணம் தர போகிறாளா..?

“நோ மேடம் வேண்டாம்..” ஆங்கிலத்தில் பேசி தடுத்தவனை பேசாமலிருக்குமாறு ஆங்கிலத்தில் அதட்டியபடி தனது பர்சில் இருந்த சில ஜப்பான் நோட்டுக்களை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு.. தனது பார்சை தலைகீழாக கவிழ்த்து காட்டினாள்.. அந்த ரவுடி திருப்தியாக தலையசைத்து பணத்தை வாங்கிக் கொண்டு போனான்..




“எனக்காக நீங்கள் ஏன் பணம் தந்தீர்கள்..?”

“பணம் கொடுக்காவிட்டால் அந்த ரவுடி விடமாட்டான்..”

“என்னிடம் பணம் இல்லை… அதனால்தான்.. இது என்ன இப்படி ஒரு கொள்ளை..? இது இங்கே சகஜம் போல.. நான் அவனை அடித்து விரட்ட நினைத்திருந்தேன்.. நீங்கள் அதற்குள்..”

“இல்லை.. இல்லை அப்படி எப்போதும் செய்து விடாதீர்கள்.. இவன் யாகுசா என்ற அமைப்பை சேர்ந்தவன்.. அவர்கள் மாபியா கும்பல்.. இவனை போல் உடல் முழுவதும் பச்சை குத்திக் கொண்டிருப்பார்கள்.. இதுதான் அவர்களின் அடையாளம்.. இதுபோல் ரோட்டில், தெருவில் நடப்பவர்களை மிரட்டி பணம் பறிப்பார்கள்.. கைகளில் எப்போதும் கத்தி வைத்திருப்பார்கள்.. சிறு பிரச்சனை என்றாலும் குத்த பயப்படமாட்டார்கள்.. மிக தெளிவாக உடல் நரம்புகளை கத்தியால் கட் செய்துவிட்டு ஓடி விடுவார்கள்.. இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..”

“ம் நடுரோட்டில் பகிரங்க கொள்ளை.. இதற்கு உங்கள் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதா..?”

“பத்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த கும்பல் மிக பயங்கரமாக எல்லா இடங்களிலும் பரவியிருந்தனர்.. இப்போது கவர்ன்மென்ட் பெருமளவில் அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.. ஆனாலும் இவனை போல் தப்பிப் போன சிலர் ஊருக்குள் உலவிக் கொண்டுதான் இருக்கின்றனர்.. பொதுமக்கள் அவர்களை எதிர்க்காமல் அவர்கள் போக்கில் போய் கையிலிருக்கும் பணத்தை கொடுத்து விடுவோம்.. பிறகு அடையாளத்தை அருகிலிருக்கும் போலீசில் சொன்னால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.. இந்த திருடர்களுக்கு கையிலிருக்கும் பணத்தை அவர்களுக்கு கொடுத்து விட வேண்டும் அவ்வளவுதான்.. விட்டு விடுவார்கள்..”




“பொருளாதார முன்னேற்றம் நிறைந்த நாடு.. அங்கேயும் இதே நிலையா..?” பாலகுமரனின் கேள்வி சிறு கிண்டலாக வந்தது..

“உங்கள் நாடு எது..?”

“இந்தியா..” பெருமையாக சொல்லிக் கொண்டான்.

“ஓ.. எனக்கு இந்தியாவை ரொம்ப பிடிக்கும்..”

“நீங்கள் ஜப்பான் பெண்ணா.. உங்கள் பெயர் என்ன..?” பாலகுமரனின் சந்தேக கேள்விக்கு காரணம் இருந்தது.. அந்த பெண் மற்ற ஜப்பான் பெண்களை போல் இடுங்கிய கண்களும், சப்பை மூக்கும், வெளுத்த தேகமுமாக இல்லாமல், பெரிய கண்களும், எடுப்பான மூக்கும், மஞ்சள் நிற தேகமுமாக இருந்தாள்..

பன்னைப் போல் உப்பிய கன்னங்களும், மொளு மொளுவென்ற போம் உடலுமாக குழந்தைகள் கையில் வைத்து விளையாடும் குண்டு பொம்மை போல் மிக அழகாக இருந்தாள்..

“ஆமாம்.. என் பெயர் சஸாக்கி.. உங்கள் பெயர்..?”

“பாலகுமரன்..” இருவரும் கை குலுக்கிக் கொண்டனர்.




“நாம் இருவரும் அடுத்து எப்போது சந்திக்கலாம்..?”

“எதற்கு சந்திக்க வேண்டும்..”

