Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 11

11

புரட்டிப் போட்ட உன் ஆத்திர அலையிலிருந்து
தப்பியோட முனையும் போது..
என் விருப்ப பாடலை
ஒலிக்க விட்டு விடுகிறாய்..

“வித்தாரக்கள்ளின்னா என்ன மாம்டக்கா..?” கீரையை கடைந்தபடி கௌரியம்மாவிடம் விசாரித்தாள் மைதிலி.
கறிவேப்பிலையை உருவிக் கொண்டிருந்த கௌரியம்மா நிமிர்ந்து பார்த்தார்..
“என்னடிம்மா திடீர் விசாரணை..? யார் கேட்டது..? யார் சொன்னது..?”
“அது.. சும்மாதான்.. ஒரு புக்ல படிச்சேன்.. எனக்கு மீனிங் தெரியலை.. திமிர் பிடித்தவள்னு அர்த்தமா..?”
“ம்.. அப்படி சொல்ல முடியாது.. மாய்மாலக்காரி, மாயம் செய்பவள், வசியக்காரி.. இப்படி எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம்..”
மைதிலியின் கைகள் கீரை கடைவதை நிறுத்தியது.. அவள் ஏதோ மாயம் செய்து அவன் தந்தையிடம் நல்ல பெயர் வாங்கி விட்டாளாம்.. இப்படி சொல்லி போயிருக்கிறாள் அவள் புருசன்.. இவனை.. பல்லைக் கடித்துக் கொண்டாள்..
என்ன ஏதுன்னு, விசாரிக்காமல் பார்க்காமல் இவனால் பொண்டாட்டி மேல் பாய மட்டுமே தெரிந்தவன் அவளை மாயக்காரி என்கிறான்.. இவன் ஒழுங்கான புருசனாக வேண்டாம் சரியான மனுசனாக இருந்து கொண்டல்லவா என்னைக் குறை சொல்ல வேண்டும்.. தனக்குள் பொறுமினாள்..
“ஏட்டி இன்னைக்கு காலைல என்ன நடந்தது..? என் அண்ணன் அப்படி பாராட்டுனாரு.. யாருகிட்ட என்ன பேசின..?”
கௌரியம்மா தன் கைவேலையை விட்டு விட்டு அவள் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார்.. கதை கேட்கும் ஆர்வம் தெரிந்தது அவர் விழிகளில்..
“ஆமாம் மைதிலி எனக்கும் சொல்லு..” என்று வந்தான் ரவீந்தர்.. அவள் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டான்..
“ஏய் சொல்லுப்பா ப்ளீஸ்.. மண்டை வெடிச்சிடும் போல இருக்கு.. சொல்லு மைதிலி..”
பட்டென அவன் தலையில் ஒரு கொட்டு விழுந்தது.. மகாராணி பின்னால் நின்றிருந்தாள்..
“ஏய் அவளை அண்ணின்னு கூப்பிடுடா.. எத்தனை தடவை சொல்றது..”
“அம்மா சும்மாயிருங்க.. அண்ணின்னு கூப்பிட்டால் மைதிலி எனக்கு ரொம்ப அந்நியமாக தெரிகிறாள்.. அவள் எப்போதும் எனக்கு ப்ரெண்டுதான்..”
“அதெல்லாம் கல்யாணத்துக்கு முந்தி.. இப்போ அவள் உனக்கு அண்ணிதான்..”
“என் அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டதால அவள் எனக்கு ப்ரெண்ட் இல்லைன்னு ஆகிடுமா..?”
“டேய் இந்த வியாக்யானமெல்லாம் என்கிட்ட பேசாதே.. உன் அண்ணன் பொண்டாட்டி அவள்.. அதற்கான மரியாதையை அவளுக்கு கொடு.. யார் கண்டது.. நீ அண்ணின்னு கூப்பிட்டால் அவள் ஒருவேளை நடந்ததை சொல்வாளோ என்னவோ..?”




“அட அப்படியா மைதிலி… அப்ப ஓ.கே.. அண்ணின்னே கூப்பிடுறேன்.. காலையில் என்ன கவுண்டர் கொடுத்தீர்கள்.. அண்ணியார் அவர்களே..”
