Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 7

                                               7

தன் முகத்தை பார்க்க கூட விருப்பமின்றி முகம் திருப்பிய கிறிஸ்டியன் அன்று கோபமூட்டினாலும் , இன்று  நினைத்தால்  சத்யாவிற்கு சிரிப்புதான் வந்த்து .
” ஏன் சிரிக்கிறாய் சத்யா ….? “

” அன்று முகம் திருப்பினீர்களே …அதை நினைத்தேன் “

இப்போது கிறிஸ்டியின் முகத்திலும் புன்னகை .

” அன்று எவ்வளவு வேகமாக என் முன்னால் வந்து நின்றாய் …அடித்து விடுபவள் போல … எல் .கே. ஜி படிக்கும் பேபி ஒன்று பெரிய பிரம்பை தூக்கிக் கொண்டு என்னை அடிக்க வந்த்து போல் தோன்றியது எனக்கு ….”

” நான் அப்போது உங்கள் மேல் எவ்வளவு கோபமாக பேச வந்தேன் தெரியுமா …? பேபி போலவா தெரிந்தேன் …? ” கோபம் காட்ட முயன்றும் சத்யாவின் குரல் அவளை மீறி கொஞ்சி சிணுங்கியது .




” ம் …நிச்சயமாக ..எனக்கு சரியாக புரியாத மொழி பேசியபடி கண்களில் பளிச் பளிச்சென மின்னும் கோபத்துடன் நீ ஏதேதோ பேசியபடி நின்றபோது …நமக்கு புரியாத மழலை பேசுமே  குழந்தை.அதைத்தான் நினைவுபடுத்தினாய் …”

” இதோ இப்போது கூட “ம்க்கும் ….” என இதழ் சுளித்து மூக்கு சுருக்கி முறைக்கிறாயே …இது கூட அப்படித்தான் …நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே குழந்தைமையைத்தான் ஞாபகப்படுத்துகிறது …”

மூக்கிலும் , இதழ்களிலுமாக பதிந்து நின்றுவிட்ட அவன் பார்வையிலிருந்து தப்ப தலையை குனிந்து கொண்டாள் சத்யமித்ரா .

” எவ்வளவு தைரியமாக வீட்டை விட்டு வெளியே போ என்றாய் அன்று ….”

” நீங்கள் உங்கள் அண்ணனை உடனே எல்லாவற்றையும் விட்டுவிட்டு வா என்று அழைக்கவில்லை .அப்படித்தான் சொன்னீர்கள் .என்னால் புரிந்து கொள்ள முடிந்த்து ….”

” சந்தேகப்படாதே .அப்படியேதான் சொல்லி என் அண்ணனை அழைத்துக் கொண்டிருந்தேன் ….”

” திருமணம் முடித்து மனைவியோடு வாழ்ந்து கொண்டிருப்பவரை பார்த்து அப்படியா கேட்பார்கள் …? ” வேதனையாக வந்த்து சத்யாவின் குரல் .

” எனக்கு அப்போது காதலின் வலிமை தெரியாது சத்யா .காதலென்ற பெயரில் எங்களையெல்லாம் ஒதுக்கி விட்டு வந்த என் அண்ணன் பைத்தியக்காரனாக தெரிந்தான் ….”

அவள் முறைக்கவும் ” அது ..அப்போது சத்யா …ஆனால் காதலின் வலிமையை இப்போது நான் உணர்ந்து கொண்டேன் ….”

சத்யாவின் விழிகள் தூரத்து மலைமுகட்டை  வெறித்தன.

” அப்படியா ..? அது ..யார் அந்த அதிர்ஷ்டசாலி …? உங்களை காதல் உணர வைத்தவர் …? ” என்றவளின் மனதினுள் ரேச்சலின் உருவம் வந்து நின்றது .

இப்போது ஏன் இவள் நினைவு வந்து தொலைகிறது ..தன்னைத்தானே நொந்தபடி பதிலுக்காக படபடப்பாய் காத்திருந்தவளின் காதுகளி்ல் , சில்லென்று மென்மையாக காற்று மட்டுமே முணுமுணுத்தது .

திரும்பி பார்த்த போது அவள் முகத்தில் பதிந்திருந்த கிறிஸ்டியனின் பார்வை  ஏதேதோ சொல்ல முயல , அது உணர்த்திய நெருக்க உணர்வுகளை ஒப்புக்கொள்ள முடியாமல் சத்யாவின் இதயம் சுருங்கிக் கொண்டது .

” நேற்று இரவு சாந்தனுவிடம் உங்கள் அம்மா பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன் .இன்று காலை அவர்களை சந்திக்க போகும் போது அவன் நல்லபடியாக நடந்து கொள்வான் …” பேச்சின் திசையை மாற்றினாள் .

