Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 10

10

மரித்து விட தோன்றும் போதெல்லாம்
மழை வந்து விடுகிறது
கூடவே நீயும்.. மயிற்பீலிகளோடு
குளிர ஆரம்பித்து விட்டது.

“காலையில் எழுந்து குளித்து முடித்து ரூமை விட்டு வெளியே வந்துடனும்.. ஆறுமணிக்கு வாசல் தெளித்து கோலம் போடனும்..” மகாராணியின் அடுத்த மாமியார் உத்தரவு..
ஆறுமணிக்கு வாசலில் கோலமிட வேண்டுமானால், அவள் ஐந்து மணிக்காவது எழுந்து கொள்ள வேண்டும், நடு இரவு கடந்த பிறகும் அவளை விட மனமில்லாது தழுவிக் கிடக்கும் கணவனின் மோகத்திலிருந்து அதிகாலை பிரிந்து எழ மிக சிரமப்படுவாள் மைதிலி, சற்று அவள் நகர்ந்தாலும் போதும் அவளை மீண்டும் தனக்குள் இழுத்துக் கொள்வதிலேயே குறியாக இருப்பான் பரசுராமன்.. மனமும், உடலும் வலிக்க போராடி அவனிடமிருந்து பிரிந்து, குளித்து வாசலுக்கு வருவதற்குள் மைதிலிக்கு வியர்த்து வழிய ஆரம்பித்து விடும்.
முற்றத்தின் ஓரம் எடுத்து வைக்கப்பட்டிருந்த சாணத்தை வாளி நீரில் கரைத்து, வாசல் தெளித்தாள்.. அழகான நெறி கோலமொன்றை வாசலில் இழுத்தாள்.. ஆரம்பிக்கும் போது இதன் முதல் தெரிந்ததுதான்.. ஆனால் இப்போது அதன் அடியும், நுனியும் தெரியாது ஒன்றோடொன்று சிக்கிக் கொண்டுள்ளதே.. நான் சிக்கித் தவிப்பது போல்.. போட்டு முடித்த தன் கோலத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தவள் அதனை உணர்ந்தாள்.. யாரோ தன்னைக் கவனிப்பதாக..




விருட்டென தலை உயர்த்தி எதிர் வீட்டை பார்த்தவள் விதிர்த்தாள்.. அந்த வீட்டின் வாசல்படியில் நின்று இவளையே பார்த்தபடி நின்றிருந்தாள் வந்தனா.. அவள் கண்கள் நெருப்புக் கோழியாக ஒளிர்ந்து கொண்டிருந்தன.. ஆவேச மூச்சு விட்டுக் கொண்டிருந்தது அவள் நெஞ்சம்..
இவளா.. இவள் எப்படி இங்கே வந்தாள்..? அபத்தமாக நினைத்துவிட்டு அது அவள் வீடு என உணர்ந்து தன் பார்வையை தழைத்துக் கொண்டு எழுந்து வீட்டினுள் போக திரும்பினாள் மைதிலி..
“நில்லு..” அவள் வீட்டு முற்றத்திலிருந்து தெருவுக்கு வந்திருந்தாள் வந்தனா.. ஜல் ஜல்லென சத்தமிட்டான அவள் கொலுசுகள்.. விடிந்தும் விடியாத அந்த அரை இருட்டு நேரத்தில் வந்தனா அப்படி கொலுசு சப்தத்தோடு வந்தது ஏதோ மோகினிப் பிசாசு நடமாடுவது போல் மைதிலிக்கு தோன்றியது.. அதைவிட இன்னும் ஓர் பாதிப்பு அவள் மனதில்..
இரண்டு நாட்களுக்கு முன் அவள் கால் கொலுசுகளை வருடிய பரசுராமன் முத்துக்களற்று வெற்று சங்கிலியாய் இருந்த அவள் கொலுசுகளை பார்த்து.. “நீ சலங்கை கொலுசுகள் போட்டுக் கொள்வதில்லையா..?” எனக் கேட்டான்.
“எனக்கு அந்த சத்தம் பிடிக்காது..” சுள்ளென்று கூறி தன் கால்களை அவன் கையிலிருந்து இழுத்துக் கொண்டாள் மைதிலி..
இந்த.. இவள் சலங்கை வைத்த கொலுசு போடக் காரணம்.. மேலே எதையும் யோசிக்க அவள் மனது பயந்தது இல்லை கண்டபடி யோசிக்காதேடி.. அப்படியெல்லாம் இருக்காது.. தன் மனதை தானே அவள் அதட்டிக் கொண்டிருந்த போது அந்த சலங்கை மோகினி அவளருகே வந்துவிட்டாள்..
