Serial Stories சிகப்பு கல்லு மூக்குத்தி

சிகப்பு கல்லு மூக்குத்தி-2

2

மதுராட்சி நகத்தை கடித்தபடி சாலையோரம் நின்றிருந்தாள். குற்றாலம் கல்லூரியில் அவள் படித்துக் கொண்டிருக்கிறாள். வார இறுதி விடுமுறைக்காக வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். பஸ் பாதியில் பிரேக் டவுன் ஆகி விட ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை ஓரத்தில் பயணிகள் எல்லோரும் நின்று கொண்டிருக்கின்றனர்.

 அவரவருக்கு தெரிந்தவர்களை ஃபோனில் அழைத்து ஒவ்வொருவராக வீடு திரும்பி கொண்டிருக்க மதுராட்சியும் அண்ணனை போனில் அழைத்திருந்தாள். வந்துவிடுவதாக சொன்னவன் வருகிறானா என எட்டிப் பார்த்துக் கொண்டு கொஞ்சம் பயத்தோடு நின்றிருந்தாள். கிட்டத்தட்ட பயணிகள் எல்லோரும் சென்றிருக்க ஒன்றிரண்டு ஆண்கள் மட்டுமே இருந்தனர்.

டிரைவரும் கண்டக்டரும் பஸ்ஸை ரிப்பேர் செய்யும் வேலையில் இருக்க அந்த ஆண்களில் ஒருவன் அடிக்கடி இவளை நோட்டமிட்டபடி இருந்தான். மதுராட்சி சற்று தள்ளி போய் நின்று கொண்டாள். மீண்டும் அண்ணனுக்கு போன் செய்ய “பைக் பஞ்சர்மா, பஞ்சர் ஒட்டிக் கொண்டிருக்கிறேன். வந்து விடுவேன்” என்றான்.

 அப்போது அவளைக் கடந்து சர்ரென ஜீப் ஒன்று பறந்தது. வேகத்தை வைத்தே அவன்தான் என்று கணித்தாள். எதற்கு இத்தனை வேகம் அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே முன்னால் சென்ற ஜீப் அப்படியே ரிவர்ஸில் பின்வந்து அவள் அருகில் பிரேக்கிட்டது. 

உள்ளே அவன் இருந்தான். சர்வேஸ்வரன். கிட்டத்தட்ட அந்த ஊரை தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பவன். தென்காசியில் இருக்கும் விவசாய நிலங்களில் பாதிக்கு மேல் இவனது குடும்பத்தாருக்கு சொந்தமானவைதான். எப்போதும் ஊருக்குள் ஒரு அரசனின் செருக்குடன் நடமாடிக் கொண்டிருப்பான்.

 இதோ இப்போதும் அந்த பெரிய ஜிப்பின் ஸ்டேரிங்கை அவன் அழுத்தி பிடித்து அமர்ந்திருந்த விதம் முரட்டு குதிரையின் லகானை பிடித்திழுத்து மேலேறி அமர்ந்திருக்கும் வீரன் போல்  தோன்றினான். விரலிடுக்கில்  நூலிழையாய் புகைந்து கொண்டிருந்த சிகரட்டை  வாயில் வைத்து  உறுஞ்சியவன் பக்கத்தில் திரும்பினான். மதுராட்சி அப்போதுதான் அவன் அருகாமைக்கு பார்வையை நகர்த்தினாள். உடன் முகம் சுளித்தாள்.

 அருகில் அமர்ந்திருந்தவள் ஒரு பெண். அவள் உடையிலும் அமர்ந்திருந்த விதத்திலுமே அவள் எப்படிப்பட்டவள் என்பது தெளிவாக தெரிந்தது. பாதி தொடையிலேயே நின்று விட்ட அவளது கீழ் உடை வளமையான காலழகை வஞ்சனையின்றி வெளிப்படுத்த,  சிறு கயிற்றால் மட்டுமே இழுத்து கட்டப்பட்டிருந்த தோள்பட்டை உடையில் ஒரு பக்க கயிறு நழுவி கீழே விழுந்திருக்க வெற்று தோளாக இருந்தது. 

இந்த வகை அழகான உடையுடன் அவள் தன் சீட்டிலிருந்து எக்கி அவன் மேல் சரிந்திருந்தாள். இந்த கஷ்டமான சாயலினால் அவளுடைய உடை வெகுவாக தளர்ந்து எப்பொழுது வேண்டுமானாலும் முழுவதும் நழுவி விடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. இவள்… அவனது தோப்பு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் பெண்களில் ஒருத்தி… பார்த்ததுமே மதுராட்சிக்கு புரிந்தது.

