kadak katru kadal katru Serial Stories

Kadal Kaatru – 10

                                              10 

 

சிறிது நேரத்திற்கு முன் வரை சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த மனிதன் இவன்தானா ? என்ற சந்தேகம் வந்த்து சமுத்ராவிற்கு .

விநாடிக்குள் எவ்வளவு மாற்றம் ? சிவந்த அவன் கண்களின் தீட்சண்யம் இவள் கைகளை நடுங்க வைத்தது .

ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தான் .” என் வீட்டிற்குள் வந்த பிறகு என் அனுமதியின்றி யாரும் வெளியேற முடியாது ” தாழ்ந்த குரல்தான் .ஆனால் அதனை அவன் கூறிய விதம் ….

பயத்தில் உலர்ந்த தொண்டை நனைக்க எச்சில் விழுங்கிய சமுத்ராவின் முகம் பார்த்தவன் நொடியில் மீண்டும் முக பாவனை மாற்றிக் கொண்டான் .

,” அட என்னங்க மேடம் , நீங்க எங்க ஊரை பத்தி உங்க பத்திரிக்கையில் போட்டு அதனால் எங்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்குமுன்னு பார்த்தா இப்படி பாதியில உட்டுட்டு போறேன்னு சொல்லுறீகளே …” என்றான் அந்த மீனவ மக்கள் பேச்சு பாணியில் .

இப்படி நொடிக்கு நொடி மாறுவேடம் பூண்டானென்றால் இவனை எந்த கணக்கில் சேர்ப்பது .மனதிற்குள் அலுத்து  கொண்டாள் .

” ஆமாம் இந்த மக்களுக்காக ஏதாவது செய்யத்தான் போகிறேன் .ஆனால் அதற்கு உங்கள் விபரங்கள் எதுவும் எனக்கு தேவையில்லை ” இவர்களின் பிரச்சினைக்கு காரணமே இவனாக இருக்கும் போது இவன் மூலம் கிடைக்கும் விளக்கங்கள் எந்த அளவு தனக்கு உதவும் ? என்ற எண்ணத்திலேயே இப்படி கூறினாள் சமுத்ரா .

ஆனாலும் அவளுக்கும் வெளியே தங்குவது ஒத்து வராதே ..செண்பகத்தின் பேச்சை மனதினுள் அசை போட்டபடி நிமிர்ந்தபோது அவன் அவளுக்கு மிக அருகில் நின்றான் .

இவனெதற்கு இப்போது இப்படி இடிப்பது போல் வந்து நிற்கிறான் முக சுழிப்புடன் விலக எண்ணியபோது அவளை நோக்கி குனிந்தவன் மெல்லிய குரலில் ” லாவண்யா  பற்றிய விபரங்கள் எதுவும் உனக்கு வேண்டாமா ?..ம் …” என்றான் .

விழிகள் விரிய திகைத்து நின்றாள் சமுத்ரா .ஆக இவள் லாவண்யாவிற்காக இங்கே வந்திருப்பதை இவன் அறிந்து கொண்டான் .முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என எண்ணியவள் ஏதோ திடீரென தோன்றி விட்ட அசட்டு துணிச்சலுடன் அவனை நோக்கினாள் .

” கண்டிப்பாக வேண்டும் .அவளை பற்றி அறியாமல நான் இங்கிருந்து போக மாட்டேன் ” உறுதியாக கூறினாள்.

” உனது முயற்சிக்கு வாழ்த்துக்கள் ” என்ற அவனின் குரலில் என்ன இருந்த்து .சமுத்ரா கணிப்பதற்கு ள் உள்ளே நடந்து விட!டான்  அவன் .

இரவு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கையில்தான் உடனே கிளம்ப வேண்டும் என நின்றவளை இப்போதைக்கு கிளம்ப மாட்டேன் என என் வாயாலேயே சொல்ல வைத்தானோ ? என தோன்றியது . 

