Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 2

2

 

 

 

அழைப்பதற்கென்றேதான் 
வைத்துக் கொண்டிருக்கிறேன்,
என் பெயரை..
உன் நாவால்..

மைதிலி ஸ்கூட்டியை கல்லூரி பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி விட்டு நடந்தாள்.. எப்போதும் துள்ளலும், துடிப்புமாக இருக்கும் அவளது நடை இன்று துவண்டு, மெதுவாக இருந்தது.. அவளது கல்யாணபேச்சு வீட்டில் பேச ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே அவள் நடை இப்படி அமைதியாக மாறிவிட்டது.. சுனாமியை எதிர்பார்த்து பயந்திருக்கும் கடலோர மீனவனாக இருந்தாள் அவள்..
“என்னடி இப்போதான் வர்றியா..?”
கேட்டபடி அவளோடு நடையில் இணைந்து கொண்டனர் சுமதியும், சௌம்யாவும் இருவரும் அவளது வகுப்பு தோழிகள்.. ‘ம்’ என்ற ஒற்றை எழுத்துடன் நடையை தொடர்ந்த தோழியை பரிதாபமாக பார்த்தனர்.. மைதிலி எவ்வளவு உற்சாகமான பெண். ஒரு வாரமாக துவண்ட துணியாக வலம் வருகிறாள்..
சுமதி சொல்லித்தான் மைதிலிக்கே அந்த பரசுராமனுக்கு தன்னை மணம் முடிக்க பேசும் விசயம் தெரியும்.. சுமதியின் தந்தையும் அதே கடைத்தெருவில் சிறு ஹோட்டல் ஒன்று நடத்துபவர்.. அவரும்-சுமதியின் அம்மாவும் பேசிக்கொண்டனராம்.. அருணாச்சலம் அண்ணாச்சியும் சிவராமன் அண்ணாச்சியும் சம்பந்தியாக போவதாக பேசி கொண்டிருந்ததாக சுமதிதான் மைதிலியிடம் வந்து சொல்லி உண்மையா.. என தோழியிடம் கேட்டாள்..
மைதிலி விழித்தாள்.. இந்த விபரம் இதுவரை அவளுக்கே சொல்லப்படவில்லை.. வீட்டிற்குள் அம்மாவும் அப்பாவும் தாழ்ந்த குரலில் கிசுகிசுப்பாக ஏதாவது பேசிக் கொள்வதை அவள் கூர்ந்து கவனித்து கேட்பதில்லை.. மகளின் காதிற்கு வேண்டாமென்றுதானே பெற்றவர்கள் அப்படி பேசிக் கொள்கின்றனர்.. அந்த ஜாக்கிரதையே மீறி தான் ஏன் அதனைக் கேட்க வேண்டுமென நினைப்பாள்.. கடந்த சில நாட்களாக தாயும், தந்தையும் அப்படி பேசிக் கொள்வதை அவள் கவனித்துதான் இருந்தாள்.. ஏதாவது தொழில் விபரமோ.. சொந்தங்களின் குடும்ப விபரமாவோ இருக்கும் என்றுதான் நினைத்தாள்.. இப்படி தனது எதிர்கால நிர்ணய பேச்சாக அது இருக்குமென நினைக்கவில்லை..
அவளது கல்யாண பேச்சு அவளுக்கே தெரியாது என்ற தோழியின் நிலைமை அறிந்ததும் சுமதிக்கு கொஞ்சம் பாவமாக இருந்தது..
“உனக்கே தெரியாதா..?” பரிதாபமான குரலில் கேட்டாள்..
“ம்ஹீம்..” தலையசைத்தாள் மைதிலி..
“சை என்ன வாழ்க்கைடி இது..? காலம்பூராவும் வாழப் போவது நாம்.. இன்னாருடன் உனக்கு மணமுடிக்க பேசட்டுமா.. என நம்மை ஒரு வார்த்தை கேட்க மாட்டார்களா..?”
மற்ற பெற்றோர்கள் எப்படியோ.. தன் பெற்றோர்கள் நிச்சயம் தன்னடிம் கேட்பார்களென்றே மைதிலிக்கு தோன்றியது.. சிவராமன் மிகவும் நியாயமான பேர்வழி.. மகன் இப்போது வந்த வரனை விரும்புகிறான் என புரிந்து போனதும்.. இந்த திருமணம் முடிந்ததும் அவன் நிச்சயம் தங்களை விட்டு தனியே போய்விடுவான் என நூறு சதவிகிதம் தெரிந்திருந்ததும்.. அப்படி பிரிந்து தனியே போவதே அவனது வாழ்வை செழுமையாக்கும் என்ற நியாயத்தில் அந்த வரனையே மகனுக்கு முடித்து வைத்தவர்.. மகளின் திருமணவாழ்விலும் அந்த வகை நியாயத்தை பின்பற்றுவார் என்பதில் மைதிலிக்கு நிச்சயமே.




