karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 21

    21

 

பூஜித்து உனை 
ஏமாற்றிவிட்டு
பிரசாதமாய் 
எனை நீட்டுகிறேன் .

” இது ஒன்று உன்னிடம் பிரச்சினை …மிக அறிவுபூர்வமாக பேசிக்கொண்டிருக்கும் போதே ..சிறுபிள்ளைத்தனமாக மாறிவிடுவாய் …? இது போல் சவால் விட்டு பண்ணிக் கொள்ளுமளவு இலகுவானதா …திருமணம் …? ” அதட்டானான் வீரேந்தர் .

” சும்மா கத்தாதீர்கள் .அது அப்படித்தான் .என் அம்மாவை கண்டுபிடித்து கூட்டிக்கொண்டு போய் நிறுத்திவிட்டு , அந்த சுகுமார் முன்னால் நான் கையை சொடுக்கவில்லையென்றால் என்னை ஏனென்று கேளுங்கள் ….”

” வெயிட் …வெயிட் .உன் அம்மாவை கூப்பிட்டுக் கொண்டா ….? எப்போதோ இறந்தவர்களை ….”

சட்டென எழுந்து அவன் வாயை பொத்தினாள் .” வேண்டாம் அப்படி சொல்லாதீர்கள்.என் அம்மா உயிரோடுதான் இருக்கிறார்கள் …”

வீரேந்தர் அதிர்வது அவனது வாயை சாத்விகா பொத்திக் கொண்டிருந்த காரணத்தால் துல்லியமாக தெரிந்த்து . ” என்ன சொல்கிறாய் …? அது எப்படி உனக்கு தெரியும் …? “

” நான் அப்பாவுடைய அறையை , பீரோவை கொஞ்சம் ஆராய்ந்தேன் .அங்கே எனக்கு இது கிடைத்தது . ” சில கவர்களை  காட்டினாள் .

” பெரிய போலீஸ் ஆபிசர் .அவரையே குற்றவாள போல் ஆராய்ந்தாயா …? ” என்றபடி அவள் கை கவருக்காக கை நீட்டினான் .

கொடுப்பதற்காக கையை நீட்டியவள் திடீரென கையை பின்னால் இழுத்துக் கொண்டு ” ஒரு கண்டிசன் .இதை உங்களிடம் காட்டுவேன் .இதை வைத்து நீங்கள் என் அம்மாவை எனக்கு கண்டுபடித்து தர வேண்டும்…” என்றாள் .




” என்ன …? நானா …? ” மீண்டும் அதிர்ந்தான் .

” ஒன்றுமில்லாத சாதாரண விசயத்திற்கெல்லாம் எதற்காக இப்படி அதிர்ந்து வைக்கறீர்களோ தெரியவில்லை ்நீங்கள்தான் …என் அம்மாவைத்தான் .இந்த ஆதாரங்கள் மூலமாக கண்டுபிடிக்க வேண்டும் ….பிறகு எதற்காக அங்கிருந்து தேடி விசாரித்து உங்களிடம் வந்திருக்கிறேனென நினைக்கிறீர்கள் …?

கொஞ்சம் தன்னை சமாளித்து கொண்டவன் அந்த கவர்களை வாங்கி பார்த்தான் .” இவை என்ன கவர்கள் …? ஏதோ லெட்டர் மாதிரி தெரிகிறது …”

” ஆமாம் …யாரோ ஒரு ரேணுகாதேவி .என் அப்பாவிற்கு எழுதிய கடிதங்கள் .ஒரு வேளை அந்த ரேணுகாதேவியே என் அம்மாவாக இருக்கலாம் .” நிறுத்தி சற்று நெகிழ்ந்த தன் குரலை சரி செய்து கொண்டாள் .

” தபால் முத்திரை இங்கேதான் டில்லி அருகிலுள்ள ஒரு ஊர் .அட்ரஸ் ஆங்கிலத்தில் உள்ளது .ஆனால் உள்ளே லெட்டர் இந்தியில் இருக்கிறது .எனக்கு இந்தி ஓரளவு பேச வருமே தவிர வாசித்து புரிந்து கொள்ள வராது .உங்களுக்கு இந்தி தெரியுமே .படித்து சொல்லுங்களேன் ….”

