Serial Stories Uncategorized சிகப்பு கல்லு மூக்குத்தி

சிகப்பு கல்லு மூக்குத்தி-3

3

“ராஜி நம்ம சண்முகம் அக்கா இருக்காங்க இல்ல…” என்றபடி விஜயகுமார் மெல்ல இழுக்க ராஜலட்சுமி புருவங்களை சுருக்கினாள்.

” அது எந்த சண்முகம் அக்கா?”

” ஏய் அதான்டி எங்க ஊர் கடையத்துக்காரர் சண்முக சுந்தரி அக்கா. இங்கே பெரிய வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்து இருக்காங்களே அவங்கதான்”

” ஓ அந்த அக்காவா? அன்னைக்கு கோவில்ல பார்த்தோமே…”

” அவங்களேதான். இன்னைக்கு சந்தையில அவங்கள பார்த்தேன். ரொம்ப பாசமா பேசினாங்க”

” சரிதான் உங்க ஊர் அக்காவாச்சே, பாசம் பொங்க தானே செய்யும்!” ராஜலட்சுமி நொடித்துக் கொண்டாள்.

 “சண்முகம்கா சாதாரணமாத்தான்டி பேசுறாங்க.உனக்குத்தான் அவங்க மேல பொறாமை” விஜயகுமார் சொல்ல ராஜலட்சுமி சீறினாள். “எனக்கென்ன பொறாமை? அவங்க வாழ்க்கை அவங்களுக்கு ,என் வாழ்க்கை எனக்கு”

 உடனே மறுத்தாலும் ஒரு வகையில் விஜயகுமார் சொல்வது உண்மைதான். ஒரே ஊரில் இரு வேறு நிலைகளில் இருக்கும் பெண்கள். மகளிர் குழு என்ற ஒன்றை ஊருக்குள் உருவாக்கி அதன் மூலம் பெண்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது,அவர்களுக்கு உதவிகள் செய்வது என்று இருந்து  வந்தாள் சண்முகசுந்தரி. அதில் உறுப்பினராக ராஜலட்சுமி இருக்கிறாள். குழுவில் தலைவராக சண்முக சுந்தரிக்கு கொடுக்கப்படும் அதீத மரியாதைகள் சமயத்தில் ராஜலட்சுமியை முகம் சுளிக்க வைக்கும்.

 நாலு காசு அதிகம் இருப்பதாலேயே இந்த பெண் எதில் உயர்ந்து போனாள்… என்ற எண்ணம் ராஜலட்சுமிக்கு உண்டு. கூடவே கணவருக்கு அவள் மேல் இருக்கும் சொந்த ஊர் பாசமும் அதிருப்தி தரும்.”இங்க பாருங்க ஊருக்கு வெளியிலதான் அந்தம்மா பேச்சு எப்ப பாத்தாலும் காதில் வாங்கிகிட்டு இருக்கிறேன். வீட்டுக்குள்ளயும் அதையே கொண்டுட்டு வராதீங்க”

” அதில்லடி அவங்க ஒரு முக்கியமான விஷயம் பேசினாங்க… உன்னை விசாரிச்சாங்க, நம்ம பொண்ண விசாரிச்சாங்க…”

” நம்ம பெண்ணையா? அவளை எதுக்கு அவங்க விசாரிக்கணும்”

” என்னடி மண்டு மாதிரி பேசுற? அவங்களுக்கு ஒரு பையன் இருக்கானில்லையா…?”

உள்ளறையிலிருந்து காதில் விழுந்த தாய்,தந்தை பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த மதுராட்சியினுள் சுரீரென ஒரு உணர்வு.கதகதவென ஓர் இளஞ்சூடு உடல் முழுவதும் பரவியது.




விஜயகுமாரின் பேச்சை கேட்ட  ராஜலட்சுமிக்கு கோபம் இமயமலையை விட உயர்ந்தது.”ஏங்க உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்குதா? அவங்க பையன் பவுசு உங்களுக்கு தெரியாதா? ஊருக்குள்ள அவனை பத்தி என்ன பேசுறாங்கன்னு தெரியுமா? பொம்பள பொறுக்கின்னு சொல்றாங்க”

 விஜயகுமாரின் முகம் வாடியது. உண்மைதான். சர்வேஸ்வரனின் நடவடிக்கைகள் சரியில்லைதான். ஆனாலும் அதனை வயது கோளாறாகத்தான் நினைத்தார். “அதெல்லாம் சரியாயிடும்டி”

” என்ன..?” காளி அவதாரம் எடுத்தாள் ராஜலட்சுமி. “என் மகளை பார்த்தால் உங்களுக்கு பலியாடு மாதிரி தெரிகிறதா? அந்த எவனோ சரியாவதற்கு நான் என் பெண்ணை கொடுக்க வேண்டுமா? உங்க நொக்காவிற்கு அப்படி ஒரு எண்ணமிருந்தால் அதை முளையிலேயே கிள்ளி எறிஞ்சுடுங்க.