ஆனால் அவள் மன சந்தேகம் என்னவெனில் இந்த விசயத்தை மகளிடம் எப்படி சொல்வது என்றே தன் பெற்றோர் தவித்து வருகின்றனர் என்பதே.. அதையே வீட்டில் தாய்-தந்தையின் பேச்சுக்களும், நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தியாக மைதிலிக்கு சொல்லின.. அவள்தான் இப்போதெல்லாம் எனக்கென்ன என்று ஒதுங்காமல் தாய் தந்தையின் ரகசிய பேச்சுக்களை கூர்ந்து கவனித்து வருகிறாளே..
“மைதிலி ரவியிடம் பேசிப்பார்க்கலாமாடி..?” சுமதி நடந்தபடி கேட்டாள்..
மைதிலிக்கு திக்கென்றது.. ரவி என்று சுமதி குறிப்பிடும் ரவீந்தர்.. அவர்கள் வகுப்பு மாணவன்.. அந்தக் கல்லூரியின் ஹீரோ போல் வலம் வருபவன்.. நன்கு படிக்கும், நல்ல குணங்களுடைய மாணவன், கல்லூரியில் ஒரு பிரச்சினை என்றால்.. குறிப்பாக பெண்கள் சந்திக்கும் பிரச்சனை என்றால் அவர்களுக்கு ஆதரவாக அவன்தான் முதல் ஆளாக நிற்பான்.. பிரச்சனைகளின் அடிவேர் வரை ஆழ்ந்து நுழைந்து தொல்லை கொடுக்கும் முடிச்சை அவிழ்த்து சுமூகமாக விசயத்தை முடிப்பான்..
ஈவ் டீசிங், ராக்கிங் போன்ற பெண்களின் பிரச்சனைகளின் மீது அவர்கள் எளிதாக சொல்லும் வார்த்தை.. “ரவியிடம் சொல்லி விடவா..?” என்பதுதான்.. அவ்வளவுதான் எதிராளி சத்தமின்றி அடங்கிப் போய் விடுவான்.. கையெடுத்து கும்பிட்டு பெண்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பான்… ரவி என்ற இரண்டெழுத்திற்கு அவர்கள் கல்லூரியில் அவ்வளவு பவர் உண்டு.. சமீபத்தில் மைதிலியின் வகுப்பு தோழி ஒருத்தி கல்லூரி பேராசிரியர் ஓருவராலேயே பாலியல் சீண்டலுக்கு உள்ளானாள்.. இன்டர்னெல் மார்க் போட மாட்டேன் என மிரட்டப்பட்டாள்..
அமைதியாக தனது பிரச்சனையை ரவியின் காதில் ஓதிவிட்டு ஒதுங்கிக் கொண்டாள்.. மறுநாள் காலை வாக்கிங் போன பேராசிரியர் சட்டை கிழிந்து உடலெல்லாம் சிராய்ப்புகளோடு வீடு வந்தார்.. கீழே விழுந்து விட்டதாக தன் மனைவி பிள்ளைகளிடம் பீதியோடு சொன்னார்.. ஒரு வாரம் கழித்தே அவரால் கல்லூரிக்கு வரமுடிந்தது.. அப்போதும் ரவி அவரை கெமிஸ்ட்ரி லேபில் வைத்து யாருக்கும் தெரியாமல் என் கால்களில் விழ வைத்தான் என பெருமிதமாக சொன்னாள் அந்த பாதிக்கப்பட்ட தோழி..
அப்படிப்பட்ட ரவியிடம்தான் மைதிலியின் பிரச்சனையை கொண்டு செல்லலாமா.. எனக் கேட்கிறாள் சுமதி.. இது கல்லூரி பிரச்சினை அல்ல.. குடும்ப பிரச்சினை இதனை ரவீந்தர் காதிற்கு கொண்டு போவது சரியாக வருமா..? ஆனால் சுமதி ரவியை தேர்ந்தெடுத்ததற்கும் ஒரு காரணம் இருந்தது.. அது.. யோசனையிலேயே இருந்த மைதிலியின் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு கல்லூரியின் பின்புறமிருந்த கால்பந்தாட்ட மைதானத்திற்கு வந்தனர் சுமதியும், சௌம்யாவும், அந்த இடம் தான் ரவீந்தரின் அரசாங்கம்.. அங்கேதான் அவனிடம் வரும் வழக்குகளின் தீர்ப்புகள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தன.. இதோ இப்போது கூட ஒரு தீர்ப்பு..
யாருக்கு என்ன பிரச்சனையோ.. மாணவன் ஒருவனை குனிய வைத்து முதுகில் இரண்டு கைகளாலும் மொத்திக் கொண்டிருந்தான் ரவீந்தர்.. மைதிலியின் மனதிற்குள் அன்று கடைத்தெருவில் அரிவாள் சுழற்றி சண்டையிட்ட பரசுராமன் வந்து போனான்..
“அப்படித்தான் அடி.. விடாதே..” கை தட்ட ஆரம்பித்தால் சௌமியா..
