gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/நாயினும் கடையேன் நான் (சிறுகதை 2)


ஒருநாள் செங்குத்துப்பாதியில் ஏறும் பொது, ஏற இயலாது தவித்த என் முன்னோர் நாயைத் தூக்கிர் விடும்படி தருமபுத்திரர் சொன்னதும், பாஞ்சாலியைப் போல உரக்கக் கத்தினான் சகாதேவன். “இந்த நாயைக் கொள்ள வேண்டும். இதனால்தான் பாஞ்சாலியை நாம் பிரியநேரிட்டது. ஒரு கல்லை எடுத்து என் முன்னோர் நாய் மீது வீசினான். அச்சமயம் கால் வழுக்கி அதல பாதாளத்தில் வீழ்ந்தான். உடனே அவன் உயிர் பிரிந்தது.

தருமபுத்திரர் தலையை ஆட்டியபடி, பீமனைப் பார்த்தார். பீமனும் என் முன்னோர் நாயை வேண்டா விருப்பாகத் தூக்கிவிட்டான். நன்றியுடன் வாலை ஆட்டியபடி அவர்களைத்  தொடர்ந்தது என் முன்னோர் நாய்.

இதே மாதிரி சில நாள்கள் சென்றதும், நகுலனும், அர்ஜுனனும் என் முன்னோர் நாயைத் தூக்க மறுத்து, தம்பிகள், மற்றும் பாஞ்சாலியின் சாவுக்கு அதுதான் காரணம் என்று, தங்கள் நிலை குலைந்து, உணர்ச்சிப்பெருக்கில் வீரிட்டு, மலையிலிருந்து கீழே விழுந்து மரித்தனர்.

தான் ஒன்றுமே செய்யவில்லையே, தர்மாத்மாக்களான பாண்டவர்களைப் பின்பற்றித்தானே செல்கிறோம், ஏன் தன்மீது இவ்வளவு வெறுப்பைப் பொழிகிறார்கள் என்று மனதுக்குள் அழுதது. அதன் கண்ணில் நீர் கசிந்தது. இருப்பினும், எடுத்துக்கொண்ட உறுதி பிறழாது தருமபுத்திரரையும், பீமனையும் பின்தொடர்ந்தது.

தருமர் தினமும் தனக்குக் கிடைக்கும் மிகவும் கொஞ்சமான உணவில் பாதியைப் பசி பொறுக்காத பீமனுக்கும், மீதி இருப்பதில் பாதியை என் முன்னோர் நாய்க்கும் அளித்து வந்தார். அவரும், என் முன்னோர் நாயும் மெலிந்து விலா எலும்பு தெரியும் கூடாக இளைத்துப்போனார்கள்.

மகாமேரு மலையின் உச்சியை நெருங்கிவிட்டார்கள். கடைசியில் மிஞ்சி இருந்தது ஒரே ஒரு செங்குத்துப் பாறைதான். அதில் ஏறி விட்டால் போதும். பீமனைக் கேட்க வேண்டாம், தானே தூக்கி விடலாம் என்ற முடிவை எடுத்த தருமர், “பீமா, நீ முதலில் ஏறிச் செல். நான் இந்த நாயைத் தூக்கிவிட்டுவிட்டு ஏறி வருகிறேன்!” என்றார். எங்கே பீமனைத் தூக்கச் சொன்னால் அவன் நாயில் மேல் ஏதாவது சொல்லி, மற்றவர்களுக்கு நேர்ந்த கதி அவனுக்கும் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கரிசனம் அவருக்கு.

“போதும் அண்ணா, போதும்! தம்பி மூவரும், பாஞ்சாலியும் விண்ணுலகுக்கு வர இயலாது தடுத்தது இந்த நாய்! இந்தக் கருமம் பிடித்த நாய் அவர்களைவிட உங்களுக்கு உயர்வாகிப் போனதா!” என்று வெறிபிடித்தவன் மாதிரி கத்திக்கொண்டே பாறையில் ஏறிய பீமனின் கை நழுவியது. உருண்டு பல்லாயிரம் அடிகள் கீழே உருண்டு விழுந்தான். மத யானைக்கு ஒப்பான அவன், எலும்புகள் சுக்கு நூறாக உடைந்து, தலை தேங்காய்போலச் சிதறி இறந்தான். அவனது உயிரும் உடலை விட்டு நீங்கியது.

தன் திட மனதில் சற்றும் மாறாத தர்மர், நாயைத் தூக்கிவிட்டார். தான் ஏற முயன்றபோது, பல தடவை வழுக்கி, வழுக்கிக் கீழே விழுந்தபோதிலும், அவர் எங்காவது பிடிப்பை ஏற்படுத்திக் கொண்டார்.

கடைசியில், அவரும், என் முன்னோர் நாயும் மகாமேரு மலையின் உச்சியை அடைந்தார்கள்.

அங்கே விண்ணவர் கோனான தேவேந்திரன் தன் உதவியாளனுடன், தன் விமானத்தில் காத்துக்கொண்டிருந்தான்.