” நன்றி சத்யா .சாந்தனுவின் சின்ன புன்னகை கூட அம்மாவின் வாழ்நாளில் ஒன்றிரண்டை கூட்டலாம் …”  அம்மாவின் நினைவில் அவன் குரல் நெகிழ்ந்த்து .

” ஏன் அப்படி சொல்கிறீர்கள் …? உங்கள் அம்மா ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்களே .நிச்சயமாக இந்த கொடிய நோயிலிருந்து மீண்டு வருவார்கள் பாருங்கள் …”

” நீ இப்படி சொல்லும்போது மனதிற்கு மிகவும் தெம்பாக இருக்கிறதுடா .ரொம்ப நன்றி …”

” இதற்கெல்லாம் நன்றி சொல்வீர்களா …? நன்றியெல்லாம் கடவுளுக்கு சொல்ல வேண்டும் .முருகனுக்கு நன்றி சொல்லுங்கள் ….” என்றவள் நிறுத்தி ….

” நீங்கள் உங்கள் ஜீசஸிற்கு நன்றி சொல்லுங்கள் ….” என்றாள் .

” முருகனாயிருந்தாலும் , ஜீசஸாயிருந்தாலும் ….எல்லோரும் ஒன்றுதான் சத்யா …”

” ஆமாம் .ஆனால் அவரவர் விருப்பம் போல் தெய்வங்களுக்கு உருவம் கொடுத்து வைத்திருக்கிறோமே .அந்த நிலையிலிருந்த மாறுவதென்பது யாருக்கும் கொஞ்சம் கடினமானதுதான் ….”

” லவ் இஸ் காட்  …சத்யா .அன்பு மட்டும்தான் மற்ற எல்லா தெய்வங்களையும் விட உயர்ந்த்து . அன்புதான் கடவுள் …இதை நிரூபிக்க வேறு யாரும் தேவையில்லை .உன் அக்காவும் , என் அண்ணாவுமே இதற்கு மிகச்சிறந்த உதாரணம் “

” ஆமாம் …அவர்களது வாழ்வு எப்படியிருந்த்து தெரியுமா …? சாதி , மதம் , மாநிலங்கள் கடந்த அன்பு மட்டுமே ஆட்சி செய்த உன்னத வாழ்வு .ஆனால்  அவ்வளவு உயர்ந்த வாழ்வு இப்படி சீக்கிரமாக முடிவிற்கு வர வேண்டுமா …? “

எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் இரண்டு சொட்டு கண்ணீர் வழிந்து விட , சை ..என்ன இது இப்படி ஒரு பலவீனம் .பற்களை கடித்து தன்னை கட்டுப்படுத்தியபடி கண்ணீரை அப்படியே முகம் திருப்பி துடைக்க முனைந்த போது கண்ணிற்கு மிக அருகில்  பட்ட  டி ஷர்ட்டில் திகைத்து நிமிர்ந்த போதுதான் கிறிஸ்டியனின் அணைப்பில் அவன் தோள் வளைவில் இருப்பதை உணர்ந்தாள் .

ஆதரவாக அவள் தலையை வருடியபடி இருந்தான் அவன் .அவசரமாக விலகிக் கொண்டவள் ” சாந்தனு விழித்திருப்பான் …” வேகமாக நடக்க முயன்றாள் .

அவள் தோள்களை அணைத்திருந்த கைகளை நிதானமாக அவள் கைகளை வருடியபடி இறக்கி , இறுதியில் அவள் கை விரல்களை மென்மையாக பற்றி நிறுத்தியவன் …




” பேபிக்கே ஒரு பேபி . இந்த சிறு வயதில் உனக்கு எவ்வளவு பெரிய பாரம் சத்யா …” என்றான் .

” அவன் என் குழந்தை .எனக்கு பாரமில்லை .எப்போதும் அப்படி நினைக்கமாட்டேன் …” அழுத்தமாக கூறிவிட்டு அவன் பிடித்திருந்த விரல்களை பிடுங்கி எடுத்துக் கொண்டு நடந்தாள் .

காலை உணவிற்கு முன்பே சாந்தனுவுடன் ஜெபசீலியை சந்திக்க சென்றாள் .ஜெபசீலியை சந்திப்பது சாந்தனுவிற்கு பிடிக்காத விசயம் .தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டிருந்த கீமோதெரபி ட்ரீட்மென்டினால் முடிகள் உதிர்ந்து சற்று விநோதமாக இருந்த அவளது  தோற்றம் காரணமாக இருக்கலாம் .

சத்யாவிற்கே அவளது தோற்றம் முதலில் சிறிது திகைப்பாகத்தான் இருந்த்து . தலையை மறைக்க ஜெபசீலி விக் வைத்துக்கொண்டிருந்த போதும் , முகத்தின் மற்ற பாகங்கள் …அவற்றை மறைக்க முடியாதே …குழந்தையாக இருந்தாலும் இந்த வித்தியாசத்தை சாந்தனு உணர்ந்துதான் இருந்தான் .

