Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 21

21

நீயின்றி தனித்துறங்கும் இரவுகளில்
விண்மீன்கள் மட்டுமே
அந்த நிலவு எங்கோ..
மேகத்திற்குள்ளோ என்னவோ..

“நீ ஏதேதோ சொல்லி என்னைக் குழப்புகிறாய்..?” அதிகாலையிலேயே எழுந்து வந்த நின்றிருந்த வந்தனாவை புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தாள் மைதிலி, கலைந்த தலையும் கசங்கிய நைட்டியுமாக அவள் இப்போதுதான் படுக்கையில் இருந்து எழுந்து வந்திருந்தாள்.. மைதிலி குளித்து முடித்து தலையில் சுற்றிய ஈர துண்டுடன் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
வழக்கமாக வந்தனா எழும் நேரம் இதுவல்ல.. ஆண்கள் கடைக்கு கிளம்பி உணவுண்ண மேஜைக்கு வரும் போதுதான் தூங்கி எழுந்து வந்து நிற்பாள் சாப்பிட அமர்ந்திருப்பவர்களுடன் வாயடித்தபடி தானும் சாப்பிட அமர்ந்துவிடுவாள்.. இன்றோ மைதிலி இரவு கொடுத்த அதிர்ச்சி, அவளைத் தூங்க விடாது அலைக்கழித்து 
இந்த அதிகாலையே இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
“ஏய் நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன் நீ பாட்டுக்கு கோலம் போட்டுக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்..?”
மைதிலி கையிலிருந்த கோலபொடி டப்பாவை பிடுங்கினாள்..
“உஷ்.. என்ன வந்தனா இது.. காலங்கார்த்தாலே.. என் வேலையைக் கெடுக்காதே.. நீ இந்த வீட்டுப் பெண்.. இப்படி காலை நேரம் இஷ்டப்படி தூங்கி எழுந்து வேலை எதுவும் செய்யாமல் ஜாலியாக இருக்கலாம்.. ஆனால் நான் அப்படி அல்ல.. இந்த வீட்டு மருமகள்.. அதுவும் பொறுப்பான மூத்த மருமகள்.. உன் மாதிரி இப்படி சிணுங்கிக் கொண்டு இருக்க முடியாது தள்ளி நில்லு.. எனக்கு அடுத்தடுத்த வேலைகள் இருக்கிறது..”
வீட்டின் பெரிய மனுசியாய் மைதிலி அதட்ட வந்தனா வாயடைத்துப் போனாள்.. இவள் இப்போது என்ன சொல்ல வருகிறாள்..? அவள் யோசித்து முடிக்கும் முன் மைதிலி அங்கிருந்து காணாமல் போயிருந்தாள்.. வந்தனா அவளை தேடி வீட்டினுள் போனாள்.. காபிக்கு டிகாசன் இறக்கிக் கொண்டிருந்தவளை திரும்ப பிடித்தாள்.
“என்னை விட இந்த வீட்டில் உனக்குத்தான் உரிமை என்கிறாயா..?”
“அப்படி நான் சொல்வேனா வந்தனா.. உன் மாமாவும், அத்தான்களம் என்னை அப்படி சொல்ல விடுவார்களா..? நீ இந்த வீட்டு செல்லப் பொண்ணுடா.. உன் அத்தை, மாமா, அத்தான்களுக்கு போல் எனக்கும் கூட நீ இனி செல்லம்தான்..” சொன்னதோடு அவள் கன்னத்தையும் லேசாக கிள்ளினாள்.. வந்தனா ஒரு மாதிரி விழித்தபடி அவளைப் பார்த்தாள்.
“உனக்கு காபியா பால் ஆற்றவா வந்தனா..?” குரலைக் குழைத்து தாயின் பரிவுடன் மைதிலி கேட்க, வந்தனா சீறினாள்.
“நான் ஒன்றும் குழந்தை இல்லை..”
“ஆனால் குழந்தைக்குத்தான் இது போல் ஜால்ரா கொலுசெல்லாம் வாங்கித் தருவார்கள் தெரியுமா..?”




அஞ்சனாவிற்கு அந்தக் கணம் தன் காலில் இருந்த சலங்கை கொலுசு பிடிக்காமல் போனது.. சுழட்டி வைத்து விடலாமா.. யோசிக்க ஆரம்பித்தாள்..