“வரவேண்டும் யுதிஷ்டிரா! தர்மத்தின் திருவுருவே! உனக்காக என் தேர் காத்திருக்கிறது. விண்ணுலக்கு உன் பூத உடலுடன் செல்லலாம்!” என்று கனிவுடன் அழைத்தான்.

“வருகிறேன், வானவர் கோனே! என்னுடன் இவ்வளவு தூரம், திட சங்கல்பம் பூண்டு, மகாமேரு மலையின் மீது ஏறி இந்த நாய் வந்திருக்கிறது. இதையும்.என்னுடன் அழைத்து வர விரும்புகிறேன்.” என்று இனிய குரலில் இயம்பினார் தருமபுத்திரர்.






“என்னது, இந்த நாயையா? என்ன யுதிஷ்டிரா பேசுகிறாய்? வேள்விக்கு ஆகுதியாகக் கொடுக்கப் போகும் பொருள்களைப் பார்த்தாலே – இந்த நாய் பார்த்தாலே போதும், அவை ஆகுதியாகும் தகுதியை இழந்துவிடுகின்றன என்று சாத்திரங்கள் சாற்றுகின்றன. அப்படிப்பட்ட ஒரு இழிந்த ஞமலியை விண்ணுலகுக்கு எப்படி அழித்துச் செல்ல இயலும். தருமத்தை முழுதும் கற்றுணர்ந்த நீ இப்படிக் கேட்கலாமா, அல்லது நினைக்கக் கூடுவதும் தகுமோ? கலிபுருஷன் உன் மதியை மயக்கி விட்டானா?” என்று கேட்டான் இந்திரன்.

“தங்களை எதிர்த்துப் பேசுவதாகத் தாங்கள் எண்ணக்கூடாது, விண்ணவரில் சிறந்தவரே! பந்த பாசத்தத் துறந்து, திட சித்தத்துடன், தன்னலமின்றி எவன் மகாமேரு மலைமேல் எருகிறானோ, அவன் பூத உடலுடன் விண்ணுலகம் புகத் தக்கவன் என்று சாத்திரங்கள் பறைகின்றன. நானோ மனிதன். எனக்கு ஆறாம் அறிவான பகுத்தறிவு இருக்கிறது. எது அறம், எது நெறி என்று என்று உணரும் திறம் இருக்கிறது. எனவே நான் கற்று உணர்ந்து விண்ணுலக்கு வர உறுதி எடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.

“ஆயினும், ஆறாம் அறிவு இன்றி, பலராலும் பரிசுத்தம் அற்றது என்று வெறுத்து ஒதுக்கப்படும் இந்த ஞமலி திட உறுதி பூண்டு, என் உடன்பிறப்புகள், மனைவி இவர்களின் ஏச்சையும், பேச்சையும் பொறுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றி ஏறவும் அரிதான இம் மகாமேரு மலையின்மேல் ஏறி வந்திருக்கிறது.

“எனவே, என்னைவிட உயர்ந்து நிற்கிறது, இந்த ஞமலி. இதனுடன் ஒப்பிட்டால் நான் சிறியவனே. நாயிலும் கடையேன் நான். இதை நீங்கள் உங்கள் இரதத்தில் ஏற்றிக்கொள்ளவிட்டால், ஒரு ஆறறிவு அற்ற உயரின் உயர்வை உணர மறுத்தால், அப்படிப்பட்ட விண்ணுலகம் எனக்குத் தேவையில்லை. இப்பூவுலகே சிறந்தது!” என்று உறுதியாகப் பதிலிறுத்தார் தருமபுத்திரர்.

அதைக்கேட்ட என் முன்னோர் நாயின் மனம் பூரித்தது.

“உதிஷ்டிரா, உன் கூற்றை ஏற்றுக்கொள்கிறேன். இன்னும் ஒரு கேள்வி. அதற்கான காரணத்தை அறநெறியின் மூலம் விளக்குவாயாக! உனது தம்பியர் நால்வரும், பாஞ்சாலியும் ஏன் இறந்தனர்? இந்த நாயை எள்ளி நகையாடியதாலா? மனிதர்கள் மட்டுமே பூதவுடலுடன் செல்லக்கூடிய விண்ணுலகை ஒரு கேவலமான நாய் அடையக்கூடாது என்ற வெறுப்பாலா? இல்லை கலிபுருஷன் அவர்கள் மதியை மயக்கிவிட்டானா? வேறு எதனால்? இதற்குச் சரியான விடையைச் சொன்னாளல் உன் நாயையும் நீ கூட்டி வரலாம்.” என்றான் இந்திரன்.