கைகட்டி வாய் பொத்தி பணிவு போல் ரவீந்தர் கேட்க மைதிலிக்கு சிரிப்பு வந்தது.. நிமிர்ந்து பார்க்க மகாராணியும் எதிர்பார்ப்போடு நிற்பது தெரிய, பெருமையாய் தலையை நிமிர்த்திக் கொண்டாள்..
“அது.. வந்து..” என இழுத்து நிறுத்தி சுற்றி நின்றவர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தவள்..
“மாமா யாருக்கும் சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்காரே..” என்று விட்டு குனிந்து கீரை கடைதலை தொடர்ந்தாள்..
“ம்க்கும் நல்ல மாமனார்.. நல்ல மருமகள்..” மகாராணி முணுமுணுப்புடன் அடுப்பருகே போக,
“அடிப்போடி..” கௌரியம்மா சலித்தபடி கைகளை தரையில் ஊன்றி எழுந்து போனாள்..
அவர்கள் இருவரும் போனதும், ரவீந்தர் அவளருகே நெருங்கி அமர்ந்து அவள் கை மத்தை தான் வாங்கிக் கொண்டான்.. கல்சட்டியில் இட்ட கீரையை மர மத்தால் கடைந்தபடி..
“அவுங்க போயிட்டாங்க.. இப்போ எனக்கு சொல்லு மைதிலி..” அவள் பக்கம் சாய்ந்து ரகசியக் குரலில் கேட்டான்..
மைதிலிக்கு சிரிப்பு பொங்கு வர, “முடியாது.. அந்தப் பக்கம் போ.. அதை கொடு..” அவன் கையிலிருந்த மத்தை பிடுங்க, அவன் தராமல் இழுக்க..
“டேய் ரவி இங்க என்னடா செய்ற..?” கேட்டபடி வந்து நின்றான் பரசுராமன்.. அவன் குரலில் மிகுந்த எரிச்சல் இருந்தது..
“அது வந்துண்ணா.. நானும் மைதிலியும் ஒரு ரகசியம் பேசிட்டு இருந்தோம்..”
“டேய் அண்ணின்னு சொல்லு..” அடுப்பை கவனித்தபடி மகாராணி குரல் கொடுத்தாள்.
“ம்மா அதெல்லாம் எனக்கு சொல்ல வராதும்மா.. நான் இப்படித்தான் கூப்பிடுவேன்..”
“ஏன் வராது..?” பரசுராமன் தம்பியை பார்த்தபடி அவன் எதிரில் வந்து நின்றான்.
“அவள் படிப்பு முடிந்ததோடு உங்கள் நட்பும் முடிந்தது.. இனி அவள் உனக்கு அண்ணிதான்.. நீ அவளை அப்படித்தான் கூப்பிட வேண்டும்..”
உத்தரவாக ஒலித்த அண்ணனின் குரலில் அமைதியாகி நிமிர்ந்து பார்த்தான் ரவீந்தர்..
“முதலில் நீ எழுந்திரு.. இதென்ன பொம்பளைங்க கூட அசிங்கமாக அடுப்படிக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு.. பொம்பளை வேலை செய்து கொண்டு.. உன்னை கருப்பட்டி மூட்டையைத்தானே எண்ணிப் பார்த்துட்டு வரச் சொன்னேன்.. இங்கே வந்து வாயடிச்சுட்டு உட்கார்ந்திருக்கிறாய்.. எழுந்து கடைக்கு போ.. நான் மூட்டையை பார்த்துட்டு வர்றேன்.. அம்மா குடேன் சாவி எங்கேம்மா..?”
“அங்கே ஆணியில்தாம்பா இருக்கும்..” படபடவென சொற்களை இரைத்து விட்டு சாவியோடு வீட்டின் பின்புறம் இருந்த குடோனை நோக்கி நடந்தான் பரசுராமன்..
“அண்ணன் கொஞ்சம் அமைதியான டைப் மைதிலி.. இப்படி ஒன்றாக உட்கார்ந்து சிரித்து பேசுவதெல்லாம் அவருக்கு அவ்வளவாக தெரியாது.. அங்கே கடையிலிருந்து ஒரு வேலை சொல்லி அனுப்பினார்.. நான் அதை மறந்து விட்டு இங்கே பேசிக் கொண்டு உட்கார்ந்து விட்டேன்.. அதுதான் அவருக்கு கோபம்.. நீ இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே..” வெறித்த பார்வையுடன் அமர்ந்து விட்ட தன் தோழியை சமாதானப்படுத்தினான் ரவீந்தர்.. அண்ணன் சொல் தட்டாதவனாக உடனே எழுந்து போனான்..