“மைதிலி காபி ரெடியா..?” மகாராணியின் குரலுக்கு, 
“தோ வந்துட்டேன் அத்தை..” பதிலளித்துவிட்டு காபியை ப்ளாஸ்கில் ஊற்றினாள்..
“ஏய் எனக்கு பதில் சொல்லிவிட்டு போ.. நீ ஏன் நேற்றிலிருந்து ஒரு மாதிரி பேசிக் கொண்டிருக்கிறாய்..?”
“வந்தனா குடோனுக்கு லோட் வந்து இறங்கிட்டு இருக்கு.. மாமா, அத்தான்களெல்லாம் அங்கேதான் இருக்காங்க.. அவுங்க எல்லாருக்கும் காபி கொடுக்கத்தான் போய் கொண்டிருக்கிறேன்.. ஸ்கூல் போகிற குழந்தை மாதிரி என் வேலையைக் கெடுக்க கூடாது..”
மைதிலியின் உவமானத்தில் வாய் மூடிக்கொண்டு ஒதுங்கி விட்டாள் வந்தனா, முகம் முழுவதும் நிறைந்து ஒளிவிட்ட மத்தாப்புடன் ப்ளாஸ்க், தம்ளர்களுடன் வீட்டின் பின்புறம் வந்தாள் மைதிலி.
அவர்கள் வீட்டின் பின்புறம்தான் மளிகைக் கடைக்கு தேவையான தானியங்களை மொத்தமாக வாங்கி இறக்கி வைக்கும் குடோன் இருந்தது.. மாதம் ஒருமுறை அரிசி, பருப்பு, கம்பு, கோதுமை போன்ற தானிய வகைகளை மொத்தமாக அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்து கொள்முதல் செய்து அடுக்கி வைத்துக் கொள்வார்கள்..
அந்தக் குடோனின் பின் வாசல் ரைஸ்மில்லில் ஆரம்பிக்கும் அந்த ரைஸ்மில்லின் வாசல் அடுத்த தெருவில் இருக்கும்.. கிராமத்து விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை மொத்தமாக வாங்கி அதனை அவர்கள் ரைஸ்மில்லியே அரைத்து தீட்டி அரிசியாக்கி “மகாராணி..” என்ற பெயரில் ஒரு அரிசி பிராண்ட் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.. கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதுமே அந்த பிராண்ட் அரிசி மிக நல்ல பெயருடன் சந்தையில் இருக்கிறது..
இன்று மொத்தமாக தானிய மூட்டைகள் வந்து இறங்கிக் கொண்டிருக்க, அதனை இறக்கி அடுக்கியபடி, மேற்பார்வையிட்டபடி ஆண்கள் நால்வரும் பின்னால் இருந்தனர்..
“காபி எடுத்துக்கோங்க மாமா…” பெரிய மரநாற்காலியில் அமர்ந்தபடி இறங்கிக் கொண்டிருந்த மூட்டைகளை கவனித்துக் கொண்டிருந்த அருணாச்சலத்திற்கு காபி கொடுத்தாள் மைதிலி..
“பசங்க உள்ளே நிற்கிறாங்க.. அவுங்களுக்கும் கொடும்மா..” காபியை வாங்கிக் கொண்டார்..
“கல்யாண் கொழுந்தன் காபி இந்தாங்க..” அடுக்கிய மூட்டைகளை எண்ணி எழுதிக் கொண்டிருந்த கல்யாண சுந்தரத்திற்கு கொடுத்தவளின் கண்கள் அங்குமிங்கும் குடோனிற்குள் அலை பாய்ந்தன..
“என்னையா தேடுறீங்க..? நான் இங்கே இருக்கேன்..” குரல் கொடுத்தபடி அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளின் மேலிருந்து குதித்தான் ரவீந்தர்..
அவன் குதித்த வேகத்தில் இரண்டடி பின்னால் நகர்ந்த மைதிலி.. “என்ன கொழுந்தனரே அவ்வளவு உயரத்திலிருந்து இப்படி பட்டுன்னு குதிக்கிறீங்களே.. கால் பிசகிடுச்சின்னா..?” கரிசனம் காட்டிய அவள் குரலுக்கு இணையாக கண்கள் ரவியின் மீதில்லை இன்னமும் பட்டாம்பூச்சியாய் அலைந்து கொண்டிருந்தது..
“அக்கறைக்கு நன்றி அண்ணியாரே.. ஆனாலும் அலாதி அக்கறை உங்களுக்கு.. இப்போ நெல் மூட்டைங்களை எண்ணுறீங்க போல..”
