karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 14

14

கட்டிபோட்டு ஓட சொல்லும்

வட்டமாகிவிட்ட என் வாழ்வில்

இல்லாத உறவுகளுக்கு

என்னென்று பெயர் சூட்டுவேன் ?

” நிறைய சொல்லிவிட்டீர்கள் .நானும் நிறைய செய்துவிட்டேன் ….” தழைந்து ஒலித்து கொண்டிருந்த்து சண்முகபாண்டியன் குரல் .

” எதை செய்தேனென்கிறீர்கள் …? ” தனசேகரின் குரல் கத்தி போல் விழுந்து கொண்டிருந்த்து .

சண்முகபாண்டியன் மௌனமாக… கார்த்திக் ” இல்லை மாமா …அப்பா ஏதோ ஞாபகத்தில் பேசுகிறார் .விட்டு விடுங்கள் ….” சமாதானக் குரலில் பேசினான.

” அதெப்படி விட முடியும் கார்த்தி .உன் அப்பா அவரை …இல்லை எங்களையெல்லாம் குத்தி காட்டுவது போல் பேசுகிறாரே …எங்களுக்கு தெரியாது என்று நினைத்தாரோ ..?? ” சாரதா .

” அப்படியெல்லாம் இல்லை அண்ணி .அவர் …உங்களுக்கு …தங்கைக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறார் …? ” பேச்சை திசை திருப்ப முயன்றாள் சௌந்தர்யா .

” அட …சாரதா உங்கள் தங்கையென்ற எண்ணம் இன்னமும் இருக்கிறதா உங்களுக்கெல்லாம் …? ” தனசேகர் கிண்டலாக கேட்டார் .

அந்த எண்ணம் இருப்பதால்தானே போன மாதம் பத்து லடச ருபாய்க்கு உங்கள் மனைவி உடல் முழுவதும் வைரத்தை பூட்டிக் கொண்டு போனார் …கசப்பாக நினைத்தாள் சாத்விகா .ஆனால் இதனை ஏன் யாருமே சொல்ல மாட்டேனென்கிறார்கள் .

நிறைய செய்துவிட்டேனென அப்பா இதைத்தான் சொன்னாரோ …அதற்குத்தான் இவர்கள் கோபத்தில் குதிக்கிறார்களோ …? ஆனால் தங்கைக்கான சீர் செய்வதற்கு பணிவு எதற்கு …கம்பீரமாக நிமிர்ந்து செய்ய வேண்டியதுதானே …?

” உங்கள் பணம் , நகை , வீடு , கார் இது எல்லாவற்றையும் விட இப்போது நீங்கள் செய்யப் போவதுதான் எனக்கு உண்மையான் சீர்வரிசை …” தனசேகர் மீசையை தடவிக் கொண்டார் .

சை …இவரெல்லாம் ஒரு ஜட்ஜ் .நீதியை காப்பாற்ற ஙேண்டியவர் …இப்படியா கௌரவ பிச்சை எடுப்பார் …? நகையை தவிர ..பணம் , கார் , பங்களா என்று வேறு அங்கே போய்கொண்டிருக்கிறதா …?இவையெல்லாம் தங்கைக்க்கான சீர்வரிசை போல் தெரியவில்லையே …சாத்விகா நகம் கடித்தாள் .

அவளுக்கு வீரேந்தர் நினைவுக்கு வந்தான் .இதைத்தான் …இவர்களுக்கிடையே ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது …அதை கண்டுபிடித்து வந்து சொல்லுடா என்றுதான் அவனிடம் சொன்னேன் . எல்லாவற்றையும் , எல்லோரையும் இலகுவாக தெரிந்து கொள்கிறானே என்றுதான் அவனை இதனை பார்க்க சொன்னேன் .என்ன விசாரித்தானோ …ஒன்றுமேயில்லையென்றுவிட்டான் ….