 சர்வேஸ்வரனின் வார இறுதி நாட்களில் அவனது தோப்பு வீடு இதுபோன்ற தொழில் முறை பெண்களால் நிறைந்திருக்கும் என்று ஊருக்குள் பேசப்படும் பேச்சுக்கள் அவள் காதுகளையும் எட்டியதுண்டு.இதோ இப்போதும் தோப்பு வீட்டு சவாரி போல… 

ஒரு வகை அருவருப்புடன் அவள் தலையை திருப்பிக் கொள்ள அந்த பெண் அவளை அழைத்தாள். “ஏய்,பொண்ணு ஊருக்குள்தானே போகிறாய்? வா வந்து ஏறிக்கொள்” 

மதுராட்சி அவனைப் பார்க்க, அவன் நேராக சாலையைப் பார்த்தபடியிருந்தான். மெல்ல சாலை ஏறியவள் குனிந்து உள்ளே பார்த்து அந்த பெண்ணிடம் “உங்களுடன் வருவதில் என் பாதுகாப்புக்கு என்ன உறுதி?” என்றாள்.




 சரேலென திரும்பிப் பார்த்தான் அவன். கையில் இருக்கும் சிகரட்டின் கங்கு இப்போது அவன் கண்களில். அவனது பார்வை அவளுக்கு பின்னே நின்றிருந்த ஆணின் மேல் விழுந்தது. அவன் இப்போது தள்ளி வந்து இவர்கள் பேசுவதை கவனித்து கொண்டிருந்தான்.

” ஜீப்பில் ஏறு” நெருப்புத் துண்டாய் வார்த்தைகளை கக்கினான். 

தன் பின்னிருப்பவனை திரும்பி பார்த்துவிட்டு மதுராட்சி தயங்கி நிற்க, பஸ்ஸின் டிரைவர் பக்கத்தில் வந்தார். சர்வேஸ்வரனை அடையாளம் தெரிந்து வணங்கினார்.” பஸ் பிரேக் டவுன் ஆயிடுச்சு சார். இந்த பொண்ணு மட்டும் பாவம், கூப்பிட ஆள் வரல. நீங்க போற வழியில இறக்கிவிட்டுர்றீங்களா?” பணிவாய் கேட்டார்.

 சர்வேஸ்வரன் தலையாட்ட “பயப்படாம போம்மா. சார் தெரிஞ்சவர்தான். ரொம்ப நல்லவரு.உன்ன பத்திரமான இடத்துல இறக்கி விட்டுடுவாரு” என்றபடி ஜீப்பின் கதவை திறந்து விட ,இவனுக்கெல்லாம் நல்லவன் பட்டம் நொந்தபடி மதுராட்சி ஏறிக்கொண்டாள்.

 அவன் ஜீப்பை எடுத்ததும் அந்த பக்கத்து சீட்டுக்காரி மீண்டும் சரிந்து அவன் மேல் சாய்ந்து கொண்டாள். அத்தோடு அடிக்கடி அவன் காதை கன்னத்தை கழுத்தை என்று தடவியபடி இருந்தாள். அவன் எந்த உணர்வுமின்றி ஜீப்பை ஒட்டிக் கொண்டிருந்தான். மதுராட்சிக்கு ஜிப்பை விட்டு வெளியே குதிக்கலாம் போலிருந்தது.அவளது தெருமுனையில் ஜீப்பை நிறுத்தியவன் அவள் இறங்கியதும் புயல் வேகத்தில் ஜீப்பை கிளப்பிக்கொண்டு போனான்.

 “மேடம்…” அவள் முன்னால் நின்று பணியாள் அழைக்க முன் ஞாபகங்கள் கலைந்து மீண்டாள் மதுராட்சி. சர்வேஸ்வரனுடனான அவளது சந்திப்புகளில் முக்கியமானது அந்த ஜீப் பயணம்.இவன் எந்த அளவு என்னை ஞாபகம் வைத்திருக்கிறான் என்ற குழப்பத்தை அவளுக்கு இப்போதும் தந்து கொண்டிருப்பது அந்த நிகழ்வு.

“மேடம், சார் உங்களை உள்ளே வர சொல்கிறார்” எதிரில் நின்றிருந்த பணியாள் சொல்ல ஆச்சரியப்பட்டாள். இதோ இங்கே வந்து அமர்ந்து பத்து நிமிடங்கள்தான் இருக்கும். அவனைப் பார்க்க வந்திருப்பதாக சொல்லிவிட்ட சில நிமிடங்களில் அவளுக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனால் அவள் அண்ணன் ஒரு வாரமாக அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான் ஏன்…?