“அது எதுக்கு எனக்கு..?”
“பிறகு என்ன வேணும் உங்களுக்கு..?”
மைதிலி இப்போதுதான் ரவீந்தரின் கேலியை உணர்ந்தாள்.. இவன் ஒருத்தன் இப்படித்தான் எல்லாத்தையும் கவனித்து கேலி பண்ணிட்டே இருப்பான்.. இதுக்குத்தான் இவன் கூட ரொம்ப பேச்சு வச்சிக்கிறது கிடையாது.. செல்லமாக அவனை முறைத்தாள்..
“சரி.. சரி.. முறைக்காதீங்க.. உங்க ஆளு நாலாவது வரிசைக்கு பின்னாடி மூட்டைகளை ஏத்தி அடுக்கிட்டு இருக்கிறாரு.. போங்க..”
தலையசைத்து வேகமாக நகர முயன்றவளின் முன் கை நீட்டி தடுத்தான்.
“அம்மா.. தாயே எனக்கு ஒரு கப் காபி தரமுடியுமா..?”
மைதிலி நாக்கைக் கடித்தாள்.. ஐயையோ இவனை மறந்துட்டேனே.. போச்சு இதை வைத்தே என்ன ஓட்டுவான்.. முகம் செவேலென சிவந்துவிட, அவசரமாக காபியை ஊற்றி அவன் கையில் கொடுத்து விட்டு உள்ளே ஓடினாள்..
“கல்யாண் அண்ணா நம்மளை ஓடி ஓடி கவனிக்க இந்த வீட்டில் ஆள் இல்லாமல் போய் விட்டது பார்த்தாயா..?” சோகமாக அண்ணனை தன் கட்சிக்கு இழுத்தான் ரவீந்தர்..
“டேய் பேசாமல் காபியை குடிடா..” கல்யாணசுந்தரம் அதட்டினான்.. இருவரும் நெல் மூட்டைகளின் மேல் அமர்ந்தபடி காபியை குடிக்க ஆரம்பித்தனர்.
தாமரையின் மலர்தலும், செம்பருத்தியின் வண்ணமுமாக கையில் காபியோடு வந்த மனைவியை யோசனையோடு பார்த்தான் பரசுராமன்.. கத்திரிப் பூ வர்ண புடவை அவள் உடலோடு ஒட்டி படிந்து அசையும் சிற்பமாக அவளைக் காட்ட, வந்தனாவிடம் பெற்ற வெற்றியால் மலர்ந்த முகம் ரவீந்தரின் கேலியில் சிவந்து விகசிக்க அந்த குடோனின் மேலே மட்டுமே உயரமாக அமைந்திருந்த சில சன்னல்கள் வழியாக வந்த சிக்கன வெளிச்சத்தில் தேவதையாக தெரிந்தாள் அவள்.
கையும், காலும் பரபரக்க ஆரம்பித்து பரசுராமனுக்கு.. கண்களை சுழற்றி அருகே யாரும் இல்லாததை உறுதி செய்தான்.. நடனமிடும் மயூரியாய் வந்து கொண்டிருந்த மனைவியை கொத்தித் தூக்கிப் போகும் வல்லூறாய் பார்த்திருந்தான்.. லேசாக நிமிர்ந்து கணவனைப் பார்த்த மைதிலி அவனது கொத்தல் பார்வையில் மேலும் முகம் சிவந்தாள்.
இவனுக்கு நேரம் காலமே கிடையாது.. எப்போது பார்த்தாலும் இப்படியே பார்த்துக் கொண்டு.. இப்போது காபியை கொடுக்க அவன் பக்கத்தில் போகத்தான் வேண்டுமா என்ற சந்தேகம் அவளுக்கு வந்துவிட, அவளது பாத எட்டுக்கள் மிகவும் தாமதமாக தொடங்கின..
“என்னடி மயில் மாதிரி ஆடி அசைஞ்சு வந்துட்டு இருக்கிற.. சீக்கிரம் வாடி..” கைகளை கட்டியபடி நெல் மூட்டைகள் மேல் சாய்ந்து நின்று கொண்டு அவளை அழைத்தான்.
அந்த அழைப்பே ஏதோ ஒரு திகிலும், இன்பமும் கலந்து மைதிலியினுள் இறங்கியது.. பரசுராமன் நெல் மூட்டைகளை குத்தி முதுகில் தூக்க இடுப்பில் சொருகி வைத்திருந்த இரும்புக் கொக்கியை எடுத்து கீழே வைத்தான்.. அந்தக் கொக்கியை வைத்து அவன் சற்று முன் அநாயசமாக மூட்டைகளை முதுகில் ஏற்றி அடுக்கியதை பார்த்தபடிதான் வந்திருந்தாள்.
