Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 19

19

நழுவிக் கொண்டிருக்கிறாய் என்ற 
முடிவெடுத்த போது,
“கிறேன்”  என எனக்கு நீளுகிறது
விரல் ஆட்காட்டி, வேண்டாம் பட்டிமன்றம்
அணைத்துறங்கலாம் வா..

“கையில் ஒட்டிய பிளாஸ்திரியோடு எனக்கு உணவு பரிமாறினால் நான் எப்படி சாப்பிடுவது..? அந்த பிளாஸ்திரி அழுக்கு முழுவதும் என் தட்டு சாப்பாட்டில்..” எரிந்து விழுந்தவனை நம்ப முடியாமல் பார்த்தாள் மைதிலி..

பட்ட காயத்திற்கு ஒத்தடம் தர வேண்டாம்.. மீண்டும் அதே இடத்தில் கத்தியை சொருகாமல் இருந்தால் போதாதா..? சாப்பாட்டு அறையை விட்டு மைதிலி வெளியேற..

“நான் சாதம் வைக்கவா பரசு..?” கேட்டபடி உள் நுழைந்தாள் வந்தனா..

இவள் இப்போதும் எங்களை கவனித்துக் கொண்டு இருந்திருக்கிறாள்.. திரும்பி அவளை பார்த்த மைதிலிக்கு.. எப்படி..? என திமிராக புருவம் உயர்த்திக் காட்டினாள் வந்தனா..

அன்று இரவு பால் தம்ளரை தனது பிளாஸ்திரி விரல்களால் தொடாமல் ஒரு தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு போய் கணவனிடம் கொடுத்தவள், சற்று சங்கடம் தெரிந்த அவன் முகத்தை ஓரக் கண்ணால் பார்த்தாள்.. ஏதோ பேச வாய் திறந்தவனுக்கு பதிலாக..

“வந்தனாவிற்கு துணையாக நான் அவள் அறையில் படுத்துக் கொள்கிறேன்..” சொல்லிவிட்டு அவன் பதிலை கேட்காமல் அறையை விட்டு வெளியே வந்துவிட்டாள்.

பரசுராமனின் முகம் கோபத்தில் சிவந்தது.. அவள் கொண்டு வந்த பால் தம்ளரை வெறுப்புடன் தரையில் எறிய என்ன வடிவமாக.. எனப் புரியா கேள்வி கேட்டபடி பால் ஏதோ ஓர் பிடிபடா வடிவத்தில் தரை முழுக்க பரவியது.

“நான் உன்னுடன் படுத்துக்கவா வந்தனா..?” கேட்டபடி வந்த மைதிலியை விழிகள் தெறித்து விடுவது போன்ற ஆச்சரியத்தில் பார்த்தாள் வந்தனா..

“இங்கே படுக்க போகிறாயா..? ஏன்..?”

“சும்மாதான்.. பாவம் நீ சின்னப்பொண்ணு.. நைட் அடிக்கடி அப்பா நினைவில் தூக்கம் வராமல் உருண்டு கொண்டிருக்கிறாய்.. உன் துக்கம் மாறும் வரை உன் அறையில் படுத்துக் கொள்கிறேனே..” சொன்னபடி அவளது பதிலை எதிர்பாராமல் அவளருகே கட்டிலில் படுத்துக் கொண்டாள்..

விளக்கை அனைத்த பிறகும் இருவருமே உறங்கவில்லை என ஒருவருக்கொருவர் தெரிந்த பின்னும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசாது மௌனமாகவே இருந்தனர் இருவரும்.. பானையாய் விழி மூடிக் கிடந்தனர்.

“ஏன் மைதிலி இங்கே வந்து படுக்கிறாய்..?” வெகுநேரம் கழித்து மிக மெதுவாக தயங்கிக் கேட்டாள் வந்தனா..

“காரணம் சொன்னேனே..”

“அதனை நான் நம்பவில்லை..”




“உன் நம்பிக்கை பற்றிய கவலை எனக்கு இல்லை..” முதுகு காட்டி திரும்பிக் கொண்டவளை விவறித்தாள் வந்தனா..

இவள் அபாயமானவள்.. இப்போது என்ன திட்டம் போடுகிறாள்..? குழம்பியது வந்தனாவின் மனம்.

“வந்தனா..” அடுப்படிக்குள் இருந்து மைதிலி அழைத்தாள்..