எப்படியும் இருந்து விட்டு போகட்டும் என்னால் லாவண்யா பற்றி அறியாமல் இங்கிருந்து போக முடியாதுதானே .நல்லவேளை அவன் போவென்று சொன்ன பின்னும் இருக்கிறேனே என கெஞ்சிக் கொண்டிருக்கும் நிலை எனக்கில்லை .இந்த நினைவிலேயே திருப்தியடைந்து உறங்க தொடங்கினாள் .

மறுநாள் அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட , எழுந்து அவள் அறை சன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தபடி இருந்தாள் .இன்னமும் இருள் பிரியவில்லை .தூரத்தில் கடல் அலைகளின் ஓசை .அந்த ஓசையும் , இந்த இருட்டுமாக ஏதோ ஒரு விதமான சூழலை உருவாக்கிய போதும் அது சமுத்ராவிற்கு ரசிக்க தக்கதாகவே இருந்த்து .

இந்த இத்த்தை முழுவதுமாக அனுபவிக்க வெளியே செல்ல எண்ணினாள் .ஆனால் வாசல் கதவு பூட்டியிருக்கும்.சாவி செல்வமணி கையிலிருக்கும் .அவள்தான் காலை ஆறு மணிக்கு எழுந்து கதவை திறப்பாள் .அது வரை யாரும் எழுந்து வெளியே போக முடியாது .

ஒரு நிமிடம் யோசித்்தவள் சட்டென அந்த சன்னல் கதவுகளை திறந்து அதன் வழியாக தோட்டத்தினுள் இறங்கி விட்டாள் .வெளியே வரவும் ஜில்லென்ற கடற்காற்று சுகமாக உடலை வருடியது .

வெளியே இவ்வளவு அடிக்கும் காற்று உள்ளே வருவேனா என்கிறதே .எவ்வளவு புழுக்கம் உள்ளே .சுடிதார் கழுத்தை சற்று தூக்கி விட்டு காற்று வாங்கியபடி நடந்தவள் காதுகளில் புல்லட் சத்தம் கேட்டது .




புல்லட் ஓட்டுவது யோகேஷ்வரன் தான் .இது அவனாகத்தான் 
இருக்க வேண்டும .இவ்வளவு அதிகாலையலேயே திரும்பி விடுவானா என்ன ? ….இன்று யாரையோ சந்திக்க வைப்பதாக சொன்னானே ….அந்த விபரம் இப்போது கேட்போமா ?…்வேண்டாமா ?….

நேற்று இரவு தோட்டத்தில் பேசிபிறகு இரவு உணவுக்கு இவள் வருமுன்பே அவன் தோப்பு வீட்டிற்கு போய்விட்டிருந்தான். அவ்வளவு அவசரமா அவளை பார்ப்பதற்ற்கு என சமுத்ரா கசப்புடன் நினைத்தாள் .

ஒரு வேளை அவன் இரவு முழுவதும் இன்பமாக கழித்து விட்டு வந்திருக்கும் இப்போது அவளுக்கு பதில் சொல்ல விரும்ப மாட்டானோ  ?யோசித்தபடி ஒதுங்கி நின்று பார்க்கும் போது , வில் போன்ற நிமிர்வுடன் புல்லட்டில் அமர்ந்தபடி , காவலாளி வெளி வாசல் கதவை திறக்க உள்ளே வந்தான் யோகேஷ்வரன்.

அவன் இறங்கவுமே மிக பணிவுடன் கைகளை கட்டியபடி ஒருவன் வெளியிலிருந்து உள்ளே வந்து நின்றான். யோகேஷ்வரன் அவனிடம் சிறிது கோபமாக ஏதோ கேட்டான் .அவன் பணிவாக கைகளை கூப்பியபடி பதிலளித்தான் .

