karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 22

    22

சாவகாசமாய் சரிந்திருக்கும் தருணங்களையும் 
சாஸ்வதமாய் ஆக்ரமிதது கொள்கிறாய், 
பின்னிய பின்னலுக்குள்
புகுந்துவிட்ட மல்லிகையாய்
வாசம் பரப்பிக்கொண்டு 
என்னுள் நீ.

” இந்த கடிதத்தின் முகவரியில் “பஸ்ட்டி “எனும் பெயர் இருக்கிறது .அது இங்கேயிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறது …? நாம் அங்கே போக எவ்வளவு நேரமாகும் …? ” சாத்விகாவின் ஆர்வம் அளவிற்கு எதிரொலிப்பு வீரேந்தரிடம் இல்லை .

” நீ எங்கே தங்க போகிறாய் …? ” அவள் பேச்சு காதில் விழாத்து போல் வேறு பேசினான் .

உன்னை நம்பித்தானே வந்திருக்கிறேன் .நீதானே சொல்லவேண்டும் …மனதின் எண்ணத்தை வெளியே சொல்ல முடியாமல் தயங்கினாள் .

” ஹாஸ்டல் , லாட்ஜ் …எல்லாம் ஒத்துவராது .எனக்கு தெரிந்தவர்களின் வீடு இருக்கிறது .அவர்களுடன் கொஞ்சநாட்கள் தங்கிக்கொள் .பிறகு யோசிக்கலாம் ….”

” உங்கள் வீட்டில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் …? ” அவனுடைய வீட்டிலேயே தங்க நினைக்கும் நினைப்பை  சூசகமாக தெரிவித்தபடி நிமிர்ந்தவள் திகைத்தாள் .அவன் முகம் கறுத்திருந்த்து .




” என் வீட்டிலெல்லாம்  உன்னை தங்க வைக்க முடியாது …” எரிந்து விழுந்தவன் , தன் போனை எடுத்து நம்பரை அழுத்த ஆரம்பித்தான் .

இதற்கு ஏன் இவ்வளவு எரிச்சல் படுகிறான் .அவன் வீட்டினர் மறுப்பார்களோ ….எதனால் …யோசித்தபடி இருந்தவளின் மனம் திடீரென திக்கென்றது .ஒ…ஒரு வேளை இவன் மனைவி …இவன் திருமணமானவனோ …? திடீரென சாத்விகாவிற்கு வயிற்றில் ஏதோ இம்சை போல் இருந்த்து .தலை பாரமாகி கனக்க ஆரம்பித்தது .வயிறு வலிப்பது போல் , வாந்தி வருவது போலெல்லாம் ஏதேதோ உடல் உபாதைகள் தோன்ற ஆரம்பித்தன .

என்ன கண்றாவி இது …இருபத்தியிரண்டு வருடங்களாக உயிராய் வளர்த்தவர்களை விட்டு பிரிந்து தன்னந்தனியளாய் ப்ளைட் ஏறி தைரியமாக இவ்வளவு தூரம் வந்த போதெல்லாம் வராத இந்த உடல் சங்கடங்கள் இப்போது ஏன் வந்து தொலைய வேண்டும் …? தன்னை தானே வெறுத்தபடி இருந்தவளை போனை ஆப் செய்துவிட்டு  வாவென கையசைத்து விட்டு நடந்தான் வீரேந்தர் .

அவனுடன் நடந்து சென்று வாசலில் நின்ற காரில் ஏறி உட்கார்ந்த  கடைசி விநாடி வரை ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் மயங்கி விழத்தான் போகிறேனென நிச்சயமாகவே நினைத்தாள் சாத்விகா .ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் பத்திரமாக காரில் ஏறி அமர்ந்துவிட்டாள் .

” உ…உங்கள் வீட்டில் ..யார் …யார் …உங்கள் அப்பா …அம்மா …மற்றவர்கள் ….வந்து உங்களுக்கு அப்பா , அம்மா இருக்கிறார்களா ..? ” ஏதோ சிந்தனையுடன் இறுக்கமான முகத்துடன் எதிரே பார்த்தபடி கார் ஓட்டிக்கொண்டிருந்தவனை பார்த்து கேட்டாள் .

” தாய் , தந்தை இல்லாமல் திடீரென தோன்றிவிட  நான் என்ன அவதாரமா …? ” அரைக்கவனத்துடன் இருந்த்து அவன் பதில் .

