Serial Stories

உடலென நான் உயிரென நீ-22

22

” அவரது கேரியரையே பாழாக்கி விட்டாயே நீ …உன்னால்தானே இந்த பட்டிக்காட்டில் கிடந்து கஷ்டப்படுகிறார். பிறகு உன் மேல் கோபம் வராதா ? ” எள்ளலாய் வந்த தாராவின் கேள்வியில் மதுரவல்லிக்கு குழப்பமே …

” என்னாலா …? நான் அவரை இந்த ஊருக்கு வரச் சொல்லவில்லையே “

” ஆனால் உன் அம்மா சொன்னார்களே …கணாவுடைய அம்மாவும் சொன்னார்களே. உன்னை பெரும் பாரமாக அவருடைய தலையில் ஏற்றி விட்டார்களே .பிறகு அவர் என்ன செய்வார் பாவம் …? “

” ஆனால் டாக்டர் வேண்டாமென மறுத்திருக்கலாமே ? “

” ம் …எங்கே …?  மிஸஸ் ரூபாதான் மிகவும் பிடிவாதமாக இருந்து விட்டார்களே …தோழிக்கு செய்து கொடுத்த சத்தியம் அது இதுவென ஏதேதோ பேசி கணாவை சம்மதிக்க வைத்துவிட்டார்கள் “

மதுரவல்லிக்கு அப்படித்தானோ என தோன்றத் தொடங்கியது.   ஏனெனில் அவளறிந்து கணநாதன் அவளை மிக மிக வெறுத்துக் கொண்டிருந்தவன் .

” காஸ்மெடிக் சென்டர் ஒன்று பெரிய அளவில் தொடங்க வேண்டுமென்பது கணாவுடைய லட்சியம்.  என் அப்பா சென்னையில் அவருக்காக பெரிய அளவில் க்ளினிக் தொடங்கி தர தயாராக இருந்தார் .ஆனால் அவர் பாவம் உன்னிடம் மாட்டிக் கொண்டார் ….”




மதுரவல்லியினுள் தடுமாற்றங்கள். இதெல்லாம் உண்மையாக இருக்க கூடுமோ ?  இதற்கான விடையை கணநாதன் தான் கொடுக்க வேண்டும். அவள் நேரடியாக அவனிடமே கேட்டுவிட முடிவெடுத்தாள் .

” உண்மைதான் …” தயக்கமின்றி  தலையசைத்தான் அவன் .

” சென்னையில் பெரிய க்ளினிக் அல்லது லண்டனில் பெரிய வேலையுடன்  அம்மாவுடன் செட்டில்.  இவைகளில் ஏதோ ஒன்றுதான் என் வாழ்க்கை லட்சியம். ஆனால் இரண்டுமே உன்னால் தடைபட்டு போய் விட்டது “

” இதனை உங்கள் அம்மாவிற்கு முதலிலேயே தெளியப்படுத்தி இருக்கலாமே டாக்டர் ? “

” ம். சொன்னேன்.  உன்னை உன் உறவினர்களுடன் சேர்த்து விட்டு பிறகு எனது லட்சியத்தை செயல்படுத்த சொன்னார்கள் அம்மா. இவ்வளவு நாட்களாக அதைத்தான் முயன்று கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் உன்னை ஏற்றுக் கொள்வார்களென்ற நம்பிக்கை எனக்கு நேற்றே குறைந்து விட்டது. .உங்களை ஒருவரையொருவர் தெரியப்படுத்தி விட்டேன் .இனி உங்கள் பாடு. நான் என் வழியில் போகிறேன் “

” என்னை இங்கே தனியே விட்டு விட்டு உங்களுக்கென ஒரு வழி இருக்கிறதா டாக்டர் ? “

” நிச்சயமாக.  தாரா கொடைக்கானலில் ஒரு காஸ்மெடிக் க்ளினிக் ஆரம்பிக்க உதவுவதாக சொல்லியிருக்கிறாள் .அதற்கான இடத்தேர்வு, லைசென்ஸ் போன்ற விசயங்களுக்காகத்தான் அலைந்து கொண்டிருக்கிறோம். இனி என்னை தொந்தரவு செய்யாதே ” கறாராகபேசி விட்டு வீட்டின் ஹாலில் அவன் வழக்கமாக  படுக்கும் மடாக்கட்டிலை விரித்து போட்டு படுத்து விட்டான் .