இவள் முன் தலைகுனிந்து நிற்கக் கூடாது.. எனும் வைராக்யத்துடன் தன் உள் மன குறைபாடுகள், குழப்பங்களை மறைத்துக் கொண்டு, தெளிவான பார்வையுடன் அவளை நிமிர்ந்து பார்த்தாள்..
“என்னடி நினைத்ததை சாதித்து விட்ட திமிரில் நிமிர்ந்து நிற்கிறாயா..?”
“டி”யா.. மைதிலியின் மனம் சுருங்கியது.. இவள் முன்பு என்னை சந்தித்த பொழுதுகளிலெல்லாம் எவ்வளவு மரியாதையாக பேசினாள்.. எத்தனை “அக்கா” போட்டாள்.. இப்போது நடுத் தெருவில் வைத்துக் கொண்டு, ‘டி’ யா..
ஆத்திரம் மேலிட ஆட்காட்டிவிரல் நீட்டி ஆட்டினாள்.. 
“ஏய் மரியாதை.. அருணாச்சலம் அண்ணாச்சியின் மருமகளை எவளோ ஒருத்தி ‘டி’ போட்டு கூப்பிடுவதா..? ஒரு வார்த்தை என் மாமனாரிடம் சொன்னேன்னு வை.. உன் பல்லை தட்டிக் கையில் கொடுத்து விடுவார்..” திமிராகவே பேசினாள்..
வந்தனாவின் கண்கள் அடுப்பு கங்குகளாக எரிந்தன.. மைதிலி நிஜமாகவே அவள் கண்களிலிருந்து தீ நாக்கு வருவது போலவே உணர்ந்தாள்..
“அடியேய் திமிர் பிடித்தவளே.. என் தாய்மாமன் வீடுடி இது.. உன்னை விட எனக்குத்தான்டி இங்கே உரிமை அதிகம்.. சைக்கிள் செயின் மாதிரி ஒரு செயினை கழுத்தில் மாட்டிக் கெண்டதால் மட்டும் நீ இந்த வீட்டுக்கு உரிமைக்காரி ஆகிவிடுவாயா..?”
மைதிலி தன் கழுத்து தாலியை வெளியே எடுத்து போட்டுக் கொண்டாள்..
“நீ திருமணம் ஆகாத சின்னப்பெண் வந்தனா.. உனக்கு இந்த தாலியின் மகிமை தெரிய வாய்ப்பில்லை.. உன் கண்களுக்கு இது பவுனாகத்தான் தெரிகிறது போலும்.. எனக்கு இது என் கணவரின் அன்பாக, என் மாமனாரின் மரியாதையாக, எங்கள் குடும்பத்தின் கௌரவமாக தோன்றுகிறது.. உனக்கு இப்போது இது ஒன்றும் புரிபடாது.. நாளை வேறொரு வீட்டிற்கு நீ தாலி கட்டி போவாயே.. வேறு ஒருவன் உன் கழுத்தில் தாலி கட்டி உன்னை அவன் வீட்டிற்கு அழைத்துப் போய் விடுவானே.. அப்போது தெரியும் இந்த தாலி மகிகை..”
வந்தனாவின் கண்களில் சிகப்பு இப்போது முகம் முழுவதும் பரவியது.. தீச்சட்டி ஏந்தி நிற்கும் ஆக்ரோச பெண்ணாக அவள் அப்போது காட்சியளித்தாள்..
“எங்க இரண்டு குடும்பத்திற்கிடையேயும் பேச்சுவார்த்தை இல்லையென்ற தைரியத்தில்தானே இப்படி பேசுகிறாய்.. சொந்தங்களின் சண்டை எத்தனை நாளைக்கு..? என் அம்மா என் மாமாவிற்கு ரொம்ப பாசமான தங்கை அவர்களின் சண்டை வெகுநாட்கள் நீடிக்காது.. சீக்கிரமே எங்கள் சண்டை முடிந்து, நான் திரும்பவும் 
என் மாமன் வீட்டிற்குள் வரத்தான் போகிறேன் பார்க்கிறாயா..?”
“வா வந்தனா.. நிச்சயம் நீ வர வேண்டும்.. அப்படி நீ வரும் போது, உன் தாய்மாமன் வீட்டு மூத்த மருமகளாக, உன் அத்தானின் மனைவியாக நான்தான் வாசலில் நின்று உனக்கு ஆரத்தி எடுப்பேன்..”