புரிபடாத பாவனை ஒன்று முகத்தில் தென்பட , பதிலின்றி அந்த லெட்டரை பிரித்தான் வீரேந்தர் .மூன்று கடிதங்களையும் புரட்டி வாசித்து முடித்தவன் …

” இது இந்தி அல்ல .சிந்து மொழி ” என்றான் .

” அப்படியென்றால் ….” குழம்பினாள் சாத்விகா .

” சிந்து மொழி …பாகிஸ்தானிய மொழி …”

சாத்விகாவின் முகம் மாறியது .பாகிஸ்தான் மொழியா …?்அப்போது அவளது தாய் ஒரு பாகிஸ்தானியா …? அவள் ஒரு பாகிஸ்தான் பெண்ணா …? ஒத்துக்கொள்ள முடியாதொரு எண்ணம் தோன்ற நம்பமுடியாமல் தலையை தாங்கி அமர்ந்தாள் .

” உனக்கு விபரங்கள் கொடுக்கும் அளவு இந்த கடிதங்களில் எதுவுமில்லை .சாதாரண நல விசாரிப்புதான் ….” குனிந்திருந்த அவள் தலையை பார்த்தபடி கூறினான் .

” நா ….நான் பாகிஸ்தான் பெண்ணா …? முஸ்லீமா ….? ” தடுமாற்றத்துடன் கேட்ட சாத்விகாவின் தடுமாற்றம் புரிய , இறுகியிருந்த முகம் இளக , அவளை பரிவாய் பார்த்தான் .

” அதனால் என்ன பேபி …? பாகிஸ்தானும் ஒரு நாடு .இஸ்லாமும் ஒரு மதம் . அவர்கள் நம் சகோதர்ர்கள் இல்லையா …? நம் நாட்டில் நாம் சகோதர்ர்களாகத்தானே வாழ்ந்து வருகிறோம் ….”

” ம் …ஆனால் …அதென்னவோ நம்மவர்கள் மனதில் முதலிலிருந்தே பாகிஸ்தான் நம் எதிரி நாடு என்பது ஆழப் பதிந்துவிட்டது .அ…அந்த நாட்டு பெண்ணென்றால் …எனக்கு உறுத்துகிறது வீரா ….நா …நான் இந்திய பெண்ணாகத்தான் …ஒரு இந்து பெண்ணாகத்தான் இருக்க விரும்புகிறேன் …”

” இந்தக் கடித்த்திலேயே எந்த விசயமும் இல்லை என்கிறேன் .நீ யாரோ ஒரு பாகிஸ்தானி எழுதிய சாதாரண நல விசாரிப்பு கடித்த்திற்காக , உன் பிறப்பை பாகிஸ்தானுடன் சம்பந்தபடுத்திக் கொண்டிருக்கிறாய் …”

” இல்லை வீரா .இது சாதாரண கடிதமில்லை .ஒரு சாதாரண கடித்த்தை இது போல் லாக்கருக்குள் பத்திரப்படுத்த வேண்டிய அவசியம் அப்பாவுக்கு இல்லை .இதில் ஏதோ மர்மம் நிச்சயமாக இருக்கிறது .நீங்கள் இன்னும் ஒரு முறை இதை தெளிவாக வாசியுங்கள் ….”

” ஓஹோ …உன் அப்பா லாக்கருக்குள் பத்திரப்படுத்தியிருந்த்தை எடுத்தாயா …? அதெப்படி எடுத்தாய் …? “

” லாக்கர் சாவி இன்னொன்று செய்தேன் …சோப்பில் பதித்து ….”

எழுந்து அவள் தலையில் கொட்டினான் ” சொந்த வீட்டிற்குள்ளேயே கள்ள சாவியா …?போலீஸ் , வக்கீல் , ஜட்ஜ் என்று இவர்களோடு பழகி …உனக்கும் திருட்டு புத்தி தொற்றிக்கொண்டது ….”