பரசுராமனின் கோபம் மைதிலியை பாதிக்கவில்லை.. ஆனால் அவன் உபயோகித்த வார்த்தைகள்.. பொம்பளைகள் என்றால் இவனுக்கு கேவலமா..? இவன் எப்போதும் இப்படித்தான் பேசுவானா..? அவளுக்கு மனது தாளவில்லை..
“அடுப்படி அசிங்கமான இடமா அத்தை..? சமையல் வேலை கேவலமானதா மாம்டாக்கா..?” மனம் பொறுக்காது நியாயத்தை கேட்டாள்..
மகாராணி அடுப்பிலிருந்து திரும்பி அவளை உற்று பார்த்தாள்.. பிறகு உலை கொதித்த பானையில் அரிசியை களைத்து போட்டாள்..
“இப்படியெல்லாம் நாங்கள் யாரும் இதுவரை யோசித்ததில்லை.. நீ மட்டும் ஏன் யோசிக்கிறாய்..?”
“அப்போது பெண்களென்றாலே யோசிக்க கூடாது என்கிறீர்களா..?”
“ஏட்டி என்ன பதிலுக்கு பதில்.. மாமியார்ங்கிற மரியாதை இல்லாமல்.. வெளியில தெருவுக்கு போயிட்டு வர்ற ஆம்பளைங்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும்.. அதை அவுங்க வீட்டு பொம்பளைங்க மேல காட்டத்தான் செய்வாங்க.. இதையெல்லாம் பெரிசு படுத்தவாயா..? சிவனேன்னு வாயை மூடிக்கிட்டு சோளியை பாரு..” கௌரியம்மா அதட்டினாள்..
அப்போதிற்கு அமைதியாகிவிட்டாலும், சிவனே என பேசாமல் இருக்க மைதிலியினுள் இருந்த சக்தி அனுமதிக்கவில்லை அவள் அன்று இரவு தன் கணவனிடமும் தன் நியாயத்தைக் கேட்டாள்.
“மூன்று வேளையும் விதம் விதமாக ருசித்து சாப்பிட நினைக்கிறீர்கள்.. அதற்காக நாங்கள் அடுப்படிக்குள் நாள் முழுவதும் நிற்கிறோம்.. அந்த சமையல் வேலை அசிங்கமானதா..? அந்த வேலை செய்யும் நாங்கள் கீழானவர்களா..?”
பரசுராமன் கண்களை இறுக மூடி கட்டிலில் படுத்திருந்தான்.. அவனருகே நின்றபடி கால்சிலம்பு கையிலேந்திய காரிகையாய் நியாயம் கேட்டாள் மைதிலி.. மிக லேசாக விழி திறந்து அவளை பார்த்தான்.. தன் காலடியில் நின்றவளை வலது காலை நீட்டி அவள் இடுப்பை கோர்த்து வளைத்து கட்டிலில் அமர வைத்தான்.. இந்த துச்சமான செயலில் ஆத்திரமான மைதிலி கட்டிலிலிருந்து எழ முயல.. தன் கால்களை அவள் மடியில் பாரமாக நீட்டினான்..
“காலெல்லாம் ஒரே உளைச்சல்.. கொஞ்சம் பிடித்து விடு..” உத்தரவாக சொன்னான்..
மைதிலியின் ஆத்திரம் பலமடங்கானது.. தன் மடியில் கிடந்த அவன் கால்களை படாரென கீழே தள்ளினாள்..
“எனக்கும்தான் காலையிலிருந்து வேலை செய்து கை, காலெல்லாம் வலிக்கிறது.. நான் உங்களைப் போலா சொல்லிக் கொண்டிருக்கிறேன்..?”
அவள் கேட்டு முடித்த மறுகணமே அவள் இடையை பற்றி இழுத்து கட்டிலில் தள்ளியிருந்தான் பரசுராமன்..