“ஏய் என்னடி இது..? ஒருவர் அடிவாங்குவதற்கு கை தட்டுவதா..?” மைதிலி ஆட்சேபித்தாள்..
“போடி உனக்கு அவன் செய்த தப்பு தெரியாது.. இந்த வருடம்தான் காலேஜில் சேர்ந்த ஜூனியர் பெண் ஒருத்திக்கு மூன்று மாதங்களாக தொடர்ந்து லவ்லெட்டர் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.. அவள் மறுக்க மறுக்க.. லெட்டரில் ரொம்பவும் வல்கரான வார்த்தைகளை எல்லாம் யூஸ் பண்ண ஆரம்பித்திருக்கிறான்.. அந்தப் பெண் அலறிக் கொண்டு லெட்டரோடு என்னிடம் வந்தது என் அப்பா, அம்மாவிற்கு தெரிந்தால் என் படிப்பையே நிறுத்தி விடுவார்கள் அக்கா.. ஏதாவது செய்யுங்கள்னு ஒரே அழுகை நான்தான் ரவி பக்கம் கைகாட்டி விட்டேன்.. இதோ வாங்கு வாங்குன்னு வாங்குறான் பாரேன்.. நீ ஆயிரம் சொல்லு நம் ரவி ஹீரோதான்டி..”
சௌமியாவிற்கு மட்டுமில்லை.. அந்தக் கல்லூரியின் பெரும்பாலான பெண்களின் கனவு நாயகனாக ரவி வலம் வருவதை மைதிலி அறிவாள்..
“இனி ஒழுங்காக இல்லையென்றால் நீ காலேஜ் பக்கமே வரமுடியாது.. பரீட்சையும் எழுத முடியாது.. உன் மூன்று வருட படிப்பு வீணாகிவிடும்.. ஓடு..” அவனை உதைத்து தள்ளினான் ரவி.. மைதிலியின் மனதினுள் மீண்டும் பரசுராமன் வந்து போனான்..
“ரவி..” சௌமியா குரல் உயர்த்தி அவனை அழைத்தாள்.. திரும்பு இவர்களை பார்த்தவனின் முகம் பிரகாசமானது வேகமாக இவர்களை நோக்கி வந்தான்..
“வாங்க என்ன விசயம்..?” கேட்டவனின் பார்வை மைதிலியின் மீதே இருந்தது.. அதனை உணர்ந்த மைதிலி மனம் சுருங்கினாள்..
சமீப நாட்களாகத்தான் ரவீந்தரிடம் இந்த வகை பார்வையை காண்கிறாள்.. ஏதோ எதிர்பார்ப்பும், ஆர்வமுமாக அவள் முகம் படிந்து விலகும் அவனது பார்வைகள் அவளை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தும்.. அதனாலேயே அவனை சந்திப்பதை பெருமளவு தவிர்த்து வந்தாள்.. நேருக்கு நேராக பார்க்க நேரிடுகையில் கூட பார்வையை பக்கவாட்டிற்கு மாற்றிக் கொண்டு போய்விடுவாள்.. இப்போது இவன் எதிரிலேயே வந்து நிற்க வேண்டியதிருக்கிறதே..
இவனிடம் என் பிரச்சனையை சொல்லலாமா..? அதனை எப்படி எடுத்துக் கொள்வான்..? மைதிலிக்கு குழப்பமாக இருந்தது..
“ஹலோ மைதிலி, எந்த உலகத்தில் இருக்கிறாய்..” அவள் முகத்தின் முன் சொடக்கிட்டான் ரவீந்தர்..
“மைதிலிக்கு அவுங்க வீட்டில் கல்யாணம் பேசுறாங்க அந்த உலகத்துக்கு அவள் போயிருப்பாளாயிருக்கும்..” சௌமியா தோழியை கிண்டல் பேச..
“சும்மாயிருடி..” சுமதி அதட்ட..
“அப்படியா மைதிலி..?” ரவீந்தர் அவள் விழிகளை கூர்ந்து பார்த்தபடி கேட்டான் மைதிலி தடுமாறினாள்..
“டேய் ரவி பராக்டிகல் கிளாஸ் ஆரம்பிச்சாச்சு வாடா..” ரவியின் தோழன் ஒருவன் தள்ளி நின்று கத்தி அழைத்தான்..
கையை திருப்பி தன் வாட்சில் மணி பார்த்த ரவீந்தர் “ஓகே மைதிலி எனக்கு உன்னிடம் நிறைய பேச வேண்டும்.. இன்று டைம் இல்லை.. இன்னும் இரண்டு நாட்களுக்குள் டைம் ஒதுக்கிக் கொண்டு வருகிறேன்.. அப்போது பேசலாம்.. இப்போது எனக்கு கிளாஸ் இருக்கிறது..” போய்விட்டான்..
ரவி எப்போதும் தேவையில்லாமல் வகுப்புகளை புறக்கணிப்பவனில்லை..
“ஏன்டி மண்ணு மாதிரி நின்னுட்டு இருக்கிறாய்..? அவனை பார்க்கவுமே எனக்கு விருப்பமில்லாத கல்யாணம் இது.. என் அப்பா அம்மா வற்புறுத்துகிறார்களென்னு பட்டென்னு போட்டு உடைத்திருக்க வேண்டியதுதானே..”