” அது என் சொந்தவீடுதானா …என்ற சந்தேகம்தான் என்னை இதையெல்லாம் செய்ய வைக்கிறது  …” அவன் கொட்டிய தனது தலையை தடவியபடி சொன்ன சாத்விகாவின் குரலில் அழுகையின் ஆரம்பம் இருந்த்து .

” இல்லை சாத்விகா .இது தவறு .உன்னை என்றாவது அவர்கள் அடுத்த வீட்டு பெண்ணாக நடத்தியிருக்கிறார்களா …? சண்முகபாண்டியன் சார் உன் மீது காட்டிய அதீத பாசத்தில் நானே நிறைய ஆச்சரியப்பட்டிருக்கிறேன் .ஒரு சாதாரண தகப்பன் தன் மகளிடம் காட்டும் பாசமல்ல அது .ஒரு தேவதை குழந்தை போல உன்னை நடத்தினார்கள் .அதை நீ உணரவில்லையா …? “

” ம் …உணர்ந்திருக்கிறேன் .அதே பாசம்தான் …நீங்கள் சுட்டிய அந்த அதீத பாசம்தான் என்னை யோசிக்கவைக்கிறது .அப்பா , அம்மாவின் பாசத்திற்கு பின்னால் …ஏதோ ஒரு கடமையுணர்ச்சி இருப்பது போல  …இயல்பற்று இருப்பது போல் …யாருக்காகஙோ என்னை நன்றாக மிக நன்றாக பார்த்துக் கொள்வது போல் இப்போது தோன்றுகிறது ….”




” ஒரு உண்மையான பாசத்தை இப்படி கூறு போட்டு ஆராய உன்னால்தான் முடியும் சாத்விகா …” வீரேந்தரின் குரலில் வெறுப்பிருந்த்து .

” இல்லை வீரா இதை என் இடத்திலிருந்து பார்த்தால்தான் உங்களால் புரிந்து கொள்ள முடியும் .கார்த்திக்கின் வளர்ப்பிற்கும் , என் வளர்ப்பற்குமிடையே வித்தியாசம் இருக்கிறது .இதை நீங்கள் அந்த வீட்டிலேயே இருபத்தியிரண்டு வருடம் வளர்ந்திருந்தால் தான் புரிந்து கொள்ள முடியும் …”

” சரி ….சரி …சொற்பொழிவாற்றாதே …இப்போது என்ன செய்ய போகிறாய் …? “

” போகிறாய் ….இல்லை ….போகிறோம் .நாம் இருவருமாக சேர்ந்து என் அம்மாவை ….”

” நிறுத்து …உன் அப்பா …சண்முகபாண்டியன் சார் என்னுடைய வழிகாட்டி.குரு என்று கூட சொல்லலாம் .அவருக்கு எதிராக உனக்காக ஒரு வேலையை நான் எப்படி செய்வேனென எதிர்பார்க்கிறாய் …? “

சாத்விகா அதிர்ந்து அவனை பார்த்தாள் .

” எந்த நம்பிக்கையில் என்னை தேடி வந்தாய் …? “

” தெரியவில்லை .என் மனதில் நீங்கள் மட்டும்தான் எனக்கு உதவுவீர்கள் என தோன்றிக் கொண்டேயிருந்த்து …அதனால்தான் நான் யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் உங்களை தேடி …அப்படியானால் எனக்கு உதவ மாட்டீர்களா …? ” வேதனையுடன் கண்ணகல கேட்டாள் .

” அப்போது…நீ இங்கே வந்த்து யாருக்கும் தெரியாது .ம் …திருட்டுத்தனமாக ஓடிவந்திருக்கிறாய் …? “

” ஓடிவந்தேனா …? என் அம்மாவை தேடி போகிறேன் என அவர்களுக்கு தகவல் வைத்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன் .திருட்டுத்தனமாக வந்தேனா ….என்ன தப்பு செய்தேன் …அப்படி வர …? ” படபடவென வெடித்துவிட்டு துக்கத்துடன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள் .