இவன் ஒற்றை விரலை ஆட்டியபடி எதற்கோ அவனை எச்சரிக்க அவன் தலையை ஆட்டி …ஆட்டி சம்மதித்தான் .

யாரிவன் ? பார்த்த மாதிரி தெரிகிறானே .சற்று முன் நடந்து வந்து வீட்டின் முன்புற விளக்கு வெளிச்சத்தால் அவனை உற்று நோக்கினாள் சமுத்ரா .

அவன் சாயாதேவியின். கணவன் .செல்லியின் தகப்பன் .இப்போது சமுத்ராவற்கு புரிந்து விட்டது .நேற்று அவள் முன்  நடந்து விட்ட சம்பவத்திற்காக பாவம் இந்த எளிய மனிதன் தன் முதலாளியின் முன் கூனி குறுகி நிற்கிறான் .

அநியாயத்தை பார் .தவறு இவன் முதலாளியின் மீது .கைகட்டி தலை குனிபவன் இவன் .சற்றுமுன் யோகேஷ்வரனுடன் பேசலாம் என்றிருந்த சமுத்ராவின் இலகு நிலை இப்போது மாறியது .

செல்லியின் தகப்பன் இன்னும் சிறிது நேரத்தில் இவன் காலை பிடிக்கத்தான் போகிறான் என எண்ணும் போதே அவன் அதற்காக குனிந்து விட்டான்.

பாதியில் அவனை தடுத்த யோகேஷ்வரன் அவன் தோள்களை தட்டி அவனை தன்னோடு சேர்த்து கொண்டான் .பிறகு தன் சட்டை பையிலிருந்து கற்றையாக பணத்தை எடுத்து நீட்டினான் .

அவன் கைகளை கட்டிக் கொண்டு மறுக்க கட்டாயப்படுத்தி அவன் கைகளில் திணித்தான் .அவன் மீண்டும் இடை வரை குனிந்து முதலாளியை வணங்கி விட்டு , வெளியேறினான் .

வீட்டினுள்ளே நுழைய தன் சட்டைப் பையிலிருந்த சாவியை எடுத்தபடி நிமிர்ந்த யோகேஷ்வரன் தன் முன் வந்து நின்ற சமுத்ராவை கண்டதும் ஆச்சரியமானான் .

” ஏய் தூங்கவில்லையா நீ ? அதற்குள்ளா  விழித்து கொண்டாய் .?” ஆச்சரியமாக கேட்டான்.

” அவருக்கு எதற்காக பணம் கொடுத்தீர்கள் ? “

” யாருக்கு ? ” மிகுந்த  கவனம் அவன் குரலில் .

” செல்லியின் அப்பாவிற்கு …எதனை மறைக்க அவருக்கு பணம் கொடுத்தீர்கள் ?”

கைகளை குறுக்காக கட்டிக் கொண்டு இன்னும் திறக்காத கதவின் மேல் இலகுவாக சாய்ந்து நின்றபடி அவளையே பார்த்தான் .

அவனது அந்த அலட்சிய பாவனை ஆத்திரத்தை ஊட்ட ” நீங்கள்  தப்பு பண்ணுகிறீர்கள் ? அதனை நான் கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் ” உறுதியாக கூறினாள் .

” ம்ஹூம் ….” என கிண்டலாக ராகமிழுத்து விட்டு அவள் முறைக்கவும் ,தனது இலகு தன்மையை கைவிட்டு , முகத்தில் ஒரு அவசர உணர்வை கொண்டு வந்தான்.

” ஆமாம் கதவு பூட்டியிருக்கிறது .சாவி செல்லாவிடம் இருக்கும் .கண்டிப்பாக உனக்கு அவள் கதவை திறந்து விட்டிருக்க மாட்டாள்.எப்படி வெளியே வந்தாய் ?” அவன் கேட்ட விதமே நீ வெளியே வந்த வழி எனக்கு தெரியும் என கூறியது .

