kana kanum kangal Serial Stories கனா காணும் கண்கள்

கனா காணும் கண்கள் – 6

6

 

” அம்மா இந்த சில்க் த்ரெட் பேங்கள்ஸ் நான் வாங்கிக் கொள்ள போகிறேன் ” அடர் சிவப்பும் பச்சையும் மாறி மாறி சுற்றப்பட்டு மேலே தங்கத் துகள்கள் தூவப்பட்ட அந்த பட்டு நூல் வளையலை  எடுத்து காட்டினாள் மிருதுளா.

 

” பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் கையில் போட்டால் எப்படி இருக்குமோ ? ”  மாரீஸ்வரியிடம் சிறு ஆட்சேபம்.

 

இதோ போட்டு விட்டேன். இப்போது பார்த்து சொல்லுங்கள் .அழகாகத்தானே இருக்கிறது ” வளையல்களை கையில்  அடுக்கி மேலும் கீழும் குலுக்கி காண்பித்தாள்.

 




” அழகாக இருக்கிறது குட்டி. ஆனால் வளையல் என்றால் கலகலவென்று சத்தம் வரவேண்டும் .இப்படி போட்டு இருப்பதே தெரியாமல் இருந்தால அதற்கு பெயர் வளையலா ? ” 

 

” ஐயோ என்னம்மா நீங்கள்எதையாவது சொல்லிக்கொண்டுவளையல் என்றால் சத்தம் வரவேண்டும் என்று யார் சொன்னது ? ” 

 

” அதுதான் குட்டி நம் பாரம்பரியம் .தங்கம் வெள்ளி கண்ணாடி என்று சத்தம் வரும் வளையல்களை தான் பெண்கள் அணிய வேண்டும் அதுதான் மங்களம் ” 

 

” அம்மா மதிய தூக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த உங்களை ஷாப்பிங் அழைத்துக் கொண்டு வந்தது என்னுடைய தப்பு தான் .இந்த பாரம்பரியம் மங்கலம் இதையெல்லாம் விட்டு விடுங்களேன் ”  கெஞ்சுதலாக கேட்டாள் மிருதுளா.

 

” சரி பிழைத்துப் போ ” சிரிப்போடு புறங்கையை அசைத்து விட்டு மாரீஸ்வரி தான் அமர்ந்திருந்த சேரில் நன்றாக சாய்ந்து கொண்டாள் .ஓய்வை நாடும் அன்னையின் உடல் நிலையை புரிந்து கொண்ட மிருதுளா எல்லாம் இந்த மகியால் வந்தது கொஞ்சம் கோபத்துடன் அவனை வைது கொண்டாள்.

 

அவள் ஷாப்பிங் கிளம்புகிறாள் என்றதும் மகிபாலன்தான் வலுக்கட்டாயமாக மாரீஸ்வரியையும் உடன் அனுப்பி வைத்தான் .” மிருதுவை தனியாக எங்கும் அனுப்ப வேண்டாம் அத்தை.அவளுக்கு இன்னமும் உடம்பு முழுதாக சரியாகவில்லை . எனக்கும் மாமாவிற்கு வேலை இருக்கிறது .அதனால் நீங்கள் அவளுடன் போய் வாருங்கள் ” என்று மாரீஸ்வரி விரும்பிய ஓய்வை  பொருட்படுத்தாமல் அனுப்பி வைத்தான்.

 

சின்னப்பிள்ளையா நான் ? எனக்கு துணைக்கு ஆள் எதற்குஅன்னையின் ஓய்வை கெடுத்த குற்றவுணர்வில் மகிபாலனை திட்டி தீர்த்தாள் மிருதுளா .வீட்டிற்கு போனதும் அவன் காதை பிடித்து நன்றாக திருகவேண்டும் மகிபாலனுக்குரிய தண்டனையையும் முடிவு செய்து கொண்டாள்.

 

” கையில் போட்டால் கலகலவென்று சத்தம் வருகிற மாதிரி வளையல்கள் காட்டுங்கள் ” கேட்டவளை வினோதமாக பார்த்தபடி அந்த சேல்ஸ் பெண் வளையல்கள் அடுக்கப்பட்டிருந்த அலமாரிக்கு திரும்பி ஆராய்ந்தாள் .

 

” அதுபோன்ற வளையல்களை நீ வளையல் செட்டியாரிடம் தான் வாங்க வேண்டும் .இந்த மாலில் மாடல் பேங்கிள்ஸ் தான் கிடைக்கும் ” சிரிப்பு இழையோடும் குரலில் திரும்பிப் பார்த்த மிருதுளா விழி விரித்தாள்.

