Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 22

22

வெட்டப்படுதல் சூதாட்ட நியதி
வெட்டுப்படுதலும் எனக்கு நியதிதான்
தேய்த்துருட்டி தாயமிட்டு
நீ கட்டை உருட்டும் போது மட்டும்..

“தக்காளித் தொக்கும், காலிபிளவர் ரோஸ்டும் செய்துடும்மா..” மகாராணியின் சொல்லுக்கு தலையாட்டியபடி தன் முதுகை தட்டி விட்டுக் கொண்டாள் மைதிலி..
“இன்னைக்கு முள்ளு முறுக்கு செஞ்சு தாங்க கௌரிம்மா..” வந்தனா கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தாள்..
“ஆமாம் அப்படியே ஓமப்பொடியும் சேர்த்து செய்து கொடுங்க..” மைதிலி கிண்டல் செய்ய வந்தனா முறைத்தாள்..
“எனக்குரியதை நான் சொல்லிக் கொள்வேன்.. நீ வாயை மூடு..”
“குட்டிப் பிள்ளைக்கு தேவையானதை வீட்டுப் பெரியவங்கதான் சொல்லனும் வந்தனா..” அவளைக் கடுப்பேற்றியபடி தன் கையை பின்னால் நீட்டி முதுகை தேய்த்தாள் மைதிலி..
“ஏய் யாருடி குட்டிப்பிள்ளை..?”
“அட வந்தனாக்குட்டி உனக்கு ஓமப்பொடியோடு, பூந்தியும் பிடிக்குமேடா.. அது எப்படி நம்ம மைதிலிக்கு தெரிந்தது..? எப்பவுமே இவளுக்கு இது ரெண்டும்தான் பிடிச்ச பலகாரம்..” கௌரிம்மா ஆச்சரியப்பட்டார்..
“இதுல ஆச்சரியப்பட என்ன இருக்குது கௌரிம்மா.. பல் மொளைக்காத பப்பாக்கள் தின்கிற தின்பண்டங்கள் ஓமப்பொடியும், பூந்தியும், நம்ம வந்தனாவும் அதையே கேட்கிறாள்..”
“யாரைடி பப்பா என்கிறாய்..?” வந்தனா சுவற்றில் மாட்டி வைத்திருந்த சொளவை தூக்கிக் கொண்டு மைதிலியை அடிக்க வர, கௌரிம்மா அவளை பிடித்திழுத்தார்..
“சின்னப் புள்ளைங்கிறது சரியாத்தானே இருக்குது.. பேசாமல் உட்காரும்மா..”
கௌரிம்மாவின் அதட்டலில் வந்தனாவிற்கு அழுகையே வரும் போல் ஆகிவிட்டது இவர்கள் அவளுக்கு தொட்டில் கட்டாமல் விட மாட்டார்கள் போலவே.. கோபமாய் மைதிலியை பார்க்க, அவள் தன் முதுகை சொறிந்து கொண்டிருந்தாள்..
“செந்தட்டி தேய்ச்சு குளிச்சியா..? இந்த ராவு ராவுற..?” நக்கலாக கேட்டாள்..
“என்னம்மா தவுட்டு மூட்டை மேலே சாய்ந்து விட்டாயா..?” கௌரிம்மா கேட்டகவும்தான் மைதிலிக்கு உரைத்தது..
“எதிலேயோ போய் முதுகை தேய்ச்சிட்டு வந்து நிக்கிறாங்க.. இந்த வீட்டின் மகா பெரிய மனுசி, கண்ணைப் பிடதியில் வைத்திருப்பாள் போல..” வந்தனா வெளிப்படையாய் அவளைத் தாக்க, கௌரிம்மா அவள் தலையில் வலிக்காமல் கொட்டினாள்..




