Serial Stories

ஓ..வசந்தராஜா..!-7

7

நொடியில் இதயம் படபடவென அடிக்க துவங்க,கழுத்தடிகள் வியர்த்து கை காலெல்லாம் நடுங்கத் தொடங்கியது அஸ்வினிக்கு. அஸ்வினி, அமைதி.. அமைதி, உன்னை நீயே காட்டிக் கொடுத்து விடாதே… தன்னைத் தானே சமன்படுத்திக் கொள்ள அவள் முயன்று கொண்டிருந்தபோது வசந்த் அவளை பார்த்து விட்டான்.

 எப்போதோ சில மாதங்களுக்கு முன்பு ஒரு பத்து நிமிடம் பார்த்து பேசியது. இன்னுமா நினைவு வைத்திருப்பான்? மனதிற்குள் நினைத்தபடி அவள் நிற்க அவனோ அகல எட்டுக்களுடன் அவளை நோக்கி நடந்து வரத் துவங்கினான். அவன் முகத்தில் அவளை நன்றாக அடையாளம் கண்டு கொண்ட பாவனை தெரிந்தது.

 அஸ்வினி ஓடிடு.. ஓடிடு அவளின் மூளை கால்களுக்கு கட்டளையிட, கால்கள் என்னவோ பசை போட்டு ஒட்டினாற் போல் அசைய மறுத்தது. மிக சிரமப்பட்டு கால்களை பெயர்தெடுத்தவள், அவன் சிறு புன்னகை ஒன்றை முகத்தில் வழிய விட்டபடி அவள் அருகாமையில் நெருங்கிய போது விறுக்கென்று திரும்பி கிட்டத்தட்ட ஓடி அந்த இடத்தை விட்டு அகன்றாள். 

“சை எதற்காக எப்போதும் இப்படி லேப்டாப்பே கதியென்று கிடக்கிறாய்?” வீட்டிற்குள் நுழைந்ததுமே லேப்டாப் முன் உட்கார்ந்திருந்த சைந்தவி கண்ணில் பட ,இயலாமையின் கோபம் ஊற்றாய் பெருக அஸ்வினியின் வார்த்தைகளில் அனல் பறந்தது.

லேசாக விழி மட்டும் நிமிர்த்தி அவளைப் பார்த்த சைந்தவி ” வேலை இருக்கிறது” சிக்கனமாய் பதிலளித்து விட்டு குனிந்து கொண்டாள்.

உன்னால் நான் இன்று மாட்டிக் கொள்ளப் பார்த்தேன் தெரியுமா…வாய்க்குள் துறுதுறுத்த வார்த்தைகளை அடக்கியபடி சோபாவில் அமர்ந்து ஆழ்ந்து மூச்செடுத்து தன்னை சமனம் செய்ய முயற்சித்தவளது போன் ஒலித்தது.வசந்த் ராஜ் என ட்ரூ காலர் காண்பிக்க சற்றே குறைந்திருந்த அஸ்வினியின் படபடப்பு மீண்டும் அதிகமாக தொடங்கியது.

வசந்தனா? ஒரு வேளை அ…அவனோ…? நடுங்கிய விரலால் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.”ஹலோ யார் பேசுவது?”

“ வசந்தன் “ 

அவன்தான்…அவனேதான்.”எ…

எந்த வசந்தன்?”அன்று போல் எகத்தாளமாக கேட்க முடியவில்லைதான்.ஆனாலும் முடிந்தளவு குரலில் கம்பீரம் காட்ட முயன்றாள்.ஆனால் வசந்தனோ அவளது கேள்விக்கு பதில்  சொல்லாமல் அடுத்த கேள்விக்கு போயிருந்தான்.

“ இன்று கோவிலில்  எதற்காக 

அப்படி ஓடினாய்?”

எந்த கோவிலில்…எப்படி ஓடினேன்..அவனது குரலிலேயே மந்தித்து விட்ட மூளையை உலுக்கி சுறுசுறுப்பாக்கி அவன் சுட்டிய நிகழ்வை நினைவிற்கு கொண்டு வந்தாள்.