 

” பவித்ரா அக்கா ….பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது .எப்படி இருக்கிறீர்கள் ? ” கைநீட்டி பவித்ராவின் கையை குலுக்கினாள்.

 




” நான் நன்றாகத்தான் இருக்கிறேன் .அதென்ன ஒருமாதிரி வளையல்களை கேட்டுக் கொண்டிருக்கிறாய் ?கல்யாணமாஉனக்கா ? உன் அக்காவிற்கா ? ”  

 

” போங்கக்கா சும்மா கிண்டல் பண்ணிக்கிட்டு .நான் அம்மாவுடைய தொல்லை தாங்காமல் சப்தம் வரவேண்டுமென்று…”  சொல்லிக்கொண்டே போனவள் திடுமென அது உறைக்க பேச்சை நிறுத்தினாள்.

 

” பவித்ரா அக்கா நீங்கள் வேர்ல்டு டூர் போகவில்லையா ? ” 

 

” போய்விட்டு வந்து விட்டோமே” 

 

” என்ன எப்போது வந்தீர்கள் ? ” 

 

” போன வாரமேஎங்கள் டூர் முடிந்துவிட்டது .மதுராவை எங்கேஅவளுக்கும் நாங்கள் வந்தது தெரியாது என்று நினைக்கிறேன் ” 

 

” அக்காஅவள்அவளுக்கும் தெரியாதா ? “

 

” ஆமாம் அவள் தான் எங்களுடன் டூருக்கு வரவே இல்லையே

 

சாதாரணமாக ஒலித்த பவித்ராவின் சொற்களில் இரும்புக் குண்டுகள் இருந்தன. அவை மிருதுளாவின் உச்சந்தலையில் நங்கு நங்கு என்று அடித்தன. அவள் பேசவும் மறந்து அப்படியே உறைந்து நின்றாள்.

 

மதுராவுடைய போன் ரீச் ஆகவே இல்லை. நீ அவளிடம் என்னை பார்த்ததை சொல்லு. அவளை எனக்கு போன் பண்ண சொல்லு .அப்பா காத்துக்கொண்டிருக்கிறார் நான் வருகிறேன் ” பவித்ரா போய்விட்டாள்.

 

” மிருது குட்டி ஏன் இப்படியே நிற்கிறாய் ?வளையல்கள் வாங்கி விட்டாயாபோகலாமா ? ” குட்டித்தூக்கம் ஒன்றை முடித்து எழுந்து வந்த மாரீஸ்வரி கேட்க பொம்மைபோல் அன்னையின் பின் கிளம்பினாள் மிருதுளா காரினுள் ஏறியதும் மாரீஸ்வரி வசதியாக பின்னால் சாய்ந்து உறங்க துவங்கினாள்.

 

உடனே இந்த தகவலை அப்பாவிடம் மகிபாலனிடம் சொல்ல வேண்டும் என நினைத்து தனது போனை எடுத்து கலிவரதனுக்கு எண்களை அழுத்த போன் முழுவதுமாக ரிங் போய் நின்றது. அடுத்து மகிபாலனுக்கு போட அவன் இரண்டாவது ரிங்கிலேயே போனை கட் செய்தான்.

 

 ஒரு அவசரத்திற்கு தொடர்பு கொள்ள முடியாமல் இருவரும் அப்படி என்ன பிசினஸ் பார்க்கிறார்கள் எரிச்சலுடன் பார்வையை காருக்கு வெளியே போட்டாள். கார் ஒரு சிக்னலில் நின்றிருந்தது .வெளியே சாலையோர மொபைல் டீ ஷாப் ஒன்றில் மகிபாலனை பார்த்தாள் .அந்தக் கடையின் அருகே இருந்த மரத்தடி நிழலில் கையில் டீ கப்புடன் நின்றுகொண்டு யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தான்.

 

ஏதோ முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறான் என்று நினைத்தால் இங்கே ரோட்டில் நின்று கொண்டு  யாருடனோ வெட்டி அரட்டை அடித்துக்கொண்டு எனது போனை கட் செய்கிறாயா நீகோபத்துடன் பற்களை கடித்து கார் கதவை திறக்க எண்ணியபோது சிக்னல் விழுந்து கார் நகர ஆரம்பித்தது.

 

 

” ஏய் குட்டி என்னடா இது கண்ணகி போஸ் கொடுத்துக்கொண்டு நடுவீட்டில் உட்கார்ந்து இருக்கிறாய் பயமாக இருக்கிறது .எரித்து விடாதே பயந்தவன் போல் பாவனை காட்டியபடி ஹால் சோபாவில் தன்னை எதிர்பார்த்து அமர்ந்திருந்த மிருதுளாவை பார்த்து பேசியபடி வந்தான் மகிபாலன்.