“சும்மா இருடி, சரிக்கு சரி வாயாடிட்டு.. மைதிலி ஏதோ முதுகு அரிக்குதுங்கிறா பரசு.. என்னன்னு பாரு.. என் கண் பார்வைக்கு ஒண்ணும் தெரிய மாட்டேங்குது..”
கௌரிம்மா சொல்லவும் பரசுராமன் சந்தோசமாக மைதிலி அருகில் வந்தான்.
“எங்கே அரிக்கிறது..? என்ன செய்தாய்..? எங்கே போய் சாய்ந்தாய்..?” அறியாப்பிள்ளையாய் முகத்தை வைத்துக் கொண்டு வந்தான்.
அவள் முதுகு அழுக்கை தட்டிவிட வருபவன் போல் அவனைப் பார்த்தால் தெரியவில்லை..
“சரியாயிருச்சு.. இப்போ ஒன்றுமில்லை..” பின்னடைந்தவளை வலுக்கட்டாயமாக இழுத்து திருப்பி முதுகை ஆராய்ந்தான்.
“ஏதோ அலர்ஜியா..?” அவன் கை விரல்கள் அவள் முதுகினை சோதிக்க மைதிலியின் உடல் கொதிகலன் ஆனது.
“கையை எடுங்க..” கடித்த பற்களிடையே அவள் வார்த்தைகளை துப்ப, அவன் கைகளின் அழுத்தம் அதிகரித்தது..
“காலையில் குடோனிற்குள் வந்தாயில்லையா..? அப்போது எதன் மீதாவது சாய்ந்திருப்பாய்.. போ போய் டிரஸ்iஸ மாற்று.. இல்லை குளித்து விடு போ…” பரவலான முதுகு வருடல் ஒன்றுடன் அடுப்பு குமிழை திருகி அணைத்தவன் அவளை அடுப்படிக்கு வெளியே திருப்பிவிட்டான்..
ஆளை விடுடா சாமி என மைதிலி அவன் கைபிடியிலிருந்து நழுவி ஓடிவிட்டாள்.. கௌரிம்மா இவர்களை கண்டும், காணாதவர் போல் குனிந்திருக்க, வந்தனாவின் கண்கள் கணவன்.. மனைவி அந்நியோன்யத்தை கண்ணி வைத்தபடி இருந்தது..
மைதிலி உடை மாற்றி வந்த போது.. “எனக்கு கொஞ்சம் சாமான்கள் வாங்கனும் பரசு.. உங்க கூடவே வர்றேனே..” என பரசுராமனின் பின்புறம் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தாள் வந்தனா..
“பத்திரமாக பிடித்து உட்கார்…” என்ற எச்சரிக்கையுடன் பரசுராமன் வண்டியை எடுக்க வந்தனா மைதிலியை பார்த்த பார்வையில் எகத்தாளம் இருந்தது..
இல்லை தவறாக எதுவும் நினைக்க கூடாது, அவள் இவர்களுக்கு உறவால் அத்தை மகள் என்றாலும், கூடப் பிறந்தவள் போல் ஒன்றாக ஒரே வீட்டில் வளர்ந்தவள்.. இவர்களுக்கிடையே உடன் பிறந்தோர் ஒட்டுதல்தான் மைதிலி மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
ஆனால் இவர்கள் இருவருக்கும் முன்பு மணம் முடிக்க பேசினார்களே.. என்ற நெருஞ்சி மைதிலியின் மனதை குத்தியபடியே இருந்தது.. அப்போது அந்த புது உறவு இங்கு அனைவருக்கும், ஏன் அவள் கணவனுக்குமே ஏற்புடையதாகத்தானே இருந்திருக்கிறது.. அந்த திருமண பேச்சை அப்போது அவன் தடுக்கவில்லையே.. எப்போதும் மைதிலியின் மனதை அறுக்கும் ரம்பம்தான் இது.. இப்போதும் அவளை அறுத்துக் கொண்டிருந்தது..
முன்பு எப்படியோ, இப்போது அவள் கணவன் மனதில் வந்தனா இல்லை.. அதனை உறுதியாக சொல்ல அவளால் முடியும், ஏதோ ஓர் வகை திருப்தியில் மனம் நிறைய மைதிலி தன்னைத் தானே அமைதிப்படுத்தியபடி வேலைகளில் ஆழ்ந்தாள்.. கொஞ்சம் கொஞ்சமாக மனம் அமைதியுற ஆரம்பித்த போது, காலிங்பெல் ஒலித்தது..