” ஓ …உங்கள் அப்பா என்ன செய்கிறார் …? “

” ரிட்டயர்டு மிலிட்டரி ஆபிசர் . இப்போது இந்த B.T safers  இன்ஸ்ட்டியூட் டை சில நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருப்பது அவர்தான் .அம்மா ஹவுஸ் ஒய்ப் …”

” உங்கள் கூட பிறந்தவர்கள் …? “

” நான் என் அப்பா , அம்மாவிற்கு ஒரே பிள்ளை ….”

” ம் …அ…அப்புறம் ..வே…வேறு யார் …? “

” இன்னமும் யார்….? ” சற்றுச குறுகலான அந்த தெருவில் காரை ஒடித்து கவனமாக திருப்பியபடி கேட்டான் .

” உங்களை பற்றிய விபரங்களை கூட உங்கள் வாயிலிருந்து நானேதான் தோண்டியெடுத்தாக வேண்டுமா …? அலுத்தாள் .

” கேட்க நினைப்பதை நேரடியாகவே கேட்டுவிடுவதுதானே பேபி .எதற்காக கழுத்தை சுற்றி மூக்கை தொடுகிறாய் …” இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மாறி வீரேந்தர் முகத்தில் புன்னகை வந்திருந்த்து .

” போடா ….” என முணுமுணுத்துவிட்டு முகத்தை திருப்பி வெளியே பார்க்க தொடங்கினாள் .

” மீதி சண்டையை பிறகு போடலாம் .இப்போது இறங்கு …” காரிலிருந்து இறங்கி அவள் பக்க கதவை திறந்து நின்றான் .

” தள்ளி நிற்பதுதானே …இப்படி வழியை அடைத்து நின்றால் எப்படி இறங்குவது …? ” சற்று தள்ளியே நின்றவனின் வயிற்றில் கை வைத்து மேலும் தள்ளியபடி இறங்கினாள் .

” ம் ..” என இன்னமும் நன்றாக தள்ளி நின்று தன் இரு கைகளையும் உயர்த்தி நின்றவனை அலட்சியப்படுத்தி , வேகமாக முன்னே டக் டக்கென நடந்தவள் …வரிசையாக சின்ன சின்ன சந்துகளாய் வளைந்து நெளிந்து சென்ற அந்த தெருவில் திரும்ப வேண்டிய இடமெதுவென்று தெரியாமல் குழம்பி நின்றாள் .




” இந்த பக்கம் …” பின்னால் வந்து நின்றபடி அவள் கைகளை கோர்த்து இழுத்துக்கொண்டு அந்த குறுகலான சந்தில் நுழைந்து நடந்தான் வீரேந்தர் .அவன் இழுவைக்கு நடந்தவள் ,அந்த தெரு முடிவிற்கே வராதோ …என சந்தேகப்பட ஆரம்பித்தாள் .இந்த இடத்தில் வீடுகள் இருக்கிறதா …? ஆமென்பது போல் அங்கே வரிசையாக வீடுகள்தான் இருந்தன. நெருக்கமாக ,அடுத்தடுத்து ஒன்றோடொன்று உரசியபடி …

வாசலில் கொடியில் துணிகள் காய்ந்த்து .உரலில் முக்காடிட்ட  பெண்கள் இந்தி பேசிக்கொண்டு இவர்களை ஓரக்கண்ணால் பார்த்தபடி  வத்தல் இடித்தனர் . கனமான தலைப்பாகை அணிந்த ஆண்கள் …

” நமஸ்தே பாய் .ஆப் கைசே ஹே…? ( வணக்கம் அண்ணா .எப்படி இருக்கீங்க …?

” பகுத் சமயசே மி்லே நஹி …? ( ரொம்ப நாளாக பார்க்க முடியலையே …? )

என்று வீரேந்தரிடம் நலம் விசாரித்தனர் .

” மே டீக் ஹூன் .மே வியாஸ் தா .இஸ்லியே ஆப் பூரா நஹி ஹர் சஹா …” ( நான் நல்லாயிருக்கேன் .வேலை நிறைய இருந்ததால் இந்த பக்கம் வர முடியவில்லை )

என அவர்களுக்கு பதில் சொன்னபடி நடந்த வீரேந்தரின் நடை எந்த இடத்திலும் தயங்கவில்லை .பற்றிய கையை விடாமல் பிடித்தபடி நடந்தவன் ஒரு இடத்தில் தெரு கொஞ்சம் அகலமாகவும் …கண்ணில் தெரிந்த அந்த வீட்டின் முன்னால் நின்றான் .