சுகுமாரையே திருமணம் செய்து கொள் என்று எனக்கு அட்வைஸ் வேறு …பெரிய இவன் மாதிரி அரைகுறை வேலை பார்த்துவிட்டு , இருக்குமிடம் சொல்லாமல் ஓடி ஒளிந்து கொள்ள வேறு செய்துவிட்டான் .இருக்கட்டும் என்றாவது என் கண்ணில் அகப்படாமலா போவான் .அன்று அவனுக்கு இருக்கறது ….

தானிருக்கும் சூழ்நிலை மறந்து திடுமென வீரேந்தருக்கு தாவி விட்ட நினைவுகளில் அவனோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் சாத்விகா .

” வேறு ஏதாவது கேளுங்கள் மாப்பிள்ளை .இது என்னால் முடியாது …” சண்முகபாண்டியனின் உயர்ந்த குரலில் நினைவு திரும்பிய சாத்விகா திரும்ப அவர்களை கவனிக்க ஆரம்பித்தாள் .

” என்ன …கேட்கிறேனா …என்ன கேட்கிறேன் பிச்சையா …? “

” வேண்டாம் தனசேகர் .இன்று உங்கள் பேச்சு சரியில்லை .நாம் இரண்டு நாட்கள் கழித்து பேசுவோம் …” சண்முகபாண்டியன் எழுந்தார் .

” அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் வைத்திருக்கிறோம் அண்ணா .அதற்குள் பேசவேண்டுமே .இரண்டு நாட்கள் கழித்து அவர் ரொம்ப பிஸி .இன்றே பேசியாக வேண்டும் ” சாரதா உறுதியாக கூறினாள் .

நிச்சயதார்த்தமா ….இவர்கள் விசயத்தில் நான் எங்கு வருகிறேன் …? சாத்விகா குழம்பினாள் .

” வக்கீல்கள் பாய்காட் நடக்கிறது மச்சான் .இரண்டு நாட்களில் அது முடிந்துவிடும் .மூன்றாவது நாள் அந்த கேஸ் என கோர்ட்டுக்கு வருகிறது .உங்கள் போலிஸ் டிபார்ட்மென்ட் இந்த கேஸ் விசயத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போக வேண்டும் …” தனசேகரின் குரலில் ஆணை இருந்த்து .

” என் வேலையில் நேர்மை எனக்கு உயிர் மாப்பிள்ளை .இது நிச்சயம் நடக்காது …”

” உங்கள் வேலையோடு உங்கள் மகளையும் நீங்கள் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் மச்சான் ….”




” அப்படி எதற்கு என்னை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் …? ” அதற்கு மேலும் மறைந்திருக்க முடியாமல் வெளியேறி அவர்கள் முன் வந்தாள் சாத்விகா .

” சொல்லுங்க மாமா .தங்கைக்கு செய்யும் சீர்வரிசையிலோ …உங்கள் வேலைக்காக விட்டுக் கொடுத்து போவதிலோ என்னை எதற்காக அப்பா நினைவு வைத்து கொள்ளவேண்டும் …? ‘” திடுமென்ற  அவள் வரவில் திகைத்து நின்றவர்களை பார்த்து கேட்டாள் சாத்விகா .

” இதனை நீ உன் அப்பாவிடமே கேளேன் …” தனசேகர் நக்கலாக சொன்னார் .

” கேட்கத்தான் போகிறேன் .அப்பா சொல்லுங்கப்பா …என்னை வைத்து இவர்கள் உங்களை மிரட்ட என்ன காரணம் ..? “

” என்னது மிரட்டுகிறோமா …? ஏய் என்னடி வாய் நீளுது …? ” சாரதா எகிறினாள் .

அவள் கத்தலை காதில் வாங்காது ” அப்பா ப்ளீஸ் சொல்லுங்கப்பா …” அப்பாவிடமே கவனம் செலுத்தானாள் சாத்விகா .