அந்த வந்தனாதான் வந்திருப்பாள்.. இப்போது அவளது இரட்டை நாக்கு எந்த விசயத்தை உமிழப் போகிறதோ.. வேண்டா வெறுப்போடு போய் கதவைத் திறந்த மைதிலியின் முகம் சூரியப் பிரகாசமானது..
“சுமதி, சௌமியா வாங்கடி வாங்க.. என்னைப் பார்க்க வரணும்னு இப்பவாவது உங்களுக்கு தோணியதே..” சிறிது நாட்கள் கழித்து பார்த்த தோழிகளை உற்சாகமாக வரவேற்றாள்..
அவர்களுக்கும் சந்தோசமே, தோழியை அணைத்து தங்கள் சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டனர்.. மகாராணி வந்து எட்டிப் பார்த்து விட்டு தோழிகள் என்றதும் தலையசைத்து போனாள்..
“ஏய் உன் மாமியார் ஏதாவது சொல்லுவாங்களாடி..?” கிசுகிசுப்பாய் சுமதி கேட்க,
“சீச்சீ அதெல்லாம் இல்லடி.. அவுங்க ரொம்ப நல்லவங்க.. நீங்க உட்காருங்க.. ஜூஸ் எடுத்துட்டு வர்றேன்..” தோழிகளை அமர வைத்து விட்டு ப்ரிட்ஜை திறந்து ஜூஸ் எடுத்துப் போய் கொடுத்தாள்..
ஆவலோடு அருகருகே அமர்ந்து தோழிகள் பேச ஆரம்பித்தனர்..
“மேல் படிப்பிற்கு சென்னை போகப் போறேன்டி.. அதற்கு முன் உன்னைப் பார்த்துவிட்டு போவோம்னு வந்தேன்..” சுமதி தோழியின் கையை பற்றிக் கொண்டாள்.
“ஹேய் என்னடி திடீர்னு இப்படி ஒரு முடிவு..? உங்க அம்மா மடியை விட்டு இறங்க மாட்டாயே நீ.. இப்போது ஹாஸ்டலில் போய் எப்படி இருப்பாய்..?”
“ஆமாம் எத்தனை நாளைக்கு அம்மா மடியிலேயே இருக்க முடியும்..? நீ கூட அப்படித்தான் இருந்தாய்.. இப்போது பார் உன்னை வேரோடு பிடுங்கி இங்கே கொண்டு வந்து போட்டு விட்டு போய்விட்டார்கள்.. நாளை எனக்கும் இதே கதிதானே.. அதற்கு முன் கொஞ்சம் கொஞ்சமாக என் குடும்பத்தின் பிரிவிற்கு பழகிக் கொள்கிறேன்..”
தோழியின் நியாய விளக்கம் மைதிலியின் மனதில் பாரமாக ஏறி அமர்ந்தது.. உண்மைதானே இருபது இருத்தைந்து வருடங்கள் உடன் வைத்து போற்றி பாதுகாத்து வளர்த்த மனுசியை எவ்வளவு எளிதாக தூக்கி இன்னொரு வீட்டிற்கு கொடுத்து விடுகிறார்கள்..? மைதலிக்கு கண்கள் கலங்கி கண்ணீர் வரும் போலிருந்தது.
“அடியேய் போதும்டி உங்க ஸ்டுப்பிட் சென்டிமென்ட்.. உங்களைப் போல் நம் அம்மாவும், பாட்டியும் நினைத்திருந்தால், நாமே இருந்திருக்க மாட்டோம்.. தேவையில்லாத ஏக்கங்களை விட்டு நிகழ்வுக்கு வாங்க..” சௌமியா இருவரையும் அதட்டினாள்.
“வெளியூர் படிக்க போவதால், சுமதி என்னைப் பார்க்க வந்தாள்.. நீ எதற்காகடி வந்தாய்..?” மைதிலி தன் மனபாரம் குறைக்க தோழியின் பக்கம் கவனத்தை திருப்பினாள்..
“ம்ஹூம் நான் வந்த விசயமே வேற..” பெருமூச்சு விட்ட சௌமியாவின் விழிகள் ஏக்கமாக அந்த ஹாலை வலம் வந்தன..
“ம்.. புரிஞ்சு போச்சுடி புரிஞ்சு போச்சு.. ஏன்டி இப்படி அலையுற..?” மைதிலியின் முகத்தில் குறுஞ்சிரிப்பு பரவியது..