 

” நிச்சயம் உங்களை எரிக்கத்தான் வேண்டும் ” 

 

” ஐயோ என்னடா தப்பு செய்தேன் நான் ? ” 

 

” என்னுடைய போனை ஏன் கட் செய்தீர்கள் ? “

 

” போச்சுடா இந்த சின்ன விஷயத்திற்காகவா என்னை தீயில் தள்ள நினைத்தாய் ? ” 

 

” மகி விளையாட்டு போதும். எனக்கு உண்மையைச் சொல்லுங்கள் ” 

 

” உன் போன் வந்தபோது நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன்டா ” 

 

” எங்கே ? ரோட்டோர டீ கடையில மீட்டிங்ம் …? ” 

 

ஒரே ஒரு வினாடி திகைத்த மகிபாலன் உடனே சமாளித்துக் கொண்டான்”  ஏன் டீக்கடையில் மீட்டிங் வைக்க கூடாதாஎன்னுடைய ஓல்ட் பிரண்டை பார்த்தேன் .அவனிடம் நம் தொழில் சம்பந்தமாக சில விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தேன் .இதன் பெயரும் மீட்டிங் தான் குட்டி ” சமாதானமாக மிருதுளாவின் கன்னத்தை தட்டினான்.

 

தன் கன்னம் தொட்ட அவன் கையை கன்னத்தோடு சேர்த்து அழுத்திக்கொண்டாள் .கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்”   மகி ” 

 

மகிபாலன் அவளருகே அமர்ந்து ஆதரவாக அவள் தோள்களை வளைத்துக் கொண்டான் ”  என்னடா எதற்கு இப்போது கண்கள் கலங்குகிறாய் ? ” 

 

” மாலில் அக்காவின் பிரெண்ட் பவித்ராவை பார்த்தேன் .வேர்ல்டு டூருக்கு  மதுரா வரவே இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள் ” 

 

” என்ன …? ” மகிபாலன் உடன் எழுந்து நின்றுவிட்டான்.

 

” ஆமாம் மகி அப்படித்தான் சொன்னார்கள் .அவர்களாலும் அக்காவுடன் பேச முடியவில்லையாம் .மதுராவை எனக்கு போன் போட சொல்லு என்று சொல்லி விட்டு போய்விட்டார்கள்” 

 

” நீ அவர்களிடம் வேறு எதுவும் சொல்லி விடவில்லையே ? “படபடப்பாக கேட்டான் மகிபாலன்.

 

” இதனை எப்படி நான் அவர்களிடம் சொல்வேன் மகிசரி சரி என்று தலையசைத்து வைத்துவிட்டு வந்துவிட்டேன் .இப்போது அக்கா எங்கே மகி ? ” 

 

மகிபாலன் யோசனையோடு சோபாவில் அமர்ந்தான். அன்று மாலையே கலிவரதன் மாரீஸ்வரியிடம் அவன் விசயத்தை பக்குவமாக சொல்ல அவர்கள் இருவரும் பதறினார்கள். ” டூர் போகப் போவதாக நம்மிடம் சொல்லிவிட்டு இந்தப் பெண் எங்கே போனாள் ”  மாரீஸ்வரி புலம்பினாள்.

 

தீரா குழப்பத்துடன் மிருதுளா போட்டோவில் இருந்த மதுராவை பார்க்க மிக லேசாக சிரித்தபடி கண்களை சிமிட்டினாள்  போட்டோ மதுரா. இதோ இப்படித்தான் அம்மா அப்பா அறியாமல் ஏதாவது குறும்புகள்  செய்து விட்டு தங்கையிடம் இப்படித்தான் கண் சிமிட்டு வாள்.

 

” இப்போது உனக்கு எதற்கு இப்படி வியர்க்கிறது மிருது ? கவலைப்படாதே மதுராவை கண்டுபிடித்துவிடலாம் ”  வியர்த்து வழிந்து இருந்த மிருதுளாவின் நெற்றியை தனது கர்சீப்பால் துடைத்து மகிபாலன்.

 

” போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் அப்பா  ” மிருதுளாவின் யோசனையை பதறி தடுத்தாள் மாரீஸ்வரி.