இதுவரை பார்த்த வீடுகளிலிருந்து சிறிது வித்தியாசமாக பெரிய மரத்தூண்களுடன் , அகலமான வாசல்படிகளுடன் அந்த வீடு பழமை மாறாமல் இருந்த்து .வீட்டின் முன்னால் பெரிய பாய்களை விரித்து கோதுமை காய்ந்து கொண்டிருந்த்து .இங்கே உரலில் கோதுமையோ …என்னவோ இடித்து மாவாகி கொண்டிருந்த்து .அதனை இடித்துக் கொண்டிருந்த மூன்று பெண்களில் வயதான ஒரு பாட்டி தனது முக்காட்டு சேலையை சரிசெய்தபடி , தனது வாயில் எஞ்சியிருந்த நான்கு பற்கள் தெரிய அகல புன்னகை செய்தபடி …

” இந்தர் ….மேரா பேட்டா தும் கைஷே ஹோ .துமே தேக் ஹர் பகுத் குஷி குய் …” ( என் மகனே ….எப்படி இருக்கிறாய் …? உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி …) 
என வரவேற்றாள் .

குனிந்து அவள் காலை தொட்டு வணங்கிய வீரேந்தர் இந்தியில் அவள் நலம் விசாரிக்க ஆரம்பிக்க சாத்விகாவிற்கு இந்தி சீரியல் ஒன்றுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த உணர்வு வந்த்து .சுருசுருவென பரவ தொடங்கிய எரிச்சலுடன் அந்த வீட்டிற்குள் நுழையும் எண்ணமின்றி நின்றாள் .ஏனென்றால் அந்த இடத்திலிருந்து பார்க்கும் போதே இன்னும் நிறைய பேர் அந்த வீட்டில் இருப்பது தெரிந்த்து .சன்னல் வழியாகவும் , வாசல் வழியாகவும் நிறைய தலைகள் எட்டி பார்த்து கலவையான இந்தி விசாரிப்புகளிடன் அவர்களை நோக்கி வரத் துவங்கின .

கசகசப்பான அந்த சூழ்நிலையில் ஒப்புதலின்றி பாதங்களை அழுத்தி ஊன்றி நின்றாள் சாத்விகா .அந்த பாட்டியுடன் முன்னால் நான்கெட்டு நடந்து போய்விட்ட வீரேந்தர் நின்று திரும்பி இவளை பார்த்து ” வா சாத்விகா ….” என்றான் .

இன்னமும் தயங்கி நின்று கொண்டிருந்தவளின் கைகளை பற்றியிழுத்து உள்ளே கூட்டி போனான் .கொச கொசவென ஆளாளுக்கு பேசிய இந்தியில் சாத்விகாவிற்கு ஒன்றும் புரியவில்லை . அத்தனை பேர் சூழ்ந்திருந்த அந்த வீட்டில் சாத்விகா தனியாய் உணர்ந்தாள் .இப்போதும் வீரேந்தர் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த சோபாவில் அவளது அருகே ஒட்டி அமர்ந்து அவள் கை சுண்டுவிரலை யாரக்கும் தெரியாமல் ஆறுதலாய் பற்றியபடிதான் இருந்தான் .ஆனாலும் புரியாத மொழி , அறியாத ஆட்கள் , பழக்கமற்ற சூழ்நிலை .்இவை சாத்விகாவின் மனதினை கலக்கியபடி இருந்த்து .

” இந்த பெண் எனக்கு மிகவும் முக்கியமானவள் .இவளை கொஞ்ச நாட்கள் உங்கள் வீட்டில் வைத்து நீங்கள் பார்த்துக் கொள்ளவேண்டும் …” இந்தியில் அந்த வீட்டு தலைவர் போலிருந்த ஒரு வயதானவரிடம் கேட்டான் வீரேந்தர் .

” இது அந்த ராதே கிருஷ்ணனின் கருணை .உங்களுக்காக நாங்கள் ஒன்று செய்யும்படி இருப்பது ….ரொம்ப ரொம்ப சந்தோசம் .அந்த கடவுள் இன்று எங்களுக்கு கருணை செய்துவிட்டார் .” கைகளை மேலே உயர்த்தி அந்த பெரியவர் பேச அவரை வெறுத்து போய் பார்த்தாள் சாத்விகா .