வீட்டில் இருக்கும் ஒரே படுக்கையறை பெட்டை தாரா எடுத்துக் கொள்ள,  நைந்த மனத்துடன் மதுரவல்லி வெளியே முன் வராண்டாவில் நோயாளிகள் காத்திருக்கும் மர பெஞ்சில் படுத்திருந்தாள். ரூபாவுடன் பேசுவோமா என நினைத்து அதனை கை விட்டாள். ரூபாவிற்கு எப்போதுமே அவள் மகன் உயர்வானவன். முன்பே பாசமும் , பரிவுமாக அவளுடன் பேசுபவள் , மதுரவல்லி அவள் மகனை பற்றிய கம்ப்ளைன்ட் எதையாவது எடுத்துக் கொண்டு வந்தாளானால் யாரடி நீ எனும் விரோத பார்வை பார்ப்பாள்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் ரூபாவையும் பகைத்துக் கொள்ள அவள் தயாராக இல்லை . கொசுக்கடிகளும் , கொடுங்கனவுகளுமாக அந்த இரவு கழிந்தது அவளுக்கு .

மறுநாள் பகலும் அப்படி ஒன்றும் உவப்பானதாக விடிந்து விடவில்லை .  அவளுக்கு முன்பே எழுந்து காபி டம்ளர்களுடன் லேப்டாப் முன்னால் உட்கார்ந்திருந்த கணநாதனையும் , தாராவையும் ஓரக்கண்ணால் பார்த்தபடி கடந்து தனக்கான காபியை தானே கலந்தாள். லேப்டாப்பில் கோடு கோடாக ஏதோ வரைபடம் போல் தெரிந்தது. புதிதாக தொடங்க இருக்கும் க்ளினிக்கின்  ப்ளானாக இருக்கலாம்.

காபியுடன் பின்வாசலில் அமர்ந்தாள். அங்கிருந்து மிராசுதார் வீடு தெரிந்தது.  உள்ளிருந்து வெளியே வந்த சுகன்யா ஒரு நிமிடம் அவளை பார்த்து நின்று , இவள் புன்னகைக்க ஆரம்பிக்கவும் வீட்டிற்குள் மறைந்து போனாள். போங்களேன் தலையை சிலுப்பிக் கொண்டாள் .

சிறிது தூரம் நடந்து வரலாமென தோப்பிற்குள் இறங்கினாள்.  முன்பு அவளிடம் சகஜமாக பேசிய வேலையாட்கள் இப்போது பேச்சின்றி ஓரம் ஒதுங்கினர். காணாத்து போல் தலை குனிந்து ஒதுங்கி போயினர். எல்லாம் இந்த தாத்தாவுடைய வேலைதான். அவருக்கு என்னதான் வேண்டுமாம் இப்போது ? அம்மா மேல் உள்ள கோபத்தை ஏன் எங்கள் மேல் காட்டவேண்டும் …. ?

இவர்களது ஒதுக்கல்தானே என் மாமாவை என்னிடம் கோபம் கொள்ள வைக்கிறது …அத்தோடு எவள் எவளையோ வீட்டிற்குள் கூட்டி வந்து என்னென்னவோ பேச வைத்து …மதுரவல்லி பற்களை நறநறத்தாள்.




” சொன்னால் தப்பாக நினைக்க மாட்டாயே சஷிஸா …?  உன்னுடைய இந்த புதிய முகம் நன்றாகவே இல்லை .அதிலும் இந்த உதடும் , கன்னமும் …” பொங்கிய சிரிப்பை அடக்க கொஞ்ச நேரம் திரும்பி தன்னை சமாளித்துக் கொண்டு , பின் நேர் திரும்பினாள் .