வந்து நின்றவளிடம் “உன் பரசு அத்தான் சாப்பிட வந்திருக்கிறார் பார்.. அவருக்கு இட்லி எடுத்து வை..”

“நானா..?”

“நீயேதான்..” அடுப்பிடம் திரும்பிக் கொண்டாள்.

தட்டில் இட்லி வைத்த கைகளுக்கு புருவம் சுருக்கி நிமிர்ந்து பார்த்தவனுக்கு.. “மைதிலிதான் பரிமாற சொன்னாள்..” என தகவல் சொன்னால் வந்தனா.. பரசுராமன் மௌனமாக தலை குனிந்து சாப்பிட துவங்கினான்.

இது அன்றோடு நிற்கவில்லை.. மைதிலி தள்ளி நின்று கொண்டு வந்தனாவை முன் நிறுத்தியது தொடர்ந்து நடக்க துவங்கியது.. அத்தோடு இரவுகளை அவள் வந்தனாவின் அறையிலேயே கழிக்க ஆரம்பித்தாள்..

மூன்றாவது நாளிலேயே இது மகாராணியின் கண்களில் பட்டு அவள் மைதிலியை விசாரிக்க ஆரம்பித்தாள்..

“ஏன் எல்லா வேலைக்கும் வந்தனாவையே இழுக்கிறாய் மைதிலி..?”

“அவள் அப்பா இறந்ததிலிருந்து கொஞ்சம் வெளியே வரட்டும் அத்தை.. அதற்காகத்தான்.. அவள் மனதை திசை திருப்பத்தான்..”

“ஓ.. அது சரிதான்.. ஆனால்..” மகாராணி குரலை குறைத்தாள்.

“ராத்திரி ஏன் வந்தனா கூட படுத்துக்கிற..?”

“வந்தனா நைட் முழுவதும் தூக்கம் வராமல் நடந்து கொண்டே இருக்கிறாள் அத்தை.. அப்பா இல்லாத சோகத்தில் அவளுக்கு தூக்கம் வர மாட்டேனென்கிறது போல.. அதனால் உங்கள் மகன்தான் என்னை கொஞ்ச நாட்களுக்கு வந்தனாவிற்கு துணையாக அவளது அறையில் படுத்துக் கொள்ள சொன்னார்..”

இதனை மைதிலி தைரியமாக பரசுராமனின் முகத்தை.. அவன் பார்வையை தளராமல் பார்த்தபடி சொன்னாள்.. ஆம்.. மகாராணி இதை விசாரித்தபடி இருந்த போது பரசுராமன் அவர்களுக்கு பின்னால்தான் நின்றிருந்தான்.. மைதிலியின் தைரிய புளுகுகளை சலனமற்ற முகத்துடன் கேட்டபடி நின்றிருந்தான்..

“ப்ச், அவன் ஏதாவது சொல்வான்.. அதெல்லாம் வேண்டாம் மைதிலி.. பகல் வேளைகளில் எப்படியோ.. இரவு படுக்க நீ உங்கள் அறைக்கு போய்விடு..” தாயின் தவிப்புடனும், மாமியாரின் உத்தரவுடனும் சொன்ன மகாராணியை என்ன சொல்லி சமாளிக்க மைதிலி யோசனையோடு நகம் கடிக்க, பரசுராமன் தாயின் முதுகுக்கு பின்னிருந்து என்ன செய்ய போகிறாய்…? எனப் புருவம் உயர்த்தினான்..

மைதிலி இப்போது தன் குரலை மிகக் குறைத்துக் கொண்டாள்.. மாமியார் அருகில் நெருங்கி நின்று கொண்டாள்.. குறைந்த தன் குரலைக் கேட்க காதை தீட்டி நின்ற தன் கணவனைக் கிண்டலாக பார்த்தபடி..

“அத்தை அது வந்து.. நான் நம் ஊர் மீனாட்சி அம்மனுக்கு ஒரு வேண்டுதல் வைத்திருக்கிறேன் அத்தை.. மூன்று வாரங்களுக்கு ஒரு விரதம்.. சுத்த பத்தமாக இருந்து ஒருவேளை சாப்பிட்டு கோவிலுக்கு போகனும்.. நம்ம குடும்ப நிம்மதி, கணவர் ஆயுள், ஆரோக்யம் இதற்காகத்தான் இந்த விரதம் அவரே சரின்னுட்டார்.. நீங்க வேண்டாம்னு சொல்லாதீங்க அத்தை..”