வந்தனா எரிமலைக் குழம்பானாள், வாய் பேச்சை நிறுத்தி விட்டு கை நீட்டிவிடலாமா.. என அவள் யோசிப்பது நன்றாக தெரிய, மைதிலி முன்னெச்சரிக்கையாய் பின்னால் நகர,
“யாரும்மா அது வாசலில்..?” கர்ஜிப்பாய் பின்னால் குரல் கேட்டது..
“மாமா..” அநிச்சையாய் உதடசைத்து முகம் வெளுத்த வந்தனா, சட்டென தன் கொலுசுகள் ஜலீரிட தன் வீட்டிற்குள் ஓடி மறைந்தாள்..
“யார் கூடம்மா பேசிக் கொண்டிருந்தாய்..?” கேட்டபடி வந்து நின்ற மாமனாரை திருப்தி புன்னகையோடு பார்த்தாள்..
“யாரோ மாமா.. ரோட்டில் போகிறவர்கள்.. அட்ரஸ் கேட்டார்கள்.. காட்டினேன்..” விளக்குமாறோடு வீட்டினுள் போன மருமகள் பின்னேயே போன அருணாச்சலம், அவர்கள் வீட்டின் நடுக்கூடத்தை அடைந்ததும்..
“நில்லும்மா..” என அவளை நிறுத்தினார்..
“ஏய் மகா..” கத்தினார்.. அந்தக் கத்தல் அவரது மனைவி மகாராணிக்காக மட்டுமானதாக இருக்கவில்லை.. வீட்டு உறுப்பினர்கள் அனைவரையும் நடு வீட்டிற்கு இழுத்து வந்தது..
“என்னங்க.. என்ன விசயம்..?”
“இங்கே என் பக்கத்தில் ஒரு சேரை கொண்டு வந்து போடுடி..” மனைவியை ஏவினார்..
மகாராணி புரியாமல் அருணாச்சலத்தின் சேருக்கு அருகில் மற்றொரு சேரைக் கொண்டு வந்து போட்டாள்.. அந்த கூடத்தில் காலை நேரத்தில் அருணாச்சலம் 
மட்டுமே சேர் போட்டு உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்.. அப்படியே அவரிடம் விபரம் கேட்டு வரும் தனது மகன்களுக்கு, வேலையாட்களுக்கு, மனைவிக்கு என அனைவருக்கும் அன்றை வேலைகளுக்கான பட்டியலை சொல்வார்..
மகன்களிடம் தொழில் விபரங்களும், மனைவியிடம் வீட்டு விபரங்களும் பேசுவார்.. அவர் மிக நல்ல மூடில் இருக்கும் போதுதான் அவருடன் பேசுபவர்களை உடன் உட்கார்த்தி வைத்து பேசுவார்.. மற்றபடி நின்றபடியேதான் அனைவரும் பேசிச் செல்வார்..
இன்று மனைவி கொண்டு வந்து போட்ட சேரை தனது மேல் துண்டினால் ஒரு தட்டு தட்டி சுத்தம் செய்தவர்,
“அம்மாடி இதில் உட்காரு தாயி..” என்றார் மைதிலியிடம்..
மைதிலியின் விழிகள் கோளமாயின.. இமைக்க மறந்து நிலைத்தன..
“மாமா..” திக்கி திணறினாள் அவள்..
“என்னைப் பெத்த ஆத்தா மாதிரி நீ தாயி.. இதுல உட்காரு..”
மைதிலி சங்கடமாக உணர்ந்தாள்.. அதற்குள் குடும்பத்தினர் அனைவரும் கூடிவிட, அந்த சேரில் அமர முடியாமல் தவித்து கால் மாற்றி நின்றாள்..
“மகா காபி கொண்டு வா.. போ.. ஒரு ஸ்பூன் சீனி ஜாஸ்தியா போடு..” மனைவியை விரட்டினாள்.. மகாராணி வியந்த விழிகளால் பார்த்தபடி போனாள்..
“உட்காரு தாயி..” மீண்டும் அருணாச்சலம் உபசரிக்க..
“எனக்கு அடுப்படியில் வேலை இருக்குது மாமா..” தயங்கி பேசி அந்த இடத்தை விட்டு ஓடுவதில் குறியாக இருந்தாள் மைதிலி..
“அட வேலை கிடக்கட்டும்மா.. பொழுதன்னிக்கும் இருக்குறதுதான்.. இன்னைக்கு எங்கூட உட்கார்ந்து ஒரு வாய் காபி குடி தாயி..” சொன்னதோடு மருமகளின் கையை பற்றி சேரில் அவளை அமர வைத்தார்..