“போனில் ஒரே ஒரு வார்த்தைதான்டி சொன்னேன்.. மைதிலியை போய் பார்த்து விட்டு வரலாமான்னு யோசிக்கிறேன்னு.. உடனே இவள் என் வீட்டில் ஆஜர்.. சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை பாதி சாப்பாட்டில் எழுப்பி, கை கூட கழுவ விடாமல் ஸ்கூட்டியில் ஏற்றி இங்கே கூட்டி வந்து..”
“பொய்டி மைதிலி.. இவள் மூன்றாவது தடவையாக மோருக்கு சாதம் வைக்கலாமான்னு யோசிச்சிட்டு இருந்தாள்.. இப்படி தின்னால் உடம்பு என்னாகும்கிற நல்ல எண்ணத்தில்தான் இவளை எழுப்பி, கை கழுவின பிறகுதான்டி ஸ்கூட்டி எடுக்க சொன்னேன்..”
பதிலுக்கு பதில் பேசினாலும் தங்கள் அலைப்புறுதலை மாற்றிக் கொள்ளவில்லை சௌமியாவின் விழிகள்..
“ஏய் சௌமி நல்லா வசனமாக பேசுறியே தவிர மூளை வேலை செய்யலையேடி உனக்கு.. இந்தப் பட்டப் பகல்ல ஆம்பளைங்க வீட்லயா இருப்பாங்க..” மைதிலி பூடகமாக கேட்டாள்..
“அது தெரியாதாடி எனக்கு.. வர்ற வழியில் ஸ்கூட்டியை உங்க கடை வாசலில் நிறுத்தி, சீரகம் வேணும்னு சாக்கு சொல்லி உங்க கடைக்குள்ளும் நுழைந்து பார்த்துட்டேன்டி.. ம்ஹீம்.. பிரயோஜனமில்லை.. வீட்டுக்கு கால் கிலோ சீரகம் வாங்கினதுதான் மிச்சம்..”
சௌமியா விட்டால் வயலின் எடுத்து காதல் சோக ட்யூன் ஒன்று வாசிக்கும் மனநிலையில் இருந்தாள்.
“ஓ.. ரவி கொழுந்தன் கடையில் இல்லையா..? ஏதாவது பர்சேஸ் வேலையாக வெளியே போயிருப்பார்..”
“அட என்னடி கொழுந்தன் அவர்.. இவர்னு ஏக மரியாதை அவனுக்கு..”
“எனக்கு அந்த உறவுதானே.. அப்படித்தானே கூப்பிட்டாக வேண்டும்..” மைதிலி புன்னகைத்தாள்..
“ம்.. பாரேன் மூன்று வருட நட்பு.. மூன்றே மாதங்களில் உறவாக மாறி ‘ர்’ மரியாதையில் வந்து நிற்கிறது.. அந்த நட்பில் இருந்த உயிர்ப்பு இந்த உறவில் இருக்கிறதாடி..?” சுமதி எரிச்சலாக கேட்க, அதற்கும் மைதிலியின் பதில் புன்னகைதான்..
“இவ ஒருத்தி நட்பு, உறவுன்னு எப்போ பாரு இடியாப்பம் பிழிஞ்சிகிக்கிட்டு.. ஏன்டி நட்போ.. உறவோ நம்ம மனதுக்கு பிடித்தவங்க நம் பக்கத்தில் இருந்தால் அது போதாதா..? இதற்கு ஏன் இந்த முழக்கம் முழக்கிற..?” சௌமியா வாழ்வை அதன் போக்கில் கடக்கும் சூட்சுமம் பேசினாள்.
“ம், அதுவும் சரிதான்.. எப்படியோ நீ சந்தோசமாக இருந்தால் போதும்டி..” சுமதி வாஞ்சையுடன் தோழியின் கரம் பற்றினாள்.
“ரொம்ப சந்தோசமா இருக்கிறேன்டி.. அவர் என்னை நன்றாக வைத்துக் கொள்கிறார்..” மைதிலியின் நிறைவுப் புன்னகைக்கு தோழிகள் சம்மதமாய் தலையசைத்தனர்.