சிக்ஸ்ஸோ.. எய்ட்டோ உருண்டு திரண்டு நிமிர்ந்து நின்ற கணவனின் உடலில் பதிந்தது அவள் பார்வை.. இது அயராத உழைப்பு தந்த ஆரோக்கியமான உடல்.. கூலிக்கென ஆயிரம் பேரை வைத்துக் கொள்ளும் வசதியிருந்த போது, தன் திருப்திக்காக தாமே இறங்கி உழைக்கும் புகுந்த வீட்டினரை நினைத்து பெருமிதம் உண்டானது அவளுக்கு.. இந்த இடையறாத உழைப்புதான் இந்த உயர்நிலையை அவர்களுக்கு கொடுத்து இருக்கிறது.. மைதிலியின் தந்தை சிவராமனைக் கவர்ந்ததும் இந்தக் குடும்பத்தினரின் சலித்துக் கொள்ளாத உழைப்புதான்..
கட்டான உடலுடன் திமிறி நிற்கும் கணவனின் அழைப்பு பார்வையில் அடி மனம் தண்டனிட, மைதிலியின் காலெட்டுக்கள் மிக மென்மையாக, பொறுமையாக இருந்தன..
“என்னடி அன்ன நடை.. நம்ம முதலிரவில் கூட இப்படி நடந்து வரலை நீ..” அவனை அடைய இன்னமும் சிறிது தூரம் இருக்கும் போதே, பொறுமை இழந்து இரு கைகளையும் நீட்டி.. அவள் இடை பற்றி தன்னருகே இழுத்தான் பரசுராமன்..
வேக இழுவையில் தொம்மென அவன் உடலோடு மோதியவளின் மனதில் சிறு நெருடல்.. அவன் நினைவூட்டிய முதலிரவினால், கொஞ்சமும் அவளை யோசிக்க விடாமல், என்ன ஏதென்ற பரிதவிப்பில் அவள் இருக்கும் போதே, அவளுடன் அவனுடைய முரட்டுக் கூடல்.. அன்று நைந்த மைதிலியின் கன்னி மனதும், உடலும் இன்னமும் கூட தேறவில்லை.. இதோ.. இப்போது கூட..
மைதிலி அவனிடமிருந்து விலக பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.. இடை பற்றி இழுத்த கையோடு, அவள் இதழ்களையும் பற்றியிருந்தான் அவள் கணவன்.. ஆழ்ந்த அவனது ஆளுமையிலிருந்து மீள முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள் மைதிலி.. எப்போதும் போல் அவனாகவேதான் அவளை விட வேண்டியிருந்தது..




“இரண்டு நிமிசம் அமைதியாக இருக்க முடியாதாடி உனக்கு..?”
அவளது திமிறலுக்கு எரிச்சல் காட்டினான்.. மைதிலிக்கும் எரிச்சல் வந்தது.. என்ன அடாவடித்தனம்..? இவன் நினைத்த போது நினைத்த இடத்தில் இவனது 
உடல் பலத்தை காட்டுவதற்கு நான் ஒத்துப் போக வேண்டுமா..?
“ஏய் என்னடி முறைப்பு..?” இரண்டு விரலால் அவள் கன்னத்தில் சுண்டினான்.. சட்டென கன்னம் சுண்டிய அவன் விரல்களை பிடித்தாள்.. பின்னால் திருப்பி வளைக்க முயன்றாள்..
“ஏய் என்னடி பண்ற..?” பரசுராமனின் கண்கள் மின்னின.. குரலில் முகத்தில் சுவாரஸ்யம் இருந்தது.. தன் விரல்களை அவள் கையில் ஒப்புக் கொடுத்திருந்தான்.
“அதென்ன எப்போது பார்த்தாலும் கிள்ளுவதும், சுண்டுவதும், இழுப்பதும்.. உங்களுக்கு விளையாட்டு பொம்மையா நான்..?”
முயன்று அவன் விரல்களை பின்னால் மடக்க முயன்றபடி கேட்டாள்.. மெலிதாய் சீட்டியடித்தான் அவன்.