” சாரதா கொஞ்சம் அமைதியாக இரு .பேபி நீ உள்ளே போம்மா .நாம் அப்புறம் பேசலாம் …”

” இல்லைப்பா …முடியாது .இந்த திருமணத்தில் எனக்கு ஒரு உறுத்தல் இருக்கிறதென்றேனே ்அது இதுதான் .இதற்கு விடை தெரியாமல் நான் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் ….”

” ஓஹோ ….இது வேறா ….என்ன மாப்பிள்ளை உங்கள் மகள் கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டாளாமே .பரவாயில்லையா …? ” தனசேகர் கிண்டல் செய்ய …

” ஏய் வாயை மூடிக்கிட்டு உள்ளே போடி …” கார்த்திக் சாத்விகா கைகளை பிடித்து இழுத்தான் .

” சை …விடு என்னை .அத்தை , மாமா சொல்லுங்கள் …உங்களுக்கு என்ன பிரச்சினை …? ” கார்த்திக்கின் கைகளை தள்ளியபடி சாரதாவிடம் கேட்டாள் .

” சௌந்தர்யா சாத்விகாவை உள்ளே கூட்டிட்டு போ .சாரதா , மாப்பிள்ளை நீங்க கிளம்பிங்க.நான் நாளை உங்களை உங்கள் வீட்டில் வந்து பார்க்கிறேன் …” சண்முகபாண்டியன் சொன்னதோடு அவர்கள் கைகளை பிடித்து அறைக்கு வெளியே அழைத்து செல்லலானார் .

” ஏன் மாமா …ஜட்ஜ்ங்கிற பெரிய பதவியில் இருந்து கொண்டு இது போன்ற சீப்பான மிரட்டல் வேலையை செய்கறீர்களே .இது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா …? ” அவர்கள் ரகசியத்தை அறிந்து கொள்ளும் வேகத்தில் சாத்விகா வேகமாக கேட்க ,சாரதா ஆவேசமாக அவளருகில் வந்து பளாரென அவளை கன்னத்தில் அறைந்தாள் .

” என்னடி கேட்ட அநாதை நாயே …தெருவில் திரிய வேண்டிய தெரு நாய்க்கெல்லாம்  கௌரவம் கொடுத்து வீட்டிற்குள் வைத்து வளர்த்தோமானால் அது வாலாட்டுவதற்கு பதில் கடித்துவிட்டது பார்த்தீர்களா அண்ணா …? ” அலறினாள் .




முதலில் அவள் வார்த்தைகளை சரியாக கவனிக்காமல் , கவனித்த பின்னோ …வேறு யாரையோ அத்தை சொல்கிறாளென எண்ணி ,பின் அப்படி சொல்ல இங்கு யாருமில்லை என உணர்ந்து …குழம்பி தவித்து விழித்து …அவளையே நோக்கி …

” என்ன சொல்கிறீர்கள் அத்தை …? யாரை சொல்கிறீர்கள் …? ” பலவீனமான குரலில் கேட்டாள் .

” போதும் சாரதா .நீங்கள் கிளம்புங்கள் ….” சண்முகபாண்டியன் தடுக்க …

” நீங்கள் சும்மா இருங்கள் அண்ணா .இதை நீங்கள் முதலிலேயே இவளுக்கு சொல்லி வளர்த்திருந்தால் , இன்று நாக்கை தொங்க போட்டுக் கொண்டு எங்கள் பின்னால் வந்தருப்பாளே …பொத்தி பொத்தி வளர்த்து கெடுத்து வைத்திருக்கிறீர்கள் .ஏய் ….அநாதைன்னு சொன்னேன்டி .உன்னைத்தான்டி சொன்னேன் .அப்பன் பெயர் தெரியாமல் எவனுக்கோ …எவளோ பெற்று போட்ட அநாதை கழுதைடி நீ ….”

” சாரதா …” சண்முகபாண்டியனின் குரல் கர்ஜனையாக கேட்டு கொண்டிருக்கும் போது சாத்விகா மயங்கி விழுந்தாள் .

What’s your Reaction?
+1
13
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!