” இந்த வீட்டு முதலாளி இங்கே அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார் .அவர் அறியாமல் ஒரு ஈ எறும்பு கூட உள்ளே வரவோ , வெளியே போகவோ முடியாது தெரியுமா ? ஏனென்றால் அவர் இரவும், பகலும் இங்கேயே தங்கி கண்காணித்து கொண்டேயிருப்பாரே .”

வேண்டுமென்றே அவனது ராத்தங்கல்களை குத்திக்காட்டி பேசினாள் .கோப்படுவானென எதிர்பார்க்க பின்புறம் தலை சாய்த்து சிரித்தான் அவன் .

” உனக்கு ரொம்ப  தைரியம் .என்னிடமே என்னை பேசுகிறாயா ? என்றபடி கதவை திறந்தான் .

” உன் ரகசிய வழியை பிறகு பார்த்து கொள்ளலாம்.இப்போது இந்த வழியாகவே வா ” உள்ளே நுழைந்தான்.

” அந்த ஓர சன்னலின் நுனியில் ஒரு ஆணி நீட்டிக் கொண்டிருக்கும் சமுத்ரா .பார்த்து கவனம் ” என்றான் முன்னே நடந்தபடி .

முன் சென்ற அவன் முதுகை வெறித்தவள் ” எனக்கு தெரியும் ” வெடுக்கென கூறிவிட்டு தன் அறையினுள் சென்றாள் .

காலை உணவை அவனோடு சேர்ந்து உண்ண மனமற்று மறுத்துவிட்டு அடுப்படிக்கு சென்று தண்ணீர் மட்டும் அருந்தானாள் ்வழக்கம் போல் அந்த தண்ணீர் ஜாடியின் அழகை ரசித்து மெல்ல அதனை வருடினாள் .

வந்த அன்று இந்த ஜாடியை பற்றி செண்பகத்திடம் போனில் கூற அவள் மிக ஆர்வமாக இவளிடம் அது எப்படி ? …என்ன …? ஏன் ? …என விசாரித்து கொண்டிருந்தாள். அங்கே அது போல் எத்தனை ஜாடிகள் உள்ளது என்று கூட கணக்கு கேட்டாள் .

ஜாடியை வருடிய சமுத்ராவின் கைகள் பட்டென தட்டி விட பட்டன .

” இந்த கலரடிக்க எனக்கு இரண்டு மாசமாச்சு .நீ என்னன்னா தேய்ச்சு தேய்ச்சு எடுத்து விடுவாய் போலவே ” என்றாள் மேகலை .

” என்ன இந்த பெயின்ட்டிங் நீ பண்ணினாயா ? ” உண்மையா மேகலை ? மிக அழகாக இருக்கிறதும்மா ” உண்மையாக பாராட்டினாள் .




நிஜம்மாகவே அந்த பெயின்டிங் மிக அழகாகவே இருந்த்து .ஒரு சிறிய பாராட்டு போதும் ஒரு பெண்ணின் கவனம் கவர.சமுத்ராவின் பாராட்டு மேகலையை குளிர வைத்தது ்

” இது மட்டுமில்லை .அங்கே ஹாலில் இருக்கிறது .இன்னும் மாடியில் இருக்கும் ரூமுக்குள் இருப்பது  எல்லாத்துக்கும் இதே மாதிரி கலர் போட்டிருக்கேனாக்கும் ” என்றாள் பெருமிதமாக .

” ஆமாமா நல்லா தின்னுட்டு தின்னுட்டு சும்மாதான இருக்கா .இந்த கலரை கூட அடிக்கலைன்னா எப்படி ? ” நீட்டி முழக்கியபடி வந்தாள் செல்வமணி.

” நான் தின்னுட்டு சும்மா இருக்கேனா ? அப்போ  நீங்கெல்லாம் என்ன மம்மட்டி எடுத்து வெட்டுறீகளோ ?” சிலிர்த்தாள் மேகலை .