கடவுள் விசயம் என்றால் மகாராணி ஒரேடியாக மறுக்க தயங்குவாள் என்று கணக்கிட்டே மைதிலி இப்படி கூறினாள்.. அது சரியென்பது போல் மகாராணி..

“இந்த சின்ன வயசில் எதற்கும்மா இத்தனை கடினமான விரதமெல்லாம்..? ம்.. விரதத்தை ஆரம்பிச்சுட்டேன் சொல்ற, சரி போகட்டும்.. இதோடு சரி.. இனி இந்த மாதிரி விரதமெல்லாம் இருக்க கூடாது சரியா..?” மெல்லிய அதட்டலுடன் மகாராணி உள்ளறைக்கு போய்விட்டாள்..

நான் குசுகுசுவென பேசியது அவனுக்கு கேட்டிருக்காதே சந்தேகத்துடனும்.. வெற்றி மமதையுடனும் பரசுராமனை பார்க்க எப்போதும் போல் அவன் முகத்தில் கருங்கல் பாவனை இருந்தது.. இவன் நான் சொன்னதை கேட்டிருப்பானா..? இல்லையா..? மைதிலி குழப்பத்தில் விழுந்தாள்..




பரசுராமன் நிதான காலெட்டுகளுடன் அவளருகே நெருங்கினான்.. சத்தமின்றி வந்து கொண்டிருந்த அவன் எட்டுக்கள் ஒவ்வொன்றும் பேரிடியாக மைதிலியின் இதயத்தில் விழுந்தன.. படபடத்த விழிகளுடன் மைதிலி பின்னடைந்தாள்.. ஒரு வேளை அடிப்பானோ..? ம்.. அது ஒன்றைத்தான் இவன் இன்னும் செய்யவில்லை.. மற்ற எல்லா அராஜகமும் செய்தாயிற்று.. முறைப்பாய் அவனை பார்த்தபடி வேகமாக உள்ளறைக்குள் ஓட முயன்றவளை குறுக்கே கைநீட்டி சுவற்றில் ஊன்றி தடுத்தான்.. அவன் கண்கள் வைரமென மின்னிக் கொண்டிருந்தது..

இவன் நிச்சயம் ஏதோ வன்முறையில்தான் இறங்க போகிறான், மாமியாரை உதவிக்கு அழைத்துவிட வேண்டியதுதான் என்ற முடிவோடு மைதிலி வாயை திறந்தபோது அபயம் கேட்க துடித்த அவளது இதழ்கள் இரண்டு கொத்தாக அவனது விரல்களால் அழுத்தி பற்றப்பட்டன..

“எத்தனை பொய்.. எவ்வளவு இயல்பாக பேசுகிறாய்.. சரியான சாகசக்காரிடி நீ..” சொன்னபடி அவள் இதழ்களை அழுத்தி நசுக்கினான்.. இதழ்களின் வலி தாங்காது தன் கைகளால் படபடவென அவன் மார்பில் குத்தினாள்.. மாறி மாறி விழுந்த அவளது குத்துக்களில் ஒன்று கூட அவனைக் காயப்படுத்தாது போக, அவன் கை விரல்களின் பிடி மட்டும் இன்னமும் அவள் இதழ்களிலேயே இருந்தது.. ஆனால் நேரம் செல்ல செல்ல அழுத்தம் குறைந்து மென் பிடியாகி பின் வருடலாகி அங்கேயே நிலைத்தது..

சில நொடிகள் கழித்தே பிடி மாறி வருடலானதை உணர்ந்த மைதிலி வேகமாக அவன் விரல்களிலிருந்து விடுபட்டுக் கொண்டாள்.. அவன் மார்பில் கை ஊன்றி அவனை தள்ளினாள்.

“செய்யும் தவறெல்லாம் நீங்கள் செய்துட்டு என்னை மாயக்காரி.. சாகசக்காரி என்பீர்களா..?”

“ம்.. மாயக்காரி, சாகசக்காரி, வசியக்காரி..” கூடுதலாக மற்றொரு பட்டத்தையும் வழங்கினான்.

இவனை.. மைதிலி பல்லைக் கடித்தாள்.. முறைத்தாள்.