“ஆமாம்டி அப்படியே கொலு பொம்மை மாதிரிதான் இருக்கிறாய்.. இந்த பொம்மை மட்டும் என் இஷ்டப்படி ஆடினால் எப்படி இருக்கும்..?” பேராசையாய் ஒலித்த குரலுடன் கைநீட்டி அவள் இடை பற்றி நெரிந்தான்..
“என் விரலை என்னடி பண்ற..?” அவன் கேட்டதும் தான் பின்னால் மடக்க முயன்று முடியாமல் அவன் விரல்களை வருடியபடி நின்றிருப்பதை உணர்ந்த மைதிலி வேகமாக தன் பிடியை விட அந்தக் கையாலும் அவளை இழுத்து தன்னோடு இறுக்கியவன்..
“தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி நான் சொல்வதற்கெல்லாம் கட்டுப்படனும், கேட்பதற்கெல்லாம் தலையாட்டனும்.. மூஞ்சியை திருப்பாமல், இங்கே இப்படி என் முகம் பார்த்து..” திரும்ப முயன்ற அவள் கன்னத்தை அழுத்தி பற்றி தன் முகம் பார்க்க வைத்தபடி அவன் தொடர்ந்து பேசிய தேவைகள் மைதிலியின் உடற் குருதிக்குள் தீ சேர்த்து ஓட வைத்தன..
“சை.. அசிங்கம் பிடித்த ஆள் நீங்க..?” கூச்சமும், கோபமுமாய் அவனைத் தள்ளினாள்..
“உங்களுக்கு என்னைப் பார்த்தாலே இது மட்டும்தான் தோணுமா..?”
“அப்படித்தான்டி தோணுது.. நீ இப்படி வடிவாக.. அளவாக.. அழகாக.. இருந்தால் வேறு என்னடி நினைக்க சொல்ற..? எப்போதும் உன்னை மட்டும்தான் நினைக்கிறேன்..” மோகம் கொப்பளிக்க தொடங்கி விட்டது அவன் முகம்..
அவளை இழுத்து மூட்டைகளின் மேல் சரித்தவன், மேலே படர்ந்து இதழ்களை மூடினான்.. நண்டொன்னு உடம்பில் ஊறும் அவஸ்தையுடன் விழி மூடி அவனைப் பொறுத்திருந்தவள், கைகளை அவன் முதுகில் பரப்பி மேலேற்றி அவள் பின் தலை முடியை கொத்தாக பற்றி அவன் முகத்தை தன்னிடமிருந்து பிரித்தாள்.
“ஹேய் ரொம்ப தைரியம்டி உனக்கு..” அவள் கைகளுக்குள் சிக்கிக் கிடந்த தன் தலைமுடியோடு ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.
“பட்டப்பகல்ல நாலு பேர் பார்த்துடலாங்கிற இடத்தில வைத்துக் கொண்டு, என்னதிது..ம்..?” அவன் முடி பிடித்து உலுக்க, அதிர்ந்து விலகுவானென்றோ, வெகுண்டு அறைவானென்றோ எதிர்பார்த்தற்கு மாறாக, திராட்சை ரசமுண்ட போதை கொண்டன அவன் விழிகள்.
“மைனாக்குஞ்சு மாதிரி இருந்துட்டு பருந்துகிட்டேயே உன் வீரத்தை காட்டுறியா..?” கோபமாய் கேட்கவேண்டிய கேள்வி குழந்தை கொஞ்சலாய் வெளிப்பட மைதிலி திகைத்தாள்..
இவனை என்ன செய்ய..? சட்டென அவனது சிறு நெகிழ்வில் அவனிடமிருந்து விலகி மூட்டை மேலிருந்து சறுக்கி நகர்ந்து தள்ளிப் போய் நின்றாள்.
“ஏய்..” வேகத்துடன் கை வீசி வர முயன்றவனை உதட்டில் விரல் வைத்து “உஷ்..” என விழியுருட்டினாள்.
“சுத்தி ஆட்கள் இருக்காங்க வேலையை பாருங்க..”
“ஏய் ஒழுங்காக வந்துருடி..”
“முடியாது.. போடா..” சன்னக்குரலில் அவள் உரைத்த.. “டா..” மேலும் அவன் விழி மின்ன வைக்க, அவன் எடுத்து வைத்த வேக எட்டுக்களை எதிர்பார்த்து சிட்டுக்குருவியாய் பறந்து விட்டாள் மைதிலி..

What’s your Reaction?
+1
6
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Sarojini
Sarojini
4 years ago

அருமையான பதிவு

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!