 

” ஐயோ போலீஸ் எல்லாம் வேண்டாம் .என் மகளைப் பற்றி தப்புத்தப்பாக ஏதாவது கதை கட்டி விடுவார்கள் ” 

 

என்னம்மா எந்த காலத்தில் இருக்கிறீர்கள் நீங்கள் ?போலீஸ் உதவி இல்லாமல் எங்கே இருக்கிறாள் என்றே தெரியாத அக்காவை நாம் எப்படி தேட முடியும்? “

 

தெரிந்தவர்களிடம் சொல்லி விசாரிக்கச் சொல்லலாம் .உன் அப்பா அதனை பார்த்துக் கொள்வார் நீ பேசாமல் இரு குட்டி” 

 

” எந்த தெரிந்தவர்களிடம் எப்படி பார்ப்பீர்கள் .நீங்கள் சொல்வது சரி கிடையாது .அப்பா  நாம் உடனடியாக போலீசில் போய் கம்ப்ளைன்ட் கொடுப்போம் வாருங்கள் ” 

 

கிளம்பத் தயாரான மிருதுளாவின் கையை பதட்டத்துடன் பிடித்து இழுத்து அமர்த்தினாள் மாரீஸ்வரி .”  இல்லை போலீசிடம் போக நான் சம்மதிக்க மாட்டேன்” 

 




மிருதுளா தந்தையைப் பார்த்த கலிவரதன் மிகுந்த குழப்பத்துடன் கவலையுடனும் அமர்ந்திருந்தார் .அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அவர் தவிப்பது வெளிப்படையாக தெரிந்தது.

 

” அத்தை நீங்கள் பதட்டப்படாதீர்கள் .மிருதுளா சொல்வதிலும் ஒரு ஞாயம் இருக்கிறது ..நீங்கள் சொல்வதையும் மறுக்க முடியாது .உங்கள் இரண்டு பேருக்கும் பொதுவாக நான் ஒரு யோசனை சொல்கிறேன் .நானும் மாமாவும் காவல்துறை டிஜிபி யிடம் ரகசியமாக நமது குடும்ப பிரச்சனையை சொல்கிறோம் .சட்டத்திற்கு வெளியே அவருடைய பதவியை உபயோகித்து மதுராவை தேட சொல்லலாம் சரிதானே ? ” 

 

மாரீஸ்வரி தலையசைக்க மிருதுளா சிறு யோசனையுடன் உம் கொட்டினாள்.

 

எனக்கென்னவோ அக்கா விஷயத்தில் நாம் மிகத் தீவிரமாக இறங்க வேண்டும் என்று தோன்றுகிறது மகிபிறகு அவனிடம் சொன்னவளை யோசனையாக பார்த்தான் மகிபாலன்.

 

ஏன் மிருது ஏன் அப்படி நினைக்கிறாய் ?

 

” மதுரா விற்கு ஏதோ ஆகிவிட்டது என்று தோன்றுகிறது .அவளை சீக்கிரமே கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள் ” 

 

” எதையாவது நினைத்து மனதை அலட்டிக் கொள்ளாதேடா .மதுராவுக்கு எதுவும் ஆகி இருக்காது .நாம் கண்டுபிடித்து விடலாம் ”  மென்மையாக அவள் தலை வருடி சமாதானம் செய்தான்.

 

யாரிடமும் சொல்லாமல் அக்கா எங்கே சென்று இருக்கக்கூடும் யோசனையுடன் தன் அறையில் அமர்ந்திருந்த மிருதுளா திடுமென ஒன்று தோன்ற மதுராவின் உடைகள் அலமாரியை திறந்து தேடத் துவங்கினாள். என்ன தேடுகிறோம் என்று தெரியாமலேயே எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.

 

மிக அழகாகவும் நேர்த்தியாகவும் உடைகளும் அணிகளும் அலமாரியில் அடுக்கப்பட்டிருந்தனஎதிலும் ஒரு ஒழுங்கை கடைப்பிடிப்பவள்  மதுரா .தனக்கென  ஒரு வரையறையை வகுத்து விட்டாளானால் அதிலிருந்து பின்வாங்க மாட்டாள் மதுரா . நினைத்த காரியத்தை முழுதாக செய்து முடித்து விட்டே ஓய்வாள் .

 

அக்காவின் குணங்களை மனதிற்குள் பட்டியல் போட்டபடி அவளுடைய அலமாரி மேஜை இழுப்பறை என எல்லா இடங்களிலும் தேடினாள் மிருதுளா. ஏதோ எதிர்பார்த்த அவளுக்கு எதுவுமே கிடைக்கவில்லைசலிப்புடன் அவள் கட்டிலில் அமர்ந்த போது அந்த சத்தத்தைக் கேட்டாள்.