“அ…அது…வந்து…நா…நான்…”

“தப்பு செய்தவர்கள்தான் பயந்து ஓடுவார்கள்.அப்படியேதும் தவறு செய்தாயா என்ன?”வசந்தன் அவளது பலவீனத்தை தொட்டு விட அஸ்வினிக்கு சுர்ரென கோபம் வந்தது.

“தப்பு செய்ததால் இல்லை…உங்கள் மூஞ்சியை பார்க்க பிடிக்காமல்தான் ஓடி வந்தேன்”

“ஏய்…”அவனது குரலிலிருந்த ரௌத்ரம் அஸ்வினியின் ரத்தத்தை உறைய வைத்தது.

சில விநாடிகளுக்கு எதிர்முனையில் சீறலாக மூச்சு சத்தம் மட்டும் கேட்க, அவன் தன்னை அடக்கிக் கொள்வது புரிந்தது.




“உன்னுடன் பேச வேண்டும்.என் ரெஸ்டாரென்டுக்கு கிளம்பி வா” அதிகாரம் சொட்டிய அவனது குரல் அஸ்வினியின் தன்மானத்தை சீண்ட…”முடியாது”அழுத்தமாய் மறுத்து விட்டு போனை கட் செய்தாள்.

மூஞ்சியை பாரு பெரிய இவன்! கூப்பிட்டதும் ஓடிப்போய் காலில் விழுவேன் என்று நினைத்தான் போல, அக்கா இவனைப் பற்றி சொன்னது சரிதான்.சரியான திமிர் பிடித்தவன். அஸ்வினி அவனை மனதிற்குள் திட்டியபடி இருக்க சைந்தவி அவள் முன் வந்து நின்றாள்.

” எந்த டிஷ் முதலில் youtube இல் போடலாம்னு செலக்ட் செய்து விட்டேன். நான் போய் அதற்கு இன்கிரிடியன்ஸ் வாங்கி வந்துடுறேன். நாம வீடியோ எடுக்கணும் தயாராய் இரு” என்று விட்டு போனாள்.

 உடன் அஸ்வினியின் வயிற்றினுள் ஒரு கலவர பந்து உருவானது. அய்யய்யோ அக்கா வீடியோ போடப் போகிறாளா! என்ன நடக்குமோ தெரியவில்லையே! அந்த வசந்திடம் கொஞ்சம் தன்மையாக பேசியிருக்கலாமோ? இப்போது வருந்தினாள்.

விரைவிலேயே தேவையான பொருட்களுடன் திரும்பினாள் சைந்தவி “நான் ஒருமுறை சமைத்து பார்த்து விடுகிறேன் அஸ்ஸு, அதன் பிறகு வீடியோ எடுக்கலாம்.எந்த இடத்திலும் சிறு பிசிறும் இருக்கக் கூடாது. இதில் நாம் சாதித்தே தீர வேண்டும்”

 தீவிரமான அக்காவின் முகபாவம் கொஞ்சம் சந்தோஷத்தை அஸ்வினிக்கு கொடுத்தது. ஏனென்றால் இதற்கு முன்பு இதுபோல் அவள் ஈடுபாட்டுடன் எந்த வேலையையும் செய்ததில்லை. அப்படி செய்திருந்தால் ஒரு வேலை அவள் முன்னேறி இருக்க முடியும். ஆனால் ஏனோ எல்லாவற்றிலும் அவளுக்கு ஒரு சோம்பேறித்தனம். இப்போது வெற்றி நிச்சயம் என்ற உறுதியே அவளை செலுத்துகிறது என்றுணர்ந்த அஸ்வினி தமக்கையின் இந்த மாற்றத்தை மனமார வரவேற்றாள்.

” ஏன்டி சமைத்தாயானால் அடுப்பை சுத்தம் செய்ய மாட்டாயா?” மாலை வேலை விட்டு வீடு திரும்பிய சரிதா அடுப்பு இருந்த கோலத்தை பார்த்து கத்தினாள்.

” தேவை இல்லாமல் பேசாதீர்கள் அம்மா. நான் எவ்வளவு பெரிய வேலையில் இறங்கியிருக்கிறேன் என்று தெரிந்தால் இப்படி பேச மாட்டீர்கள். இதெல்லாம் சாதாரண விஷயம், சுத்தம் செய்துக்கோங்க” சைந்தவி சொல்லிவிட்டு ஏதோ குறிப்புகள் எடுப்பதில் இறங்கினாள்.