“எனக்காக பணம் கொடுத்திருக்கிறீர்களே.. அதனை திரும்ப கொடுக்க வேண்டாமா..?”

சஸாக்கி அழகாக சிரித்தாள்.. “நிச்சயம் கொடுக்க வேண்டும்.. பார்ட் டைம் வேலை பார்த்து நான் சம்பாதித்த பணம்.. நாளை இதே இடத்திற்கு வந்து கொடுத்து விடுங்கள்.. பை..” இவ்வளவு நேரமாக தன் சைக்கிளை உருட்டியபடி அவனுடன் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தவள், சிறு தலையசைப்புடன் சைக்கிளில் ஏறி சென்றுவிட்டாள்..

மறுநாள் தனது வேலைகளை அவசரமாக முடித்துக் கொண்டு அந்த இடத்திற்கு வந்து காத்திருந்தான் பாலகுமரன்.. கையசைத்தபடி சைக்கிளில் வந்தாள் சஸாக்கி..

இருவருமாக பேசியபடி ஒரு காபி ஷாப் போய் காபி அருந்தினர்.. சஸாக்கியின் பணத்தை திரும்ப கொடுத்தான் பாலகுமரன்.. மறுநாளும் அதே நேரம் அதே இடத்தில் காத்து நின்றவனை ஆச்சரியமாக பார்த்தபடி வந்தாள் சஸாக்கி.. இப்போது அவனும் ஒரு சைக்கிள் வைத்திருந்தான்..

“பாலா என்ன இது..?”

“எனக்கு உங்கள் ஊரை சுற்றிக் காட்டுங்களேன்..”

சஸாக்கி ஒத்துக்கொண்டாள்.. சைக்கிளில் போகும் அளவு அருகே இருந்த இடங்களுக்கு இருவரும் சைக்கிளில் சுற்றினர்.. அகிரோட்டோ அவனுக்காக கைடுடன் கூடிய சொகுசு காரை ஊர் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்ய தயாராக இருக்கும் போது, அவனுக்கு அரை குறை விபரம் சொல்லும் இந்த குட்டிப் பெண்ணுடன் ஊர் சுற்றுவது மிகவும் பிடித்திருந்தது..




அருகில் இருக்கும் இடங்களையெல்லாம் பார்த்து முடித்து விட்டு தூர இடங்களுக்கு சைக்கிளில் போக முடியாத போது வாடகை கார் பிடித்தனர்.. புல்லட் டிரெயினில் ஏறி சென்றனர்.. நானும்தானே உங்களுடன் சேர்ந்து எல்லா இடங்களையும் திரும்ப பார்க்கிறேன்.. அதனால் பாதி பணம் நானும் தருவேன் என வாதாடி ஊர் சுற்றும் செலவிற்கான பாதி பணத்தை சஸாக்கியே கொடுத்தாள்..

நடுத்தரவர்க்கமான அவளது குடும்ப நிலையை அறிந்து தானே அவளுக்காக செலவழிக்க முன் வந்தவனை ரோசமாக தடுத்தாள்..

“உங்களுக்கும்தானே கணக்கு பார்த்து செலவழிக்கும் நிலை.. இரண்டு பேருமே செலவுகளை பங்கிட்டுக் கொள்வோம் பங்கிட்டு கொள்வதால் செலவுகள் குறைகிறது.. எனக்கும் நான் இதுவரை பார்க்காத இடங்களை பார்க்க முடிகிறது..”

அவளது விளக்கத்தில் முதலில் திகைத்தவன் பிறகு புரிந்து புன்னகைத்துக் கொண்டான்.. அந்த திருடனிடம் கொடுக்க பணம் இல்லாததால் தன்னையும் அவளை போல நடுத்தர வர்க்கமென அவள் எண்ணிக் கொண்டதை புரிந்து கொண்டான்.. உடனேயே தன்னை விளக்க அவன் வாயை திறந்த போது அவள் கணக்கில் இடித்த இரண்டு யென்னுக்கான கணக்கை தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள்..

கண்களை சுருக்கி நகம் கடித்து அவள் யோசித்துக் கொண்டிருக்கையில் அப்படியே அவளை அள்ளி தன் மடியிருத்திக் கொள்ளும் வேகம் தனக்கு வருவதை ஒரு வித ஆச்சரியத்துடன் உணர்ந்தான் பாலகுமரன்..

கொஞ்ச நாட்களுக்கு இவளை சீண்டிப் பார்க்கலாமே.. என்று அவளுடைய போக்கிலேயே போக ஆரம்பித்தான்.. கணக்கில் சேர்க்காமல் விட்டுப் போன ஒரு கூல்ட்ரிங்சுக்காக விளையாட்டிற்காக அவளுடன் சண்டை கூட போட்டான்..