மகாராணி இரண்டு டம்ளர்களில் காபி கொண்டு வர, ஒன்றை தான் எடுத்துக் கொண்டு, மற்றொன்றை அவள் கையில் கொடுத்தார்.. தானும் அவளருகே அமர்ந்து கொண்டார்..
“காபி குடி தாயி..”
விரல்கள் நடுங்க காபி டம்ளரை பிடித்தபடி மெல்ல குடிக்க ஆரம்பித்தாள் மைதிலி..
“என்ன எதுக்கு உங்க மருமகளுக்கு இப்போ இந்த உபசரிப்பு..” மகாராணி கேட்க, அருணாச்சலம் மீசையை முறுக்கினார்..
“என் மருமகள்டி கொஞ்ச நேரம் முன்பு வீட்டு வாசலில் என் குல பெருமையை, நம் வீட்டு கௌரத்தை எப்படி கட்டிக் காத்தாள் தெரியுமா என் மருமகள்..? என் வீடு, என் கணவன், என் மாமனார்னு எவ்வளவு உரிமை, எவ்வளவு பெருமை..”
மாமனார் பேசப் பேசவே அவர் தானும், வந்தனாவும் வாசலில் பேசிக் கொண்டவற்றைக் கேட்டுவிட்டார் என அறிந்தாள் மைதிலி.. ஆனால் தங்கை மகளை பேசியதற்கு கோபப்படாமல், சந்தோசப்படுகிறாரே.. மைதிலிக்கு ஆச்சரியம்..
“படித்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வேண்டாம்.. வீட்டோடு ஒத்துப் போக மாட்டான்னு நீங்க எல்லோரும் இவுங்க கல்யாணத்தை எந்த அளவு எதிர்த்தீங்க.. இப்போ பாருங்க, என் மருமகள்.. நான் தேர்ந்தெடுத்த என் மருமகள், என் தேர்வு சோடை கிடையாது.. நான் உங்கள் குலவிளக்குன்னு நிரூபிச்சிட்டா..”
இப்போது மாமனாரின் பேச்சு கள்ளிச்செடி பாலாய் மைதிலியினுள் சொட்டு சொட்டாக விழுந்தது.. ஆக அவள் இந்த வீட்டிற்கு மருமகளாக வருவதை அனைவருமே எதிர்த்திருக்கிறார்கள்.. இதில் ரவீந்தர் மட்டுமே அவளது நன்மைக்காக இந்த திருமணத்தை எதிர்த்தவன்.. மற்ற அனைவருமே அவரவர் சுயநலத்திற்காக என் வாழ்வோடு விளையாடியவர்கள்..
மைதிலி குனிந்து தன் டம்ளரின் மேல் விளிம்பை விரலால் வட்டமிட்டபடி அமர்ந்திருந்தாள்.. கொதித்துக் கொண்டிருக்கும் அவள் மனதை யாரும் அறியவில்லை..
“என்னதான் நடந்தது..? அப்படி உங்க மருமக என்ன காரியம்தான் செய்தாள்..? கொஞ்சம் புரியும்படிதான் சொல்லுங்களேன்..” மகாராணியின் குரலில் எரிச்சல் இருந்தது..
“உஷ்..” உதட்டில் விரல் வைத்து அனைவரையும் அடக்கினார் அருணாச்சலம்..
“அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு..? அது நானும் என் மருமகளும் மட்டும் அறிந்த விசயம்.. யார்கிட்டயும் சொல்லாதே தாயி..” குரலை குறைத்து மருமகள் பக்கம் சாய்ந்து பேசியவர் பின் தலை நிமிர்த்தி கடகடவென சிரித்தாள்..
“ம்க்கும் பெரிய மர்மம்தான்.. மாமனாரும் மருமகளும் ரொம்பத்தான் அலட்டுறாங்க.. டேய் வாய் பார்த்துட்டு நிக்காமல் போய் வேலையை பாருங்கடா..” கணவன் மேல் வந்த எரிச்சலை மகன்களுக்கு மாற்றிவிட்டு மகாராணி போனாள்..
“வாழ்த்துக்கள் அண்ணி..” கல்யாணசுந்தரம் எப்போதும் போல் கூடத்து தூண் அருகே, நகர்ந்து தள்ளி நின்று கொண்டு வாழ்த்து தெரிவித்து போனான்..
“கங்கிராட்ஸ் மைதிலி..” ரவீந்தர் முன்னால் வந்து அவள் கைகளை பிடித்து குலுக்கினான்..