” ஏய் பாத்துடி ரொம்ப ஆட்டாத ..உன் உச்சாணி கொம்பு உடைஞ்சிட போகுது ” அலட்சியமாக பேசியபடி அங்கே சுட்டு அடுக்கியிருந்த பூரிகளில் இரண்டை கையிலெடுத்து வதக்வதக்கென  வெறும் வாயில் மெல்ல துவங்கினாள் செல்வமணி.

” பாருங்க்க்கா …இங்கே தின்னு   தின்னு  பெருத்து  போயி இருக்கிறது யாருன்னு ? ” என சமுத்ராவையும் தன்னுடன் கூட்டு சேர்த்து கொண்டு தன். கைகளை விரித்து குண்டு என செல்வமணியின் உடல்வாகை காட்டினாள் மேகலை .

அட இந்த வாயாடி பெண்ணா தன்னை அப்படி அக்கா என பாசமாக அழைத்தது ? தன் கைகளை கிள்ளி பார்த்துக் கொண்டாள் சமுத்ரா காண்பது கனவல்ல என உறுதிப்படுத்திக் கொள்ள .

” ஏய் நானாடி தின்னு  பெருத்து  போயிருக்கிறேன் .என் உடம்பு வாகு அப்படி கொஞ்சம் சாப்பிட்டாலும் அப்படியே உடம்புல ஒட்டிக்கிடுது .வஞ்சனையில்லாத ஒடம்புடி எனக்கு .நீ வினயம் புடிச்சவ …அதான் யாருக்கும் தெரயாம நீ சட்டி சட்டியா ஆக்கி தின்கிறதெல்லாம் போற எடம் தெரியாம இப்படி ஈர்க்குச்சியாட்டம் இருக்க ” பேச்சோடு பேச்சாக அடுத்த பூரியை செல்வமணியின் கை எடுத்திருந்த்து .

மேகலை மெல்ல சமுத்ராவின் இடுப்பில் தனது முழங்கையால் இடித்து செல்வமணியின் செய்கையை காட்டி தன் வாய் நிறைய காற்றை ‘ ஊப் ” என ஊதிக்  காட்டினாள் .

இதனை கண்டுவிட்ட செல்வமணி கையிலிருந்த பூரியை தட்டில் போட்டுவிட்டு மேகலையின் கையை அழுத்தி பிடித்தாள் .” ஏன்டி சின்னகழுதை உனக்கு போனா போகுதுன்னு ஒண்ட  இடம் கொடுத்தா  நீ என்னையே நக்கலும் ,நையாண்டியும் பண்ற ?” உலுக்கினாள் .

சத்தம் கேட்டு வந்த புவனாதேவி ” ஏன்டி பொழுது விடிஞ்சதும் ஆரம்புச்சுடுவீகளோ உங்க சண்டையை .சேச்சே…இதென்ன வீடா ? மீன் மார்க்கெட்டா ? ” என்றாள்

” ஆஹா வாங்க மீன்காரம்மா …உங்க மீன் விக்கிற கதைக்குத்தானே நாங்க காத்துக்கிட்டிருக்கோம் ” செ ல்வமணி மேகலையின் கையை விட்டுவிட்டு உற்சாகமாக புவனாதேவி பக்கம் திரும்பினாள்.

” யாருடி மீன்காரி …?” புவனா ஆக்ரோசமாக…

” அப்போ  அது நீங்க இல்லையா பெரியம்மா …?” அப்பாவியாய் விழி விரித்தாள் மேகலை .

சமுத்ராவிற்கு தலையை எங்காவது கொண்டு போய் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்த்து .இன்னும் கொஞ்ச நேரம் நான் இங்கிருந்தால் எனக்கு நிச்சயம் மனநிலை பாதிப்படையும் என நினைத்தவள் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Preethi Subburathinam
Preethi Subburathinam
3 years ago

Where can i find the 1-9 episodes for this story

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!