 உங்களுக்கு பேச பயமாக இருந்தால் என்னிடம் விட்டு விடுங்கள், அந்த பொம்பளையை நான் கவனித்துக் கொள்கிறேன்” 

ராஜசேகர் பதறி மனைவியின் வாயை அடைத்தார்.”சும்மாயிருடி அவுங்க அந்தஸ்திற்கு நம் பக்கம் திரும்பியாவது பார்ப்பார்களா?”

“ஓஹோ பத்து காசு அதிகம் வைத்திருப்பதால் உங்க நொக்கா உசந்துட்டாகளோ?”

தாய்,தந்தையின் சண்டை தொடர,தலையை உலுக்கிக் கொண்டு அந்த பேச்சின் தாக்கத்திலிருந்து வெளியே வந்த மதுராட்சி மடியில் வைத்திருந்த பாடப் புத்தகத்தில் கவனத்தை செலுத்தினாள்.

” ஆக,என்னை வரவழைப்பதற்காகத்தான் அண்ணனை அப்படி அலைய வைத்தீர்களா?  வெளிப்படையாகவே சொல்லி இருக்கலாமே, நான்தான் வரவேண்டும் என்று…”

“ம்ஹூம் நான் உன்னை அழைக்கவில்லைம்மா, நீயாகவேதான் வந்திருக்கிறாய்”

” ஆனால் நீங்கள்தான் வரவைத்து இருக்கிறீர்கள்” 

“இல்லையே நான் உன்னை வரச் சொல்லவே இல்லையே, நீயாகத்தான் தேவையென்று வந்து நின்றிருக்கிறாய் “சர்வேஸ்வரன் பேசப் பேச மதுராட்சிக்கு சீ என்றானது.

” இவ்வளவு நாட்களாக ஊர் பெரிய மனிதன் என்று உங்கள் மேல் ஒரு சிறு மரியாதை இருந்தது. ஆனால் இப்போது…” பேச்சை முடிக்காமல் வெறுப்பாய் அவனை மேலும் கீழும் பார்த்தாள்.

” பெரிய மனிதன்..!? இருக்கலாம். ஆனால் அது ஊருக்குள்தான். உன் வீட்டினருக்கு நான் பொறுக்கி தானே? பொம்பளை பொறுக்கி!” ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி நிதானமாகச் சொல்ல மதுராட்சிக்கு கோபம் வந்தது.

” ஏதோ இல்லாததை சொல்லிவிட்டது போல் அலட்டுகிறீர்களே! அது உண்மைதானே?”

” அது உண்மைதான். ஆனால் அதனை சொல்வதற்கு உன் குடும்பத்திற்கு என்ன உரிமை இருக்கிறது?”

“அவர்கள் வீட்டு செல்லப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள கேட்டதால் கிடைத்த உரிமை அது”

” பிடிக்கவில்லை என்றால் சொல்ல வேண்டுமே தவிர குறைகளை சுட்டிக்காட்டி மனதை உடைப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது”

” அப்படி உடையும் மனதை வைத்திருப்பவர் ஒழுங்கான நடவடிக்கைகள் கொண்டிருக்க வேண்டும்”




 சர்வேஸ்வரன் கடகடவென சிரித்தான். “மனம் உடைந்ததா? எனக்கா? எந்த பேரழகிக்காகவும் அப்படி என் மனதை உடைத்துக் கொள்பவன் நான் இல்லை. வருத்தப்பட்டது என் அம்மா. அவர்கள் மன வருத்தத்திற்கு உங்கள் குடும்பம் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்”

” எப்படி பதில் சொல்ல வேண்டும்? உங்கள் பிள்ளை உத்தமன்தான் என்று எழுதிக் கொடுக்க வேண்டுமா?” மதுராட்சி நக்கலாக கேட்க “ஏய்” என்ற உறுமலோடு எழுந்து வந்த சர்வேஸ்வரன் அவள் தோள்களை இறுக்க பற்றினான். காட்டு யானையின் கால்களுக்கு அடியில் சிக்கிக்கொண்டது போல் வலித்த தன் தோள்களால் முகம் சுளித்தபடி அவனை பார்த்தாள். 