 

முதலில் மிகவும் மெல்லியதாக கேட்ட அந்த சப்தம் நேரம் ஆக ஆக அதிகரித்தது .மிருதுளா படபடப்புடன் விழி சுழற்றி சத்தம் வரும் இடத்தை தேடினாள். அறைக்கு வெளியே இருந்து இல்லைஇதோஇங்கே அறைக்குள்ளேயேதான். அதோ அந்த அலமாரியிலிருந்து  இல்லை….பாத்ரூமிலிருந்துஇல்லைஅந்த டேபிளிலிருந்து.

 

 ஆம் அந்த டேபிள் மேலே இருந்துதான் சத்தம் வருகிறது. கண்டுபிடித்து அந்த டேபிளை உற்றுப் பார்த்த மிருதுளாவின் உடல் நடுங்க துவங்கியது.

 

சற்று முன் அவள் ஷாப்பிங் செய்து வந்திருந்த பைகளை வேலைக்காரி அந்த டேபிள் மேல் கொண்டு வந்து வைத்துவிட்டு போயிருந்தாள் . இப்போது அதில் இருந்து தான் சத்தம் வந்து கொண்டிருந்தது .வளையல்கள் குலுங்கும் சத்தம் .கைநிறைய கண்ணாடி வளையல்கள் போட்டுக்கொண்டு அசைத்து காட்டும் சத்தம்.

 

திடுக் திடுக் என்று துடிக்கும் இதயத்துடன் அந்த ஷாப்பிங் பையை அணுகி மெல்ல பிரித்துப் பார்த்தாள் மிருதுளா. உள்ளே ஒரு பெட்டி நிறைய கண்ணாடி வளையல்கள் இருந்ததை பார்த்து அதிர்ந்தாள் .வளையல்களை பார்த்துகொண்டு இருந்தாலே தவிர அவற்றை வாங்கவில்லை .இடையில் பவித்ரா வந்துவிட அவளிடம் பேசிவிட்டு அதிர்ச்சியில்  அப்படியே கிளம்பி வந்துவிட்டார்கள் .இப்போது வாங்கிவந்த சாமான்களில்  இந்த கண்ணாடி வளையல் எப்படி வந்ததுஅதுவும் சத்தம் கொடுத்து அவளை அழைத்ததேஅவள் கைகள் நடுங்க துவங்கின.

 

” இந்த வளையல்கள் எப்படி வந்தன அம்மா ? ” ஹாலில் அமர்ந்து  ஏதோ பேசிக்கொண்டிருந்த மூவர் முன்னாலும் வளையல்களை கொண்டுவந்து வைத்தாள் .

 

” நீதானே வாங்கியிருக்க வேண்டும் குட்டி ” 

 

” இல்லை அம்மா .இதனை நான் வாங்கவில்லை .ஆனால் நம் பேக்குக்குள் இருக்கிறது ” 

 

” வாங்காமல் எப்படி நம் பேக்கில்  வரும் குட்டி .நீ பிள்ளை எடுத்து பார் ” கலிவரதன் சொல்ல தனது பர்சில் இருந்த பில்லை எடுத்துப் பார்த்த மிருதுளா அதிர்ந்தாள் .கண்ணாடி வளையலும் சேர்த்தே அதில் பில் போடப்பட்டிருந்தது.

 

” இல்லை அம்மா நான் வாங்கவில்லை .வாங்கவே இல்லை”  தீவிரமாக தலையசைத்தவளின் தோள்களை ஆதரவாகத் தட்டினான் மகிபாலன்.

 

” சரிடா குட்டி விடு நீ இல்லை என்றால் அத்தை வாங்கியிருப்பார்களாக இருக்கும் .யாராவது ஒருவர் வாங்கித் தானே இருக்க வேண்டும்

 

” ஆமாம் ஆமாம் இப்போது நினைவு வந்துவிட்டது .நான்தான் வாங்கினேன். உனக்குத்தான் கண்ணாடி வளையல்கள் பிடிக்காதோ குட்டி. ஆனால் மது கண்ணாடி வளையல்கள் விரும்பு வாங்குவாள் அவளுக்காக என்று வாங்கினேன் .இப்போது மறந்துவிட்டேன் சமாளிப்பார்கள் பேசிய தாயை நம்பமுடியாமல் பார்த்தாள் மிருதுளா.

 

மதுரா விற்கு கண்ணாடி வளையல்கள் பிடிக்கும் என்ற உண்மை அவள் மனதில் ஒருவித பயத்தோடு பதிந்தது.

 

 

 

What’s your Reaction?
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!