” இவர் ட்ராமா ஆர்ட்டிஸ்டா ….? ” வீரேந்தர் பக்கம் சாய்ந்து முணுமுணுத்தாள் .

” வாயை மூடு ….” சிரித்த பற்களுக்கடையே கடுமையாக வந்து விழுந்தன அவன் வார்த்தைகள் .

ஜிலேபி , ரஸகுல்லா என அவர்கள் முன் தட்டுக்கள் இனிப்பால் நிரம்பி வழிய , திணற , திணற …உபசரிக்கபட்டனர் .தித்தித்த நாக்கையும் , தொண்டையும் சமாளிக்க தண்ணீரை தேடியவளின் கைகளில் சூடாக டீ கிளாஸ் வைக்கப்பட்டது …தித்திப்பாய் .

” இதில் எத்தனை கரண்டி  சர்க்கரை சேர்த்திருப்பார்கள் …? கையில் டீயை வைத்துக்கொண்டு திணறிக்கொண்டு தாழ்ந்த குரலில் முணுமுணுப்பாய் கேட்டவளின் காதுகளில் ” நீ இங்கேதான் தங்க போகிறாய் பேபி …” என்றான் .

” உங்களுக்கு நான் என்ன பாவம் செய்தேன் …?ஏன் என்னை இப்படி பழிவாங்குகிறீர்கள் …? ” அழாத குறையாய் கேட்டாள் .

” அன்பு வாழும் இடமிது .இப்போதைக்கு இதுதான் உனக்கு பாதுகாப்பான இடம் ….” உறுதியாக சொன்னவனை பரிதாபமாக பார்த்தாள் .

” எனக்கு புரிந்த மொழி பேசும் ஒருவர் கூட இங்கு இல்லையே .நான் எப்படி இங்கே தங்கமுடியும் …? “

” சுகிர்தாக்கா எங்கே …? ” தலையை திருப்பி ஒரு பெண்ணிடம் விசாரித்தான் .என் பேச்சை காதில் வாங்குகிறானா பார் ….பற்களை  கடித்தாள் .

”  இதோ வந்து கொண்டே இருக்கிறேன் சோட்டா பாய்….” இனிமையாய் ஒரு குரல் ஒலித்தது …தமிழில் .ஆம் சுத்தமான தமிழில்தான் . காய்ந்து கொண்டிருந்த வெயிலுக்கு இதமாய் தலைக்கு மேல் சாரல் தெறித்த மேகமொன்றை உணர்ந்தாள் சாத்விகா .விழிகள் மின்ன திரும்பியவள் சிறிது சோர்ந்தாள் .வந்து கொண்டிருந்த பெண்ணும் இந்திப்பெண்தான் .இந்திப்பெண்களுக்கான உடைதான் அணிந்திருந்தாள் .ஆனால் அழகு தமிழ் பேசினாள் .




” இவர்கள் தமிழ்தான் சாத்விகா .இங்கேயே நிறைய நாட்கள் இருந்ததால் இந்திப்பெண்ணாகவே மாறிவிட்டார்கள் .இங்கே தங்க இவர்கள் உனக்கு உதவுவார்கள் …” அவள் மனவோட்டத்தை அறிந்து சொன்னான் வீரேந்தர் .

” எப்படி இருக்கிறாய் பேட்டி …..? ” இந்தியும் , தமிழும் கலந்து விசாரித்தபடி சாத்விகாவின் அருகில் அமர்ந்து கைகளை பற்றிக்கொண்டாள் சுகிர்தா .

யாரோ தெரியாத பெண் .தனது முதல் சந்திப்பிலேயே மகளெனும் உரிமையோடு விசாரித்ததில் நெகிழ்ந்தாள் சாத்விகா .சுகிர்தாவிடம் சாத்விகாவை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வீரேந்தர் கிளம்பிய போது தன்னையறியாமல்  அவன் சட்டையை பற்றினாள் .

குழந்தையின் அலைப்புறுதலோடு தன் சட்டையை பற்றி நின்ற சாத்விகாவை , உதறி செல்வதெப்படி என வீரேந்தர்  திகைத்து நின்றபோது , மென்மையாக அவன் சட்டையை பற்றியிருந்த சாத்விகாவின் விரல்களை பிரித்து விட்ட சுகிர்தா தாயின் கருணையுடன் அவளை அணைத்துக்கொண்டாள் .

What’s your Reaction?
+1
16
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!