“கையை எடுங்கள், முதலில் மனிதனாக மாறுங்கள். பிறகு மற்றதை பேசலாம்”

” நான் எதற்காகடி என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்? என் அம்மா அப்பாவிற்காகவே என்னை மாற்றிக் கொள்ளாதவன், கண்டதுகளும் சொல்கிறதென்று மாறுவேனா?”

” நீ மாற வேண்டும் என்ற ஆசை எதுவும் எனக்கும் கிடையாது. நரி இடம் போனாலும் வலம் போனாலும் என் மேல் விழுந்து பிடுங்காமல் போனால் சரிதான்”

” என்னிடம் தேவை என்று வந்து நின்றிருக்கும் நிலையிலும் என்ன பேச்சு பேசுகிறாய்? உன் குடும்பத்திற்கே பணிவு என்பதே கிடையாதோ?”

” நாங்கள் நியாயத்திற்கு மட்டும்தான் பணிவு காட்டுவோம்”

 “ஆஹா, நல்ல சினிமா வசனம். நீங்கள் எல்லோரும் எப்படி நீதி நேர்மை வசனம் பேசிக் கொண்டே இருங்கள். பணம் கட்டு கட்டாக உங்கள் வீட்டு மேற்கூரையை பிரித்துக் கொண்டு கொட்டும்”

 “அப்படி கொட்டா விட்டாலும் பரவாயில்லை, எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்வோம்”

“ஆஹா, சரிதான்மா போங்க போய் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” அவ்வளவு நேரமாக அவள் தோள்களைப் பிடித்து நசுக்கி கொண்டிருந்தவன் அப்படியே தள்ளினான். 

தடுமாறி விழப்போனவள் சோபாவை பிடித்து நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். தலை சுற்றி மயக்கம் போல் வர இவன் முன்னால் விழுந்து அசிங்கப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று மனதிடத்துடன் நினைத்தவள் “உன் உதவி எங்களுக்கு தேவையில்லை ,எங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம்” தடுமாறிய குரலில் சொல்லிவிட்டு வெளியேறி விட்டாள்.

கோணல் சிரிப்புடன் அவள் செல்வதை பார்த்தபடி இருந்தான் சர்வேஸ்வரன். மதுராட்சி சவால் போல் சொல்லிவிட்டு வந்து விட்டாளே தவிர அவர்கள் இருக்கும் இக்கட்டான நிலைமையில் இருந்து ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை என்பதே நிதர்சனம். எந்தப் பக்கம் திரும்பினாலும் முட்டுக்கட்டையாகவே இருந்தது. எல்லாமே சர்வேஸ்வரன் உண்டாக்குவது தானோ என்ற சந்தேகமும் மதுராட்சிக்கு இருந்தது.

 எதுவாக இருந்தாலும் அவர்களால் முழுதாக 10 ஆயிரம் ரூபாய் கூட புரட்ட முடியவில்லை என்பதே உண்மை. அடுத்த 10 நாட்களிலேயே தங்களது மோசமான நிலமை தெள்ளென தெரிந்துவிட மதுராட்சி மிகவும் மனம் சோர்ந்தாள். வாசல் பக்க அறைக்குள் இருந்த ஜன்னல் வழியாக தெருவை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.வீட்டில் இந்த அறையும்,தெரு பார்த்த இந்த சன்னலும் அவளுக்கு மிகவும் பிடித்தமானவை.மன சங்கடமிருந்தாலும்,சந்தோசமிருந்தாலும் இங்கேதான் தெருவை பார்த்தபடி அமர்ந்திருப்பாள்.

டப டபவென்ற பைக் சத்தத்துடன் அவர்கள் வீட்டை கடந்து சென்றான் சர்வேஸ்வரன். லேசாக தலையை திருப்பி ஜன்னலில் இருந்த இவளுக்கு கட்டை விரலை கீழே காட்டி ஜாடை வேறு செய்துவிட்டு போனான்.

 ராட்சசன்… பட்டென ஜன்னலை மூடிவிட்டு தெறித்த அழுகையை அடக்கினாள்.




What’s your Reaction?
+1
46
+1
29
+1
3
+1
1
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
21 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!