 சரிதா மகளை முறைத்தபடி அடுப்பை சுத்தம் செய்ய சுரேந்திரன் மூத்த மகள் அருகே அமர்ந்தார். “சைது வரும் ஞாயிற்றுக்கிழமை உன்னை பெண் பார்க்க வருகிறார்கள்டா”

 சைந்தவி அதிர்ச்சியுடன் தந்தையைப் பார்த்தாள் “அப்பா என்ன இப்படி திடீரென்று சொல்கிறீர்கள்? அம்மா என்ன இது ?”கத்தினாள்.

“ஏன்டி கத்துகிறாய்? உன்னிடம் கேட்டுவிட்டு தானே வரன் பார்க்க ஆரம்பித்தோம். இப்போது ஜாதகம் எல்லாம் பொருந்தி அவர்களும் உன் போட்டோ ஜாதகம் பார்த்து சம்மதித்து ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள்” சரிதா அடுப்படிக்குள் இருந்து இறைந்தாள்.

 “அஸ்ஸு நீயே சொல்லுடி” சைந்தவி தங்கையை துணைக்கழைத்தாள். அஸ்வினி அக்காவை முறைத்தாள்.

” அக்கா நீ செய்வது சரியில்லை. கல்யாணம் பண்ணிக் கொள்வதாக  என்னிடம் சொல்லியிருக்கிறாய்” என்றபடி அப்பாவுக்கு தெரியாமல் சத்தியம் செய்தாய் என்று ஜாடை காட்டினாள்.

” சரிதான் ஆனால் ஒரிரு மாதங்கள் போகட்டுமே!”

” இல்லைம்மா ஏற்கனவே படிப்பு முடித்து இரு வருடங்களாகிவிட்டது. நல்ல வேலை கிடைக்கட்டும் என்று நினைத்திருந்தோம் .ஆனால் உனக்கு வேலை அமையவில்லை.இனி திருமணத்திற்கு பிறகு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம். அஸ்ஸு ஞாயிற்றுக்கிழமை அக்காவை தயார் செய்ய வேண்டியது உன் பொறுப்பு” இதுதான் முடிவென்று குடும்பத் தலைவர் என்ற முறையில் பேசிவிட்டு எழுந்து போய்விட்டார் சுரேந்திரன்.

 சமீபகாலமாக அம்மாவின் ஆதரவும் கிடைக்காத நிலையில் சைந்தவி தங்கையிடமே சரணடைந்தாள். “அஸ்ஸு ப்ளீஸ்டி என் சேனலில் ஒரு பத்து வீடியோக்களாவது போட்டுக் கொள்கிறேன்டி.கொஞ்சம் பிரபலமாகி விடுவேன். பிறகு திருமணத்தைப் பற்றி பேசலாம்”

 அஸ்வினி உறுதியாக மறுத்தாள். “இல்லைக்கா உனது வீடியோக்களை நீ திருமணத்திற்கு பிறகு கூட தயார் செய்யலாம். உன் திருமணத்திற்கும் youtube சேனலுக்கும் சம்பந்தமில்லை. நிச்சயம் நீ இதற்கு ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்”

ஆதரவுக்கு யாரும் இல்லாத நிலையில் வேறு வழியின்றி சைந்தவி தலையாட்டினாள். 

மறுநாள் அஸ்வினி ஷூட் செய்த சைந்தவியின் சமையல் வீடியோ மிக நன்றாகவே அமைந்து விட சேனலிலும் வழக்கத்தை விட வியூஸ் அதிகம் கிடைக்க சப்ஸ்கிரைப்பர்களும் கூடினார்கள். இதனால் கொஞ்சம் திருப்தியான சைந்தவி ஞாயிற்றுக்கிழமை பெண்பார்க்கும் வைபவத்திற்கு கொஞ்சம் திருப்தியுடனேயே தயாராக துவங்கினாள்.