“பாக்குறேன்டி, இன்னும் எத்தனை நாளைக்கு என்கிட்ட இருந்து தப்பிக்கிறன்னு பாக்குறேன்..” கட்டைவிரலையும், ஆட்காட்டிவிரலையும் சேர்த்து அவன் கன்னக்கதுப்புகளை அழுத்தமாக நிமிண்டி சிவக்க வைத்தவன்.. வேகமாக விலகிப்போய்விட்டான்.

சை.. சரியான காட்டான், தன் கன்னத்தை வருடியபடி திரும்பிய மைதிலி திகைத்தாள்.. அங்கே வந்தனா நின்றிருந்தாள்..

இவள் என்னவெல்லாம் பார்த்திருப்பாள்..? ஒருவித கூச்ச உணர்வு உடலில் பரவ வேகமாக அடுப்படிக்குள் நுழைந்து கொண்டாள் மைதிலி..

“உனக்கும் பரசுவுக்கும் சண்டையா மைதிலி..?” ப்ரிட்ஜை திறந்து ஒரு கேரட்டை எடுத்துக் கொண்டு சிங்க் குழாயில் கழுவத் தொடங்கினாள் வந்தனா..

வெள்ளை வெளேரென மல்லிகையாய் மலர்ந்து வடிந்து கொண்டிருந்த சாதத்தை கரண்டியில் எடுத்து சோதித்து பார்த்து விட்டு, அடுப்புத் துணியால் பிடித்து சோற்றுப் பானையை தூக்கி வடிக்க தொடங்கினாள் மைதிலி..

“பரசு உன்னை அடிச்சாரா.. என்ன..?” வந்தனா காரட்டை கடித்து தின்ன ஆரம்பித்தாள்..

மைதிலியின் கவனம் வடிந்து கொண்டிருந்த உலை வடிநீரில் இருந்தது.. இவள் பரசு என்னை அடித்தால் அதில் இவளுக்கு மிக சந்தோசம் வரும்.. தன் வெறுப்பை பல்லைக் கடித்து அடக்கிக் கொண்டாள்..

“உன் உதடும், கன்னமும் ஏன் சிவந்திருக்கிறது மைதிலி..?” வந்தனா இப்போது ஆராயும் விதமாக அவளருகே வந்து நின்றிருக்க மைதிலிக்கு உடம்பு பற்றியெரிவது போல் இருந்தது..

கவிழ்த்து பிடித்திருந்த சோற்றுப் பானையை பட்டென திருப்பி நேராக வைத்தவள் தன் கை விரல்களை வந்தனாவின் முகத்திற்கெதிராக சொடுக்கிட்டாள்..

“ஏய் வெளியே போடி..”

“என்னையா சொல்கிறாய்..?” வந்தனா நம்பமுடியாமல் கேட்க..

“உன்னையேதான் வெளியே போ..”

“இதை அப்படியே இந்த வீட்டு ஆட்கள் யாராவது ஒருவர் காதுக்கு கொண்டு போனால் என்ன ஆகும் தெரியுமா..?”

“எந்த காதுக்கு வேண்டுமானாலும் கொண்டு போ.. என்னிடம் விசாரிக்க வருபவர்களிடம் நீ சற்று நேரம் முன்பு கேட்டாயே.. அந்தக் கேள்வியை சொல்லுவேன்.. நீ இப்படி என்னைக் கேட்டதை சொல்லுவேன்..”

மைதிலியின் அதிரடியில் வந்தனா அதிர்ந்தாள்..

“என்ன மைதிலி ரொம்ப திமிராக பேசுகிறாய்..? இந்த வீட்டில் உன் நிலைமையை மறந்து விட்டாயா..? உன் பேச்சை இங்கே யாரும் நம்பமாட்டார்கள்..”

“நம்பும்படி சொல்ல எனக்கு தெரியும்.. புருசன்.. பொண்டாட்டியை வேவு பார்ப்பதை நீ நிறுத்து..”

“ஏய் என்னை என்ன நினைத்தாய்..? இப்படி என் மேல் இல்லாத பழி போட்டு என்னை வீட்டை விட்டு துரத்த நினைக்கிறாயா..?” மைதிலியின் தோள் தொட்டு உலுக்கினாள்..

மைதிலி அவள் கைகளை பிடித்து தள்ள முயல அவள் விடாமல் மைதிலியை தள்ள அந்த இடத்தில் சிறு தள்ளு முள்ளு உண்டானது..