“ஏய் அண்ணின்னு கூப்பிடு..” மகாராணி உள்ளிருந்து எச்சரிக்க அவன் அலட்சியமாக உதடு சுளித்து போனான்.. மைதிலியை அண்ணி என்று வலியுறுத்தியபடி இருக்க, அவன் பிடிவாதமாக மைதிலி என்றே கூப்பிட்டு வந்தான்.
“அப்படி என்னடி செய்தாய்..? யாரிடம் என்ன பேசினாய்..?”
காலை உணவு முடிந்து பின்புறம் கைகழுவ வந்த பரசுராமன் அவளிடம் விசாரித்தான்.. அவன் அருணாச்சலம் அவளை பாராட்டிய நேரத்தில் அங்கேதான் நின்றிருந்தான்.. மைதிலியின் முதுகுக்கு பின்னால் நின்றிருந்ததால் அவனை உணர்ந்தாலும் அவன் முக உணர்வுகளை மைதிலியின் அறிய முடியவில்லை..
ஆமாம் மூஞ்சியை பார்த்துட்டா மட்டும்.. அது அப்படியே உணர்ச்சியை கொட்டிடப் போகுதாக்கும்.. எப்போதும் போல் கருங்கல்லாத்தான் இருக்கும் என நினைத்தபடி அப்போது அமர்ந்திருந்தாள்..
பரசுராமனுக்கு எப்போதுமே அவர்கள் படுக்கை அறைக்குள் நுழைந்ததும் தான் மனைவியின் நினைவு வரும்.. அவள் அறைக்குள் வந்து கதவை பூட்டியதுமே ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் அவளை தன் கைகளுக்குள் இழுத்துக் கொள்ள துடித்திருப்பான்.. ஆனால் காலை அறையை விட்டு வெளியே வந்ததுமே, யாரடி நீ..? உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேனே.. எனும் யோசித்தல் பார்வை பார்ப்பான்..
புதுமனைவிக்கான ஒரு பிரத்யேக பார்வை, ஒரு தனிப்பட்ட ஜாடை, வித்தியாசமான வார்த்தை என்ற எதுவும் அவனிடம் இருக்காது.. அவளை நிமிர்ந்து 
பார்க்க மாட்டான்.. ஒரு வார்த்தை பேசமாட்டான்.. அப்படிப்பட்டவன் இன்று தன்னிடம் பேசியது மைதிலிக்கு ஆச்சரியத்தை தந்தது..
வானில் தெரிவது சூரியனா..? நிலவா..? என அண்ணாந்து பார்த்தாள் அவள்.. நிலவு வந்த பிறகுதானே அவள் கணவனுக்கு மனைவி ஞாபகமும் வரும்.. கூடவே மனைவி மேல் காதலும்.. ச்சீ ச்சீ இல்லை காமமும்.. வெறுப்புடன் நினைத்தவள், கணவனுக்கு கை துடைக்க துண்டினை எடுத்து நீட்டியபடி அவன் கண்களை சந்தித்தாள்..
எதிர்பார்ப்பு தளும்பியிருந்தது அவன் கண்களில்.. அவ்வளவு நிச்சயமா.. இவன் கேட்டதும் நான் பதில் சொல்லி விடுவேனென, வெட்டும் பார்வை ஒன்றை அவன்புறம் செலுத்தியவள் மின்னலாய் விழியசைத்தாள்..
“அதனை உங்கள் அப்பாவிடமே கேட்டுக் கொள்ளுங்களேன்..” கிள்ளையாய் தலை சாய்த்து மிழற்றினாள்..
முதலில் திகைத்த பரசுராமனின் விழிகளில் பிறகு சிறு மெச்சுதல் வந்தது.. தலையசைத்துக் கொண்டான்..
“வித்தாரக் கள்ளிடி நீ..” ஈரத்தை துடைக்காத தன் கையை அப்படியே அவள் கன்னத்தில் அப்பி கொத்தாக கன்னத்தை பற்றிக் கிள்ளினான்.. பிறகு போய்விட்டான்..
மைதிலி ஈரம் படர்ந்த தன் கன்னத்தை தடவியபடி அங்கேயே நின்றிருந்தாள்.. இன்னும் பின்னாடி என்ன செய்கிறாய்..? என்ற மகாராணியின் குரல் கேட்கும் வரை..

What’s your Reaction?
+1
4
+1
2
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
lavanya
lavanya
4 years ago

mam update next episode ,plzzz…

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!