“அவர்களுக்குத் உறுதியான மனமும் இல்லை, தன்னலமும் இருந்தது. அதுவே காரணம். கலிபுருஷனும் காரணமில்லை, இஞ்ஞமலியின் மீது தோன்றிய வெறுப்பும் அல்ல, காரணம்…”

“பின்?…”

“நாங்கள் ஐவரும் அவளுக்குக் கணவர்களாக இருப்பினும், அவளுக்கு அர்ஜுனனிடம்தான் அதிக அன்பு இருந்தது. தன்னைப் போட்டியில் வென்றவன் என்று அவன்மீதே தனி அன்பு செலுத்தினாள். சமநோக்கம் இல்லாததால் அவள் முதலில் உயிர் இழந்தாள். சகாதேவனுக்கோ தன்னைவிட சாத்திர அறிவு மிக்கவர் யாரும் இல்லை என்ற கர்வம் இருந்தது. அதுவே அவனது அழிவுக்குக் காரணம். நகுலனுக்கோ அவனது அழகின்மீது செருக்கு இருந்தது. அதனால் நான் தூக்கி எறியச் சொன்னபோதும், சிறிதளவு ஒப்பனைப் பொருள்களை இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டான். விண்ணுலகம் போவதற்குப் புற அழகா தேவை, அக அழகுதான் அதிமுக்கியம் என்பதை அவன் அறியவில்லை.

“அர்ஜுனனோ காண்டீபத்தின் இழப்பிலிருந்து மீளவே இல்லை. கடினமான மலைப்பாதைகளில் ஏறும்போதெல்லாம், காண்டீபம் இருந்தால், ஏறமுடியாத பாறையைச் செதுக்கி நல்ல படிகள் அமைத்திருப்பேனே என்று தன் காண்டீபப் பெருமையிலும், வில்வித்தைத் திறமையிலும் மனதை வைத்திருந்தானே தவிர, தன் சித்தத்தை சுவர்க்கத்திலோ, நெடிதுயர்ந்த மேருமலையைச் சிதைக்கலாமா என்னும் எண்ணத்திலும் வைக்கவில்லை. பீமனோ, தனது வயிற்றையே பெரிதாக மதித்தான். நாங்கள் அனைவரும் எங்கள் உணவில் ஒரு சிறிது பகுதியை இந்த நாய்க்குக் கொடுத்த போதும், அவன் இதற்கு ஒரு பருக்கை சோறுகூட கொடுக்கவில்லை. பசித்த ஒரு உயிருக்குத் தன் உணவைப் பகிரும் அறநெறியைக்கூடச் செய்ய விரும்பாத அவன், எப்படி பூத உடலுடன் விண்ணுலகை எட்ட இயலும்?”






விளக்கத்தைக் விவரித்துவிட்டு அமைதியானார் தருமர்.

முதன்முறையாக வாயைத் திறந்து பேசியது என் முன்னோர் நாய்.

“மகனே! என்னைப் பார்! நான் யார் என்று தெரிந்துகொள்!” என்று கூறவே, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார் தர்மர்.

நாயின் உருவம் மறைந்து தருமராஜனான எமதர்மன் அவர் முன் உருவெடுத்தான்.

“உன்னைச் சோதிக்கவே, உன் அறநெறியைச் சோதிக்கவே, உன்னைப் பின்தொடர்ந்தேன். அதில் நீ வெற்றி பெற்றுவிட்டாய். நீ சுவர்க்கம் செல்லத் தகுந்தவனே!” என்று தன் மகனின் பண்பைப் பார்த்த பூரிப்புடன் கூறினான்.

தந்தையை வணங்கி நின்றார் தருமபுத்திரர்.

“யுதிஷ்டிரா! நானும் உன் நேர்மையால் மன மகிழ்ச்சி அடைந்தேன். நீ விரும்பிய வரம் ஒன்று தருகிறேன். கேள்!” என்றான் இந்திரன்.

“விண்ணவர் கோனே! இந்த நெடிய பயணத்தில் நான் மனம் தளர்ந்த போதெல்லாம், எனக்கு மனத்திண்மையைக் கொடுத்தது ஞமலியின் வடிவில் வந்த என் தந்தைதான். எதற்காக அந்த விலங்கின் வடிவைக் கொண்டாரோ, அந்த விலங்கு கலிபுருஷனின் மயக்கத்தால் மதி இழக்காது, என்றுமே நன்றி உள்ள உயிராக விளங்க வேண்டும். அதுவே நான் வேண்டும் வரம்!” என்று இறைஞ்சினார் தருமர்.

“அப்படியே ஆகுக! ஒரு பருக்கை சோறு யார் அளித்தாலும், அவருக்கு நன்றியாக இருந்து வரும் இனமாக ஞமலியின் இனம் விளங்கட்டும் என்று வரமளித்தான் வானவர் கோன்.

அவன் கைலாகு கொடுக்க, விண்ணுலகம் செல்லும் இரதத்தில் ஏறி அமர்ந்தார் தருமபுத்திரர்…

… ஆக, ஒரு நாய் எப்படி சொர்க்கம் சென்றது என்ற நாய்க் கதையைச் சொல்லிவிட்டேன். நீங்களாவது உங்கள் குழந்தை ஒரு நாய்க் கதை கேட்டால், என் முன்னோர் நாயின் கதையைச் சொல்லுங்கள்.

என்ன இது சத்தம்? எதோ எச்சில் இலை எறியப்படுவது போல இருக்கிறதே! என் பிழைப்பை நான் பார்க்கப் போகிறேன். ஆளை, இல்லையில்லை, இந்த நாயை விடுங்கள்.

( மகாபாரதத்தில் சுவர்க்காரோகண பர்வத்தில் வரும் இக்கதை)




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!