அடுத்த நாளிலிருந்து சஸாக்கி சிறு செலவையும் தனது போனில் குறித்து வைத்துக் கொள்வதை வேடிக்கையாக பார்த்தான்..




“அடிக்கடி எங்கே போய்விடுகிறீர்கள் சார்..? அகிரோட்டோ உங்களுடன் பேச வேண்டுமென இரண்டு நாட்களாக மாலையில் காத்திருக்கிறார்.. இன்றும் உங்களை காணவில்லை என்றதும் கோபமாக போய்விட்டார்..”

“அட..டா.. அவர் காத்திருப்பதை எனக்கு சொல்லியிருக்கலாமே சாரங்கன்..?”

“எங்கே நீங்கள்தான் உங்கள.. போனை ஆப் செய்து வைத்து விடுகிறீர்களே..”

சஸாக்கியுடனான மாலை பொழுதுகளை சிறு தடங்கலுமின்றி அனுபவிக்க பாலகுமரன் தனது போனை ஆப் செய்து வைத்து விடுவது வழக்கம்..

“சரி விடுங்கள்.. நான் இன்று அவரை சந்தித்து விடுகிறேன்..”

பகல் முழுவதும் அகிரோட்டோவுடன் அவரது கம்பெனிகளில்தான் பாலகுமரன், சாரங்கன், சரண்யா இருப்பார்கள்.. மதிய உணவின் பின் அவர்களை ஊர் சுற்றி பார்க்குமாறு அகிரோட்டோ அனுப்பி விடுவார்.. அவர் ஏற்பாடு செய்திருக்கும் காரை தவிர்த்து விட்டு பாலகுமரன் சஸாக்கியோடு சைக்கிளில் சுற்றி வருவான்.. இருள் ஆரம்பித்த பின்தான் இருவரும் அவரவர் இருப்பிடம் திரும்புவார்கள்..

அகிரோட்டோ மாலையில் அவனை சந்திக்க விரும்பியிருக்கிறார்.. என்ன காரணமாக இருக்கும்..?

“எனக்கு ஒழுக்கமும், பண்பாடும் மிக முக்கியம்.. தெரியும்தானே பாலகுமார்..??”

அகிரோடடோவின் கேள்வி பாலகுமரனுக்கு யோசனையை கொடுத்தது.. எதற்கு இப்படி பேசுகிறார்..?

“எனது விருந்தாளியாக என் வீட்டில் தங்கியிருக்கிறீர்கள்.. மனதை கண்டபடி அலைய விட மாட்டீர்களென நினைக்கிறேன்..”

“நிச்சயம் சார்.. நான் அப்படிப்பட்டவன் கிடையாது..”

“அந்த பெண் யார்..?”

தான் சஸாக்கியோடு சுற்றிக் கொண்டிருப்பதை அகிரோட்டோ கேட்கிறாரென உணர்ந்தான்.. ஆனால் அதை பற்றி இவருக்கென்ன..?

“அந்த பெண் பாலகுமரன் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண் சார்..” சாரங்கன் முந்திக் கொண்டு பதில் சொல்ல பாலகுமரன் அதிர்ந்தான்..




“சார் சும்மா சொல்லி வைப்போம்.. இல்லைன்னா இந்த லூசு கிழவர் நம்ம பிசினஸ் டீலிங்கையே கேன்சல் பண்ணினாலும் பண்ணிடுவார்..” பாலகுமரனிடம் தமிழில் முணுமுணுத்தான்.. சாரங்கன்..

கோடிகளை லாபமாக கொட்டப் போகும் தொழிலை இழக்க பாலகுமரன் விரும்பவில்லை.. அதனால் வாயை மூடிக்கொண்டான்..

“நாளை அந்த பெண்ணை எனக்கு அறிமுகப் படுத்துங்கள்..” அகிரோட்டோ கூறிவிட்டு போய்விட பாலகுமரன் யோசனையில் ஆழ்ந்தான்..

“கவலைப்படாதீர்கள் சார்.. நான் பார்த்துக் கொள்கிறேன்..” என சாரங்கன் செய்த எந்த சமாதானமும் பாலகுமரன் மூளையில் பதியவில்லை.. அவன் மனம் சஸாக்கியிடம் சென்று விட்டிருந்தது..

மறுநாள் அவன் சஸாக்கிக்காக காத்திருந்த போது அவள் வரவில்லை..

What’s your Reaction?
+1
1
+1
2
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!