“சொல்ல வேண்டியது தானேடி.. இங்க இங்கே, இப்படி இப்படி வலிக்குதுன்னு சொன்னால் பிடித்து விட்டு போகறேன்.. இப்போது சொல் எங்கே வலிக்கிறது..? இங்கேயா.. இங்கேயா..?”
அவள் கால்களில் அழுந்திய அவன் கைகள் கொம்பை சுற்றும் கொடியாய் அவள் உடல் முழுவதும் அழுந்த தொடங்க.. இனி இவன் ‘அதை’ தவிர வேறு பேசமாட்டான் என உணர்ந்த மைதிலி எப்போதும் போல் தன் உணர்வுகளை அடக்கி மரக்கட்டையானாள்.. அவள் நெஞ்சம் ஊமையாய் அழுதது..
“மைதிலி..”
ரகசியமாய் பின்னால் கேட்ட குரலுக்கு புருவம் சுருக்கி திரும்பிப் பார்த்தாள்.. ரவீந்தர் நின்றிருந்தான்.
“என்ன ரவீந்தர்..?”




உயர்ந்த அவள் குரலுக்கு “உஷ்” என உதட்டில் விரல் வைத்து சைகை சொன்னான்.. வெளியே வரும்படி பின் வாசலை காட்டினான்.. அடுப்பை அணைத்து விட்டு அவனுடன் பின்புறம் வந்தாள்..
அன்று பரசுராமன் சொன்ன பிறகு ரவீந்தர் மற்றவர்கள் முன்பு அவளை அண்ணி என்றே அழைத்து வந்தான்.. ஆனால் அவர்கள் இருவருமாக இருக்கும் போது பெயர் சொல்லியே அழைத்தான்..
“என்ன ரவீந்தர்..?”
“மைதிலி எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனுமே..”
ம் இந்த வீட்டில் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் நிலையிலா நான் இருக்கிறேன்.. மனதிற்குள் கசப்பாக நினைத்தவள், வெளியே உற்சாகத்தை முகத்தில் பூசினாள்..
“சொல்லு ரவீந்தர்..”
“நாங்கள் ப்ரெண்ட்ஸ் ஐந்து பேராக சேர்ந்து ஒரு வேர்ல்டு டூர் ப்ளான் பண்ணியிருக்கிறோம்.. அதற்கு நீதான் நம் வீட்டில் பர்மிசன் வாங்கி கொடுக்க வேண்டும்..”
“நானா..?” மைதிலிக்கு ரவீந்தர் கேட்ட விபரம் நம்ப முடியவில்லை.. அவளுக்கு இந்த வீட்டில் என்ன மரியாதை இருக்கிறதென இந்த உதவியை ரவீந்தர் அவளிடமிருந்து எதிர்பார்க்கிறான் எனத் தெரியவில்லை..
“நீ இந்த வீட்டு பையன் ரவீந்தர்.. நீ கேட்டால் சரியெனாமல் நான் கேட்டாலா சம்மதிக்க போகிறார்கள்..?”
“நான் கேட்டால் நிச்சயம் சம்மதிக்க மாட்டார்கள் மைதிலி.. ஏனென்றால் இந்த வீட்டில் நான் எடுத்து வைத்திருக்கும் பேர் அப்படி..”
“அப்படி என்ன பெயர் எடுத்து வைத்திருக்கிறாய்..?”
“ஊதாரி, ஊர் சுற்றி, உல்லாசி, சோம்பேறி..” ரவீந்தர் விரல் விட்டு எண்ண ஆரம்பிக்க மைதிலிக்கு பீறிட்டு சிரிப்பு வந்தது..
“இப்போது எதற்கு சிரிக்கிறாய்..?” ரவீந்தர் எரிச்சலாக கேட்டான்.
“காலேஜில் பெரிய ஹீரோ.. பெண்களின் கனவு நாயகன்.. இங்கே வீட்டிற்குள் உன் நிலைமை படு கேவலமாக இருக்கிறதேப்பா..”
“உஷ்.. குடும்ப ரகசியத்தை வெளியில் சொல்லாதே.. இதெல்லாம் நமக்குள் மட்டும் ரகசியமாக இருக்கட்டும்.. காலேஜில் ஒவ்வொரு பெண்ணிற்காக உதவ என்று ஒவ்வொரு இடமாக என் கையிலிருந்து காசு செலவழித்து போய் கடைசியில் என் குடும்பத்தில் இப்படி கெட்ட பெயர் வாங்கிக்கொண்ட ரொம்ப நல்ல பையன் நான்..”