துடிக்கும் உதடுகளுடன் தலைகுனிந்து மௌனமாக நடந்தாள் மைதிலி.. சௌமியா ரவீந்தர் புகழ்பாடியடி உடன் வந்தாள்..
அன்று வகுப்புகள் முடிந்து மூவரும் கல்லூரியை விட்டு வெளியே வரும் போது.. மைதிலி அச்சப்பட்ட அந்த தருணம் வந்தே விட்டது.. அவள் இவளுக்காகவே காத்திருந்தாள்..
பரவுன் நிற பாவாடையும், மஞ்சள் நிற தாவணியும் அணிந்திருந்தாள்.. முடியை நீளமாக பின்னி பந்தாக மல்லிகை வைத்திருந்தாள்.. ஒரு கலக்கத்துடன் விழிகளை சுழற்றி இவளை தேடியபடி இருந்தாள்.. ஸ்கூட்டியை உருட்டிக் கொண்டே தோழிகளுடன் வரும் மைதிலியை பார்த்ததும் அவள் கண்கள் உற்சாகம் சுமந்து கொண்டது.. சுமதியும், சௌமியாவும் கல்லூரி பேருந்தில் ஏறும் வரை அந்த வேப்ப மரத்தடியிலேயே காத்திருந்தான்..
தோழிகள் பஸ் ஏறிப் போன பின்தான் மைதிலி தன் ஸ்கூட்டியில் போவாள்.. இன்னும் சுமதியும், சௌமியாவும் பஸ் ஏறிய மறுகணம், மைதிலி முன் வந்து நின்றாள் அவள்..
“வணக்கம் அக்கா.. என்னை நினைவிருக்கிறது தானே..? நான் வந்தனா.. பரசுராமனுடனான திருமணத்தை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டீர்களா..?”
மைதிலிக்கு தலைவலி ஆரம்பிக்க நெற்றிப் பொட்டை நீவி விட்டுக் கொள்ள ஆரம்பித்தாள்..

What’s your Reaction?
+1
6
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Priya
Priya
4 years ago

Lovely mem

lavanya
lavanya
4 years ago

super starting

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!