 “ஐயோ இந்த கலர் சேலையா? இது என்னை குண்டாக காட்டுமே!” தோளில் போட்டுக் கொண்ட சேலையில் முகம் சுளித்த அக்காவை சமாதானப்படுத்தி “இதை கட்டிக்கோ…” என வேறு ஒரு சேலையை எடுத்து கொடுத்தாள் அஸ்வினி.




” பார்லர் போயிட்டு வந்துடலாம்கா” இருவருமாக அழகு நிலையத்திற்கு கிளம்பினர்.அன்று மாலை வேலை முடிந்து திரும்பிய தாயும் தந்தையும் பளபளவென்று நின்றிருந்த தங்கள் இரு மகள்களையும் சந்தோஷத்துடன் பார்த்தனர்.

” என் செல்லத்துக்கு கல்யாண கலை வந்துடுச்சு” சரிதா மூத்த மகளை வருடி முத்தமிட்டாள். “அம்மா எனக்கு…” அஸ்வினி வாகாக கன்னத்தை திருப்பி காட்ட வஞ்சனையின்றி இளையவளுக்கும் இதழ் ஒற்றினாள்.

” சரி வீட்டை கொஞ்சம் கிளீன் பண்ணுங்க. நான் சமைப்பது என்னவென்று பார்க்கிறேன்” என்று அடுத்த வேலைக்குள் இறங்கினாள்.

 அவர்கள் வீடு ஒரு சுப காரியத்திற்கு தயாராகத் துவங்கியது. மறுநாள்  மாப்பிள்ளை வீட்டினர் அதிக கும்பலின்றி தாய் தந்தை திருமணம் முடிந்த தங்கை, தங்கை கணவர் மணமகன் என்று சிக்கனமாக வந்து இறங்கினர். அளவான பேச்சுக்களும் அன்பான விசாரிப்புகளுமாக இருந்த அவர்களை இவர்கள் எல்லோருக்குமே உடனே பிடித்துப் போனது.

 அதிலும் மாப்பிள்ளை விதார்த் “நாம் இரண்டு பேருமே ஜிம் சேர்ந்து உடம்பை குறைக்க வேண்டும் போலவே… இல்லையென்றால் திருமணத்தன்று மேடையில் நம் இருவரையும்

கேமராவுக்குள் அடக்குவதற்குள் போட்டோகிராபர் ரொம்ப கஷ்டப்படுவார் “என்று குறிப்பாக பேசி தனது சம்மதத்தை சொன்ன விதத்தில் எல்லோருமே சிரித்தனர்.

 தன்னைப் போன்றே கொஞ்சம் பூரித்த உடல் வாகுடன் இருந்தவனை அப்போதுதான் நன்றாக ஏறிட்டுப் பார்த்த சைந்தவியினுள் ஆழ்ந்த திருப்தி பரவியது.அதே நேரம் விதார்த்தும் அவளை பார்க்க சில நொடிகள் இருவர் பார்வையும் பிணைந்து நின்றதை கவனித்த அஸ்வினியினுள் பெரும் நிம்மதி எழுந்தது. 

எதிலிருந்தோ விடுபட்ட உணர்வுடன் பெரு மூச்சு ஒன்றை விடுத்த அவளது நிம்மதிக்கு ஆயுள் காலம் சில நிமிடங்களே. அவளது ஃபோனில் வசந்த் அழைத்தான். அஸ்வினி பதைப்புடன் போனை கட் செய்ய உடனே மெசேஜிற்கு வந்தான். “உடனே வா… உன்னுடன் பேச வேண்டும்”

 இவனுக்கு இப்போது என்னவாம்? அவனது செய்தியை பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் விட்டாள். உடனே அவள் போனிற்கு வீடியோ ஒன்று வந்தது. அதைப் பார்த்ததும் அஸ்வினி அதிர்ந்தாள். 

“அப்பா ஒரு முக்கியமான வேலை, இதோ வந்து விடுகிறேன்” அப்பாவிடம் தகவல் சொல்லிவிட்டு அவர் பதில் சொல்லும் முன்பாக ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வேகமாக கிளம்பினாள்.




What’s your Reaction?
+1
36
+1
23
+1
3
+1
2
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!