” அந்த பாட்டி முகம் பார்க்க பயம்மா இருக்கும்மா ….” சத்யாவின் மேல் சாய்ந்தபடி கொஞ்சினான் .

” அச்சோ கண்ணா அப்படி சொல்லக்கூடாது .அவுங்க பெரியவங்க .அவுங்களுக்கு உடம்பு சரியில்லை .அதுதான் அப்படி இருக்காங்க .அவுங்க உன் பாட்டி இல்லையா ..? அவுங்களுக்கு வலித்தால் நீதானே அவுங்களை பார்த்துக்கனும் .அவுங்க்கிட்ட நீ நல்லா பேசினால் அவுங்க ரொம்ப சந்தோசமாவாங்க தெரியுமா …? “

இன்னமும் குழந்தை மனது போல் பேசி அவன். மனதில் ஜெபசீலி மேலிருந்த சிறு வெறுப்பை போக்கியிருந்தாள் .

அதனால்தானோ என்னவோ இன்று தயக்கம் குறைந்து இயல்பாக பாட்டி மடியில் அமர்ந்திருந்தான் பேரன் .ஆசையுடன் அவள் அளித்த முத்தங்களை கூட முகம் சுளிக்காமல் வாங்கிக் கொண்டான் .

” உங்களுக்கு உடம்பு சரியில்லையா …? காய்ச்சலா …? ” மழலையில் கேட்டு அவளின் நெற்றியில் , கழுத்தில் தன் பிஞ்சு கரங்களால் தொட்டு பார்த்தான் .

அவனது மொழி புரியாவிட்டாலும் அவனது செய்கை உணர்த்தி விட , நெகிழ்ந்து விட்ட ஜெபசீலி சாந்தனுவை இறுக அணைத்து மலையாளத்தில் கொஞ்சியபடி அவன் முகம் முழுவதும் முத்தமிட தொடங்கினாள்.

பொதுவாக சாந்தனுவிற்கு அம்மாவை தவிர யார் முத்தமிட்டாலும் பிடிக்காது .ஆனால் எதிரே நின்று கண்களால் பொறுத்துக்கொள் என கெஞ்சிய அம்மாவிற்காக பாட்டியின் முத்தங்களை மௌனமாக வாங்கிக் கொண்டான் .

முதல் நாள் போல் எப்போதடா எழுந்து போகலாம் என்ற அவசரத்தில் இல்லாமல் , இன்று நிதானமாக அமர்ந்திருந்த பேரனை கண்டதும் ஜெபசீலிக்கு ஒரே சந்தோசம் .தனது கையால் தானே பேரனுக்கு உணவூட்ட ஆசைப்பட்டு அருகில் அவளை கவனித்து கொள்ள நின்றிருந்த பெண்ணிடம் குழந்தைக்கு உணவு கொண்டு வருமாறு கூறினாள் .

அந்த பெண் வெளியேறவும் திரும்பி சத்யமித்ராவை பார்த்தாள் .அந்த பார்வை இன்னுமா நீ இங்கே நின்றுகொண்டிருக்கிறாய் …? என சத்யாவை கேட்டது .துணுக்குற்றாள் சத்யா .

உன் வேலை முடிந்த்து .இனி இங்கே நிற்க வேண்டாமென கூறுகிறாள் .தன்னை வெளியே போ என சொல்லாமல் சொல்கிறாள் .மனதில் அறை வாங்கிய சத்யா மெல்ல தலையசைத்துவிட்டு சாந்தனுவின் கவனத்தை கவராமல் வெளியேறினாள் .கால்கள் இரும்பினை மாட்டியது போல கனத்தன.

பெருமூச்சுடன் அவள் கதவை திறந்து வெளியேறிய போது கிறிஸ்டியன் உள்ளே வந்தான் .

” குட்மார்னிங் சத்யா .அம்மாவை பார்த்தாயா …? ப்ரின்ஸை எங்கே ….? ” அவள் முக உணர்வுகளை ஆராய்ந்தபடி கேட்டான் .

வாய் திறந்து பதிலளித்தால் தனது கலக்கத்தை குரல் காட்டிவிடுமோவென பயந்து அறையினுள் விரலை மட்டும் சுட்டிவிட்டு வேகமாக வெளியே போய் தோட்டத்தில் நின்று கொண்டாள் .

ஐந்து நிமிடங்கள் கூட இருக்காது .” அம்மா …” என்ற அழுகையுடன் சாந்தனுவின் குரல் பின்னால் கேட்க பதறி திரும்பியவள் , கிறிஸ்டியனின் கையிலிருந்து அழுதபடி தன்னிடம் தாவிய குழந்தையை வாரி அணைத்துக்கொண்டாள் .