“மைதிலி.. வந்தனா.. என்ன செய்றீங்க ரெண்டு பேரும்..?” அதிர்ச்சியோடு கேட்டபடி வாசலில் நின்றிருந்தாள் மகாராணி.. அவள் அருகே கௌரியம்மா.. அவள் கையில் காய்கறி கூடை இருந்தது..

“அத்தை..” விசும்பியடி அவர்களருகே போய் மகாராணி தோளில் சாய்ந்தாள் வந்தனா..

“என்னை இவள் வீட்டை விட்டு போன்னு சொல்றா அத்தை..” அழுகையோடு தன் புகாரை முதலில் பதிந்து விட்டாள்..

“ந்தா சும்மா எதையாச்சும் சொல்லாதே… மைதிலி அந்த மாதிரி பொண்ணு இல்லை..” கௌரியம்மா அதட்டினாள்..

தோள் சாய்ந்திருந்த வந்தனாவின் தலையை வருடியபடி மகாராணி மைதிலியை கண்டனமாய் பார்த்தாள்.

“நன்றாகப் போய் கொண்டிருக்கும் குடும்பத்தை பிரச்சனை பண்ணி பிரிக்கும் வேலையை அந்த வீட்டுப் பெண்கள்தான் பெரும்பாலும் செய்கிறார்கள்.. நம் வீட்டிலும் அது போல் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்.. இந்த வீட்டின் ஒவ்வொரு உறவும் எனக்கு முக்கியம்.. யாரையும் யாருக்காகவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. புரிகிறதா..?”

மாமியாரின் அதட்டல் தனக்குத்தான் என உணர்ந்த மைதிலி தலைகுனிந்தாள்.. அம்பின் நுனி தன் பக்கமும் திரும்பலாம் என எய்யும் போதே அவளுக்கும் தெரியும்.. இருந்தும் தனது போரிடலை வெளிப்படுத்தாமலிருக்க அவள் விரும்பவில்லை..

“ஏய் உனக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.. மண்டையில் ஏற்றிக் கொள்..” மகாராணி இப்போது தன் தோளில் கிடந்த வந்தனாவையும் நிமிர்த்தி உலுக்கினாள்.. அவள் மலங்க மலங்க விழித்தாள்..

“வாங்கக்கா இந்த சீயக்காயை காய வைக்கனும்..” கௌரியம்மாவை அழைத்துக் கொண்டு மகாராணி மொட்டை மாடி ஏறிவிட வந்தனா அதிர்ச்சி விலகாமல் அதே இடத்தில் நிற்க, ஏதோ ஓர் மனதிருப்தியுடன் மைதிலி மீண்டும் சோற்றை வடிக்க ஆரம்பித்தாள்..

சுடு ஆவி பறந்து அவள் கைகளை பதம் பார்த்துக் கொண்டிருந்த போதும், அவள் மனம் ஐஸ் போட்ட சர்பத்தாய் குளிர்ந்து மிதந்தது.. அத்தை என்னை புரிந்து கொண்டார்கள்.. திருப்தியாய் உணர்ந்தவளின் மனம் கணவனிடம் தாவியது.

இவனைத்தான் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.. எப்போது எதை நினைப்பானோ.. ஆனால் அவனது ஆசையை மட்டும் நிறைவேற விடக்கூடாது.. நன்றாக தவிக்கட்டும்.. வன்மமாக நினைத்துக் கொண்டவளின் இரவுப் படுக்கை தொடர்ந்து வந்தனாவின் அறையிலேயே இருந்தது..

ஆனால் அவளது கட்டுக்குள் அடங்குகிறவனா அவன்..? எதிர்பார்க்காத ஒன்றை நிகழ்த்துபவன்தானே பரசுராமன்.. இப்போதும் அப்படியே.. எளிதாக அவளிடம் தன் கணவன் உரிமையை நிலைநாட்டினான்.. மைதிலிதான் தயங்கி தடுமாறி தவித்து போனாள்.

What’s your Reaction?
+1
7
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Priya
Priya
4 years ago

Super padma mem

Sarojini
Sarojini
4 years ago

பரசுவை போன்ற ஆண்கள் தான் அதிகம். ஆனாலும் மைதிலி பாவம். வந்தனா… நான் அங்க வந்தேன்னா …. உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது… ஆமா சொல்லிட்டேன்.

அருமையான பதிவு பத்மாக்கா!!!

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!