கற்பாறை போன்ற முகத்துடன் அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான் வீரேந்தர் .

” அப்பா , அம்மா தெரியாதவள் என்பதை தவிர , என்னிடம் வேறு எந்த தவறும் கிடையாது வீரேந்தர் .அது கூட என் தவறு கிடையாது தெரியுமா …? ” கைகளை எடுத்து அவனை பார்த்வளின் விழிகள் இறைஞ்சின .

உடகார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்று கொண்டவன்  ” ம் …தவறென்று எண்ணினால் உன்னிடம் நிறைய இருக்கிறது .அன்பு வைப்பவர்களை சந்தேகிப்பது , அன்பின் அளவை தராசில் நிறுத்து பார்ப்பது , சவாலிட்டு திருமணம் செய்ய நினைப்பது …” என்றவன் அவளருகில் குனிந்து …

” சொந்த வீட்டுக்கே கள்ளசாவி போடுவது ….இப்படி நிறைய ..இதையெல்லாம் யோசித்தால் உனக்கு உதவ கூடாது .ஆனாலும் …ஏனோ உன்னை பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது .அதனால் உனக்கு உதவலாமா என யோசிக்கிறேன் ….”

கைகளை பேன்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு நிமிர்ந்து நின்று தோரணையாக  போனால் போகிறது …பிழைத்து போ குழந்தாய் பாவனையில் அவன் பேசியவிதம் சாத்விகாவிற்கு ஆத்திரத்தை வர வைத்தது .போடா …நீயும் வேண்டாம் ..உன் உதவியும் வேண்டாமென எழுந்து போய்விடுவோமா என நினைக்க வைத்தது .ஆனால் சரியாக மொழி தெரியாத இந்த ஊரில் , அறிமுகமானவர்கள் யாருமில்லா இடத்தில் , இவனை போல் ஒரு விபரமானவனின் துணையின்றி அவள் நினைத்த காரியம் நடக்காது என உணர்ந்தவள் , தன் ஆத்திரத்தை அடக்கி லேசாக உதடிழுத்து இளித்து வைத்தாள் .

” ரொம்ப நன்றி .நாம் இருவருமாக சேர்ந்து வேலையை ஆரம்பிக்கும் முன் ஒரு கன்டிசன் ….” ஆரம்பித்தவளின் பேச்சை பாதியில் வெட்டினான் .

” எனக்கும் ஒரு கன்டிசன் உண்டு .நான் முதலில் சொல்லிவிடுகிறேன் …”




” நான் சொல்லிவிடுகிறேனே ….” சாத்விகா  அவசரப்பட்டாள் .

” நோ …நான் சொன்னபிறகு நீ உன் ஓட்டை கன்டிசன்களை சொல்லலாம் .நீ என்னிடம்தான் பாதுகாப்பாக இருப்பதை உன் குடும்பத்தினருக்கு தெரிவித்த பிறகுதான் நான் உனக்கான தேடல் வேலைகளை ஆரம்பிப்பேன் ….”

சாத்விகாவின் முகம் வாடியது .” நான் இங்கிருப்பதை அவர்களிடம் சொல்லக்கூடாது என்றுதான் கேட்க நினைத்தேன்…”

” ம் …உன் குறுக்குபுத்தி எனக்கு தெரியும் .அப்படி அவர்களை கலங்க வைப்பதில் உனக்கு என்ன ஆசை …? இதற்கு சம்மதித்தாயானால் உனது வேலைகளை நாளையே தொடங்கலாம் …” முடிவெடு என்பது போல் மீண்டும் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான் .

இது உன் நேரம் ஆடுகிறாய் .எனக்கென்று ஒரு நேரம் வரும்டா .அப்போது உன்னை கவனித்து கொள்கிறேன் …மனதிற்குள் கறுவியபடி வெளியே ” எனக்கு சம்மதம் ….” என தலையசைஎத்தாள் சாத்விகா .

What’s your Reaction?
+1
16
+1
13
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!