“வரும் போது உங்கள் கடையில் உன்னவரை பார்த்தோம்.. உள்ளே போகலாமா.. வேண்டாமான்னு வாசலில் தயங்கி நின்று கொண்டிருந்தோம்.. அவரே எங்களை பார்த்துவிட்டு வெளியே வந்து எங்களிடம் பேசினார்.. மைதிலியின் ப்ரண்ட்ஸ்தானேன்னு கரெக்டாக கேட்டு கூல்ட்ரிங்ஸ் வாங்கி கொடுத்தார்.. வீட்டிற்கு வழி தெரியவில்லையான்னு.. வீட்டு வழி சொன்னார்..”
தோழிகளின் விளக்கம் மைதிலிக்கே ஆச்சரியம் தான்.. அவளது கணிப்புபடி அவள் கணவனுக்கு நட்பு, நண்பர்கள் மேலெல்லாம் அவ்வளவு அபிமானம் கிடையாது.. அவனே அவர்கள் திருமணத்தில் பார்த்த அவர்கள் தோழிகளை நினைவு வைத்திருந்து பேசி, வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறானென்றால், பள்ளம் நோக்கும் மடை நீராய் அவள் மனம் கணவன் புறம் பாய்ந்தது..
“ஹேய் அங்கே பாருடி அவள் ஹஸ்பென்ட் பற்றி பேசிய உடனேயே அவள் முகம் சிவப்பதை..” தோழிகளின் ஆச்சரியத்தில் மைதிலியின் முகம் மேலும் சிவந்தது.
“விட்டால் நாள் முழுவதும் பேசியே தள்ளுவீங்களே.. வாங்க சாப்பிடலாம்..” மகாராணி வந்து அழைக்க, தோழிகள் இருவரும் மறுத்து எழுந்தனர்.
“பரவாயில்லை ஆன்ட்டி, நாங்க இன்னொருநாள் வருகிறோம்..”
“இன்னொருநாளும் வாங்க, இப்போதும் வாங்க.. வீட்டிற்கு வந்தவங்களுக்கு சாப்பாடு போடாமல் அனுப்புகிற பழக்கம் எங்கள் வீட்டில் கிடையாது.. வாங்க சாப்பிடலாம்..”
அதிகாரமாக பேசினாலும் அதில் இழையோடிய அன்பை உணர்ந்து கொள்ள முடிய சுமதியும், சௌமியாவும் திருப்தியாக புன்னகைத்தனர்.. மருமகளின் நட்புகளை ஆதரிக்கும் மாமியார்கள் குறைவுதான்.. மகாராணியின் இயல்பான விருந்தோம்பலில் தோழிகளுக்கு பரம திருப்தி..
“மைதிலி இந்த குடும்பத்தில் உன்னைக் கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்களே என்று உன் அப்பா, அம்மா மீது எனக்கு கொஞ்சம் கோபம் இருந்தது.. ஆனால் இன்று அதெல்லாம் போச்சு.. சொல்லப்போனால் இங்கே உன்னுடைய வாழ்வை பார்க்க வேண்டுமென்றுதான் நாங்கள் இன்று வரவே செய்தோம்.. மிகுந்த மன நிறைவோடு போகிறோம்..”
இலை போட்டு மகாராணி பரிமாறிய விருந்துபச்சாரத்தின் ஊடாக தோழிகள் மைதிலியிடம் முணுமுணுத்தனர்.. மைதிலியின் முகத்தில் பெருமிதம் தாண்டவமாட ஆரம்பித்தது..
நலமும், நன்மையும் விரவிக் கிடந்த அந்த சூழலில்தான் வீணையில் கோர்க்காத தந்தியாய் திமிறலோடு உள்ளே வந்தாள் வந்தனா.. டைனிங் டேபிளில் அமர வைக்கப்பட்டு உபசரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர்களை கூர்ந்து பார்த்தாள்.. ஏளனமும், எகத்தாளமும் அவள் பார்வையில் வடிந்தன..
பரசுராமனுடன் போய் தான் வாங்கி வந்த பொருட்களை பெரிய பெரிய பைகளை சோபாவின் மேல் வைத்தாள்..