” உனக்கு கொஞ்சமும் ஷூட் ஆகலை .சீக்கிரமாக பழைய மாதிரி மாறிடு. சரியா …? ”  அன்று காலையில் தாரா கொஞ்சமும் தயக்கமின்றி அவள் முகத்திற்கு நேராகவே சொல்லி சென்றாள் . அவளது அந்த நக்கலை பார்த்தும் பார்க்காதது போல் கணநாதன் ஓரமாக அமர்ந்திருந்தது தான் மதுரவல்லிக்கு பெரிய பாதிப்பாக இருந்தது .

சிகிச்சையளித்தவனே சொல்லட்டுமென அவன் முன்பே போய் நின்றாள் .”  என் முகம் அவ்வளவு மோசமாகவா டாக்டர் இருக்கிறது ? நீங்கள் அப்படி சொல்லவில்லையே ? “

” சொல்லவில்லை ? ” அவன் பார்வையை கூர்மையாக்கி அவள் இதயத்துள் சொருகினான் .  ஆர்ப்பரித்த இதயம் இப்போது அலறியது அவளுள் . வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் .

என்னை அளவெடுக்க இவளுக்கு யார் உரிமை கொடுத்தது ?  உள்ளுக்குள் பொங்கியபடி தோப்பிற்குள்  நடந்து கொண்டிருந்தாள். காலை சமையல் நினைவு வந்தது .  இரண்டு பேருமாக சேர்ந்து எதை வேண்டுமானாலும் செய்து எப்படியும் சாப்பிடட்டுமே …எனக்கென்ன ? முதலில் இப்படி நினைத்தவள் பிறகு மனதை மாற்றிக் கொண்டாள் .

தாரா நிச்சயம் சமையலறைக்கு போக மாட்டாள். அவர்தான் சமைக்க வேண்டியதிருக்கும்.  நான் போனால் சிறு சிறு  உதவி செய்யலாம் …நினைத்தபடி வேகமாக வீட்டிற்கு திரும்பி நடந்தாள். அங்கே அவர்கள் வீட்டின் முன் சிறு கும்பல் ஒன்று நின்றிருந்தது. ஏதோ காரசாரமான வாக்குவாத்த்தில் ஈடுபட்டிருந்தது .

“அதெப்படி நீங்கள் வைத்தியம் பார்க்க மாட்டேன்னு சொல்லலாம் ? “

” இது உங்க கடமை “

” எங்கள் ஊரில் இருந்து கொண்டு , எங்கள் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு …எங்களுக்கே துரோகமா ? “

” இப்போ நீங்க கையில் ஸ்டெதஸ்கோப்பை எடுக்கலை நடக்கிறதே வேற “

கணநாதன் வைத்தியம் பார்க்க மறுத்திருக்க வேண்டும். இதற்காகத்தான் இத்தனை பேரும்கூடியிருக்க வேண்டும் .

”  இங்கே பாருங்க எனக்கு முக்கியமாக சில வேலைகள் இருக்கிறது .உங்களுக்கு வைத்தியம் பார்க்க உட்கார்ந்தால் என்னால் அந்த வேலையை பார்க்க முடியாது ” அத்தனை கூச்சலுக்கும் அசராமல் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தான் கணநாதன். ஆனால் அவளைக் கண்டதும் அவனது நிதானம் போய் கண்களில் கனல் வந்தது.

” உன் தாத்தா செய்த வேலை. ஊர் ஜனங்கள் எல்லோரையும் எனக்கு எதிராக தூண்டி விட்டிருக்கிறார் ” மிளகாய் வத்தலாக காய்ந்தான் .

மதுரவல்லியினுள் அனலடித்தது .வேகமாக மிராசுதார் வீட்டிற்குள் விடு விடுவென சென்றாள் .




What’s your Reaction?
+1
21
+1
12
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
22 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!