Serial Stories

உடலென நான் உயிரென நீ-21

21

” இது யார் கணா ? ” தாரா கொஞ்சும் குரலில் கேட்க கணநாதன் புருவங்களை உயர்த்தினான் .

” ஹேய் இவளை தெரியவில்லையா ? உன் ப்ரெண்ட்பா .மணிபாலில் இரண்டு பேரும் அப்படி ஒரு நட்பாக இருந்தீர்கள் .இப்போது யார் என்கிறாயே …? “

தாரா புருவம் சுருக்கி தலை சாய்த்து யோசித்தாள்  ” எனக்கு ப்ரெண்டா ?  நான் அப்படி ஒரு தகுதியை யாருக்கும் எளிதாக தர மாட்டேனே …இவள் …ம் …கணா …இது சஷிஸாவா …? ஆர் யூ ஷூயர் ? “

” அவளேதான் .இங்கே அவள் மதுரவல்லி “

ப்ர்ர்ர்..என்று வாயை மூடி சிரித்தாள் தாரா .” என்ன இது இப்படி மாறிவிட்டாள் ? பெயரை கூட மாற்றிக் கொண்டாளா ? ” இடுப்பில் கை தாங்கி மதுரவல்லியை சுற்றி சுற்றி வந்தாள் .

” ஹாய் தாரா எப்படி இருக்கிறீர்கள் ? ”  உள்ளத்து கொதிப்பை உள்ளே அமுக்கி வீட்டினளாக விருந்தாளியை வரவேற்கும் பண்பினளானாள் மதுரவல்லி .

” நானெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறேன் .நீ தான் என்னமோ போல் மாறியிருக்கிறாய் …” உதடுகளை பிதுக்கிய தாரா வரவேற்பாய் நீண்ட மதுரவல்லியின் கையை பற்றவே இல்லை .அப்படியே போய் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.




” டிராவலிங் டயர்டு கணா. உடம்பெல்லாம் வலி …” உடலை முறுக்கி சோம்பல் முறித்தாள் ..

” வெந்நீரில் குளித்தால் சரியாகி விடும் .முதலில் சூடாக ஒரு காபி சாப்பிடு .பிறகு குளிக்கலாம் ” பரிவாக தாராவிற்கு உதிர்ந்த வார்த்தைகள் …

” ராஜம் வரவில்லையா ? ” என மதுரவல்லியிடம் அதிகாரமாக கேட்டான் .

” என்னவோ தெரியவில்லை .அவளை காணோம் .காபி நான் போடவா ? “

”  வேண்டாம் .கையில் காலில் சுடு பாலை கொட்டி பிறகு நான் அதற்கு வேறு வைத்தியம் பார்க்க வேண்டும் .தள்ளு நானே கலக்குறேன் ” கணநாதனிடம் மிகுந்த சலிப்பு இருந்தது .

ஒயிலாக சோபாவில் சரிந்து கிடந்த தாராவிடமிருந்து பார்வையை பிடுங்கிக் கொண்டு அடுப்படிக்குள் போனாள் மதுரவல்லி .” கொடுங்க மாமா .நானே போடுறேன் ”  குரலில் குழைவை கூட்டி தன் மனதை கணவனுக்கு உணர்த்தும் வகையில் பேசியபடி அவன் கையிலிருந்த சீனி டப்பாவை வாங்க முயன்றாள் .

” வேண்டாம். உன் டிரையலுக்கு நாங்கள் ஆளில்லை .  நானே பார்த்துக் கொள்வேன் .ராஜம் என்ன ஆனாள்னு பாரு. சமையலையும் என்னால் செய்ய முடியாது ”  கறார்த்தனமான அவனது பேச்சில் அவளது ஆசை அழைப்பை உணர்ந்து கொண்ட தடம் தெரியவில்லை.

” சரி கொடுங்க மாமா. ஆற்றவாவது செய்கிறேன் ” ஒரு டம்ளரை அவனிடமிருந்து பிடுங்கி ஆற்ற ஆரம்பித்தாள் .

” ஆற்றி நீயே குடி ” பிடுங்கிய டம்ளர் காபியை  அவளிடமே கொடுத்து விட்டு ,  கையில் இரண்டு டம்ளர் காபியுடன் தாராவிடம் போய் விட்டான் .

அவனிடம் தனது மாமா அழைத்தலுக்கான பிரதிபலிப்பு ஏதுமில்லாத்தை வேதனையாக பார்த்தாள் மதுரவல்லி . முன்பொரு நாள் அப்படி அழைத்தபோது  அவன் தடுமாறி நின்றதை நினைவிற்குள் கொண்டு வந்தாள் .தொண்டையில் அடைத்த எதனையோ சூடான காபி குடித்து  கரைத்தாள் .




கணநாதனும் , தாராவும் ஹால் சோபாவில் தோளுரச அமர்ந்து கொண்டு ,  லேப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டு குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தனர்.

 அங்கென்ன கவுண்டமணி – செந்தில் காமெடி ஓடுகிறதா ?  எரிச்சலை மறைத்துக் கொண்டு பின் கதவை திறந்து தோப்பிற்குள் இறங்கினாள்.

“அண்ணா ராஜம் ஏன் வேலைக்கு வரவில்லை?உடம்பு சரியில்லையா?”  தோப்புக்குள் இருந்த மாடசாமியிடம் விசாரித்தாள்.மாடசாமி பதில் சொல்ல மிகவும் தயங்கினான் .