” அவனைத்தான் ஐந்து நிமிடம் கூட உன்னை விட்டு இருக்க முடியாமல் பழக்கி வைத்திருக்கிறாயே…?.இப்படியா அழ ..அழ ..அம்மாவிடம் விட்டு விட்டு வருவாய் …? “

கிறிஸ்டியனின் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல அம்மா , மகன் இருவருக்குமே நேரம் இல்லை .இருவரும் பிரிந்திருந்த பத்தே நிமிடங்களை பத்து வருடங்களானதை போல் ஒருவரையொருவர் அணைத்து கொஞ்சி தீர்த்துக்கொண்டிருந்தனர் .

” என்ன சத்யா இது ..? இவனை இப்படி வளர்த்து வைத்திருக்கிறாய் ….? ” கிறிஸ்டியனின் குரலில் சலிப்பு தெரிந்த்து.

நிமிர்ந்து அவனை முறைத்தாள் . ” எப்படி வளர்த்திருக்கிறேன் …? “




” சத்யா அவன் மிகப்பெரிய பொறுப்புகளையெல்லாம் தாங்க வேண்டியவன் . இப்படி தொட்டாற்சிணுங்கியாக , உன்னையே சார்ந்திருக்கும்படி அவனை வள்ர்க்காதே…” 

” அவனுக்கு மூன்றே வயதுதான் ஆகிறது …இப்போதே எந்த பாரத்தை தலையிலேற்ற போகிறீர்கள் …? “

” ப்ச் ..சரி விடு .அதனை பிறகு பேசலாம் . வாருங்கள் சாப்பிட போகலாம் …” சாந்தனுவை நோக்கி கைகளை நீட்ட , அவன் தலையசைத்து மறுத்து சத்யாவுடன் ஒட்டிக்கொண்டான் .

சிறு எரிச்சலுடன் பின்னால் வருமாறு கையசைத்துவிட்டு நடந்தான் .

இப்படி மூஞ்சியை சுண்டைக்காயாக வைத்துக்கொண்டு சாப்பிட அழைத்தால் எப்படி வருவது…? கால்களை தரையில் அழுத்த ஊன்றியபடி யோசித்தவளை …

” அம்மா பசிக்குது …” என்ற சாந்தனுவின் குரல் செலுத்த உள்ளே நடந்தாள் .

உள்ளே அவள் எதிர்பார்த்தது போல் விரும்பத்தகாத சூழ்நிலையே நிலவியது.சமையல்கார பெண் மேரி கூட இவர்களை அலட்சியமாக பார்ப்பது போல் தோன்றியது.

” எல்லாம் உனது மனப்பிரமைதான் . நீயாகத்தான் எல்லோரிடமும் பழகவேண்டும் ..” மெல்லிய குரலில் இவள் புறம குனிந்து கூறி எரிச்சல் மூட்டினான் கிறிஸ்டியன்

கரோலின் அடிக்கண்ணால் இவர்களை முறைக்க ஷீபா நேரிடையாவே முறைத்தாள் . ரேச்சலின் முறைப்பு கிறிஸ்டியனுக்கும் சேர்த்து இருந்தது.
கரோலினின் கணவரையும் , ஷீபாவின் கணவரையும் காணவில்லை.

” என்ன அத்தை டிபன் எப்படி இருக்கிறது …? ” புன்னகை மன்னனாக கரோலினிடம் விசாரிக்கும் கிறிஸ்டியனிடம் எரிச்சல் வந்த்து.

சத்யாவின் மேலிருந்து பார்வையை அகற்றாமல் அவள் ” ம்..ம்…” என்க,

” நீயெல்லாம் காலையில் என்ன சாப்பிடுவாய் …? சாப்பிடுவாய்தானே…? ” ரேச்சல் ஆரம்பித்துவிட்டாள் .

” உங்களைப் போல் நானும் மனிதப்பிறவிதான் பாருங்கள் . இட்லியோ , தோசையோ , பொங்கலோ …சாப்பிடாமல் உயிர் வாழ முடியாதில்லையா …? ” இனிமையான குரலில் சத்யா முடிக்கும் முன் …

” சத்யா …” எனும் எச்சரிக்கை குரல் கேட்டது.

இவனொருத்தன் …இந்த அதட்டலை கொஞ்சம் முன்பு அவளிடம் போட்டிருக்கலாமே ….எங்கே அவளிடம் மட்டும் காது வரை உதடு விரிகிறது …

சத்யாவின் உள்ளப்புகைச்சலை ஆடம்ஸ் அதிகமாக்கினார் .

What’s your Reaction?
+1
3
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!