மிகுந்த சோகம் போல் கண்களை துடைத்துக் கொண்டான்.
“அட, நல்லவனே..” மைதிலி சிரித்தாள்.
“மைதிலி சும்மா சிரித்தே சமாளிக்காதே.. எனக்கு பெர்மிசன் வாங்கிக் கொடு..”
“எத்தனை நாள் டூர்..?”
“மூன்று மாதம்..”
மூன்று மாதம்.. பிரமிப்பாய் மனதிற்குள் கணக்கு போட்டு பார்த்தவள்,
“செலவு..” என இழுத்தாள்..
“அது பிரச்சனை இல்லை மைதிலி.. பிள்ளைகளுக்கு செலவழிப்பதில் அப்பா கணக்கு பார்க்க மாட்டார்.. ஆனால் முதலில் அந்த செலவுக்கு அவர் சம்மதிக்க வேண்டும்.. அவர் மட்டும் அல்ல.. உன் ஆளும்தான்..”
“என் ஆளா..?”
“ஆமாம். மிஸ்டர் பரசுராமன்.. அப்பாவிடம் கேட்ட உடனேயே அவர் உடனே அண்ணன் பக்கம்தான் திரும்புவார்.. என்னடா பரசு சின்னவன் ஏதோ கேட்கிறானே அனுப்பலாமாம்பார்.. அண்ணன் தலையாட்டினால்தான் அவரும் தலையாட்டுவார்.. இல்லையென்றால் டேய் அண்ணன் வேண்டாங்கிறான்டா.. போயி வேறு வேலையை பாருன்னுடுவார்..”
மைதிலிக்கு திக்கென்றது.. அவள் கணவனிடம் போய் ஒரு தேவை என்று நிற்க வேண்டுமா..?
“நீ அத்தையிடம் பேசலாமே ரவீந்தர்..?”
“அம்மா அப்பாகிட்ட கேளுடான்னு கை காட்டிட்டு சோறு வடிக்க போயிடுவாங்க, நான் எதைக் கேட்கிறேன்னு கூட கவனிக்க மாட்டாங்க.. அப்பா பார்த்து என்ன சொன்னாலும் அவுங்களுக்கு சரிதான்..”
“அப்போது உன் அப்பாவிடமே..”
“அதுதான் முதலிலேயே சொன்னேனே மைதிலி அப்பாவை முடுக்கும் சுவிட்ச் அண்ணனிடம் தான் இருக்கிறது அண்ணனை தூண்டும் சுவிட்ச் நீதான்.. அதனால்தான் நேரடியாக உன்னிடமே வந்து நிற்கிறேன்.”
அவனது பேச்சில் மைதிலி திகைத்தாள்.. இவன் அண்ணன் என்னை ஒரு மனுசியாகக் கூட மதிக்க மாட்டேன்கிறான்.. அவனை தூண்டும் கோல் நான் என்கிறான் தம்பி.. அவளறியாமல் பெருமூச்சு வெளியேறியது..
“ம்.. சரி.. கேட்டுப் பார்க்கிறேன்..” அரைகுறை மனதோடு சொன்னாள்..
சொல்லி விட்டாளே தவிர இந்த விவரம் எப்படி கணவனிடம் பேச ஆரம்பிக்க போகிறாளென தெரியாமல் விழித்தாள்.
மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தவனுக்கு உணவு பரிமாறியபடி அவன் முகத்தை பார்க்க அவன் தட்டை விட்டு தலையை நிமிர்த்தினானில்லை..
அதானே உனக்கு ராத்திரிதானே பொண்டாட்டி ஞாபகம் வரும்.. நல்லா கொட்டிக்கோ.. சோத்து சட்டியை சாய்த்து அவன் தட்டில் சோற்றை சரித்தாள்.. அவன் நிதானமாக அந்த சோற்றுக் குன்றை குழித்து.. “ரசம் ஊற்று..” என்றான்..
பகாசூரன் போல் முழுங்குவதை பார்.. பொறுமியபடி ரசத்தை ஊற்றியவள் வேறு வழியின்றி இரவுக்கு காத்திருந்தாள்..

What’s your Reaction?
+1
5
+1
2
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!