”  அது …வந்துங்கம்மா …நம்ம பெரிய ஐயாதாங்க …இனிமேட்டு உங்க வீட்டு வேலைக்கு  போக வேணாமுன்னு என் பொஞ்சாதிகிட்ட சொல்லிட்டாருங்க .அவ இன்னைக்கி களையெடுக்க வயக்காட்டுக்கு போயிட்டா ”  சொல்லி விட்டு சங்கடத்துடன் நகரந்து விட்டான் .

பெரிய ஐய்யான்னா …மிராசுதாரா …தாத்தா . அவர் ஏன் இப்படி சொல்ல வேண்டும் .?  பொங்கிய வேகத்துடன் கணநாதன் முன் வந்து நின்று விசயத்தை சொன்னாள் .

” ஏன் இப்படி செய்றாங்கன்னு தெரியலையே டாக்டர். ? “

” வேறென்ன உன் மேல் இருக்கும் கோபம் என்னையும் சேர்த்து பழி வாங்க சொல்லுது .  பாவம் பார்க்கப் போய் பட்டினி கிடக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ” சலிப்புடன் நெற்றி பொட்டை அழுத்தினான் .

” என்ன விசயம் கணா …? ” தாரா பேசியபடி ஆதரவாக அவன் தோள் அழுத்தினாள் .

” அது பெரிய விசயம். அப்புறம் சொல்கிறேன் . இப்போது நாம் வேலையை பார்க்கலாம் ”  லேப்டாப்பை தன்புறம் திருப்ப முயன்றவனை தடுத்து சிணுங்கினாள் .

” கொடைக்கானல் போகலாம் கணா …”

” எனக்கு பேஷன்ட்ஸ் வருவார்கள் தாரா “

” ம்க்கும் இன்று ஒரு நாள் உங்களுக்காக காத்திருக்கட்டுமே .  இதோ உங்கள் வேலையாளை கூட அவர்கள் நிறுத்தி விட்டார்கள் .நீங்கள் ஏன் அவர்களுக்கு  இந்த ஊர் மக்களுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் ? “

” ம் …பாய்ண்ட் ”   கணநாதன் யோசிக்க தொடங்க மதுரவல்லி திடுக்கிட்டாள் .எத்தனை நோயாளிகள் வந்தாலும் சாப்பாட்டை கூட ஒதுக்கி வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பவன் .இன்று இவள் சொல்கிறாளென்று வேலையை விட்டு விட்டு உல்லாச பயணம் போவானா ?

அவளது சந்தேகத்தை ஆமாமென  உறுதி செய்தான் கணநாதன் .”  நீ இங்கே ஏதாவது சமைத்து சாப்பிட்டுக் கொள்.நாங்கள் வர இரவாகி விடும் ” சொல்லி விட்டு இருவரும் குளித்து முடித்து வெளியே கிளம்பி போயே விட்டனர் .

பெரியகுளம் ஊர் கொடைக்கானல் மலையடிவாரத்தில் தான் இருக்கிறது .இங்கே வந்த நாள் முதல் மலையேற வேண்டுமென்ற மதுரவல்லியின் ஆசையை பேஷன்டுகளை காரணம் காட்டி தள்ளிப் போட்டு வந்தவன்  இன்று அவள் அழைத்ததும் எல்லாவற்றையும் மறந்து விட்டு  பின்னாடியே ஓடிப்போகிறான் .  நடப்பது எதுவும் புரியாமல் தலையை பிடித்தபடி சோபாவில் அமர்ந்து விட்டாள் மதுரவல்லி .

இவனுக்கு என் மேல் என்ன கோபம் ? எதற்காக ..எங்கே போய் இவளை இழுத்துக் கொண்டு வந்தான் ? அவளுக்கு தலை வெடித்து விடும் போலிருந்தது.  இதில் தேடி வரும் நோயாளிகளுக்கு டாக்டரய்யா ஊரில் இல்லை என்று சொல்ல வேண்டிய பதில் வேறு அவளை வேதனையுடன் எரிச்சல்படுத்தியது . உடலின் வாதையுடன் முனகியபடி திரும்பி சென்ற சில நோயாளிகள் அவள் மனதை சங்கடப்படுத்த ஆத்திரத்துடன் கணநாதனுக்கு போன் செய்தாள்.

அவன் காலை கட் செய்தான் .திரும்ப திரும்ப முயல எடுத்து ” என்ன ? ” எனக் குரைத்தான்.

” பேஷன்ட்ஸ் பாவம். நீங்கள் இல்லாமல் வேதனையோடு திரும்பி போகிறார்கள் டாக்டர் “

” அதற்கு நான் என்ன செய்ய ?  நம் வீட்டிற்கு வரும் வேலையாளை கூட நிறுத்தினார்களே …அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். நான் இங்கே ஒரு முக்கியமான வேலையில் இருக்கிறேன். .என்னை தொந்தரவு செய்யாதே ” போனை கட் செய்துவிட்டான் .

அப்படி என்ன முக்கியமான வேலை திடீரென இவனுக்கு வந்துவிட்டது …மதுரவல்லி குழப்பத்துடன் ஏனோ தானோவென சமைத்து எதையோ சாப்பிட்டாள்.  அவள் மனம் முழுவதும் அடர்ந்திருந்த குழப்பத்திற்கான விடையை ஓரளவு தாரா அன்று இரவு தெளியப்படுத்தினாள் .




What’s your Reaction?
+1
23
+1
14
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Priya
Priya
20 days ago

Mam innaiku episode epo varum

P Bargavi
P Bargavi
22 days ago

Nice

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!