 தயங்கிய கால்களை இழுத்துக் கொண்டு உள்ளே நடந்தாள். அறை மையத்தில் போடப்பட்டிருந்த பெரிய பாஸ் டேபிளின் பின்புறம் சுழல் நாற்காலியில் அவன் அமர்ந்திருந்தான். வாசலுக்கு வந்தவளை ஒற்றை விரலாட்டி உள்ளே அனுமதித்தான்.எவ்வளவு திமிர்! உள்ளுக்குள் புகைந்தவளுக்கு எதிர்  நாற்காலியை காட்டினான்.

 தயக்கத்துடன் நுனியில் அமர்ந்து கொண்ட மதுராட்சியிடம் “ம்..” என்றான் உறுமலாக.இதன் அர்த்தம் தனது தேவையை சொல்வதா… மதுராட்சி பேச துவங்கினாள்.

 தென்காசி நகரின் முக்கிய சாலையில் அவர்களுக்கு ஒரு சிறிய ஜவுளிக்கடை உண்டு.அவள் அப்பா விஜயகுமார் மிக சிறிய அளவில் ஆரம்பித்த கடை. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அந்த இடத்தையே விலைக்கு வாங்கி பெரிய கடையாக மாற்றினார்.இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை மிக நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. அப்பாவிற்கு பிறகு அண்ணன் தொழிலுக்குள் வர இன்னமுமே தொழில் சூடு பிடித்தது. 

மேலும் இரண்டு மாடி கட்டி தொழிலை விரிவு படுத்தினார்கள். திடீரென விஜயகுமார் மாரடைப்பில் இறக்க குழந்தைவேல் தனியாளாக கொஞ்சம் தடுமாறினான்.இடையில் கொரோனா காலத்தில் கடைகள் மூடப்பட்டு மிகப்பெரிய நஷ்டம் உண்டானது. பிறகும் ஒரு வருடம் அந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்பொழுது அவர்களுக்கு மேலும் ஒரு சோதனை.

 அவர்கள் கடை இருக்கும் இடத்திற்கு அருகே மேம்பாலம் வருவதால் ஒரு பக்கமாக இருக்கும் கடைகள் அனைத்தும் இடிபட அரசாங்கத்தால் நாள் குறிக்கப்பட்டது. அதில் குழந்தைவேலின் கடையும் ஒன்று. இதற்காக அரசாங்கம் கொடுக்கும் இழப்பீடு கைக்கு வந்து சேர சில காலங்கள் ஆகும். 

ஆனால் உடனடியாக கடையை வேறு இடத்திற்கு மாற்றி தொழிலை தொடங்கும் அவசரத்தில் இருந்தான் குழந்தைவேல். முன்னமே தொழில் பின்னடைவால் வீடு நிலங்கள் நகைகள் என எல்லாமே அடமானத்தில் இருக்க இப்பொழுது மீண்டும் ஒருமுறை புது தொழில் தொடங்கும் இக்கட்டில் இருப்பவனுக்கு தேவை கடனாக கொஞ்சம் பணம். பேங்குகளில் முன்பே இருக்கும் கடன்களால் அணுக வழி இல்லாததால் தவித்து இருந்தவனுக்கு ஊருக்குள் அனைவரும் சொல்லிய யோசனை சர்வேஸ்வரன்.

 நியாயமான விஷயங்களுக்கு குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பவன் என்று அனைவருமே பரிந்துரைக்க அவனை பார்ப்பதற்காக அலைந்து கொண்டிருக்கிறான் குழந்தைவேல். தங்கள் வீட்டு நிலைமையை சொல்லி தேவையை கூறி முடித்த போது மதுராட்சியினுள் குன்றல் வந்திருந்தது.

 மிக மெல்லிய குரலில் தலை குனிந்தபடி பாடம் பண்ணி வைத்ததை ஒப்புவிக்கும் ரெக்கார்டர் போல் சொல்லி முடித்தாள். எதிரில் அமர்ந்திருந்தவனிடம் இருந்து பிரதிபலிப்பு எதுவும் வராமல் போக நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் திடுக்கிட்டாள்.

 கண்கள் ஜொலிக்க அவளைப் பார்த்திருந்தான் சர்வேஸ்வரன். “தேவை என்று உன்னையே வர வைப்பதற்கு உன் அண்ணனை பலமுறை விரட்டியடிக்க வேண்டியதாயிற்று” என்றான் மலர்ந்த முகத்தோடு. “ஆக கடைசியில் நீ என்னை தேடி வந்து விட்டாய்” உற்சாகம் துள்ளியது அவன் குரலில்.




What’s your Reaction?
+1
43
+1
31
+1
3
+1
1
+1
2
+1
1
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!