“அத்தான் நான் வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல இத்தனை சாமான்னை வாங்கிக் கொடுத்துட்டார்..” செல்லமாய் மைதிலியை பார்த்தபடி கொஞ்சினாள்..
“பரசுவை எங்கே வந்தனா..? நீ எப்படி வந்தாய்..?” மகாராணி கேட்க,
“என்னை ஆட்டோவில் ஏற்றிவிட்டார்.. அவருக்கு கடையில் முக்கியமான வேலை என்று..” தெளிவாக வராமல் முணுமுணுத்த வந்தனாவின் குரலில் மைதிலியின் முகம் பிரகாசமானது.
“அத்தை இவுங்கெல்லாம் யாரு..?” ஒரு சேரை இழுத்துப் போட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள் வந்தனா.
“மைதிலியோட தோழிகள்மா..” சொல்லி விட்டு மகாராணி அடுத்த பதார்த்தத்தை எடுக்க அடுப்படிக்குள் சென்றாள்..
“இப்படித்தான் ஒவ்வொரு ப்ரெண்ட் வீட்டுக்காக போயி நல்லா.. சாப்பிடுவீங்களா..?” கையை சாப்பிடுவது போல் சைகை காட்ட சுமதியும், சௌமியாவும் அதிர்ந்தனர்.
“வந்தனா ஒழுங்காக பேசு..” மைதிலி அதட்டினாள்..
“உனக்கு இங்கே போடுவதே தண்டச்சோறு.. இதில் உன்னைத் தேடி வருபவர்களுக்குமா, வடிச்சு கொட்டனும்..” விசமாய் கக்கிவிட்டு எழுந்து போய் விட்டாள்..
“சாரிடி.. சாரி.. சாரி.. அவள் சின்னப் பொண்ணு.. அவள் பேசியதை பெரிதாக நினைத்துக் கொள்ளாதீர்கள்..” மைதிலி தவித்து தோழிகளிடம் கெஞ்சி நின்றாள்..
“பரவாயில்லை மைதிலி.. நாங்கள் தப்பாக நினைக்க வில்லை.. யாருடி இவள்..? இதற்கு முன் இவளை பார்த்தது இல்லையே.. உன் சொந்தக்கார பெண்ணா..?”
“ம்.. அவருடைய அத்தை மகள்.. இப்போது அவளும், அவள் அம்மாவும் இங்கேதான் இருக்கிறார்கள்..”
மறைக்க முயன்றும் மைதிலியின் குரலில் தவிப்பு தெரிந்துவிட, அந்த ஆத்மார்த்தமான தோழிகள் பரிவோடு தோழியை பார்த்தனர்..

What’s your Reaction?
+1
6
+1
2
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Priya
Priya
4 years ago

உங்களோட பெஸ்ட் ஆப் ஒன் not only one

Sarojini
Sarojini
4 years ago

வந்தனா, வந்தேன்னா உன் நாக்கு இருக்காது, என்னமா பேசுது இந்த பொண்ணு…

அருமையான பதிவு!

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!